புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல−குணத்திலக்க ஜோடி | தினகரன் வாரமஞ்சரி

புதிய உலக சாதனையை நிலைநாட்டிய திக்வெல்ல−குணத்திலக்க ஜோடி

சிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 200 ஓட்டங்களுக்கு மேலாக இணைப்பாட்டத்தினைப் பெற்ற இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல - தனுஷ்க குணதிலக்க ஆகியோர் புதிய உலக சாதனையை நிலைநாட்டினர்.

இத்தொடரின் மூன்றாவது போட்டியில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கியிருந்த நிரோஷன் திக்வெல்ல - தனுஷ்க குணத்திலக்க ஜோடியினர் முதல் விக்கெட்டிற்காக இணைப்பாட்டமாக 229 ஓட்டங்களினைப் பகிர்ந்தனர். இவர்களின் சிறப்பாட்டத்தினால் அப்போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

சிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட இலங்கையின் ஆரம்ப வீரர்கள் இருவரும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி மால்கோம் வால்லர் வீசிய போட்டியின் 34 ஆவது ஓவரில் 200 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். இதனால், ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு தடவை அடுத்தடுத்து 200 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாகக் கடந்த வீரர்கள் என்னும் புதிய உலக சாதனையை இந்த வீரர்கள் பதிவு செய்தனர்.

அதோடு, ஒரு நாள் போட்டி வரலாற்றிலும் இதுவே எந்தவொரு விக்கெட்டிற்குமாகப் பெறப்பட்ட தொடர்ச்சியான இரண்டாவது 200 ஓட்டங்களுக்கு மேலான இணைப்பாட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விணைப்பாட்டத்திற்காக, நிரோஷன் திக்வெல்ல 105 பந்துகளில் 104 ஓட்டங்களினையும், தனுஷ்க குணத்திலக்க 97 பந்துகளில் 86 ஓட்டங்களினையும் பெற்று பங்களிப்புச் செய்திருந்தனர்.

ஏற்கனவே, இவர்கள் இப் போட்டியில் 100 ஓட்ட இணைப்பாட்டத்தைப் பெற்றமையின் மூலம், தொடர்ச்சியாக இரு முறை 100 ஓட்ட இணைப்பாட்டத்தைப் பெற்ற இலங்கையின் நான்காவது துடுப்பாட்ட ஜோடியாகவும் தம்மைப் பதிவு செய்துகொண்டனர். 

Comments