60 அடி பாலம் ஒரு மரணப்பொறி | தினகரன் வாரமஞ்சரி

60 அடி பாலம் ஒரு மரணப்பொறி

க.கிஷாந்தன்

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயில் ஹற்றன் - கொட்டகலைக்கு இடைப்பட்ட,60 அடி பாலத்தில் விபத்துக்குள்ளானதிலிருந்து பதுளைக்கான ரயில் சேவைகள் நடைபெறாதோ என்ற ஏக்கம் பயணிகள் மத்தியில் ஏற்பட்டது. இப்போது அந்த அச்சம் நீங்கியிருக்கிறது. ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் திருத்த வேலைகள் இடம்பெற்று வருவதால், மாற்று ஏற்பாடுகள் மூலம் கொழும்பு - பதுளை ரயில் சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே செயற்பாட்டு அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்திருக்கிறார்.

இதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையான அனைத்து ரயில் சேவைகளும் வழமைபோன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் சேதமடைந்திருக்கும் 60 அடி பாலம் மக்கள் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்றது என்பதனால் அக்குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் விசேட இலவச பஸ் இணைப்புச் சேவை ஏற்பாடு செயப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இதன்படி கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் ரயில் ஹற்றன் ரயில் நிலையத்தை அடைந்ததும் அங்கு பயணிகள் இறக்கிவிடப்படுவர். அதன் பின்னர் ரயில் மேற்படி பாலத்தைக் கடந்து கொட்டகலை ரயில் நிலையத்தில் தரித்து நிற்கும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள் விசேட இலவச பஸ் இணைப்புச் சேவை மூலம் கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். இதற்கு சுமார் 10 நிமிடங்களே தாமதமாகும். அதனையடுத்து பயணிகள் மீண்டும் அதே ரயிலில் ஏறி பதுளை வரை செல்ல முடியுமென்றும் விஜய சமரசிங்க விளக்கமளித்தார்.

இந்த விசேட இலவச பஸ் இணைப்புச் சேவையை இலங்கை ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளதுடன் அதற்கான மொத்த செலவீனத்தையும் திணைக்களம் பொறுப்பேற்றிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் இம்மாற்று ஏற்பாடு எவ்வளவு காலத்துக்கு நடைமுறையிலிருக்குமென கேட்கப்பட்ட கேள்விக்கு,பாலத்தை திருத்தும் பணிகள் எப்போது முடிவடையும் என்பதனை உறுதியாக கூறமுடியாது என்றும் சில வேளைகளில் இரண்டு வாரங்களுக்கு மேற்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.சேதமடைந்த பாலத்தை பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து விசேட அதிகாரிகள் குழு அங்கு சென்றிருந்தன.

தண்டவாளம் உடனடியாக திருத்தப்பட்டதையடுத்தே ரயில் சேவைகள் வழமைபோன்று பதுளை வரை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இலங்கையில் பிராத்தானிய ஆட்சி காலப்பகுதியில் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் செல்வதற்காகவும், பயணிகள் பயணிப்பதற்காகவும் வெள்ளைகாரர்களால் உருவாக்கப்பட்ட ரயில் தண்டவாளங்கள் இன்றைக்கு 150 வருட காலங்களைக் கடந்து பழமைவாய்ந்துள்ளது.

கொழும்பு நகரம் தொடக்கம் மலையகம் வலம் வரும் ரயில்பாதைகள் பதுளை வரை இடம்பெற்று தொடர்கின்றது. இதற்கிடையில் மலையக பிரதேசத்தை அண்மிக்கும் இடங்களிலிருந்து ரயில் தண்டவாளங்கள் மற்றும் ரயில் பாலங்கள் மலையக பகுதிகளில் அனேகம் உண்டு.

கடுகண்ணாவ பகுதியிலிருந்து பதுளை வரையிலான மலையக ரயில் சேவை பாதைகள் மிக நீண்டகாலம் பழமைவாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இந்த ரயில் பாதைகளில் பல்வேறு விபத்து சம்பங்கள் சிறிது சிறிதாக இடம்பெற்றிருந்தாலும் கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் உள்ள 60 அடி உயரமான ரயில் தண்டவாள பாலத்தில் ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இரவு மணி 8.15க்கு புறப்பட்ட தபால் சேவை பயணிகள் ரயில், மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் கொட்டகலை ரயில் நிலையத்தை அண்மிக்கும் பொழுது இந்த 60 அடி பழமைவாய்ந்த பாலத்தில் விபத்துக்குள்ளாகியது.

இதில் பயணித்த ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். இருந்தும் பயணிகள் மூவருக்கு மாத்திரமே சிறு காயங்கள் ஏற்பட்டன. ஆனால் 150 வருட கால பழமைவாய்ந்த பாலமாகக் கருதப்படும் இந்த 60 அடி பாலத்தில் இரு புறங்களிலும் பாதுகாப்பு இல்லாவிட்டால் இந்தப் பயணிகளின் நிலை எவ்வாறாக அமைந்திருக்கும் முழு இலங்கையிலும் இன்று பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயமாக இது கருதப்படுகின்றது.

மலையக பிரதேசத்தை வலம் வரும் ரயில் வீதிகளில் சிறு சிறு ரயில் தடம்புரளும் நிகழ்வுகளை கண்டுள்ளோம். ஆனால் இலங்கையில் முதல் முதலாக மலையக பகுதியில் இவ்வாறான ரயில் விபத்து சம்பவம் இம்முறை இடம்பெற்றுள்ளமை இரண்டாவது சம்பவமாக கருதப்படுகின்றது. இதற்கு முன்னர் ஒருமுறை வட்டவளை பகுதியில் காலநிலை சீர்கேட்டினால் சரக்கு ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியது. அதில் சுமார் 6 சரக்கு பெட்டிகளும் ஓர் எண்ணெய் தாங்கியும் ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி சம்பவம் நிகழ்ந்தது. ஆனால் தற்பொழுது இடம்பெற்றுள்ள விபத்து பயணிகள் பெட்டிகள் மூன்று முற்றாக தண்டவாளத்தில் இருந்து விலகி குறித்த 60 அடி பாலத்தில் ஒரு புறமாக சாய்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆகையால், மலையகத்தில் பேசப்பட்டு வருகின்ற ஒரு முக்கிய விடயமாக இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ரயில் பாதைகள் பழமைவாய்ந்ததாக காணப்பட்டாலும், நவீன தொழில்நுட்ப காலத்தில் ஆங்காங்கே சீர்திருத்தங்கள் இடம்பெறுகின்றதே தவிர முழுமையாக ரயில் பாதைகளை சீர் திருத்தியிருப்பதாக தெரியவில்லை.

(17 ஆம் பக்கம் பார்க்க)

150 வருடங்களுக்கு மேலாக பழமைவாய்ந்த நிலையில் காணப்படுகின்ற ரயில் பாதைகளை சீர்திருத்த அழுத்தம் கொடுத்த ஒரு விபத்தாக அண்மையில் இடம்பெற்ற இவ்விபத்து எடுத்துக்காட்டுகின்றது.

இன்று இந்த ரயில் பாதையை மறுசீரமைப்பதற்காக தொழில்நுட்ப ரீதியான வல்லுநர்கள் பொறியியலாளர்கள் எனப் பல்வேறு மட்டத்தினைச் சார்ந்தவர்கள் கொட்டகலை பிரதேசத்திற்கு படையெடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட ரயில் பாதையும் சீர்திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக மலையக பிரதேச ரயில் வீதிகளில் காணப்படுகின்ற பழமைவாய்ந்த ரயில் பாதைகள் மற்றும் ரயில் பாலங்களையும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தப் பாலம் மரணப்பொறியாக இருக்கும்?

Comments