ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

"பொலித்தீனாலயும் பிளாஸ்டிக்காலயும் நாடு ரொம்ப மோசமா பாதிச்சுப்போட்டுது என்டு பேசினாங்கலல்லோ உது பெரிய இடத்துக்கு கேட்டுப்போட்டுதோ தெரியல்ல."

"ஏனன்ணே ஏதும் வில்லங்கமோ?"

"வில்லங்கமில்ல எல்லாம் நல்ல சேதி தான. அடுத்த முதல் தேதியில இருந்து பொலித்தீன். லஞ்ச்் சீட், ரெஜிபோம் ஆகியவய தடைசெய்யப்போகினமாம்."

"நல்ல விஷயமென்ன"

"விசயம் நல்லதுதான். ஆனா சொன்னபடி செய்வினமே"

"ஏன் செய்யமாட்டினமோ"

"உந்தப் பொலித்தீன் தடையென்டு சொல்லுறது உது முதல் தடவையில்ல. பல தடவைகள் உதை சொல்லிப் போட்டினம் இவ்வளவு ஏன். சிவனொளிபாதமலை அடிவாரத்தில செக்பண்ணிப்போட்டுத்தான் மேல அனுப்பினம். பொலித்தீன் பைகள கண்டினமென்டா மலையேற விடமாட்டினம் என்டெல்லாம் சொன்னவை. ஆனா. நூற்றுக்கணக்கான கிலோ பொலித்தீன் பிளாஸ்டிக்கழிவு சிவனொளிபாதமலை முழுவதும் பரவிக்கிடக்குதென்டு பல தடவையள் பேப்பர்ல போட்டிருக்கினம். உத நிறுத்த முடிஞ்சிதோ? உதுபோலதான் இதுவும். தனியார் பஸ்சில டிக்கட் கொடுக்க வேண்டுமென்டு அடிக்கடி சட்டம் போடுகினம் தெரியுமோ"

"ஓமண்ண ஆனா டிக்கட் கொடுக்க மாட்டினமே"

"உதுபோலதான் சின்னராசு இதுவும். நடந்துதென்டா சந்தோசம்தான் ஆனா நடக்குமோ?"

"லஞ்ச் சீட் இல்லையென்டா இனிசாப்பாட்ட எதால சுத்துவினம்"

"எங்கட காலத்தில எங்கப்படா லஞ்சீட் வாழையிலைதான்"

"வாழையிலையில தானண்ண நாங்களும் சாப்பாடு சுத்தினனாங்கள்"

"வாழையிலைய அனலில வாட்டிப்போட்டு அதில சோறுகட்டிக்கொண்டு போனமென்டா அதிண்ட ருசியே தனி. ஏன் நீ பாக்குமட்டையில சோறுகட்டிக்கொண்டுபோய் சாப்பிட்டதில்லையே? இந்தப்பாக்குமட்டைய திரும்பத்திரும்ப பாவிப்பினம். நான் அந்தக்காலத்தில கொழும்பில வேலை செய்யற காலத்தில எங்கட ஒபீசில இருந்து ஒருவர் பாக்குமட்டையிலதான் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்தவர். பலாக்காயும் அவிச்சுக்கொண்டு வாறவர். பால்சொதிய விட்டு அவிச்ச பலாக்காய் சாப்பிடக்கொடுத்து வச்சிருக்க வேணும் சின்னராசு."

"இப்ப மாக்குமட்டையும் இல்ல பிலாக்காயும் இல்ல. தேங்காய் விலை ஏறிப்போட்டதால சொதியும் இல்ல."

"உது இல்ல சின்னராசு"

"இலங்கையில இப்ப லஞ்ச் சீட்தான் பாவிக்கினம். உவையள வாழையிலயில சாப்பாடு கட்டென்டா அத்தினபேரும் வாழையிலைக்கு எங்க போவினம்"

"வாழை மரம் இருந்தாலும் முழுமையான வாழையில இப்ப இல்ல காத்தால, மழையால எல்லா இலைகளும் கிழிஞ்சில்லபோகுது. ஒரு முழு இலையில சாப்பிடுறதுக் கென்டு அளவான இலைய வெட்டி எடுக்கிறது லேசில்ல கண்டியளோ"

"இப்ப ஒரு வாழையிலய என்ன விலைக்கு விற்கினம்?"

"ஐந்து ரூபாவாவது சொல்லுவினம் பண்டிகை நாட்களில ஒரு தலை வாழையிலை இருபது ரூபாயண்ண"

"தாமரை இலைகள ஒண்டாதச்சி அதில சோறு கட்டிக்கொண்டு போறவையென்டத கேள்விப்பட்டிருக்கியோ?"

"அப்பிடியொன்ட நான் கேள்விப்பட்டதில்லயே?"

"இந்தியாவில கிராமப் பகுதியள்ல உப்பிடி சாப்பாடு கட்டிக்கொண்டு போறவை."

"உது சரியண்ண லஞ்ச் சீட் தடைக்கு எதிரா ஆக்கள் என்ன சொல்லினம்?"

"நல்லவேலை உதைக்கேட்டனீ நுகர்வோர் உரிமைகள பாதுகாக்குற தேசிய அமைப்பொன்று இருக்கு கண்டியோ. உந்த அமைப்பு என்ன சொல்லுதென்டா பொலித்தீன், லஞ்ச் சீட்டால சூழலுக்கு பாதிப்பு ஏற்படுறது என்டது உண்மைதான். இதை ஏற்றுக்கொள்ளுறனாங்கள் ஆனா உத ரென்டு வாரத்தில தடை செய்யப்போகினம் என்டு சொன்னவையென்டா உதுக்கு என்ன மாற்று ஏற்பாடு என்டதையும் சீக்கிரம் சொல்ல வேணும் இல்லையென்டா மக்கள் பிரச்சினைப்படுவினம்? வாழையிலைக்கு உவை எங்க போவினம்?. சாப்பாட்ட வெக்கிற பொட்டியலும் பிளாஸ்டிக்கிலதான் கிடக்குது. உலோக டிபன் கெரியரை பஸ்சில தூக்கிக்கொண்டு போக ஏலுமே? பழைய காலத்தில லஞ்ச் டேக்கர்ஸ் என்டு சாப்பாடு கொண்டுபோற பெடியள் இருந்தினம். அவை சாப்பாட்டைக் தகர கோப்பையில போட்டு கலர் நெப்கின்களால சுத்திக்கட்டிக்கொண்டு சைக்கிளில வேகமா வருவினம் சில நேரங்களில வரிசை கட்டி ரேஸ் வருவினம். பாக்க அழகா இருக்கும். அவையள் ஒபீசுக்கே வந்து சாப்பாட்டை குடுத்துவிட்டு போவினம். யாருக்கு என்டன்டைக்கு சாப்்பாடு கொடுக்கினம் என்டு சரியா கணக்கு வெச்சிருப்பினம். மாசக்கடைசியில செட்டில் பன்னிப்போட்டமென்டா போதும் உந்தமுறையை திரும்பவும் ஆரம்பிக்கப்போகினமோ தெரியல்ல."

"உது நல்ல முறைதானென்ன"

"இலங்கை பொலித்தீன் இல்லாத நாடு என்டு கூற வேண்டும் என்ற நோக்கத்தில ஜனாதிபதிதான் உந்த பொலித்தீன் தடையை அமைச்சரவையில சமர்ப்பிச்சவர். சூழல் அமைச்சர் என்ற ரீதியிலதான் உதைச் செஞ்சவராம்"

"சூழலுக்கு பாதிப்பு வருதென்டா செய்யத்தான வேணும்"

"இலங்கையில ஒரு நாளைக்கு 25 லட்சம் லஞ்ச் சீட்டும் பொலித்தீன் பேக்குகளும் பாவிக்கப்படுகுது. சுப்பர் மாக்கட்டிலயும் சின்ன பெட்டிகடையிலயும் எந்த பொருளை வாங்கினமென்டாலும் பொலித்தீன் பையிலதான் போட்டுத் தருகினம். உந்த பழக்கத்தை தவிர்க்கத்தான் உந்த தடையை கொண்டு வந்திருக்கினம் 20 மைக்ரோனுக்கு குறைந்த மெல்லிய பொலித்தீன் பொருட்கள் மீதான தடை 2007 ஜனவரி முதலாம் திகதியே கொண்டுவந்து போட்டினம். ஜனாதிபதி சிறிசேன அப்ப சூழல் அமைச்சராக இருந்தவர். பிறகு உத 2016 ஜனவரி 1 ஆம் திகதி மீண்டும் கொண்டுவந்து 2016 பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தினம் அப்ப உதை யாரும் கணக்கில எடுக்ேகல்ல தெரியுமோ. உதாலதான் ஏற்கனவே விதிச்ச தடையை மீண்டும் கொண்டு வந்திருக்கினம். இந்த முறை நம்மட சனம் உதைக் கடைப்பிடிப்பினமோ இல்ல முந்தியத போல கணக்கில எடுக்காம விடுமோ என்டு தெரியேல்ல."

"எங்கட ஆக்களோ மனசு வச்சா செய்வினம்."

"செய் என்டு சொன்னவையென்டா செய்யத்தான் வேணும். 30 வரு‘த்துக்கு முன்னால உந்த சிலி சிலி பேக் கலாசாரம் வாறதுக்கு முன்னால பேப்பர் பேக்கத்தான் பாவிச்சினம் இல்லையென்டா துணிப்பை. மெல்லிய பொலித்தீன தயாரிக்கிறவை உதை தங்கட தொழிற்சாலைகளில வச்சிக்கொள்ள மாட்டினமாம். உடனடியாக சந்தைக்கு அனுப்பிப் போடுவினம். கிராக்கி இருக்கிறதால சந்தையில உது சுடச்சுட விற்பனையாகி போடுமாம். உதாலதான் மெல்லிய பொலித்தீன் தயாரிக்கிறவைய பிடிக்க முடியாம கிடக்குது. சந்தையில பொலித்தீனுக்கு பில் போட்டு காசு வாங்கக்கொண்டு வேறு ஒரு இடத்துல சாமான வாங்கச் சொல்லுவினமாம."

"எப்பிடி உவையின்ட விளையாட்டு"

"லஞ்ச் சீட் கிடக்கில்லோ. உதை மீள்சுழற்சி செய்யவும் முடியாது என்டதோட உது மக்கவும் செய்யாது. உது போலதான் சாப்பாடு விற்கப்படுகிற ரெஜிபோம் பெட்டி. உதாலதான் சூழலுக்கு மிகுந்த பாதிப்பு வருகுது என்டு கொழும்பு மாநகர சபையின்ட கழிவு முகாமைத்துவ பணிப்பாளர் கூறினவர். உதுக்கு பதிலா மக்குற பொலித்தீன் பொருட்களை அறிமுகப்படுத்த போறனாங்கள் என்டும் அவர் சொல்லிப் போட்டவர். லஞ்சீட், ரெஜிபோம் சாப்பாட்டு பெட்டியள் பிளாஸ்டிக் பீங்கான்கள், குவைளையள், கரண்டியள், இறக்குமதி செய்றது தயாரிக்குறது உந்த சட்டத்தால தடை செய்யப்படுது. அதுமட்டுமில்ல வெளியிடங்களில பிளாஸ்டிக் பொருட்கள எரிக்கிறதையும் தடை செஞ்கிருக்கினம்."

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.