புதிய அரசியலமைப்பு சிக்கலுக்கு தீர்வு | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசியலமைப்பு சிக்கலுக்கு தீர்வு

ராம்ஜி

நாட்டின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வழிகாட்டல் குழுவின் செயற்பாட்டில் அதன் இடைக்கால அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்க முனைந்திருந்தபோதுதான் பெளத்த சங்க சம்மேளனங்கள் புதிய அரசியலமைப்பு தேவையில்லையென்ற எதிர்ப்பு காட்டின. இதனால் புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் சிக்கலில் விழுந்தன. இந்த சிக்கலைத் தீர்க்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தற்போது இறங்கியுள்ளது.

புதிய அரசியலமைப்பு வேண்டாம். என்று கூறிய பெளத்த சம்மேளனங்கள் அவ்வாறு கூறியதற்கு என்ன காரணமென்று சரியாகக்தெரியவில்லை. பெளத்த சம்மேளனங்களின் அதிருப்திக்கு என்ன காரணம்? சொன்னவர்களுக்கும் தெரியவில்லை. கேட்பவர்களுக்கும் புரியவில்லை. அவர்களாகவே சொன்னார்களா இல்லை வேறுயாராவது சார்பில் சொன்னார்களா என்று தெரியாமல் ஆளாளுக்கு தலையைப் பிய்த்துக்கொள்கின்றனர்.

எப்படியாக இருந்தாலும் இந்த விடயத்தை மேலும் சிக்கலாக்காமல் சுமுகமாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகளில் அரசாங்கம் தற்போது இறங்கியுள்ளது. இதன்முதற்கட்டமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பெளத்த சம்மேளனத் தலைவர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். புதிய அரசியலமைப்பில் பெளத்த சமயத்திற்கு உரிய இடமளிக்கப்படுமென்று ஜனாதிபதி உறுதி அளித்திருக்கிறார். புதிய அரசியலமைப்பில் பெளத்த மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு ஆகியவற்றில் தற்போதுள்ள சரத்துக்கள் அதேபோன்று தொடரும் அதில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன் பெளத்த சங்கத்தினரை மீறி எந்தவொரு சரத்தும் புதிய அரசியலமைப்பில் இடம்பெறாது என்றும் வாக்குறுதி வழங்கியிருக்கிறார். மறுபுறம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதேபோன்றே உறுதி மொழிகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்று பிரதான பெளத்த நிக்காயாக்களின் உள்விவகாரங்களில் அரசாங்கம் தலையீடு செய்வதை தடை செய்யும் ஷரத்து புதிய அரசியலமைப்பில் இடம்பெறுமென்று குறிப்பிட்டிருக்கிறார்.

புதிய அரசியலமைப்பின் இறுதிவடிவம் மகாநாயக்க தேரர்கள் மற்றும் மக்களின் அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும் என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க கூறியிருக்கிறார் புதிய அரசியலமைப்பில் பெளத்தத்திற்கு உள்ள அந்தஸ்தை எவரும் மாற்ற முடியாது என்பது உறுதி செய்யப்படுமென்று அவர் கூறியிருப்பது புதிய அரசியலமைப்பை சிக்கலாக்க எதிர்தரப்பினர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு பதில் அளிப்பதாக உள்ளது.

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வழிகாட்டல் குழு இதுவரை பலமுறை கலந்துரையாடியுள்ளது. உத்தேச இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் ஒவ்வொன்றாக விவாதிக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அரைவாசி முடிந்துள்ளது. இன்னும் ஓரிருமாதங்களில் உத்தேச இடைக்கால அறிக்கையை தயாரித்து முடிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கை முழுமை பெற்றால்தான் அதிலிருந்து அரசியலமைப்பின் உத்தேச நகல் வரைபைத் தயாரிக்கலாம். அதனையும் விவாதத்திற்குட்படுத்தித்தான் உத்தேச அரசியலமைப்பை இறுதி செய்யலாம் என்று கூறுகிறார் அரசியலமைப்பு தயாரிப்புக்கான வழிகாட்டல் கமிட்டியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்குவந்த காலத்தில் இருந்தே புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ஆனால் ஏன் இத்தனை தாமதம்? ஏற்கெனவே இரண்டரை வருடங்கள் கடந்த விட்டதே? என்று அவரிடம் கேட்டபோது இந்த விடயத்தில் நிறைய நிதானம் தேவை. எடுத்த மாத்திரத்தில் எதையும் செய்துவிட முடியாது. உத்தேச இடைக்கால அறிக்கையில் இடம்பெறும் ஒவ்வொரு ஷரத்து தொடர்பாகவும் எந்தெந்த தரப்பிலிருந்து எவ்வாறான எதிர்ப்புக்கள் கிளம்பும் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும். அவ்வாறான எதிர்ப்புகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி விவாதித்த பின்னரே வழிகாட்டல் குழு அவ்விடயத்தை இறுதி செய்ய முடியும்.

எவ்வளவு தூரத்திற்கு அதுபற்றி விவாதிக்கின்றோமோ அந்த அளவுக்கு முறையான தீர்வு கிடைக்கும். எனவே விரைவு ரயில்போல் செல்ல முடியாது. அதேநேரம் வீணாகத் தாமதிக்கவும் முடியாது. தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலம் குறைகிறது என்பதை மனதில் வைத்துத்தான் செயற்படுகிறோம் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் மாற்றம் ஏற்படுத்துதல் மற்றும்இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதாகும். பழைய அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்று அதிகாரம் ஓரளவு குறைக்கப்பட்டது புதிய அரசியலமைப்பு மூலம் மேலும் சில மாற்றங்களைச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு வேண்டாமென்று பெளத்த சம்மேளனங்கள் எதிர்ப்புக்கொடி உயர்த்தியதையடுத்து இனப்பிரச்சினை தீர்வை பெளத்த பிக்குமார் ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய அரசியலமைப்பில் பெளத்தத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கத்தில் பெளத்த பிக்குமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. எனினும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வருவதை அவர்கள் விரும்பவில்லையோ என்ற கேள்வி இப்போது தமிழர்களிடையே எழுந்திருக்கிறது. அவ்வாறானதாக இருந்தால் அதுபற்றிய பெளத்த சம்மேளனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இவ்வாறான ஒரு நேரடி சந்திப்பு இப்போதைய நிலையில் அவசியமும் அவசரமானதும் ஆகும்

இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்ற காரணமாகத்தான் தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தார்கள். அதன் பின்னர் ஏற்பட்ட நல்லாட்சிக்கும் தமிழர்கள் ஆதரவு தொடர்ந்ததால்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இரா சம்பந்தன் தெரிவானார்.

இனப்பிரச்சினை விடயத்தில் ஓரளவுக்காவது திருப்திகரமான அம்சங்கள் புதிய அரசியலமைப்புமூலம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கடந்தமாதம்வரை வடபகுதி மக்களுக்கு இருந்தது. ஆனால் பெளத்த பிக்குமாரின் புதிய அரசியலமைப்புக்கு எதிரான கோஷம் காரணமாக ஏற்பட்ட சிக்கல்கள் தமிழ் தரப்பினரிடம் எதிர்பார்ப்பை இப்போது கேள்விக்குறியாக ஆக்கியிருக்கிறது.

பெளத்தர்களுக்கு பெளத்தம் பாதிக்கப்படக்கூடாது. தமிழர்களுக்கு இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும். தமிழர்களின் பிரச்சினைக்கு முழு அளவிலான தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். அதனைக் கொடுப்பதாகக்கூறுபவர்களுக்கும் தெரியும் இருப்பதைவிட ஓரளவு அதிகமாகக்கிடைக்கும் என்பது தமிழர் எதிர்பார்ப்பு ஆனால் பெளத்தத்தைப் பொறுத்தவரை இருப்பதை கிஞ்சித்தேனும் இழக்க முடியாது என்று கூறித்தான் பெளத்த பிக்குமார் எதிர்ப்புக் கோசம் போடுகின்றனர். பெளத்தத்திற்கு எந்தவகையிலும் பாதிப்புவராது என்று அரசு உறுதிகூறியபோதிலும் எதிர்ப்புக் கோசம் எழுப்பிய பெளத்த குருமார் இறங்கி வருவதாகத் தெரியவில்லை.

எது எப்படியோ தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உருவாகப்போகும் புதிய அரசியலமைப்பின் மூலம் இந்த அரசாங்கத்திடம் இருந்து ஓரளவுக்கேனும் தீர்வு கிடைத்தால்தான் உண்டு. சமஷ்டி இல்லாத அரைகுறை தீர்வாக இருந்தாலும் அது அரசியலமைப்பின் மூலம் வரவேண்டும் என்பது தமிழர் தரப்பு விருப்பம். இதனால்தான் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு வந்தது முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சியைப் போலத் தன்னை கருதிச் செயல்பட்டு வருகிறது

உத்தேச புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் இதுவரை இணக்கம் காணப்பட்ட விடயங்களில் மக்கள் அங்கீகாரத்தை பெற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. அதே போன்று தமிழ்த்தரப்பு தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு சம்பந்தனிடம் உள்ளது. ஆனால் தேசிய தமிழ் கூட்டமைப்பில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தமிழ்த் தரப்பின் ஓற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்து விட்டன. இதே வேளை பெளத்த பிக்குமாரில் ஒரு தரப்பினர் புதிய அரசியலமைப்புக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளமை அரச தரப்பினரின் நிலைமையையும் சிக்கலாக்கியுள்ளது. பெளத்த பிக்குமாரின் செயற்பாடுகள் மக்கள் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனோ அல்லது சர்வஜன வாக்கெடுப்பிலோ நிறைவேற்றும் பொறுப்பு பெருமளவில் பெரும்பான்மை மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவது எளிதாக இருக்காது

புதிய அரசியலமைப்பு உருவாக வேண்டும் என்பது மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணை. எனவே அதனை நிறைவேற்றுவது நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பு.அந்தப் பொறுப்பை நல்லாட்சி அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாது. புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தில் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம்தான் தேர்தல் முறைமை மாற்ற வேண்டும். இப்போதைய நிலையில் புதிய தேர்தல்முறை வந்தால்தான் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தலாம். அதேபோல புதிய அரசியலமைப்பின் மூலம்தான் இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்றைக் காணவும் முடியும்.

எனவே புதிய அரசியலமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் பெளத்த அமைப்புக்கள், தமிழ் தரப்பு, அரசாங்கம், அரசியலமைப்பை உருவாக்கும் வழிகாட்டல்குழு முஸ்லிம் தரப்பினர் ஆகிய அனைவரையும் வட்டமேசைக்கு அழைத்துப் பேசுவதுதான் இந்தச் சிக்கலைத் தீர்க்க சரியானவழி. ஒவ்வொரு தரப்பின் பிரச்சினைகளையும் அலசிஆராய்ந்து மற்றையதரப்பினர் ஏற்றுக்கொள்ளும்வரை பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். மனக்கிலேசத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து அம்சங்களும் தீர்க்கமாக ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் புதிய அரசியலமைப்பு உருவாக முடியும். 

Comments