ஊருடன் சேர்ந்து உலகத்தை அபிவிருத்தி செய்தல் | தினகரன் வாரமஞ்சரி

ஊருடன் சேர்ந்து உலகத்தை அபிவிருத்தி செய்தல்


சதீஷ் கிருஷ்ணபிள்ளை...

 

 நீண்டகாலம் நட்பு பேணும் குடும்பம். உங்களை விருந்துக்கு அழைக்கிறது. அந்தக் குடும்பத்தவர்கள் இனியில்லையென உபசரிக்கிறார்கள். உங்களை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். கௌரவிக்கிறார்கள். உங்கள் மனதின் மூலையில் சிறியதொரு சந்தேகம் எழும். எம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்?

சீன அரசாங்கத்தின் அழைப்பையேற்று, ஷங்ஹாய், ஷ்வென்ரோ, பெய்ஜிங் ஆகிய மூன்று நகரங்களின் முக்கியமான இடங்களுக்கு சென்றோம். இந்த விஜயத்தில் இலங்கை செய்தியாளர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும், கவனிப்பையும், உபசரிப்பையும் அவதானித்த சமயத்தில், இந்த சந்தேகம் எழுவது இயற்கை தானே!

இந்நகரங்களில் வரலாற்றுத் தலங்களுக்கும், கலாசார மையங்களுக்கும், கலை அரங்குகளுக்கு சென்றோம். ஃபுஜியான் மாநில நிர்வாகத்துடன் இணைந்து, ஷ்வென்டோ நகராட்சி மன்றம் ஏற்பாடு செய்த பெரும் விருந்துபசாரத்திலும் (Banquet) கலந்து கொண்டோம்.

இந்த சகல இடங்களிலும் உச்சரிக்கப்பட்ட பிரதான வாசகமொன்று இருந்தது.

வாசகத்தை உச்சரித்தவர்கள், அதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தார்கள். இதற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள தொடர்புகளை மிகவும் சிலாகித்தார்கள். இந்த வாசகம் Belt and Road Initiative என்பதாகும். சுருக்கமாக BRI எனலாம்.

பட்டியல்: Belt and Road Initiative பற்றி

 

BRI பற்றி சுருக்கமாக

ஆறு தரை வழி மார்க்கங்கள், ஒரு கடல் மார்க்கம்

1) யூரோ-ஏசிய தரைப்பாலம்: மேற்கு சீனாவில் இருந்து மேற்கு ரஷ்யா வரை

2) சீன-ா மொங்கோலிய- ரஷ்ய தாழ்வாரம்: வடசீனாவில் இருந்து கிழக்கு ரஷ்யா வரை

3) சீன-ா ஆசிய- மேற்கு ஆசிய தாழ்வாரம்: மேற்கு சீனாவில் இருந்து துருக்கி வரை

 

4) சீன-ா இந்தோசீன தீபகற்ப தாழ்வாரம்: தென்சீனாவில் இருந்து சிங்கப்பூர் வரை

5) பங்களாதேஷ்- சீன- இந்திய- மேற்கு ஆசிய தாழ்வாரம்: தென்சீனாவில் இருந்து மியன்மார் வரை

6) சீன-ா, பாகிஸ்தான் தாழ்வாரம்: தென்மேற்கு சீனாவில் இருந்து பாகிஸ்தான் வரை

7) கடல் பட்டுப்பாதை: சீன கரையோரத்தில் இருந்து சிங்கப்பூர், கொழும்பு ஊடாக மத்திய தரைக்கடல் வரையில்

 

ஐந்து அம்சங்கள்

 கலாசாரப் பரிவர்த்தனை - மக்களுக்கு இடையிலான தொடர்புகள்

 நிதித்துறை ஒருங்கிணைப்பு - இருதரப்பு நிதித்துறை மற்றும் கொள்கை ஒத்துழைப்பு

 வர்த்தகம் முதலீடு - எல்லை கடந்த முதலீடுகளுக்கு வாய்ப்பளித்தல்

 கொள்கை ஒருங்கிணைப்பு - பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டமிடல், உதவி

 வசதிகளை இணைத்தல் -BRI இல் தொடர்புகளை ஏற்படுத்த வசதிகளை ஏற்படுத்தல்

சர்வதேச கற்கைகளுக்கான ஷங்ஹாய் நிலையம் (SIIS) என்ற ஆய்வு நிறுவகத்திற்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இரு கல்விமான்கள் Belt and Road Initiative பற்றி விளக்கம் அளித்தனர். இந்தத் திட்டத்திற்கும் இலங்கைக்குமுள்ள தொடர்புகளை விபரித்து, இருநாடுகளும் எவ்வாறு நன்மை பெற முடியுமெனக் கூறினார்கள்.

புராதன காலத்தில் சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் வர்த்தக தொடர்புகள் இருந்தன. ஷ்வென்ரோ நகரில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுத்துணியை தரைவழியாக ஐரோப்பா வரை கொண்டு சென்ற வீதி வலைப்பின்னல் இருந்தது. மட்பாண்டங்களை ஆபிரிக்கா வரை கப்பல் மூலம் விநியோகித்த கடல் மார்க்கங்கள் இருந்தன.

இந்த வீதி வலைப்பின்னலையும், கடல் மார்க்கங்களையும் நவீன காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி, வர்த்தக கலாசார உறவுகளை மேம்படுத்துவது BRI இன் நோக்கம் என SIIS இன் தலைவர் பேராசிரியர் டெங் டொங்க்ஸியாவோ தெரிவித்தார். BRI என்பது வெறும் முன்முயற்சியாக அல்ல. புதிய கோட்பாடாடு எனவும் அவர் கூறினார்.

BRI பற்றிய எதிர்மறைக் கருத்துக்கள் பற்றி கலாநிதி லியூ ஸொங்கியூ அளித்தார். “இது ஏனைய நாடுகளை வர்த்தக ரீதியாக ஆக்கிரமிக்கும் திட்டம் அல்ல. மாறாக, சகல நாடுகளையும் இணைத்துக் கொண்டு, அந்நாடுகளை முன்னேற்றி, அதன் மூலம் சீனாவும் முன்னேற்றம் கண்டு ஒட்டுமொத்த உலக அபிவிருத்திக்கு வித்திடுவது இதன் நோக்கம்”.

SIIS ஆய்வு நிறுவகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், சீனாவின் இலட்சியத் திட்டத்தில் இலங்கைக்கு உள்ள பங்கு பற்றி கல்விமான்கள் விபரித்தார்கள். இது வெறுமனே சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதுடன் தொடர்புடையது மாத்திரமல்ல. அதனைத் தாண்டி பல்வேறு விடயங்களை உள்ளடக்கியது என்றார்கள்.

இதில் இலங்கை செய்தியாளர்கள் பல கேள்விகளைத் தொடுத்தார்கள். BRI குறித்த இந்தியாவின் கரிசனை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கையின் வடபகுதியில் சீனா முதலீடு செய்யாதது ஏன் என்று கேட்கப்பட்டது. தவிர, சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் செயற்கை அரிசி பற்றியும் கேட்டோம்.இலங்கையர்கள் மத்தியில் தீவிரமாக வேரூன்றியிருந்த சீனா பற்றிய எதிர்மறைக் கருத்துக்களை செவிமடுத்த கல்விமான்கள், பெரிதும் ஆச்சர்யம் அடைந்தார்கள். இலங்கை மக்களின் நல்லெண்ணத்தை வென்றெடுக்க என்ன செய்ய முடியும் என்று பேராசிரியர் கேட்டபோது, செய்தியாளர்களும் ஆச்சர்யம் அடைந்தார்கள்.

BRI முன்முயற்சியில் இலங்கையை இணைத்துக் கொள்வதில் சீனா காட்டும் ஆர்வம் என்பது, ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்திலும், கொழும்பு துறைமுக அபிவிருத்தித் திட்டத்திலும், திருகோணமலை எண்ணெய்க் குதத்திலும் முதலீடு செய்வதில் சீனாவின் அக்கறை என்ற தோற்றப்பாடு இருந்தது.

BRI முன்முயற்சியில் சீன அரசாங்கம் காட்டும் அக்கறையும் நாம் சீனாவில் அடுத்தடுத்து சந்தித்த அனுபவங்களும் எமது எண்ணத்தை மாற்றியிருந்தன. கொழும்பு துறைமுகத் திட்டத்தை முன்னெடுக்கும் China Harbor Engineering Company என்ற நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்றிருந்தோம்.

இங்கு செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இதில் கம்பனியின் மேலதிகாரிகள் புடைசூழ எமது துறைமுகத்தின் அபிவிருத்திக்காக சீனா என்னவெல்லாம் செய்கிறது என்று விளக்கம் அளித்தார்கள். இலங்கையின் அரசியல் பிரச்சனைகளால், துறைமுக அபிவிருத்தித் திட்டம் இடைநிறுத்தப்பட்ட விதத்தையும் அவர்கள் விபரித்தார்கள்.இந்த மாநாடு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சர்ச்சைக்குரிய திட்டம் பற்றி விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்த செய்தியாளர்களின் கேள்விக்கு, சீனக் கம்பனியின் அதிகாரிகள் பதிலளித்த விதம். சில சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க இலங்கையின் நுணுக்கமான சட்ட திட்டங்களையும் மேற்கோள் காட்டினார்கள்.

இந்த மாநாட்டில் CHEC Port City Colombo (Pvt.) Ltd கம்பனியின் அதிகாரிகள் கூறிய கருத்துக்கள் உண்மையானால், டுபாய், டோக்கியோ ஆகிய நகரங்களுக்கு இணையானதாக கொழும்பு வளர்ச்சி பெறும். இலங்கையை வளர்ச்சியுறச் செய்து. சீனாவும் வளர்ச்சி கண்டு உலகை அபிவிருத்தி செய்தல் என்ற கனவு நனவாகும்.

இலங்கையை இணைத்துக் கொண்டு BRI ஐ அமுலாக்க சீன அரசாங்கம் மேற்கொள்ளும் பிரயத்தனத்தை வேறு அனுபவங்கள் வாயிலாக கண்டோம். இதில் முக்கியமான விடயம் இலங்கை மக்களுக்கும் சீன மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள்.

குறிப்பாக, ஷங்ஹாய், பெய்ஜிங் நகரங்களில் நிறைய இலங்கையர்களைக் கண்டோம். இவர்களில் ஆயுர்வேத மருத்துவர்கள், முப்படை வீரர்கள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள் போன்றவர்களும் இருந்தார்கள். ஏதோவொரு பயிற்சிக்காக சீனாவிற்கு வந்ததாக அல்லது சீனாவில் தங்கியிருப்பதாகக் கூறினார்கள்.

நாம் சந்தித்த பெரும்பாலான இலங்கையர்கள் மத்தியில், சீனாவின் அதீத அபிவிருத்தி பற்றிய ஆச்சர்யம் இருந்தது. விருந்தோம்பல் குறித்த வியப்பு இருந்தது. தத்தமது துறைகளில் தாம் முன்னேற உதவுவதற்காக வழங்கும் பயிற்சிகள் பற்றிய நன்றியுணர்வு வெளிப்படையாகத் தெரிந்தது.

இலங்கையில் சீன முதலீடுகள், இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான சீன உதவி போன்றவற்றுடன், BRI யின் ஐந்து அம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்தோம். இதன்போது, மக்கள் மட்டத் தொடர்புகள் என்ற அம்சத்தைப் பூரணப்படுத்த சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் அவை என்பது தெளிவாகத் தெரிந்தது.

தமது ஆட்சியாளர்கள் இலட்சியத் திட்டத்தை வரித்துக் கொண்டால், முற்றுமுழுதாக நிறுவனப்படுத்தி அதனை முறையாக அமுலாக்க சீனர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனம் இருக்கிறதே. அது மிகவும் சிலாகித்துக் கூற வேண்டியது. இந்த அர்ப்பணிப்பு பற்றி அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.

(தொடரும்)

Comments