கொதிநிலை தணிந்த எல்லைப் பதற்றம் | தினகரன் வாரமஞ்சரி

கொதிநிலை தணிந்த எல்லைப் பதற்றம்

கலாநிதி.கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

ஜீ-20 மகாநாடு இராஜதந்திர உரையாடல் நிறைந்த ஒன்றாக அமைந்தது. அமெரிக்க -ரஷ்ய ஜனாதிபதிகளுக்கிடையில் சமரச முயற்சி இடம் பெற்றது போல் இந்திய -சீனத் தரப்பிலும் நிகழ்ந்தது. பரஸ்பரம் இரு நாட்டுக்குமான எல்லைத் தகராற்றில் யுத்தம் ஒன்று வெடிக்குமளவுக்கு நகர்வுகள் காணப்பட்டன. ஆனால், மோடி- ஜின்பிங் சந்திப்பு ஜேர்மனியின் ஹாம்பர்க்கில் நிகழ்ந்த பின்பு யுத்தத்திற்கான முனைப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவும் சீனாவும் தமக்கிடையே 1962ஆம் ஆண்டுக்குப் பின்பு அதிக எல்லை முறுகலைச் சந்தித்துள்ளன. இந்தியத் தரப்பினைப் பொறுத்தவரை 1962 யுத்தம், பாரிய இழப்பினை ஏற்படுத்திய யுத்தமாகும்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மீது சீனா உரிமை கோருவதும், எல்லையிலுள்ள மக்களின் தோற்றமும் சமூக பண்பாட்டுத் தன்மைகளும் சீன சாயலைக் கொண்டிருப்பதும் அதிகமான முரண்பாட்டினை இரு தரப்பிலும் ஏற்படுத்த முயலுகிறது. சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய இந்திய மாநிலங்கள் தனக்குச் சொந்தமானது எனவும் சீனாவின் வரைபடத்தில் காட்டப்பட்டிருப்பதுடன் மக்மிலன் கோட்டினை முற்றாகவே நிராகரித்து சீனா செயல்படுவதனைக் காணமுடிகின்றது. இத்தகைய நிலையில் சீனா 1962 இல் நிகழ்த்திய யுத்தத்தில் இந்தியாவின் பாரிய நிலப்பகுதியை கைப்பற்றியது. ஏறக்குறைய இலங்கைக்குச் சமனான நிலப்பகுதி சீனாவிடம் உள்ளது.

இரண்டாவது கட்டத்தில் இரு நாட்டு அரசியல் தலைமைகளும் எதிர் எதிர் துருவங்களாகவே செயல்பட்டுள்ளனர். 1959 இல் நேரு எடுத்த பஞ்சசீலக் கொள்கை தோற்றுப் போனது முதல் இன்று வரை அதிக முரண்பாட்டினையும் போட்டியையும் கொண்ட நாடுகளாகவே தலைவர்கள் காட்டிக் கொள்கின்றனர். பொருளாதார, இராணுவப் போட்டிகளில் இரு நாடுகளும் போட்டியிடும் நிலை ஏற்பட்ட போதும் சீனாவை விட இந்தியா இருபது மடங்கு பலவீனமாகக் காணப்படுகிறது என்ற கணிப்பு இந்தியர்களிடமுள்ளது. ஆனால், இந்தியர்கள் சீனாவுடனே எதற்கும் ஒப்பீடு செய்வதைக் காணலாம். இத்தகைய செயலுக்குள் தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. சீனர்களை விரட்டியடிக்கும் சினிமாக்கள் இந்தியாவின் அனேக மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்திய – சீன எல்லை என்பது அதிக முரண்பாடுகளைக் கொண்டு தென்னாசிய நாடுகளால் சுற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஜம்மு – கஷ்மீர் அருணாசலப் பிரதேசம் வரையான 3488 கீலோமீற்றர் எல்லையானது பாகிஸ்தானுடன் பங்கிடப்படும் பகுதியாகவும் சிக்கீம் மாநிலத்துடனான 220 கிலோ மீற்றர் எல்லையையும் மற்றும் நேபாளம் சீனா இந்தியா ஆகிய இரு நாட்டுடனும் பகிர்ந்து கொள்கிறது.

எனவே, சீன -இந்திய எல்லை என்பது பாகிஸ்தான், நேபாளம், பூட்டானுடன் தொடர்பு பட்டது. அண்மையில் சீனாவின் துருப்புக்களும் இந்திய துருப்புக்களும் பூட்டானின் எல்லையூடாக சிக்கிம் மாநிலத்தில் ஏற்படுத்திக் கொண்ட நடவடிக்கையே இரு நாட்டுக்குமான யுத்த சூழலை தீவிரப்படுத்தியது. குறிப்பாக சீன இராணுவம் Doka la பகுதியில் புதிய பாதை ஒன்றுக்காக கட்டுமானப்பணியில் ஈடுபட்டதாகவும், (இதனை இந்தியத் தரப்பு Dakklam என அழைக்கிறது) சீனா தனது Donglang பிரதேசத்தின் தொடர்ச்சியே Doka la பகுதி எனவும் அது தனக்குரியதெனவும் உரிமை கோருகிறது. இதற்கு பூட்டான் ஆதரவு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சிக்கிம் எல்லையிலுள்ள பகுதிகளில் சீன இராணுவம் கூடாரங்களை அமைத்தும் சிறிய முகாங்களை கட்டி வருவதுடன் 10 ஆயிரம் அடி உயரமான மலைப்பகுதிகளில் சீன இராணுவம் தனது நாட்டுக் கொடியை பறக்கவிட்டுள்ளது. பதிலுக்கு இந்திய இராணுவமும் தனது படைகளைத் தங்க வைக்க முயற்சித்ததுடன் இரு தரப்புக்குமான உரையாடல்களும் பரஸ்பரம் நிகழ்ந்துள்ளன. இவ்வகைச் சம்பவங்கள் பல கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது.

இத்தகைய எல்லைத் தகராற்றில் இரண்டு பிரதான விடயம் நிகழ்ந்து கொண்டிருகிறது. ஒன்று இராணுவ ரீதியான நடவடிக்கைக்கான மிரட்டலும் தயார்படுத்தலும், நகர்வுகளும். இது ஒரு வகை இராணுவ தந்திரோபாய நகர்வுகள். இதில் சீனாவின் கை ஓங்கியே உள்ளது. காரணம் 1962 முதல் அது படிப்படியாக இந்தியத் தரப்பிடமிருந்து இந்திய மண்ணைக் கைப்பற்றியிருப்பதுடன் தொடர்ந்து எல்லையை விஸ்தரித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஆளில்லா விமானங்கள், உலங்குவானூர்திகள், ராடர்கள் தொலைத் தொடர்பு சாதனங்கள் என்பன மூலம் கண்காணிப்பதும், இந்திய ஜனாதிபதி, பிரதமர் எல்லை மாநிலங்களுக்கு விஜயம் செய்யும்போது பதற்றத்தை ஏற்படுத்துதல் அவர்களது விஜயத்தை நிராகரித்தல், போன்றவையும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

அடுத்து இந்திய செல்வாக்கு எல்லையோர நாடுகளைத் தனது மென்அதிகார உத்தியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. பாகிஸ்தான் மட்டுமே ஆரம்பத்திலிருந்து இந்தியாவிற்கு பகை நாடு. ஆனால் பூட்டான், நேபாளம் என்பன இந்தியாவின் நெருக்கமான நட்பு நாடுகள். இப்போது சீனாவுடனான ஒத்துழைப்பு பலமடைந்ததுடன் சீனாவின் பொருளாதார உத்திகளால் கட்டப்பட்ட உட்கட்டமைப்புக்களுடன் நெருக்கமான உறவினை சீனாவுடன் கொண்டுள்ளன. இது இந்திய- சீன தரை எல்லையில் மட்டுமல்ல இந்தியாவின் இந்து சமுத்திரத்திலும் கடல் எல்லையிலும் நிகழ்ந்துள்ளது. ஏறக்குறைய இந்து சமுத்திரத்தின் கணிசமான பகுதி சீனாவின் செல்வாக்குக்குள் அகப்பட்டுள்ளது.

இந்தியா சீனாவுடன் ஒரு மோதலை இனி எதிர்கொள்வதென்பது இராணுவ தந்திரத்தில் மிக அபாயகரமானதேயாகும். ஆனால், இந்திய ஊடகங்களும், அமைச்சுக்களும் இதனைக் கருத்தில் கொள்ளாது மோதலில் வெற்றி பெறலாமெனவும், 1962 இல் உள்ள நிலையில் இந்திய இராணுவம் இல்லை எனவும் குறிப்பிட முனைகின்றன. இந்திய துருப்புக்களும் போர் பதற்றத்தை ஏற்படுத்த முனைந்தமையானது பாகிஸ்தான், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளைப் பொறுத்ததாகும்.

சீனா பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச மட்டத்தில் செயல்பட்டாலும் பாகிஸ்தானை பாதுகாக்க முயற்சிப்பதாக இந்திய ஆளும்தரப்பு குற்றம் சாட்டுகின்றது. அதே சந்தர்ப்பத்தில் இந்தியத் தரப்பும்- சீனத் தரப்பும் இராஜதந்திர செயல்பாட்டில் அதிகமான அக்கறை கொள்ளுகின்றன.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிற்பாடு சீனாவுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்க அரசியல் நகர்வாக அமைந்திருந்தது. 2016 இல் சீன ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகை தந்தமையும் அதனை அடுத்து இரண்டு தரப்பும் வர்த்தக ரீதியிலும், சந்தை அடிப்படையிலும் நெருக்கமான உறவை கொள்ள விரும்புகின்றன. இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் சீன விஜயம் எல்லைத் தகராற்றுக்கு நல்லதொரு தீர்வை நோக்கிய முதல்படி என வர்ணிக்கப்பட்டது. அதே நேரம் சீனா குறிப்பிடுகின்றது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை உட்பட இந்திய-சீன எல்லை தொடர்பில் 1267 குழுக்கள் அமைக்கப்பட்டு இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆதாரப்படுத்தும் இந்திய ஜனாதிபதி முகர்ஜி குறிப்பிடும்போது, நியாயமான, பொருத்தமான இரு தரப்பை திருப்திப்படுத்தக்கூடிய தீர்வுக்கு செல்வதற்கு இந்தியா உடன்படுவதாகத் தெரிவித்தார். இவ்வாறே உள்நாட்டு அமைச்சர் அருள் ஜேக்கியின் சீனப்பயணமும் இந்திய தரப்பின் இராஜதந்திர முயற்சியாக அமைந்துள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்திலேயே ஜி – 20 மகாநாட்டில் இரு தலைவர்களது சந்திப்பும் பின்பான உரைகளும் அமைந்தது. எல்லையில் பதற்றம் நிலவும்போது, தலைவர்கள் கைலாகு கொடுத்து கௌரவமான உரையாடல் நிகழ்ந்தது. எல்லைப் பதற்றத்தைக் கடந்து இராஜதந்திர நகர்வாக இந்தச் சந்திப்பு அமைந்தது. சீன ஜனாதிபதி ஜின்பின் குறிப்பிடும் போது இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடு என்றும் அதன் நடவடிக்கைகளைக் கண்டு பாராட்டுவதாகவும் பிராந்திய வலுவுக்கு இந்தியாவின் பொருளாதார எழுச்சி அவசியமானதெனவும் குறிப்பிட்டதோடு BRICS அமைப்பின் மகாநாட்டில் கலந்து கொள்வதற்கும் அதனை வளர்ச்சி நோக்கி நகர்த்தவும் இந்தியாவுடன் ஒத்துழைப்பதாக அறிவித்தார். சீன ஊடகங்கள் இது ஒரு உத்தியோகபூர்வமான சந்திப்பல்ல எனக்குறிப்பிடுகின்றன. அது மிகச் சரியானதே. காரணம் இது ஒரு இராஜதந்திர செயல்பாடேயாகும்.

பதிலுக்கு இந்திய பிரதமர் மோடி, சீனாவில் நடைபெறவுள்ள BRICS மகாநாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பினை இந்தியா வழங்குமெனவும், வர்த்தக ரீதியில் இந்தியா சீனாவுடன் தொடர்ந்து உறவுகளை வளர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பதிலுக்கு சீனாவும் இந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என குறிப்பிட்டதுடன் எல்லை விவகாரம் தணிந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் ஊடகங்கள் ஒரு யுத்தத்திற்குத் தயார் செய்வதனை அவதானிக்க முடிகிறது.

இங்கு ஒரு முக்கியமான முடிவுக்கு இரு தரப்பும் வந்துள்ளன. இரண்டு நாட்டின் வர்த்தக பொருளாதார உறவு பாதிக்கப்படாதென தெரிவித்தமையே அந்த முடிவாகும். ஏனெனில் இரு நாட்டுக்கும் வர்த்தக, சந்தைத் தளத்தில் பரஸ்பரம் தேவையான சக்திகள். அதனால் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் போக்கும் காணப்படுகின்றது.

இன்றைய உலகம் பொருளாதார நலன்களால் அதிகம் சுற்றிவளைக்கபட்டுள்ளது.

வர்த்தகத்தையும், சந்தையையும் கைவிட்டால் பொருளாதாரம் தளர்ந்து போய்விடும். பொருளாதார சிதைவு இராணுவத்தைப் பலவீனப்படுத்தும். இராணுவம் பலவீனமானால் அரசியல் உறுதிப்பாடும் வல்லரசு தனமும் வீழ்ச்சியடையும். இதனால், எந்த அரசும் அடிப்படையில் சந்தை வர்த்தகம் இரண்டையும் கைவிடாத நிலையே 21ஆம் நூற்றாண்டு அரசியலாகும். இதனையே சீன-இந்திய தரப்பில் பதற்றம் நிலவினாலும் பொருளாதார ஒத்துழைப்பைக் கைவிடாத நிலை காணப்படுகின்றது. எல்லைப் பதற்றத்தை வைத்து தந்திரோபாய ரீதியில் இந்தியாவை சீனா தனது எல்லைக்குள் கட்டுப்படுத்தி விட்டதென்றே கூறலாம். 

Comments