துரிதமாக அபிவிருத்தியடையும் கொழும்பு மாநகரம் | தினகரன் வாரமஞ்சரி

துரிதமாக அபிவிருத்தியடையும் கொழும்பு மாநகரம்

ஐந்து ஆண்டு காலத்தில் அபிவிருத்தியடைந்த உலகளாவிய ஐந்து நகரங்களில் இலங்கையின் தலைநகரமான கொழும்பும் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை எமக்கு பெருமை தருவதாக உள்ளது.

எகனமிஸ் குரூப் என்ற பொருளாதார ஆய்வு நிலையத்தினால் 'உலகளாவிய வாழத்தகு அறிக்கை 2017' அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் உலகளாவிய ரீதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னேற்றம் கண்ட ஐந்து நகரங்களில் ஐந்தாவது இடத்தை கொழும்பு பிடித்துள்ளது. இந்தப் பெருமையை எட்டுவதற்கு இலங்கை அண்மையில் மேற்கொண்ட பிராந்திய அபிவிருத்திச் செயற்பாடுகள் பெரும் பயன் அளித்துள்ளன.

ஈரானின் தலைநகரான தெஹ்ரான் இந்த பட்டியலில் முதல் இடத்தையும் ஐக்கிய அமீரகக் குடியரசின் தலைநகரமான டுபாய் இரண்டாம் இடத்தையும் கட்டார் கோட் டி ஐவோரின் தலைநகரமான அபிட்ஜன் நகரம் மூன்றாம் இடத்தையும் சிம்பாப்பேயின் தலைநகரமான ஹராரே நான்காம் இடத்தையும் கொழும்பு ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

இதேவேளையில் உலகளாவிய ரீதியில் வாழத்தக்க சிறந்த ஐந்து நகரங்களாக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன், அவுஸ்திரியாவின் வியன்னா, கனடாவின் வான்குவா மற்றும் டொரண்டோ ஆகியவை வரிசைப்படி தெரிவாகியுள்ளன. இந்தப்பட்டியலில் ஐந்தாம் இடம் கனடாவின் கல்காரி மற்றும் அவுஸ்திரேலியாவின் அடலைட் ஆகிய நகரங்கள் இணைந்து பெற்றுள்ளன.

இதேநேரம் வாழ்க்கைத் தகுதி ஆகக் குறைந்த நகரங்களில் முதல் இடம் சிரியாவின் டமஸ்கஸ் நகருக்கும் இரண்டாம் இடம் நைஜீரியாவின் தலைநகரமான லாகோஸ், மூன்றாம் இடம் லிபிய தலைநகரமான திரிப்போலி நான்காம் இடம் பங்களாதேஷின் தலைநகரமான டாக்கா, ஐந்தாவது இடம் பப்புவா நியூகினியின் போர்ட் மோஸ்பி நகரம் என்ற வகையில் கணிக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட ஆய்வின்படி 30 ஆண்டுகாலம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் கொழும்பு பாரியளவில் அபிவிருத்தி அடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைத்தர அலகில் பின்னிலை அடைந்திருந்த பல நாடுகளில், உள்நாட்டு யுத்தம் மற்றும் தீவிரவாத செயல்களின் பின்னர் ஏற்பட்ட நீண்டகால ஸ்திர நிலை குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியதையடுத்து அந்த நாடுகளின் தலைநகரங்கள் அபிவிருத்தியடைந்துள்ளதைக் காணமுடிவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. இதற்கு உக்ரைன் தலைநகரம் கிவ், லிபிய தலைநகரம் திரிப்போலி மற்றும் இலங்கைத் தலைநகரம் கொழும்பு ஆகியவை உதாரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் மேற்கூறிய பட்டியலில் எந்தவொரு இந்திய நகரமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் தீவிரவாதம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தீவிரவாதம் காரணமாக தொடர் குண்டுவெடிப்புக்கள் இடம்பெறும் நாடுகளில் உள்ள நகரங்கள் மக்கள் அச்சமின்றி வாழக் கூடியவையல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள நகரங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

அதே வேளை ஈராக், லிபியா, துருக்கி உள்ளிட்ட மற்றும் பல நாடுகளில் ஆண்டு முழுவதும் உள்நாட்டுப்போர் மற்றும் தீவிரத்தாக்குதல் இடம்பெறுவதால் மக்கள் அமைதியாக வாழ முடியாத நாடுகளாக அவை மாறியுள்ளன.

அபிவிருத்தி அடைந்துவரும் நகரங்கள் பட்டியலில் கொழும்பு நகரம் இடம்பெறுவதற்கு பிரதான அம்சமாக உதவியுள்ளது துறைமுக நகரத்திட்டமாகும்.

கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுவரும் துறைமுக நகரத் திட்டம் உலகளாவிய ரீதியில் இடம்பெறும் இதே போன்ற எந்தவொரு திட்டத்திற்கும் இரண்டாவதானது அல்ல என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

கொழும்பு நகரின் வரைபடத்தையே மாற்றியமைக்கும் துறைமுக நகரத்திட்டத்தின்படி அதன் நிர்மாணத் தரப்பான சீன அரசாங்கத்திற்கு தேவையான காணி 99 வருடகால குத்தகைக்குக் கிடைக்கும்.

துறைமுக நகரத்தின் நிர்மாணச் செயற்பாடுகள் தற்போது எந்த தங்குதடையுமின்றி நடைபெற்றுவருகின்றன. துறைமுக நகருக்கான மொத்தச் செலவு 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 269 ஹெக்டெயார் காணியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதில் 91 ஹெக்டெயார் பொதுமக்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வீதிகளுக்காக ஒதுக்கப்படும். மிகுதி 178 ஹெக்டெயார் வசிப்பிட வர்த்தக விருந்தோம்பல் செயற்பாடுகள் கடற்துறை மற்றும் உல்லாச செயற்பாடுகள் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளன.

திட்டங்களுக்கான காணிப்பரப்பு 5.65 மில்லியன் சதுர மீற்றர்களாகும். துறைமுக நகரத்தில் மட்டும் இரண்டரை இலட்சம் பேர் வசிப்பார்கள். இத்திட்டத்தில் மொத்தம் 85.000 பேர்வரையில் தொழில்வாய்ப்புக்களைப் பெறுவர்.

துறைமுக நகரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கென 69 ஹெக்டயர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தகாணியில் விமானநிலையமொன்றை அமைக்க இலங்கை அரசாங்கம் ஆலோசித்துவருவதாகத் தெரிகிறது. துறைமுகம் அதற்கு அருகில் விமானநிலையம் அதற்கடுத்து நவீன துறைமுக நகரம் ஆகியவை அமைந்தால் அது நாட்டின் அபிவிருத்திக்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை.

துறைமுக நகரத்திட்டத்தில் நிர்மாண மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் சீனா மட்டும் இடம்பெறவில்லை. 16 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஆலோசனையாளர்களைக் கொண்ட அணி இச்செயற்பாடுகளில் பங்குகொள்கிறது. சீனா, அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, இத்தாலி, மலேசியா, நெதர்லாந்து, ரஷ்யா, சிங்கப்பூர், ஸ்பெயின், பிரிட்டன், இலங்கை, சுவீடன், ஐக்கிய அமீரக குடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்துவந்துள்ள ஆலோசகர்களின் அறிவுறுத்தலின்படியே நிர்மாண வேலைகள் இடம்பெறுகின்றன.

துறைமுக நகரின் நிர்மாண வேலைகள் முற்றுப்பெற இன்னும் 20 வருடங்களாவது செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுக நகரம் முழுமையாகச் செயற்படும் காலத்தில் ஆசியாவில் சிறந்த நகரங்களில் ஒன்றாக எங்கள் கொழும்பு நகரம் மாறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Comments