தமிழர் அரசியலுக்கான | தினகரன் வாரமஞ்சரி

தமிழர் அரசியலுக்கான

 கருணாகரன்

 தமிழ் மக்களுடைய அரசியலைச் சரியான முறையில் முன்னெடுப்பதற்குப் பொருத்தமான தலைமை தேவை. வரலாற்றுச் சூழலும் அப்படித்தான் உள்ளது. இதனால்தான் “மாற்றுத் தலைமை வேணும்” என்று பலரும் பேசி வருகின்றனர்.

மாற்றுத் தலைமை ஒன்றோ அல்லது பலவோ அவசியம் என்ற குரல்கள் எல்லாப் பக்கமிருந்தும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. களத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசியல் அரங்கில் பலவீனமான நிலையிலே இருப்பதாக மக்களால் உணரப்படுகிறது.

மக்களால் மட்டுமல்ல, கூட்டமைப்பிற்குள்ளிருப்போரினாலேயே அப்படித்தான் கருதப்படுகிறது. இதனால்தான் கூட்டமைப்பிலிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வன் போன்றவர்கள் தமிழ் மக்கள் பேரவைக்கு இணக்கமாக நடக்கின்றனர். தமிழ் மக்கள் பேரவையின் “எழுக தமிழ்” நிகழ்வுகளில் இவர்கள் பங்கேற்றதும் இந்த அடிப்படையில்தான்.

இதைவிட “தற்போதைய சூழலில் மாற்றுத் தலைமை ஒன்று தேவை” என சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளிப்படையாகவே அறிவித்துமிருக்கிறார். இதை கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளின் வெளிப்பாடு என்று சுருக்கிப் பார்க்க முடியாது. அதற்கும் அப்பாலான வரலாற்றுத் தேவையின் வெளிப்பாடே இதுவாகும் என்றே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

“தற்போது மாற்றுத்தலைமைக்கான அவசியம் ஒன்றில்லை” என்று விக்கினேஸ்வரன் சமாளித்தாலும் அவருக்கும் இது நன்றாகவே புரியும். “மாற்றுத்தலைமை ஒன்று உருவாக வேணும்” என்று சொல்லிக்கொண்டு முதலமைச்சராகப் பதவியில் தொடர்ந்தும் இருக்க முடியாது. அதற்குத் தமிழரசுக் கட்சியினர் இடமளிக்கமாட்டார்கள் என்பதை அண்மைக்காலத்தில் அவருக்குத் தமிழரசுக் கட்சியினர் ஏற்படுத்திய நெருக்கடிகள் பாடமாகும். எனவே மாகாணசபையின் ஆட்சிக் காலம் முடியும்வரையில் விக்கினேஸ்வரன் கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பார் என எதிர்பார்க்கலாம். முடிந்தளவுக்குச் சம்பந்தன் அணியோடு அவர் முரண்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கவே முற்படுவார். இப்போதே அவருடைய குரலில் தணிவு வளரத்தொடங்கி விட்டது. ஆகவே விக்கினேஸ்வரன் மாற்றுத்தலைமை குறித்துப் பேசுவார் என எதிர்பார்க்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் குழப்பங்கள், அமைப்பினுள் மலிந்திருக்கும் நெருக்கடிகள், செயற்பாட்டுத்திறனின்மை, நிலைப்பாட்டுக் குறைபாடு போன்றவற்றின் வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் பேரவை உருப்பெற்றது. அதாவது ஒரு மாற்றுச் சக்தியாக. ஆனால், எதிர்பார்த்தவாறு பேரவை அந்த வெற்றிடத்தை நிரப்பவில்லை. அந்த வெற்றிடத்துக்கான மாற்றுச் சக்தியாக உருப்பெறவும் இல்லை. எனவேதான் அதையும் கடந்த ஒரு மாற்றுத் தலைமை அல்லது மாற்றுச் சக்தி வேண்டும் என்று உணரப்படுகிறது.

அந்த மாற்றுத் தலைமை அல்லது மாற்றுச் சக்தி என்பது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைப்போன்று காலப் பொருத்தமற்ற, கற்பனாவாத அரசியற் சித்தாந்தத்தை முன்னிறுத்தாமல், உலக ஒழுங்கை உள்வாங்கி, தமிழ் அரசியலின் நியாயத்தையும் தேவையையும் நிறைவேற்றுவதாக இருக்க வேணும். அப்படி நிறைவேற்றக் கூடிய நேர்மையும் வினைத்திறனும் மக்கள் மீதான கரிசனையும் உள்ள ஒரு சக்தியே மாற்றுச் சக்தியாக – மாற்றுத் தலைமையாக அடையாளம் காணப்படும்.

இதற்கான களயதார்த்தம் கனிந்திருக்கின்றபோதும் மாற்றுச் சக்தியை அல்லது மாற்றுத் தலைமையை அடையாளம் காண்பது என்பது கடினமாகவே உள்ளது. இந்த வெற்றிடத்துக்குப் பொருத்தமான முகமாக வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரனைச் சிலர் கருதுகின்றனர். விக்கினேஸ்வரனின் கடந்தகால அரசியல் பிரகடனங்களும் அரசியல் நிலைப்பாடும் அப்படி அவர்களைக் கருத வைத்துள்ளது. அதனால்தான் “வாராது வந்துதித்த மாமணி” என்றவாறாக விக்கினேஸ்வரனை இவர்கள் புகழ்ந்து குறிப்பிடுகின்றனர். ஆனால், ஒரு அரசியல் பிரகடனமோ அரசியல் நிலைப்பாடோ அதனுடைய வழிமுறை, செயற்பாட்டு முறைமை, அதற்கான அர்ப்பணிப்பான உழைப்பு ஆகியவற்றின் மூலமாகவே பெறுமதியாகும். இல்லையென்றால், அது காலப்போக்கில் நகைப்பிற்குரிய ஒன்றாகி விடும்.

தமிழ்மக்களுடைய கடந்த எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஏராளம் பிரகடனங்கள் செய்யப்பட்டுள்ளன. வட்டுக்கோட்டைத் தீர்மானம், வாகரைப் பிரகடனம் எனப் பலவற்றைக் குறிப்பிடலாம். வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் செய்த ஈழப்பிரகடனம் வரையில் ஏராளம் பிரக டனங்கள் நம் காலடியில் கொட்டிக்கிடக்கின்றன. “புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”, “தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்” வரையில் எத்தனையோ வாய்பாடுகள் நம்மிடமுண்டு.

இவற்றை விட புதிய வாய்பாடுகளையோ பிரகடனங்களையோ கஜேந்திரகுமாரோ விக்கினேஸ்வரனோ தரப்போவதில்லை. இவற்றைவிடப் புதுமையான ஒன்றை தமிழ் மக்கள் பேரவையோ, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியோ காண்பிக்கவும் முடியாது. ஆகவே, பழைய சுவருக்குப் புதிய வண்ணம் பூசும் முயற்சிக்கு ஒரு மாற்றுத் தலைமை தேவையில்லை. மாற்றுத் தலைமை என்பது தலைகளை மாற்றுவதில்லை. அல்லது தனி நபர்களின் மீது ஒளிவட்டத்தைச் சூடித் திருப்திப்பட்டுக்கொள்வதுமல்ல.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சம்பந்தனுக்கும் விக்கினேஸ்வனுக்கும் சூடப்பட்ட முடிகளும் கைகளில் கொடுக்கப்பட்ட வேலும் போர்த்தப்பட்ட பொன்னாடைகளும் புகழ்ந்துரைக்கப்பட்ட புகழ்வார்த்தைகளும் இன்று என்ன நிலையை அடைந்துள்ளன? இன்று இந்தத் தலைமைகள் வரலாற்றின் கழிவிடத்துக்குத் தூக்கி வீசப்படவேண்டியவை என்ற அளவில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆகவே, மாற்றுத்தலைமை என்பது காலப்பொருத்தத்துக்கு ஏற்றவாறு வளர்ந்து நிலைபெறும் வகையில் செயற்படுவதாக இருக்க வேணும். சிலர் இதை மறுத்துரைக்கக்கூடும். அவர்களுடைய வாதத்தின்படி, “கூட்டமைப்பின் தலைமைப்பீடம் (சம்பந்தன், சுமந்திரன் அணி) சரியான முறையில் செயற்படுகிறது. அரசாங்கத்தோடும் வெளிச் சக்திகளோடும் கூட்டமைப்பு முறையான தொடர்பாடல்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், அது காரியங்களைச் செயற்படுத்தி, வடிவமொன்றை ஆக்குவதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை. அதற்குள் அவசரப்பட்டு விமர்சனங்களை முன்வைப்பதும், அநாவசியமான சந்தேகங்களைக் கேள்விகளாக்குவதும் பொருத்தமானதில்லை. இது வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைக்கும் சங்கதியாகி விடும். அவசரப்பட்டு மாற்றுத்தலைமை ஒன்றைப்பற்றிச் சிந்திப்பது தமிழ் அரசியலைப் பலவீனப்படுத்துவதாகவே அமையும். இன்னொரு வகையில் சொன்னால், இது தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு சதியாகும்...” என்று.

ஆனால், இவர்கள் கூட்டமைப்பின் மீதான விமர்சனங்களையும் அதற்குள்ளே ஏற்பட்டிருக்கும் உள் நெருக்கடிகளையும்பற்றிச் சிந்திப்பதில்லை. அரசியல் தீர்வு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து கூட்டமைப்பின் வாதங்களையும் கால அவகாசம் கோருதல்களையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று வைத்துக்கொண்டாலும் இந்தத் தாமதத்தின் மூலமாக அரசாங்கம் எந்தத் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது கூட்டமைப்பு மிகப் பலவீனமாக இருப்பதாகவே தெரியும். அரசியலமைப்பின் உருவாக்கம் இன்று நெருக்கடி நிலையை – நம்பிக்கையீனத்தின் முனையை எட்டியுள்ளது. இதை மீறிச் செயற்படுத்துவதற்கு கூட்டமைப்பினால் முடியுமா?

மறுவளத்தில் மக்களுக்குத் தேவையான தொழில்வாய்ப்புகள் தொடக்கம் வாழ்க்கைக்குத் தேவையான முன்னேற்ற நடவடிக்கைகளை – அபிவிருத்திகளைக் கூட்டமைப்பு மேற்கொள்ளத் தவறி விட்டது. தலைமைகள் தாங்கள் மட்டும் வசதி வாய்ப்புகளை அனுபவிப்பனவாக இருக்க முடியாது. அவற்றை மக்களும் அனுபவிக்கக்கூடியதாக இருக்க வேணும். அதற்குரிய வழிகளை அரசியற் தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும் கூட்டமைப்புச் செய்யவில்லை. எனவேதான் இரண்டு நிலையிலும் கூட்டமைப்பு நம்பிக்கை இழந்த சக்தியாக உணரப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்திருந்தார். அப்போது அந்த உறவினர்கள் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினைகள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, அரசாங்கத்துடன் இனிமேல் கடுமையான தொனியில் பேசப்போவதாகத் தெரிவித்தார். அத்துடன், எந்தக் கருமங்களைச் செய்வதற்கும் கால அவகாசமும் பொறுமையும் வேணும் என்றார். இந்தக் கால அவகாசத்துக்கு எவ்வளவு நீட்சி என்று அவர் குறிப்பிடவில்லை. அப்படிப்பார்த்தால் சில நூற்றாண்டுகள் கூட ஆகலாம். சம்பந்தன் கோரும் பொறுமைக்கும் நூற்றாண்டுகளே தேவைப்படும். இவ்வாறு நூற்றாண்டுகளைத் தனது அரசியல் செயல்முறைக்குக் கோரும் அமைப்புடன் மக்கள் எவ்வாறு சேர்ந்து பயணிக்க முடியும்? எனவேதான் மாற்றுத் தலைமை ஒன்று தேவை எனப்படுகிறது.

இப்போது கூட்டமைப்பும் பிற அரசியற் சக்திகளும் களத்தில் நிற்கும்போது மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். காணாமலாக்கப்பட்டோருடைய உறவுகள் நடத்தும் போராட்டம், நில மீட்புப் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள், அரசியல் கைதிகளின் போராட்டங்கள் எனப் பல. இவை ஒரு மாற்று அரசியல் தலைமையின் வழிகாட்டலையும் பொறுப்பையுமே கோரி நிற்கின்றன. அந்த மாற்று அரசியல் தலைமை என்பது நிச்சயமாகப் புதிய முகங்களையும் புதிய மனங்களையும் புதிய அரசிய பண்பினையுமே கொண்டிருக்கும். வரலாற்றுக்குப் பொருத்தமான சிலர் இந்த மாற்று அணியில் இணைந்தாலும் புதிய செயல்முறையையே தன்னுடைய அரசியல் கோட்பாடாகக் கொண்டு அந்த அணி உருவாகலாம். காலம் பதில் சொல்லும்.

Comments