புதிய அரசியலமைப்பை பின்போட முயற்சி! | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசியலமைப்பை பின்போட முயற்சி!

இப்னுஷம்ஸ்

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக முஸ்தீபுகள் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் அதற்கு சில முட்டுக்கட்டைகள் ஏற்பட்டிருப்பது வெளிப்படையாத் தெரியுது. கட்சிகளிடமிருந்து கிடைத்த யோசனைகளின் பிரசாரம் நகல் வரைபு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என மகா சங்கத்தினர் அறிவித்துள்ளது யாப்பு உருவாக்கும் நடவடிக்கை தொடருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பான சட்டமூலம் கூட மகாசங்கத்தின் எதிர்ப்பையடுத்து கடந்த வாரம் விவாதத்திற்கு எடுக்கப்படாமல் பின் போடப்பட்டது. புதிய அரசியலமைப்பிற்கும் இந்த நிலை ஏற்படலாம் என அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன. மகா சங்கத்தின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என சில அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. ஆனால் புதிய யாப்பு உருவாக்கவே ஜனாதிபதிக்கும் நல்லாட்சிக்கும் மக்கள் ஆணை வழங்கப்பட்டதாக மற்றொரு குழு கூறியுள்ளது. புதிய யாப்பு உருவாக்கத்தில் அரசாங்கம் பின் வாங்கக் கூடாது என த.தே.கூ மற்றும் சிறுபான்மை கட்சிகள் கோரியுள்ளனவாம்.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. மகா சங்கத்தினை சந்தித்திருப்பது மாறுபட்ட அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது.

மகா சங்கத்திற்கு தெளிவுபடுத்தி யாப்பு திருத்த பணிகளை தொடர வேண்டும் என்றே அரசாங்கத்தில் உள்ள அநேகரின் நிலைப்பாடாக இருப்பதாக ஆளும் தரப்பு எம்.பி ஒருவர் கூறினார். ஆனால், எதிர்வரும் தேர்தல்களில் பௌத்த வாக்குகள் கிடைக்காமல் போகலாம் என்பதால் புதிய யாப்பு உருவாக்கும் பணிகள் பின்போடப்படலாம் என அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் கூறியிருக்கிறாராம்.

 

நாமலுக்கு சவர்க்காரத்தில் கண்டம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் சமூக வலைத்தளங்களில் படங்களை பிரசுரித்தும் கருத்துக்களை வெளியிட்டும் வரும் ஒருவர். இவருக்கு எதிராக FCID யிலும் லஞ்ச ஊழல் திணைக்களத்தில் பல்வேறு விசாரணைகள் நடந்து வருகின்றன.

அண்மையில் தனது பெயரில் வெளியிடப்பட்ட நாமல் சவர்க்காரத்தின் புகைப்படமொன்றை வெளியிட்டிருந்த அவர், இதற்காக FCID செல்ல வேண்டி வராதிருக்க வேண்டும் என நக்கலாக குறிப்பு எழுதியிருந்தார்.

இவருக்கு திஹாரி பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் றம்புட்டான் பழம் வழங்கும் படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாக பலர் கருத்துசார் வெளியிட்டிருந்தனர்.

 

சுகாதார அமைச்சரை

சீண்டிய இளம் மருத்துவர்

அச்சு, இலத்திரனியல் ஊடகங்களை விட சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விடயங்கள் விரைவில் எல்லோரையும் சென்றடைகிறது. மருத்துவர் சங்கத்திற்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது. சைற்றம் விவகாரத்திலே இந்த பிரச்சினை எழுந்துள்ளது.

சைற்றம் தொடர்பில் மருத்துவர்கள் கடந்த 5ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்க திட்டமிட்டிருந்தனர். டெங்கு தீவிரமடைந்துள்ளதால் போராட்டத்தை பின்போடுமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியிருந்தார். 8 அம்சங்களின் பிரகாரம் மருத்துவர்கள் போராட்டத்தை பின்போட்டனர். மறுபக்கம் மருத்துவர்களுக்கு எதிராக பொதுமக்கள் கூட்டமாக பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் இரவு கடமையில் ஈடுபட்டிருந்த மருத்துவர் ஒருவர் புகைப்படமொன்றை முகநூலில் பதிவேற்றிருந்தார்.

நிலத்தில் பெருமளவான டெங்கு நோயாளர்கள் படுத்திருக்கும் காட்சி அது. இத்தனை நோயாளிகளையும் கவனிக்க இரண்டு மருத்துவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்தப் படத்தை கைமாற்றி சுகாதார அமைச்சரின் கம்பியூட்டருக்கு அனுப்ப முடிந்தால் நல்லது என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதே வேளை, சிலர் சுகாதார அமைச்சருக்கு இந்தப் படத்தை காண்பித்ததாக அறிய வருகிறது.

 

அமைச்சர்களுக்கு எதிராக

பாய்ந்த ஜனாதிபதி

நல்லாட்சி அரசாங்கத்தில் தினமும் ஏதாவது பிரச்சினை இல்லாமலிருக்காது. அமைச்சரவையிலும் அவ்வப்போது சூடான விவாதங்கள் நடப்பதுண்டு. கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் ஏனைய கூட்டங்களை விட சூடாக அமைந்ததாக தகவல் கசிந்துள்ளது. மோசடி ஒழிப்பு அலுவலகம் தொடர்பிலே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த ஆட்சியில் நடந்த பாரிய மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து ஜனாதிபதி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். தான் சட்டமா அதிபர் திணைக்கள மற்றும் மோசடி விசாரணை குழுக்களின் உயரதிகாரிகளை அழைத்து, விசாரணைகள் தாமதமாவது குறித்து தனிப்பட்ட ரீதியில் வினவியதாக ஜனாதிபதி அமைச்சரவையில் கூறினாராம்.

அரசாங்கத்திலுள்ள சிலர் வழங்கும் ஆலோசனை காரணமாக விசாரணைகளை பின்போடுவதாக அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர். இவ்வாறு அழுத்தம் கொடுப்பவர்களின் விபரங்களை வெளியிடுமாறு பிரதமர் கோரியதாக அறிய வருகிறது.

தனக்கு தேவையானால் அவ்வாறான நபர்களை அழைத்து முகத்துக்கு நேரே அதன் உண்மை தன்மையை வினவமுடியும் என்று பதிலளித்தாராம் ஜனாதிபதி. ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஐ.தே.க தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது, எனக்கும் எனது குடும்பத்தார்களுக்கும் தான் உயிராபத்து ஏற்படும் என ஜனாதிபதி இங்கு கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் மோசடியில் ஈடுபட்டுள்ளோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்ட மா அதிபர் திணைக்களம் நிதி மோசடி பிரிவு என்பவற்றை 6 மாத காலத்திற்கு கனக்குக் கீழ் கொண்டுவர நேரிடும் எனவும் அதன் பின் துரிதமாக இத்தகையோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினாராம்.

மோசடி ஒழிப்பு அலுவலகத்தினூடாக உத்தியோகபூர்வ வாகனத்தை பாவித்ததற்காக அமைச்சர் பௌசிக்கு எதிராகவும் பிரியங்கா ஜெயரத்னவுக்கு எதிராகவும் தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார். தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய எம்.பி.களுக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி பாரிய மோசடிகள் மேற்கொண்ட ராஜபக்ஷ ஆட்சியில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை எனவும் கூறியதாக அறிய வருகிறது. ஜனாதிபதியின் கருத்துக்கு ஆதரவாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக ரணவக்க ஆகியோர் பேசியுள்ளனர்.

ஐ.தே.க அமைச்சர்கள் சிலர் மீதே ஜனாதிபதி மறைமுகமாக விரல் நீட்டியதாக விசயமறிந்த சிலர் பின்னர் பேசிக்கொண்டார்களாம்.

 

வெறுங்கையுடன் திரும்பிய தூதுவர்

கடந்த வாரம் முக்கிய பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், கிழக்கு ஆளுநர் மற்றும் இராணுவத்தளபதி பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதில் கிழக்கு ஆளுநர் பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா, பசீர் சேகுதாவூத் ஆகியோரின் பெயர்கள் கூட அடிப்பட்டன. இறுதியில் யாரும் எதிர்பாராத ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதில் கட்டார் தூதுவர் ஏ.எஸ். பி.லியனகே ஆளுநர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்த முக்கிய நபரென தெரியவந்துள்ளது. தன்னை இந்த பதவிக்கு நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களினூடாக ஜனாதிபதியை கோரியிருந்தார்.

அது போதாதென்று ஊடகங்களினூடாகவும் தன்னை தான் நியமிக்கப்போவதாக கதை பரப்பிருந்தார்.

எதிர்பார்ப்புடன் இலங்கை வந்திருந்த அவருக்கு வெறுங்கையுடன் கட்டார் திரும்ப நேரிட்டுள்ளது. கட்டார் விவகாரம் நீடிப்பதால் அதனை தீர்ப்பதற்காக தொடர்ந்து கட்டார் தூதுவராக பணியாற்றுமாறு ஜனாதிபதி கோரியதாக அவர் ஊடகங்களுக்கு கூறியிருந்தார். ஆளுநர் பதவி கிடைக்காததால் வெகுவாக விரக்கியடைந்துள்ள ஏ.எஸ்.பி. லியனகே, தான் ஆளுநர் பதவியை ஏற்க அன்றி சிகிச்சைக்காகவே வந்ததாக கூறி சமாளித்துக் கொண்டாராம்.

ஆளுநர் கனவை இன்னும் கைவிடாத அவர் தனக்கு வேறு இடத்தில் வெற்றிடம் வந்தால் ஆளுநர் பதவி கிடைக்கும் என நம்பியிருக்கிறார்.

இதேவேளை, சைற்றம் விவகாரம் காரணமாகவே ஜனாதிபதியின் செயலாளர் அபேகோன் பதவி விலகியதாக கூறப்படுகிறது. ஜனாதிபதிக்கும் மருத்துவர் சங்கத்திற்குமிடையிலான இரகசிய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாகவே இந்த இராஜினாமா இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பங்கேற்கவில்லை. ஆனால் இங்கு எட்டப்பட்ட விடயங்களின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிக்கையொன்றை வெளியிட ஜனாதிபதி பணித்திருந்தார்.

ஆனால், ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையினால் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதிக்கும் செயலாளருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இராஜினாமாவுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

 

மு.காவில் மீண்டும் சேகு

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மூத்த உறுப்பினரான முன்னாள் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீன் மீண்டும் மு.காவில் இணைய உள்ளதாக விசயமறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. கடந்த ரமழான் மாதத்தில் இவர் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்ததாக பேச்சடிப்படுகிறது. மீண்டும் முக்கிய சந்திப்பொன்று நடந்த பின் அவர் கட்சியில் இணைவார் என தெரியவருகிறது. அவருக்கு முக்கிய பதவி ஒன்றும் வழங்கப்பட இருக்கிறதாம்.

அவரின் மீள் வருகைக்கு கட்சிக்குள் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரியவருகிறது.

 

சிவப்புத் தொப்பிக்கு

வந்த சோதனை

உலமா கட்சி தலைவர் முபாரக் மௌலவியை பற்றி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது வெளிவரும். சிலர் அவரை நக்கலடித்து கருத்து வெளியிடுவதுண்டு. அவற்றை கண்டு அவர் அலட்டிக் கொள்வதில்லை. உலமா கட்சியை அரசியல் கட்சியாக புதிய தேர்தல் ஆணைக் குழுவில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்சியில் பெண் உறுப்பினர்கள் இல்லை என தேர்தல் ஆணைக்குழு கட்சியை அங்கீகரிக்காமல் நிராகரித்துள்ளதாம் சிவப்புத் தொப்பிக்கு வந்த சோதனை சிலருக்கு கிண்டலாக இருந்தாலும் அவர் தமது முயற்சியை கைவிடுவதாக இல்லையாம்.

 

சி.வி.யை காத்த

சம்பந்தன்

கடந்த வாரம் தமிழரசுக் கட்சி எம்பிகளின் கூட்டம் இரா. சம்பந்தனின் தலைமையில் நடந்தது. புதிய யாப்பு மற்றும் நாட்டு நிலைமைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டதாம். வட மாகாண முதலமைச்சர் தொடர்பில் சில எம்.பிகள் கடுமையாக பேசியதாக தெரிய வருகிறது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எமது ஆட்களை நியமிக்காமல் தமக்கு தேவையானவர்களை அமைச்சராக நியமித்ததற்கு விளக்கம் கோர வேண்டும் எனவும் இங்கு கோரப்பட்டதாம். ஆனால், நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் அரசியல் யாப்பு பிரச்சினை. என் தலைக்கு மேல் பெரும் பிரச்சினைகள் இருக்கையில் இது எதற்கு என இரா. சம்பந்தன் எம்.பி சற்று கடும் தொனியில் கூறி அந்தக் கோரிக்கையை நிராகரித்ததாக தெரியவருகிறது. 

Comments