மீண்டும் போர் வருமா!? | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் போர் வருமா!?

தி.முருகன்

பனி படர்ந்த இந்திய-−சீன எல்லை, 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சூடான மோதலைச் சந்தித்திருக்கிறது. புல்கூட அதிகம் முளைக்காத பூடான் நாட்டை ஒட்டிய சும்பிப் பள்ளத் தாக்குப் பகுதியில், 3,000 இந்திய வீரர்களும், 3,000 சீன வீரர்களும் கண்ணுக்குக் கண் பார்த்தபடி எதிரெதிர் எல்லைகளில் நிற்கிறார்கள். எந்தப் பேச்சுவார்த்தையும் பலன் தரவில்லை. ‘ஒரே ஒரு ரோடு போடும் விவகாரம், இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையேயான போரில் போய் முடியுமோ’ என்று உலகமே இப்போது கவலைப்படுகிறது.

கடந்த வாரம் சீனாவையும் பாகிஸ்தானையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு, ‘‘ஒரே நேரத்தில் இரண்டு எல்லைகளில் போர் வந்தாலும், இரண்டு ராணுவங்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது’’ என்று சொன்னார், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்.

அடுத்த நாளே ‘‘இப்படிப் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. 1962-ம் ஆண்டு என்ன நடந்தது என வரலாற்றிலிருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று சீனாவுடனான போரில், இந்தியா தோற்றதைக் குத்திக்காட்டினார் சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் வூ கியான். இதற்குப் பதிலடியாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் அருண் ஜெட்லி, ‘‘1962-ம் ஆண்டு இருந்த சூழ்நிலை வேறு. இப்போதைய இந்தியா வேறு’’ என்று உஷ்ணம் கூட்டினார்.

பிரச்சினையின் முதல் புள்ளி

இந்த எல்லா வீர முழக்கங்களுக்கும் ஃப்ளாஷ்பேக் கடந்த ஜூன் 16-ம் திகதி ஆரம்பிக்கிறது. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்துக்கும் பூடான் நாட்டுக்கும் இடையே, ஒரு குறுவாளின் நுனிபோல இருக்கும் சும்பிப் பள்ளத்தாக்குப் பகுதி சீனாவுக்குச் சொந்தம். இங்கு உள்ள டோக்லாம் பீடபூமியில், தங்கள் நாட்டின் எல்லையோரமாக இருக்கும் டோகா லா என்ற ராணுவ முகாமுக்கு ரோடு போட்டது சீனா. தங்கள் ராணுவ முகாமுக்கு சீனா ரோடு போட்டது பிரச்சினை இல்லை; மலைப்பாங்கான தங்கள் நாட்டுப்பகுதியில் ரோடு போடுவது சாத்தியமில்லை என்பதால், அதை பூடான் நாட்டு வழியாகப் போட்டதுதான் பிரச்சினை. பூடானுக்கும் இந்தியாவுக்கும் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் இருக்கிறது. அதனால், இந்தியா இதில் தலையிட்டது. அடுத்தநாளே இந்திய ராணுவத்தினர் அங்கு போய் எதிர்ப்புத் தெரிவித்து, ரோடு போடும் பணியை நிறுத்தினர்.

கடுப்பான சீன ராணுவம், டோகா லா எல்லையில் இருந்த இரண்டு இந்திய ராணுவ முகாம்களைத் தாக்கி அழித்தது. அங்கு எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவம் வர முயன்றபோது, இந்திய ராணுவத்தினர் மனிதச்சங்கிலி போல கைகோத்து நின்று தடுத்தனர். இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டனர். துப்பாக்கிகளே முழங்காத சண்டைபோல அது இருந்தது. அங்கு இந்திய ராணுவம் எல்லை தாண்டி ஊடுருவி இருப்பதாகக் குற்றம் சாட்டும் சீனா, ‘‘இந்தியர்கள் திரும்பிப் போக வேண்டும்’’ என்கிறது.

இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் இரண்டு நாட்கள் சிக்கிம் பயணம் சென்று நிலைமையைக் கண்காணிக்க, இன்னொரு பக்கம் சீன ராணுவம் இதன் அருகே திபெத் எல்லையில் போர்ப்பயிற்சி மேற்கொண்டது.

‘‘இந்தியாவைக் குறிவைத்து இதைச் செய்யவில்லை’’ என்று தேவையே இல்லாமல் விளக்கம் வேறு கொடுத்தது.

பூட்டானுக்கு பூட்டு

ஒரு காலத்தில் இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்த நேபாளம், வங்க தேசம் போன்ற நாடுகளை சீனா தன் வசம் ஈர்த்துக்கொண்டது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில், இன்னமும் இந்தியாவுக்கு நெருக்கமாக இருப்பது பூட்டான் மட்டுமே! மன்னர் ஆட்சி நடைபெறும் பூட்டானுக்கு எல்லாமுமாக இருப்பது இந்தியாவே. பூட்டான் ராணுவத்துக்குப் பயிற்சி தருவது இந்தியாதான். ‘ஒருவருக்கு ஆபத்து என்றால், இன்னொரு நாட்டின் ராணுவம் உதவிக்கு வர வேண்டும்’ என்ற ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் இருக்கிறது. சர்க்கரையில் ஆரம்பித்து சமையல் எரிவாயுவரை பூடானுக்கு எல்லாமே இந்தியாவிலிருந்துதான் போகின்றன.

பூடானின் வடக்கே இருக்கும் 499 சதுர கிலோ மீட்டர் பகுதியைச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதேபோல, இப்போது பிரச்சினைக்குள்ளாகி இருக்கும் டோக்லாம் பீடபூமியிலும் 269 சதுர கிலோமீட்டர் பகுதியைச் சீனா தன்னுடையது என்கிறது.

இப்போது பூடானுடன் சீனா வேறொரு டீல் பேசுகிறது. ‘டோக்லாம் பீடபூமியைக் கொடுத்து விட்டால், வடக்கே உரிமை கோருவதை நிறுத்திவிடுவோம்’ என்கிறது. இதற்குப் பூட்டான் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், வம்படியாக நுழைந்து ரோடு போடுகிறது. இப்போதும், ‘‘இது பூட்டானுக்கும் எங்களுக்குமான பிரச்சினை. இதில் உங்களுக்கு என்ன வேலை?’’ என இந்தியாவிடம் கேட்கிறது.

‘ஒரு ரோடு போடுவதற்கு எதற்காக இவ்வளவு எதிர்ப்பு?’ என்ற சந்தேகம் எழலாம். ஆனால், அந்த ரோட்டின் நோக்கம்தான் பிரச்சினைக்குரியது. தன் எல்லையில் இருக்கும் ராணுவ முகாம்கள்வரை டாங்கிகள் போன்ற கனரக வாகனங்கள் வருவதற்காகவே, சீனா இப்படி ரோடு போடுகிறது.

சீனாவின் டோகா லா எல்லை முகாமுக்கு மிக அருகே இருக்கும் இந்தியப் பகுதி சிலிகுரி மண்டலம். நேபாளத்துக்கும் வங்க தேசத்துக்கும் இடையே, ஒரு பாட்டிலின் கழுத்துபோல குறுகலாக இருக்கிறது இந்தச் சிலிகுரி மண்டலம். இந்த வழியாகத்தான் நம் ஏழு வட கிழக்கு மாநிலங்களும், இந்தியாவின் மையப்பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளன. ஏதோ ஒரு சூழலில் சீன ராணுவம் முன்னேறினால், வடகிழக்கு மாநிலங்களோடு இந்தியாவின் மைய நிலத்துக்கு இருக்கும் தொடர்பு சில மணி நேரங்களில் துண்டிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு இந்தியாவைத் துண்டாடுவது சுலபம். நம் பிரதான அச்சமே இதுதான்.

1962 இந்திய -சீனப் போரின்போதே, சீனா சகல வசதிகளோடும் இருந்தது. அவர்கள் டாங்கிகளிலும் கவச வாகனங்களிலும் போர்முனைக்கு வர, நம் வீரர்கள் நடந்து சென்றார்கள்.

(17 ஆம் பக்கம் பார்க்க)

 

Comments