மீண்டெழுமா | தினகரன் வாரமஞ்சரி

மீண்டெழுமா

சிம்பாப்வே அணிக்கெதிரான படுதோல்வி இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கு இத்தோல்வியால் மேலும் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இத் தோல்வி குறித்து பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் அணித் தலைவர், தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள் என அனைவரையும் சாடியுள்ளனர்.

ஏற்கனவே உடற்தகுதியில்லாதவர்களை அணியில் இணைத்தது, விளையாடத் தகுதியில்லாத வீரர்களை அணியில் தொடர்ந்து வைத்துள்ளமை போன்ற விமர்சனங்களினால் சர்ச்சையில் இருந்த தேர்வுக்குழுவை மேலும் ஆறு மாதங்களுக்கு கிரிக்கெட் சபையினாலும், விளையாட்டு அமைச்சினாலும் பதவி நீடிப்புச் செய்தமையும், இலங்கை அணியின் நடுவரிசைத் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமாலை ஒரு நாள் அணியிலிருந்து முழுமையாக ஓரங்கட்டியமையும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன. இந்நிலையில் சனத் ஜயசூரிய தலைமயிலான தேர்வுக்குழு இதுவரை 41 வீரர்களை ஒருநாள் அணிக்கு அறிமுகம் செய்துள்ளன. ஆனால் இன்னும் நிரந்தரமான ஒரு அணியைத் தெரிவு செய்ய முடியாமல் அணியை பின்னடைவுக்கே இட்டுச்சென்றுள்ளது.

தரவரிசையில் 46 புள்ளிகளுடன் 11வது இடத்தில் இருந்த சிம்பாப்வே அணியுடன் அடைந்த தோல்வியால் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி நேரடியாகப் பங்கேற்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் இலங்கை அணி சந்தித்த 15 போட்டிகளில் 11 தோல்விகளைச் சந்தித்துள்ளது.

கடந்த வருட ஆரம்பத்தில் 95 புள்ளிகளுடன் 6 இடத்திலிருந்த இலங்கை அணி அதன்பின் அவுஸ்திரேலியாவுடன் 4-1என்ற ரீதியிலும், பங்களாதேஷ் அணியுடன் 1-1 என்ற ரீதியில், சிம்பாப்வேயுடன் 3-2 என்ற ரீதியில் தொடர் தோல்விகளைச் சந்தித்ததால் அவ்வணி தற்போது 88 புள்ளிகளுடன் 8 இடத்துக்கு தரமிறக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாத முடிவில் புள்ளிகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் தரவரிசையில் 8வது இடத்திலேயே இருந்தால் எதிர்வரும் உலகக் கிண்ணத்தில் நேரடியாகப் பங்குகொள்வதில் நெருக்கடி இருக்காது.

இம்மாத இறுதியில் இலங்கை அணி இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் 5-0 அல்லது 4-1 என்ற ரீதியில் தோல்வியடைந்தால் புள்ளிகள் 82 ஆகக் குறையும் வாய்ப்புள்ளது. அதே வேளையில் 78 புள்ளிகளுடன் 9 இடத்திலுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அயர்லாந்துடனான ஒரு போட்டியிலும், இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட தொடரிலும் மோதவுள்ளது. இத்தொடர்கள் இரண்டிலும் அவ்வணி வெற்றி பெற்றால் 86 புள்ளிகள் பெற்று 8வது இடத்து மேற்கிகிந்திய அணி முன்னேற வாய்ப்புள்ளது. இவ்வாறு நடந்தால் இலங்கை 2019ம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தெரிவாகும் வாய்ப்பை இழக்கும்.

சிம்பாப்வேயுடனான தொடரில் தொடர்ந்து நான்குமுறை நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 1வது போட்டியிலும் 4வது போட்டியிலும் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது எவ்வகையிலும் சரியானதல்ல. இப்போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடியதே இலங்கை அணியின் தோல்விக்கு காரணமாயமைந்தது.

மேலும் கடந்த ஒரு வருட காலமாக இலங்கை அணியின் பந்து வீச்சும் களத்தடுப்பும், படுமோசமாக இருக்கும் நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடி பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பின் மூலம் எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்க நினைத்த இலங்கை அணித் தலைவரின் முடிவு நகைப்புக்குரியது. மேலும் இத் தொடர் முழுவதும் இலக்கை துரத்திய அணியே வெற்றி பெற்ற நிலையில் நான்காவது போட்டியிலும் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது புரியாத புதிராகவேயுள்ளது.

தற்போதைய நிலையில் எந்த அணியானாலும் ஆரம்பத்தில் விக்கெட்களை விட்டுக் கொடுக்காமல் ஆடினால் பெரிய இலக்குகளையும் துரத்திப் பிடிக்கலாம் என்ற சாதாரண விடயத்தைக் கூட இலங்கையணியினரால் புரிந்து கொள்ள முடியாமல் போனது சிம்பாப்வே அணியை கத்துக்குட்டி அணி என்று நினைத்ததினால்தானா? தற்போதைய நிலையில் இலங்கை அணியின் வெற்றி துடுப்பாட்ட வீரர்களின் திறமையிலேயே தங்கியுள்ளது. சம்பியன் கிண்ணத் தொடரில் பலம்வாய்ந்த இந்திய அணியுடனான போட்டியிலும் மேலும் அண்மைய பெறுபேறுகளின் அடிப்படையிலும் இதை நன்கு அறிந்துகொள்ளலாம். ஐந்தாவது போட்டியின் போது சிம்பாப்வே அணித் தலைவர் நாணயச் சுழற்றியில் வென்றவுடன் முதலில் களத்தடுப்பைத்தான் தேர்வு செயதார்.

மேலும் இலங்கை அணி சொந்த மண்ணில் விளையாடும் போது சுழற் பந்து வீச்சாளர்களையே நம்பிக் களமிறங்கும். சிம்பாப்வே அணியுடனான தொடரிலும் சுழற்பந்து வீச்சாளர்களையே நம்பிக் களமிறங்க 2வது போட்டியைத் தவிர ஏனைய போட்டிகளில் சுழற் பந்து வீச்சாளர்கள் சொதப்பியிருந்தனர். 2வது போட்டியில் அறிமுகமான கனிந்து ஹஸரங்க அறிமுகப் போட்டியில் ஹெட்ரிக் சாதனை புரிந்து அசத்தினாலும் ஏனைய போட்டிகளில் தேவையான நேரங்களில் இலங்கை அணி எதிர்பார்த்த திறமையை வெளிப்படுத்த தவறியிருந்தார். சுழற் பந்து வீச்சில் முத்தையா முரளிதரனின் ஓய்வுக்குப் பின் நிரந்தரமாக, இலங்கை அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இன்னும் உருவாகவில்லை.

அஜந்த மெண்டிஸ், லக்ஷான் சந்தகென், சத்துரங்க த சில்வா, அமில அபோன்சு, தனஞ்சய டி. சில்வா, அகில தனஞ்சய போன்ற வீரர்கள் அடிக்கடி அறிமுகமானாலும் ஓரிரு போட்டிகளுக்கு அவர்களின் திறமை மட்டுப்படுத்தப்படுவதே இலங்கை அணிக்கு நிரந்தர சுழற்பந்து வீச்சாளர்களை தேடிக்கொள்வதில் சிக்கலாகியுள்ளது. நடந்து முடிந்த தொடரில் எதிரணியின் தொடர் வெற்றிக்கு அவ்வணியின் சுழற் பந்து வீச்சே காரணமாய் அமைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கையுடனான இறுப்போட்டியில் சிம்பாப்வே அணி வீசிய 50 ஓவர்களில் 35 ஒவர்களை அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்களே வீசி 106 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்து அவர்களின் வரலாற்றுத் தொடர் வெற்றிக்கு வித்திட்டனர். மொத்தத்தில் இத் தொடரில் இலங்கை அறிமுக வீரர் கனிந்து ஹசரங்க 2வது போட்டியில் பெற்ற ஹெட்ரிக் சாதனையையும், சுமார் 45 வருட ஒருநாள் போட்டி வரலாற்றில் தொடர்ந்து இரு போட்டிகளில் டிக்வெல்ல-குணதிலக்க ஜோடி படைத்த இரட்டை சத இணைப்பாட்ட சாதனையையும் தவிர இலங்கை ரசிகர்களாகிய நாம் திருப்தியடைய வேறொன்றுமில்லை.

வழமை போல் இக்கசப்பான தோல்விகளை மறந்து அடுத்த இந்திய- − இலங்கை தொடரிலாவது இலங்கையணி வெற்றி பெற வாழ்த்துவோம்.

எம. எஸ். எம். ஹில்மி 

Comments