சு.க. எம்.பிக்கள் மஹிந்தவுடன் கிசுகிசு... | தினகரன் வாரமஞ்சரி

சு.க. எம்.பிக்கள் மஹிந்தவுடன் கிசுகிசு...

இப்னு ஷம்ஸ்

ஆளும் தரப்பிலுள்ள சுதந்திரக் கட்சி எம்.பிகள் இடைக்கிடையே ஒன்றிணைந்த எதிரணி தலைவர்களை சந்திப்பதுண்டு. செப்டம்பர் மாதத்துடன் ஐ.தே.க. - சு.க. ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில் கட்சி தாவல் தொடர்பில் ரகசிய பேச்சுவார்த்தைகள் மாறி மாறி இடம்பெறுகிறது. இந்நிலையில் ராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதி அமைச்சர் ஒருவரும் முன்னாள் ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். தாம் அமைச்சு பதவியை கைவிட்டு வருவதற்கு தயாராக இருப்பதாக இவர்கள் கூறியுள்ளனர்.

அரசில் இருந்து ஒதுங்கி தங்களுடன் இணையுமாறு முன்னாள் ஜனாதிபதி இவர்களை கோரியுள்ளார். ஆனால் தாம் முதலில் எதிரணியில் சுயாதீனமாக செயற்படுவதாகவும் பின்னர் பொது எதிரணியில் இணைய தயார் எனவும் இருவரும் கூறியுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் வாரங்களிலும் இரு தரப்பும் இரகசியமாக பேச உள்ளனராம்.

 

முஸ்லிம்களை இலக்கு

வைக்கும் கூட்டு எதிரணி

கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி கவிழ்வதற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. சிங்கள வாக்குகளை மாத்திரம் நம்பி வெல்ல முடியாது என்ற உண்மை கூட்டு எதிரணிக்கு தற்பொழுது புரிய ஆரம்பித்துள்ளது. இதனால் முஸ்லிம்களை தமது பக்கம் ஈர்க்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம்.

நோன்பு காலத்தில் முன்னாள் ஜனாதிபதி வைத்த இப்தார் நிகழ்வில் பெருமளவு முஸ்லிம்கள் பங்கேற்றது தெரிந்ததே, இந்த நிலையில் அண்மையில் நடந்த ஒன்றிணைந்த எதிரணியின் இளைஞர் மாநாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் நாமல் ராஜபக்ஷ அடங்களான இளம் எம்.பிக்களை சந்தித்து மஹிந்த ஆட்சி கவிழ தாங்கள் பங்களித்து இன்று உண்மை நிலையை உணர்ந்திருப்பதை கூறியுள்ளனர்.

சூழ்ச்சி காரணமாகவே கடந்த ஆட்சி மாற்றப்பட்டதாகவும் இன்று அதனை உணர்ந்து வேதனைப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனராம்.

முஸ்லிம்களை தங்களுடன் தக்க வைப்பதற்கு தாம் முஸ்லிம் கட்சிகளையே நம்பியதாகவும் ஆனால் அவர்கள் அமைச்சு பதவியிலும் வசதி வாய்ப்பிலுமே குறியாக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ இங்கு கூறியுள்ளாராம். இனி முஸ்லிம் கட்சிகளை நம்பாது நேரடியாக முஸ்லிம்களுடன் தொடர்பு வைக்கும் பொறிமுறை ஒன்றை அமைத்து கையாண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

வாயை கொடுத்து....

சில சு.க. பிரதி அமைச்சர்கள் இருப்பக்கமும் காலை வைத்துக் கொண்டு தடுமாறுவதாக தெரிகிறது. அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரத்தை பலப்படுத்தும் இவர்கள் மறுபக்கம் மஹிந்த ராஜபக்சவுடனும் தொடர்புகளை பேணி வருகின்றனர்.

இவ்வாறு இரு பக்கமும் காலை வைத்துள்ள இருவர் ஐ.ம.சு.மு. செயலாளர் மஹிந்த அமரவீரவை கடந்த வாரம் சந்தித்திருக்கிறார்கள். பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணாந்துவும் மற்றொரு பிரதி அமைச்சரும்தான் இவ்வாறு சந்தித்துள்ளனர்.

தாம் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் விரக்தி அடைந்துள்ளதாகவும் தொடர்ந்து அரசில் நீடிக்க விரும்பவில்லை எனவும் இவர்கள் கூறினார்களாம். மஹிந்த ராஜபக்ச தரப்புடன் இணையப் போவதாக அவர்கள், அமைச்சர் அமரவீரவிடம் கூறியுள்ளனர்.

ஆனால் எதிர்வரும் ஒரு மாத காலத்தில் கோதபய ராஜபக்ச கைதாகலாம் எனவும் ஒன்றிணைந்த எதிரணி முக்கியஸ்தர்களுக்கு எதிரான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறியதாக தெரிய வருகிறது. எனவே அந்தப் பக்கம் சென்றால் நட்டாற்றில் வாழும் நிலை ஏற்படும் என அவர் எடுத்துரைத்தாராம். அமைதி காக்குமாறும் கோரினாராம்.

இந்தக் கதையை பிரதி அமைச்சர் அருந்திக, கூட்டு எதிரணி எம்.பிகளிடையே பரப்பியதாக என தெரிய வருகிறது. இதனால் அமைச்சருக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. கோதாபயவை ஒரு மாதத்தில் கைது செய்யப்பட இருப்பதாக தான் எங்கும் கூறவில்லை என அமைச்சர் அமரவீர அவசரப்பட்டு அறிக்கை விட்டிருந்தார்.

 

கோதாவுக்கு மன்னிப்பு

கோதாபய கைது சமாச்சாரம் அரசியல் அரங்கில் சூடு பிடித்தால் அமைச்சர் அமரவீர சற்று ஆடிப் போனார். இது சு.க. அமைச்சர்கள் சிலருக்கும் உள்ளுக்குள் சந்தேகமாம். ஏனென்றால் கட்சியின் அடுத்த தலைவராக அமரவீரவை கொண்டு வர ஜனாதிபதி தயாராவதால் சிலர் கடுப்பாகியிருப்பது தெரிந்ததே.

தன்னை தலைவராக உயர்த்த ஜனாதிபதி தயாராவதால் சிரேஷ்ட தலைவர்கள் சிலரும் தனக்கெதிரான சிலருமே இந்தக் கதையை பரப்பியுள்ளதாக அமைச்சர் வருத்தப்பட்டுக் கொண்டாராம்.

 

மோசடி ஒழிப்பு செயலகம்

மூடப்பட யார் காரணம்?

மோசடி ஒழிப்பு செயலகத்தை மூடிவிடுவதில் ஆளும் கட்சியிலுள்ள இரு பிரதான கட்சிகளான ஐ.தே.கவுக்கும் சு.கவுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதாக அறியவருகிறது. இதன் காலத்தை நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் இரு வேறு நிலைப்பாடுகளை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் 30 உடன் இதன் காலம் முடிவடையும் நிலையில் அதனை மேலும் 6 மாத காலத்தினால் நீடிப்பது உகந்தது என பிரதமர் தரப்பில் கடந்த அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது ஆனால், பாரிய மோசடிகளுக்கு இந்த செயலகத்தினூடாக தண்டனை வழங்கத் தேவையான பங்களிப்பு எதுவும் இடம்பெறவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஐ.தே.க தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். மோசடி ஒழிப்பு செயலகத்தை நீடிப்பதா? இல்லையா? என்பதில் அமைச்சர்களிடைலே மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறதாம்.

இந்த செயலகத்தினூடாக சு.க அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, பிரியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்வரும் தினங்களில் மேலும் சில சு.க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதனாலேயே அவசரமாக இந்த செயலகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆனால், பாரிய மோசடிகள் தொடர்பான ஆவணங்களை தயார் செய்து நிதி மோசடி பிரிவுக்கு முன்வைக்கவே இந்த செயலகம் 2015 நவம்பரில் உருவாக்கப்பட்டது. முதலில் ஒரு வருடம் பின்னர் 6 மாதங்களும் இதன் காலம் நீடிக்கப்பட்டது.ஆனால் 1 வருடத்தில் 60 மில்லியனுக்கு மேல் செலவிடப்பட்டாலும் எதிர்பார்த்த இலக்கு எட்டப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமளித்திருக்கிறார். பாரிய மோசடிகளை விடுத்து சிறு சிறு சம்பவங்களையே தூக்கிப்பிடித்ததாகவும் இந்த செயலகத்தை தொடர்வதால் பயனில்லை என்பதால் அதன் காலத்தை நீடிக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், சு.க பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் போன்றோர் அரசில் விரக்தியடைந்துள்ள நிலையில் அரசியலிலுள்ள சு.க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசின் இருப்பிற்கு பாதகமாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அரசல் புரசலாக பேச்சடிப்படுகிறது.

 

மக்கள் பணத்தை

வீணடிக்கும் எம்.பிகள்

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்றம் பிரசன்னம் தொடர்பில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காரசாரமான விமர்சனம் இடம்பெறுகிறது. எம். பி ஒருவருக்கு மாத சம்பளம் 54, 285 ரூபாவும் அலுவலக கொடுப்பனவாக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவும் வருகை கொடுப்பனவாக (ஒரு நாள் பாராளுமன்ற வருகை) 2500 ரூபாவும் உபசரிப்பு கொடுப்பனவாக ஆயிரம் ரூபாவும் எரிபொருள் கொடுப்பனவாக 30 ஆயிரம் ரூபாவும் தொலைபேசி கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபாவும் அலுவலக உபகரணங்களுக்கு 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் போக்குவரத்து கொடுப்பனவாக 10 இலட்சமும் வழங்கப்படுகிறது. இது தவிர 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு 20 இலட்சம் ரூபா காப்புறுதியும் கிடைக்கிறது.

ஆனால் 225 எம்.பிகளில் எத்தனை பேர் பாராளுமன்றம் வருகிறார்கள். எத்தனை பேர் விவாதங்களிலோ குழுக் கூட்டங்களிலோ அமைச்சுக்கள் தொடர்பான தெரிவுக் குழு கூட்டங்களிலோ, கோப் கலைக்குழு கூட்டங்களிலோ பங்கேற்கின்றார்?

இது பற்றி மந்திரி டொட்கொம் ஆராய்ந்து வருகிறது மே மாதத்தில் 7 நாட்கள் பாராளுமன்றம் நடந்தது இதில் 45 பேர் மட்டும் தான் 7 நாளுமே பாராளுமன்றம் வந்துள்ளனர். அதில் 18 பேர் எந்த விவாதத்திலோ கூட்டங்களிலோ பங்கேற்காமல் வருகிற கட்டணத்தை மட்டும் பெற்றுச் சென்றுள்ளனராம். கடந்த ஜூன் மாதத்தில் நடந்த 7 நாள் அமர்வில் ஒரு அமர்வில் கூட பங்கேற்காதவர்கள் தொகை 13 ஒரு அமர்வில் மட்டும் பங்குபற்றியது 14 எம்.பிகள் தானாம்.

7 நாளும் வந்தவர்கள் 38 மட்டும்தானாம். பாராளுமன்றத்திற்கு சும்மா வந்து செல்பவர்களுக்காக (எம்.பிகள் தான்) வருடாந்தம் 40 முதல் 50 இலட்சம் அரச பணம் விரயமாக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எம்.பி.களுக்கு வழங்கும் பணத்தினால் உண்மையான பயன்கிடைக்கிறதா? இவர்கள் மக்கள் பணத்தை வீணடிக்கிறார்கள்! என்ற கேள்விக்கு மக்கள் தான் பதில் வழங்க வேண்டும் என்கின்றனர் விசயமறிந்தவர்கள்.

Comments