ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

"வா வா சின்னராசா 10 மணிக்கு அங்க நிற்க வேணும் அடடே வாசிகசாலைக்கு வெளியால கிரவுண்டிலதான். கூட்டம் போலக்கிடக்கு, கதிரைகளும் போட்டிருக்கினம்"

"நேரத்துக்கு வந்து போட்டனாங்கள்"

"இன்னம் அஞ்சு நிமிடம் கிடக்குது"

"வாங்க வல்லிபுரம் அண்ணே எப்பிடி சுகமா இருக்கியளோ.?"

"சுகத்துக்கு என்ன குறை உங்கட வீட்டில எல்லோரும் சுகமா இருக்கினமோ?"

"நல்லா இருக்கிறவை"

"சரி சரி வாருங்கோ முன்வரிசையில இருப்பமென்ன"

"டெங்கு நோய் நாட்டில வேகமா பரவி வாரதால உது பத்தி விழிப்புணர்வு கூட்டமொன்டு நடத்த வேணுமென்டு எங்கட கிராமத்தின்ட இளைஞர் அமைப்பு தீர்மானிச்சிது. உந்த தீர்மானத்தின்ட படி இன்று 10 மணிக்கு கூட்டம் என்டு நாங்கள் நேற்று மாலைதான் அறிவிச்சனாங்கள். உதுக்குள்ள நூற்றுக்கணக்கான அளவில வந்திருக்கிறதால கிராமத்தில இருக்கிறவையின்ட சமூக அக்கறை தெளிவாப் புரியுது. வந்திருக்கிறவைக்கு கிராமத்தின்ட இளைஞர் அணியின்ட தலைவர் என்ற வகையில என்ட நன்றியை கூறிக்கொள்ளுறனான். சுகாதார அமைச்சின்ட பிரசாரப் பிரிவுக்கு பொறுப்பான டாக்டர் சோதிராஜா இப்ப டெங்கு நோய் வந்திதென்டா எப்பிடி பாதுகாப்பா நடந்து கொள்றது என்பது பற்றி பேசுவார்."

"கூடியிருக்கிறவைக்கு வணக்கம் நாங்க நினைச்சதை விட அதிக அளவில இங்க வந்திருக்கிறியள் சந்தோசமா கிடக்குது. நாங்க நடத்துற 15 ஆவது டெங்கு விழிப்புணர்வு கூட்டம் இது. மற்றைய இடங்களில இருந்தவையைவிட இங்க அதிகம் பேர் வந்திருக்கினம். எங்கட விழிப்புணர்வு கூட்டத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் போய் நடத்த முடியாது என்டதாலதான் வாசிகசாலையில இந்த கூட்டத்தை நடத்துறனாங்கள். நாங்க இந்தக் கூட்டத்தில என்ன சொல்லுறம் என்டதை இங்க வந்திருக்கிறவை கூட்டத்துக்கு வராதவைக்கு சொன்னியளென்டா எமக்கு மெத்தப்பெரிய உதவியாயிருக்கும். சரி நாங்கள் இப்போ விஷயத்துக்கு வருவம்"

"டெங்கு நோய் இப்ப நாட்டில வேகமா பரவிக்கொண்டு வருகுது. இந்த ஆறு மாசத்தில மட்டும் 71 ஆயிரம் பேருக்கு மேல பாதிக்கப்பட்டிருக்கினம். உதில கொழும்பில மட்டும் 16 ஆயிரம் பேர். உந்த கால கட்டத்தில மொத்தம் 220 டெங்கு நோயாளியள் மரணிச்சிருக்கினம். இவ்வளவு மோசமான பாதிப்பு இதுக்கு முன்ன ஏற்பட்டதில்ல. வைத்தியசாலைகளில டெங்கு நோயாளியள் நிரம்பி வழிகினம். ஓரு கட்டிலில மூன்டு பேரை கிடத்த வேண்டியிருக்கு. வைத்தியசாலையளின்ட தாழ்வாரங்களிலயும் டெங்கு நோயாளியள்தான் இருக்கினம். என்டபடியா டெங்கு எதிர்ப்பு போராட்டத்தில மருத்துவர்கள், தாதிமார் பொது சுகாதார அதிகாரியள் மட்டுமில்லாம இராணுவத்தினரும் சேர்ந்திருக்கினம். ஆனா உதுவும் போதாமக்கிடக்கு என்டபடியா கிராம மக்கள் உங்களின்ட குறிப்பா இளைஞர்களின்ட பங்களிப்பு எங்களுக்கு தேவைப்படுது. டெங்கு நோய ஒழிக்கிறதில முதல் விஷயம் என்னென்டா உதை பரப்புர நுளம்பு பரவுறதை தடுக்கிறதுதான். அதாவது உங்கட சுற்றுப்புறத்தை சுத்தமா வச்சிக்கொள்ளவேணும்.. உதைப்பத்தி நாங்கள் ஊடகங்களில நிறைய சொல்லிப்போட்டனாங்கள். ஆனா சனங்களுக்கு இன்னும் உது விளங்கினதாத் தெரியேல்ல. உதாலதான் இது போல விழிப்புணர்வு கூட்டங்களை நடத்திக்கொண்டு வாறனாங்கள்"

"டெங்கு காய்ச்சல் எப்பிடி ஏற்படுது? காய்ச்சல் வந்துதென்டா என்ன செய்ய வேணும் என்டதை இனி பார்ப்பம். டெங்கு காய்ச்சல் என்பது திடீரென ஏற்படுற ஒரு வைரஸ் காய்ச்சல். ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசுவாலதான் உது பரவுது. திடீரென்டு காய்ச்சல் வரும் தொடர்ந்து காய்ச்சல் இருக்கும். தசைகளில மூட்டுக்களில மிகுந்த வலி ஏற்படும். தலைவலியும் இருக்கும்."

"உந்த ஏஜிப்டி என்ட கொசு மற்ற கொசுக்கள போல சாக்கடைகளில மட்டும் முட்டையிடாது. நல்ல நீரிலயும் முட்டைபோடும். உந்த கொசு வகையில பெண் கொசுதான் எங்கள கடிக்கும் அதுவும் பகலிலதான் கடிக்கும். அந்த கொசு எங்களை கடித்து ரத்தத்தை உறிஞ்சிற போது கொசுவின்ட வயிற்றில இருக்கிற வைரஸ் உங்களின்ட உடம்புக்குள்ள புகுந்துவிடும். ஒரு கடிகடிச்சதென்டாலும் வைரஸ் எங்கட உடம்புக்குள் புகுறதுக்கு வாய்ப்பு இருக்குது."

"ஏடிஸ் கொசுவின்ட ஆயுள் ரெண்டு வாரந்தான். உந்த ரெண்டு வாரத்தில அது மூன்று தடவை முட்டையள இடும் ஒவ்வொரு தடவையும் நூறு முட்டையள் உந்த முட்டையள் ஒன்பது மாதம் வரையில உலர்ந்த சூழலில உயிர்ப்போட கிடக்கும். கொஞ்சம் தண்ணீர் பட்டதென்டா குடம்பியல் பொரிக்கும். அது நாளு ஐந்து நாட்களில நுளம்பா மாறும். அது பின்ன முட்டைபோடும். உப்பிடி உது பெருகிக்கொண்டு போகும் சரியே. உதாலதான் கூடியவரையில சூழலை சுத்தமா வைச்சுக்கொண்டு நுளம்பு பெருகாம பாத்துக்கொள்ள வேணும்."

"காய்ச்சல் வந்தவுடன நீங்கள் பரசிடமோல் வில்லைகளைத் தான் எடுக்க வேணும் என்பதை நல்லா ஞாபகம் வச்சிக்கொள்ளுங்கோ. அஸ்பிரின், புபுரொபின் போன்ற வலி நிவாரணிகளை எடுக்க கூடாது. பெரசிடமோல மட்டும் எடுக்கவேணும் என்பதை மறந்து போடாதியள். காய்ச்சலுக்கென்டு நாட்டு மருந்து எடுக்கவும் வேண்டாம். உடனடியாக அரசாங்க வைத்தியசாலைக்கு அல்லது தனியார் வைத்தியசாலைக்கு போகவேணும்."

"டெங்கு காய்ச்சலில ரென்டுவகை இருக்கு. ஒன்டு சிக்கலில்லாத காய்ச்சல் மற்றது ரத்தக்கசிவுள்ள தீவிரமான காய்ச்சல் சிக்கலில்லாத சாதாரண காய்ச்சலுக்கு பெரசிட்டமோல் போதும். 99 சதவீதம் பேருக்கு வாரது உந்த சாதாரண காய்ச்சல்தான். உந்த சாதாரண காய்ச்சல் பெரசிட்டமோலோட சுகமாகிபோகும். இரண்டு அல்லது மூன்று நாட்களில சுகமாகிப்போகும். ஆனால் மூன்றாவது நாளில இருந்துதான் தீவிர காய்ச்சலின்ட குணம் தெரிய ஆரம்பிக்கும். எங்கட இரத்தத்தில கிடக்கிற தண்ணீர் உள் உறுப்புகளுக்கு கசியத்தொடங்கும். இது ரொம்ப ஆபத்து இரண்டாவதான தீவிர டெங்கு காச்சலில உடம்பில் ரத்த அழுத்தம் குறையும் ஆனா மரணத்தை ஏற்படுத்துர உந்த டெங்கு காய்ச்சல் நூத்தில ஒருத்தருக்குத்தான் ஏற்படும்."

"எங்கட ரெத்தத்தில 1.5 லச்சத்தில இருந்து 4.5 லச்சம் வரையில தட்டணுக்கள் இருக்குது. உந்த தட்டணுக்கள் 10.000 க்குக் குறைந்தது என்டா ஆபத்து. அதற்குப் பிறகு தட்டணுக்கள உடம்புக்குள்ள செலுத்த வேணும். டெங்கு காய்ச்சல் வந்தவுடனேயே தட்டணுக்கள முதலிலேயே செலுத்தலாமே என்டு நீங்கள் கேட்கலாம். ஆனா உதில எந்த பலனும் கிடைக்காது. தட்டணுக்களின் எண்ணிக்கை குறையாத நேரத்தில நாம் தட்டணுக்களைச் செலுத்தினமென்டா அதில பலன் இல்லாமல் போகும். தேவையில்லாத நேரத்தில செலுத்திற தட்டணுக்கள் வீணா அழிஞ்சி போகும். சரியே."

"டெங்கு நோய் ஏற்படாம தடுக்க வேண்டுமென்டா உந்த டெங்கு கொசு பரவுவதைத் தடுக்க வேண்டும். உதுக்கு எங்கட சுற்று சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சாக்கட நீர தேங்காம பாத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்கூரைகளில் இலைகள் மக்கி குழாய்களை அடச்சிக்கொள்ளும். உது டெங்கு கொசு பரவுர இடம். சுற்றுப்புறங்களில போட்டுக்கிடக்கிர யோகட், ஐஸ்கிரீம் கப்கள், சிரட்டைகள், பிளாஸ்டிக் குவளையல், மூடிகள் கிடக்காம பார்த்துக்கொள்ள வேணும்."

"சாக்கடையில நீர் தேங்கியிருந்தா உதுக்கு கொசு மருந்து இல்லையெண்டா எண்ணெயாவது தெளிக்க வேணும். உதால உந்த தண்ணீரில கொசு முட்டை போடுறத தவிர்க்கலாம். சாதாரணமா வீட்டில் இருக்கும் நேரங்களில் கால்களையும் கைகளையும் மறைக்கிற மாதிரி சாரம் வேஷ்டி இல்லையென்டா முழுக்காற் சட்டை. முழுக்கைச்சட்டை போடுறது நல்ல விசயம். உதால கொசு கடிக்கிறத குறைச்சிக் கொள்ளலாம்."

"டெங்கு நோய் உலர்வலய நாடுகளிலதான் அதிகமா தாக்குது. ஒரு வருஷத்திற்கு ஐந்து முதல் பத்து கோடிப்பேரை டெங்கு தாக்குது.. சிறுவர்கள், பள்ளிக்கூட மாணவர்கள், பெரியோர்கள் என்டு எவரையும் டெங்கு விட்டுவைக்காது. அவையளும் மரணமடைந்திருக்கினம். டெங்கு நோய் வந்ததென்டா முதல் நாள் பரசிட்டமோல் எடுக்கலாம். அடுத்தநாள் காய்ச்சல்குறைய வில்லையென்டா வைத்தியரிட்ட போகத்தான் வேணும் என்பத ஞாபகம் வைச்சிக்கொள்ளுங்கோ. டெங்குவைத் தடுக்க வேண்டுமென்டா சுற்றுப்புறத்த சுத்தமாக வைத்துக்கொள்ள வேணும்."

"கிராமத்தில இளைஞர்கள், மாணவர்கள் ஒன்டு சேர்ந்து சனி, ஞாயிறு நாட்களில கிராமத்திலுள்ள தோட்டம் துறவுகள சிரமதான் முறையில சுத்தம் செய்யலாம். உதால கிராமத்தில இருந்து டெங்கு நோய ஒழிக்கிறதுக்கு அந்த கிராமத்திலிருக்கும் மாணவர்கள் இளைஞர்களின்ட பங்களிப்பு உதவுது. உதுமாதிரி ஒவ்வொரு கிராமத்திலையும் நடந்துதென்டா உங்கட பிரதேசத்தில இருந்து டெங்கு நோய சுலபமா விரட்டலாம் என்பத மறக்காதீங்க."

Comments