மீதொட்டமுல்ல அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளுக்கு எயார்டெல் உதவி | தினகரன் வாரமஞ்சரி

மீதொட்டமுல்ல அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளுக்கு எயார்டெல் உதவி

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதியன்று அப்பிரதேச வாசிகள் எதிர்பாராத வகையில் துயரத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்தது. அந்த பேரனர்த்தத்தின்போது 32 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், 625 பேர் பாதிப்பிற்குள்ளாகினர். இவ் அனர்த்தத்தால் 145 வீடுகள் சேதமடைந்தன. அச்சந்தர்ப்பத்தில் முழு நாடுமே ஒன்றுதிரண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்க முன்வந்ததை நாம் அறிவோம்.

இந்நிலையில் தனது ஊழியர்களின் பங்களிப்புடன் எயார்டெல் நிறுவனமும் நிதியைத் திரட்டி மனமுவந்து உதவ முன்வந்தது. உயர்தரப் பரீட்சை நெருங்கும் இச்சந்தர்ப்பத்தில், மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு அர்த்தமுள்ள வழியில் உதவிகளை வழங்கி அவர்களை வலுவூட்டுவதற்கு எயார்டெல் தனது ஊழியர்கள் திரட்டிய நிதியை இரட்டிப்பாக்கி வழங்கியிருக்கிறது.

மீதொட்டமுல்ல அனர்த்தமானது வீடுவாசல் மற்றும் உடமைகளை அழித்தது மட்டுமன்றி, 300 வரையான பாடசாலை மாணவர்களின் பெறுமதிமிக்க பாடசாலை குறிப்பு புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்களையும் நாசமாக்கியது. உயர்தரப் பரீட்சையானது ஒருவரின் வாழ்வில் அடுத்தகட்டத்தைத் தீர்மானிப்பதில் மிகப்பாரிய தடைதாண்டலாக உள்ளது.

பரீட்சை நெருங்கும் இத்தருணத்தில், பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் தவிப்பிற்குள்ளாகினர். இந்நிலையில், தமது நேரம், பணம் மற்றும் சக்தி அனைத்தையும் ஒன்றுதிரட்டிய எயார்டெல் ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது பங்களிப்பாக, இளம் மாணவர்களுக்கு பாடசாலை குறிப்புப் புத்தகங்களின் போட்டோ பிரதிகள் மற்றும் காகிதாதிகளை வழங்கியுள்ளனர்.

இந்த மனிதாபிமானப் பணி தொடர்பில் பார்தி எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜினேஷ் ஹெக்டே கருத்து தெரிவிக்கையில்,இத்தகைய அனர்த்தத்தின் போது மாற்றத்தை ஏற்படுத்துவது எயார்டெல் பொறுப்பாகும். பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் தேவைகளை சிறப்பாகப் புரிந்து கொண்டு, எமது ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நிதியியல் ரீதியான உதவிகளை வழங்க முன்வந்தது மட்டுமன்றி, அடிமட்டத்தில் சமூகத்தின் மிகவும் இக்கட்டான தேவைகளை விளங்கி, அவர்கள் தமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவவும் முன்வந்துள்ளது. இந்த துயரமான நேரத்தில் இளைஞர், யுவதிகளின் சுமையைக் குறைத்து, அவர்களே நாட்டின் எதிர்காலம் என்றவகையில் அவர்களுக்கு அர்த்தமுள்ள வழியில் வலுவூட்டி, உதவுவதற்கு நாம் விரும்பினோம் என்றார். 

Comments