புதிய அரசியலமைப்பு தோல்வியுற்றால் நி​லைமை 77க்கு தள்ளப்படும்! | தினகரன் வாரமஞ்சரி

புதிய அரசியலமைப்பு தோல்வியுற்றால் நி​லைமை 77க்கு தள்ளப்படும்!

விசு கருணாநிதி  
போல் வில்சன்

 

13ஆவது திருத்தத்தில் இதனைவிடச் சிறந்த பெறுபேற்றை நரேந்திர மோடியினால்கூடப் பெற்றுக்ெகாடுக்க முடியாது.

மாகாண சபையை பத்மநாபா பொறுப்பேற்றிருந்தால் சீர்குலைவு ஏற்பட்டிருக்காது!

1989 காலப்பகுதியில் ஜேவிபியினரின் செயற்பாடுகளால் கொழும்பு அரசாங்கம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருந்தது.

 

இலங்கை விமானப் படை ஹெலிகொப்டர்கள் புலிகள் இயக்கப் போராளிகளை ஏற்றிச் சென்று புளொட் முகாம் களில் இறக்கின.

 

"புதிய அரசியலமைப்புக்ேகா அல்லது அரசியலமைப்பு மறு சீரமைப்புக்ேகா சர்வஜன வாக்ெகடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமாயின், அதற்குச் சார்பாகப் பிரசாரம் செய்வதற்கு யார் இருக்கிறார்கள்?

வடக்கும், தெற்கும் இருவேறு திசைகளில் சிந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், சிலவேளை சர்வஜன வாக்ெகடுப்பில் அரசாங்கம் தோல்வியுறுமாயின் பதின்மூன்றாவது திருத்தத்திற்கு மட்டுமல்ல, இந்திய இலங்கை உடன்படிக்ைக க்கும் ஆபத்தானதாக முடியவும் கூடும். அவ்வாறு ஒரு நிலைமை ஏற்படுமாயின் 1987இற்கும் முந்திய அதாவது 1977ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இந்தப் பிரச்சினை பின்னோக்கித் தள்ளப்படும்! ஓர் இணைப்புப் பாலம் இல்லாமற்போகும். தற்போது இருக்கின்ற ஒரே பாலம் இந்திய - இலங்கை ஒப்பந்தமும் பதின்மூன்றாவது திருத்தமும்தான். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாத பட்சத்தில் சர்வஜன வாக்ெகடுப்பை எவ்வாறு வெற்றி கொள்வது?

எனவே, தற்போது இருக்கும் இடத்திலிருந்துகொண்டு பிரச்சினையை அணுகுவதே சாலச்சிறந்தது. 1987இற்குப் பின்னர் முப்பதாண்டு காலம் கடந்துவிட்டிருக்கின்றது. மாகாண சபை முறைமையைப் பற்றியும் முப்பதாண்டு அனுபவம் இருக்கிறது. ஆகவே, அதனைச் சரியாக நடைமுறைப்படுத்துவதுடன் முறையாக செயற்படுத்தவும் வேண்டும். வடக்கும் தெற்கும் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டு எதிரணியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து ஓர் இணக்கத்திற்கு வர வேண்டும். பதின்மூன்றாவது திருத்தச்சட்டம்தான் தீர்வொன்றுக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கியிருக்கிறது. எனவே, அந்த உடன்படிக்ைகயின் மூலம் இதனைவிடச் சிறந்த பெறுபேற்றை அடைய முடியாது! பிரதமர் ​நரேந்திர மோடியினால்கூட அது சாத்தியமாகாது. இதனைவிட எந்த ஓர் உறுதியான அரசாங்கத்தினால்கூட முடியாது. முன்னாள் ஜனாதிபதி பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன் என்று தெரிவித்திருந்தார். எனவே, கூட்டு எதிரணியினரும் அதனை மறுதலிக்க முடியாது!"

"முதலாவது வடகிழக்கு மாகாண சபையில் ஓர் அமைச்சராக இருந்த உங்களின் அனுபவங்களை மீட்ட முடியுமா?"

"முற்று முழுதும் குழப்பமானது. நான் அதில் முக்கிய பங்கினை ஆற்றியிருந்தேன் என்பது உண்மை. ஆனால், ஈபிஆர்எல்எப் அந்தப் பொறுப்பை ஏற்றபோது தலைமையேற்பவர் யார் என்பதில் கூடுதல் அக்கறை செலுத்தியிருக்க வேண்டும். வரதராஜப்பெருமாள் தலைமையேற்றதை நான் கடுமையாக எதிர்த்தேன். பத்மநாபா அதனைப் பொறுப்பெடுத்திருக்க வேண்டும். அவர் ஓர் இடதுசாரி சிந்தனையாளர். தமிழ் மக்களுக்கான தீர்வொன்று அடைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் மிகக் கவனமாக வழிநடத்திச் செல்ல வேண்டும். ஆனால், நாபா அதனை ஏற்க விரும்பவில்லை. புரட்சிகர இடதுசாரி அமைப்பொன்றின் தலைவர் அவ்வாறான நிலைமாற்றுக்குச் செல்வதை தவிர்ப்பது சிறந்தது என அவர் கருதினார். ஆனால், ஒரு முக்கியமான தருணத்தில் அவ்வாறான மாற்றங்கள் வரலாற்றில் நிகழாமல் இல்லை. நான் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர் ஏற்கவில்லை. ஆயுதப் பிரிவுக்குத் தலைமை தாங்குவதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், இந்தியாவின் அரவணைப்புடன் வரதராஜப்பெருமாள் செயற்பட்டார். ஈற்றில், ஆயுதப்பிரிவினர் நாபாவிடம் செல்வதைத் தவிர்த்து முதலமைச்சரிடம் செல்லத்தொடங்கினர். அதனால், நாபா படிப்படியாகக் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தார். அவர் ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, சுரேஷ் பிரேமச்சந்திரனையாவது நியமியுங்கள் என்று சொன்னேன். அதனையும் கேட்கவில்லை!"

"நீங்கள் வரதராஜப்பெருமாளை தவிர்ப்பதற்கான காரணம் என்ன?"

"தலைமை ஏற்று வழிநடத்துவதற்கான பண்பு அவரிடம் இருக்கவில்லை. அவருக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் நல்ல தொடர்பு இருந்தது. அவரது அமைச்சரவையில் இருந்த ஏனையவர்கள் நடந்துகொண்ட விதம் ஏற்றுக்ெகாள்ள முடியாதது. மிகவும் உறுதியான ஒரு தலைமைத்துவம் தேவையாக இருந்த வேளையில், வரதராஜப்பெருமாள் பொருத்தமானவராக இருக்கவில்லை. அந்தப் பணியைப் பத்மநாபாவால் மட்டுமே சிறப்பாக செய்திருக்க முடியும். அவர் வழிநடத்தியிருந்தால், மாகாண சபை ஆட்சியில் சீர்குலைவு ஏற்பட்டிருக்காது."

"அதனால்தானா அமைச்சுப் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்தீர்கள்?"

"நிச்சயமாக. முற்றிலும் மாறுபட்ட பாதையில் மாகாண சபை சென்றுகொண்டிருந்தது. உதாரணத்திற்கு வட மாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனை எடுத்துக்ெகாள்ளுங்களேன், அவர் முதலமைச்சர் கதிரையில் அமர்ந்ததும், அவரது செயற்பாடுகளைக் களம் தீர்மானித்துவிடும். பத்மநாபா நடுநிலையாக வழிநடத்தும் திறன் கொண்டவர். இந்தியத் தரப்பினர் வட மாகாண சபையில் வித்தியாசமான போக்கினைச் செயற்படுத்தி வந்ததைக் கண்டுகொண்டதால், என்னால், தொடர்ந்து இருக்கப் பிடிக்கவில்லை. ஆனால், ஒன்று, அவர்கள் ஆர்.பிரேமதாசவுடனான கூட்டணியைத் தொடரவிருந்தது. அதனால், பிரேமதாச ஈரோஸை நாடவேண்டியதாயிற்று. புலிகள் அமைப்பும் ஈரோஸைப் பயன்படுத்தியது; இந்தியத் தரப்பும் பயன்படுத்தியது. அதேநேரம், நேர்மையான அரசியல் கொள்கையைக் கொண்டிருந்த பாலகுமார், பிரேமதாசவுடன் அரசியல் பற்றிப் பேச்சு நடத்தினார். இதில், ஈபிஆர்எல்எப்பும் ஈரோஸும் போட்டியான நிலைமையில் இருந்தனர். 1990 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பிரேமதாச ஒரு முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். வடக்கில் புதிய ஒரு தலைமைத்துவம் இருந்த அதேநேரத்தில் தெற்கில் ஜேவிபியினரின் செயற்பாடுகள் தீவிரமடைந்திருந்தன. அதனால், வடக்கு கிழக்கு மாகாணத்திற்குக் கூடுதலாக எதனையும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் பிரேமதாச இருந்தார். வடகிழக்கு மாகாண சபையினர் புலிகள் அமைப்பை அந்நியப்படுத்துமாறு வலியுறுத்தினர். அவர்களுக்கு இந்தியாவின் பின்புலம் இருப்பதால், கொழும்புடன் முரண்பட முடியும் என்றும் புலிகளை ஓரங்கட்ட முடியும் என்றும் நம்பினர். ஆனால், 1989 காலப்பகுதி மிகவும் நெருக்கடியானதாக இருந்தது. முதலாவது, ஜேவிபியினரின் செயற்பாடுகளால் கொழும்பு அரசாங்கம் பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருந்தது. அப்போது ஜேவிபியும் புளொட்டும் ஒன்றாகச் செயற்பட்டன. மாலைதீவு சதிப்புரட்சியும் இதன் ஓர் அங்கம்தான். தெற்கில் லலித் அத்துலத் முதலியின் தரப்பினரும் ஜேவிபினரும் புளொட் அமைப்பினரும் நெருக்கடியைக் கொடுத்தனர். அப்போது பிரேமதாச என்ன செய்வார்? அந்தச் சந்தர்ப்பத்தில்தான் புலிகள் அமைப்பும் இலங்கை இராணுவமும் இணைந்து செயற்பட்டு புளொட் அமைப்பின் முகாம்களைத் தாக்கின. இலங்கை விமானப் படை ஹெலிகொப்டர்கள் புலிகள் இயக்கப் போராளிகளை ஏற்றிச் சென்று புளொட் முகாம்களில் இறக்கின. அதுவே மிகமிக சிக்கலான நிலைமையாக இருந்தது. வடக்கு கிழக்கு மாகாண சபையும் வரதராஜப்பெருமாளும் பிரேமதாசவை அவ்வாறான ஒரு நிலைக்குத் தள்ளியமை மிகத் தவறு. பிரேமதாச மாகாண சபையைக் கலைக்க வேண்டும் என்று எண்ணிச் செயற்படவில்லை. மாகாண சபையினர்தான் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளில் இறங்கினர். அதன் விளைவாக இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. அது பிரேமதாசவைப் புலிகள் அமைப்பை நோக்கித் தள்ளியது. இந்த நிலைமைக்குக் காரணம் ஈபிஆர்எல்எப்பின் அரசியல் விவேகமற்ற தன்மைதான்.

1983, 1984 காலப்பகுதியில் இழைக்கப்பட்ட ஒரு பெரும் தவறின் காரணமாகத்தான் 1989, 1990 காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாண சபை அவ்வாறான ஒரு சூழ்நிலையைச் சந்தித்தது.

உங்களுக்கு நினைவிருக்கும் அந்தப் பிரபலமான ஒரு புகைப்படம், பிரபாகரன், நாபா, சபாரத்தினம் ஆகியோர் சேர்ந்து காணப்படும் புகைப்படம். 1983, 1984 காலப்பகுதியில் நான் சென்னையில் இருந்தேன். ஈஎன்எல்எப் அமைப்பு செயற்பட்ட காலம். நான் நாபாவுடன் கலந்துரையாடியபோது அவர் சொன்னார், தோழர் ஒன்று நாம் புளொட்டுடன் இணைய வேண்டும் அல்லது புலிகளுடன் இணைய வேண்டும். ஆனால், நான் புலிகளுடன் இணைவதை விரும்புகிறேன். ஏனெனில், அவர்கள் வெளிப்படையானவர்கள். இவர்களை (புளொட்) நம்ப முடியாது. அப்போது கேதீஸ் லோகநாதனும் அதனை ஆதரித்தார். புலிகளை சித்தாந்த ரீதியாக நாம் அணுக முடியும் என்று அவர் கூறினார். அப்போது நான் அவர்களுக்கு சொன்னேன், தெற்குடன் இணக்கமாகச் செயற்படுவதற்கு ஏதுவாகவும் ஓர் இடதுசாரி இயக்கத்தைக் கட்டியெழுப்புங்கள் என்று. அதன் பின்னர் புலிகளுடன் பேசி இணக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் தற்போதைக்கு அவர்களுடன் செல்ல வேண்டாம் என்றும் கூறினேன். ஒரு பலமான இடதுசாரி அமைப்பு இல்லாமல் அவர்களுடன் இணைய வேண்டாம் என்றேன்.

அவர்கள் செவிமடுக்கவில்லை. ஈஎன்எல்எப்பை உருவாக்கினார்கள். அதே தவறு 1989இலும் நடந்தது. ஈபிஆர்எல்எப் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து ஒரு கூட்டணியை ஏற்படுத்தவில்லை. அவ்வாறு செய்திருந்தால், புலிகள் அமைப்பையும் ஓர் இணக்கத்திற்குக் கொண்டு வந்திருக்க முடியும்."

Comments