மாலன் டொட் கொம் | தினகரன் வாரமஞ்சரி

மாலன் டொட் கொம்

நல்லையா சந்திரசேகரன்

உலகிலேயே மிகப் பெறுமதி வாய்ந்தது எது? அதற்குச் சொந்தக்காரன் யார்? பல மணி நேர போராட்டங்களின் பிறகும் மாலனுக்குத் தெளிவு வரவில்லை. அப்பாவிடம் கேட்டு விடுவோமா...? இல்லை ஆசிரியரிடம் கேட்டு விடுவோமா?

மாலன் தொடர்ந்து சிந்திக்கிறான்...

மனிதன் வாழ்க்கையில் மண், பொன், பெண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தானே தன் ஆசையை அகல விரித்துக் அதனையே தளமாகக் கொண்டு முயற்சிக்கிறான், முன்னேறுகிறான். ஏன் வாழ்க்கையைப் போராட்டமாகவே ஆக்கிக்கொள்கிறான்.

முடிவில் சிலர் வென்று விடுகிறார்கள் பலர் தோற்றுவிடுகிறார்கள்.

வென்றவர்கள் இறுமாப்பு கொள்கின்றார்கள். சிலர் எல்லாம் இறைவன் செயல் என்று விட்டு விடுகிறார்கள். தோற்றுப் போனவர்கள் துரதிர்ஷ்டசாலிகள் என நினைத்துக் கொண்டு, எல்லாம் விதியாய் நினைத்து நொந்து கொள்கிறார்கள்.

மாலனின் பெற்றோர் ஐம்பதையும் தாண்டி இன்னும் தேயிலை மலைகளில் போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். யாரையும் சாகடிக்காமல் தன் மகனை மட்டுமல்ல, மலையக மக்களின் எதிர்காலத்தையே கவனத்திற் கொண்டு அவர்களின் போராட்டமும், துணை செய்யும் மாலனின் போராட்டமும் இன்னும் கொஞ்ச காலத்தில் குறைவில்லாது நிறைவு பெற்றுவிடும். நம்பிக்கையுடன் மாலனும், அவனது தொழிலாளர் பெற்றோர்களும், துணையாக கோபாலன் ஆசிரியரும், என்ன தான் மனிதன் உயர்ந்து விட்டாலும் ஏன் என்னதான் மனிதன் தாழ்ந்து விட்டாலும் இரு சாராருக்குமே சொந்தமானதும், மிகப் பெறுமதி உடையதுமான பொருள், நேரம்தானே. நேரம் என்று சொல்லி முடிக்க எடுக்கும் நேரம் கூட எத்தனை பெறுமதியானது.

தினமும் நேற்றைய திகதியை கலண்டரில் கிழிக்கும் ஒருவரிடம் நேற்று என்ன தான் செய்து கிழித்து விட்டாய் என நக்கலாய் கேட்பதாக ஒரு கவிஞன் எழுதியுள்ளதை அடிக்கடி நினைத்துக் கொள்வான் மாலன்.

ஆம்! என்ன தான் போராடினாலும் செய்யுமளவிற்கும் ஒரு அளவு இருக்கும் தானே. நத்தை ஒன்றின் நடைப்பயணத்திற்கும் சிறுத்தை ஒன்றின் பாய்ச்சலுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும். மனிதருள்ளும் நத்தைகளும் சிறுத்தைகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

நொடிகள்... நிமிடங்கள்... மணித்தியாலயங்கள்... நாட்கள் என நகரும் காலம் எல்லாம் எதிர்காலத்திற்குத் தானே. சில மணிநேர தாமதங்களால் உண்டான பெரிய இழப்புகளும், ஈடுசெய்ய முடியாத இழப்புகளும் இருக்கும்தானே. அது போலவே சில மணி நேர தாமதங்களால் உண்டான பெரிய நன்மைகளும் எதிர்பாராத நன்மைகளும் இருக்கத்தானே செய்கிறது, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்.

நம் மலையகமும் அப்படி தான், ஆனால்... சில மணி நேரங்களில் பெற்றதைவிட இது காலவரையும் இழந்தது தான் அதிகம், இனியும் இழந்துவிட்டால்...?

மாலனின் சிந்தனை தரிப்பின்றி ஓடிக் கொண்டிருந்தது. இருந்த மலையகம், இன்றைய மலையகம், இருக்கப் போகும் மலையகம்...?

இன்றைய மலையகமும் எத்தனை எத்தனை மணித்தியாலங்களின் மாற்றமும்... ஏமாற்றமும்.

ச்சீ... ச்சீ.... இனிமேலும் எத்தனை காலங்களுக்குத் தொடரப் போகிறது. மலையகத்தின் மட்டுமல்ல... முழு நாட்டிலும் எத்தனை எத்தனை மனித மணிகள் வீணே ஒரு நாளைக்குக் கால்நடையாகவே காலம் கடக்கும் கஷ்டங்கள் தான் எத்தனை? போக்குவரத்து வசதி இல்லாது புலம்பித் திரியும் புண்ணியவான்கள் தான் எத்தனை பேர்?

அது மட்டுமா...? மின் வசதி இல்லாமல் எத்தனை வேலைகளை நேரத்துடனேயே செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்? மண்ணெண்ணெய் மாதச் செலவைக் குறைக்க மணித்தியாலங்களை அல்லவா கட்டுக்குள் கைக்க வேண்டிய கடப்பாடு.

மாலனும் எத்தனை மணித்தியாலயங்களை மண்ணெண்ணையில் எரித்துள்ளான். மண்ணெண்ணெய்க்காக எரித்துள்ளான். குப்பிலாம்பு கும்மிருட்டில் குனிந்து படித்து தன் எதிர்காலத்திற்காக மட்டுமல்ல... ஒரு சந்ததியின் சரித்திரத்தையே சத்திய சோதனையாய் நித்தியமாய் சிந்தித்துக் கொண்டிருக்கிறான் மலையாண்டியின் மகன் மாலன்.

பெயரில் மாலனின் தகப்பன் மலைக்கு ஆண்டிதான். ஆனால்.... மாலனால்...

மலையாண்டியினால் ஒருநாள் மலையகம் புதுமை பெறப்போகிறது. அவர்களின் சிந்தனை முழு மலையகத்தையும் மாற்றமுற செய்யப் போகிறது. மலைக்கு ஆண்டியானவன், ஒருநாள் ஆண்டியும் அரசன் ஆவான் என்பது லே ஆகத்தான் போகிறான். அதற்காக அவனுள் உறங்கிக் கொண்டிருக்கும் உன்னத சிந்தனை... இல்லை வீரியச் சிந்தனை விழித்துக் கொண்டிருக்கிறது.

மலையாண்டியும், காமாட்சியும் எப்போதும்... எண்ணங்களால் புரட்சிகரமானவர்கள். தொழிலாளர்களாய் வாழ்ந்தாலும், இலட்சியம் நோக்கிப் புறப்பட்ட புரட்சியின் புதுமையாளர்கள்.

தங்கள் எண்ணங்களின் இறுதி வடிவத்திற்காய்... அவர்கள் தினமும் தேயிலை மலையில் படும் இன்னல்கள், இடர்களின் சந்திப்புக்களும், நிந்திப்புக்களும் தான் எத்தனை எத்தனை

ஆனால்...

அவைகள் தான் அவர்களின் எண்ணங்களுக்கு உரமூட்டும் ஊக்குகளாய் தெரிந்தன. மாலனின் சிந்தனைக்கும் தான். அவனது வியப்புமிகு ஆற்றலுக்கும், விந்தைக்கும் அதுவே நல்ல அடித்தளங்கள் ஆயின.

மாலனின் ஒரு நாள் மணித்தியாலய துளிகளில் தூங்கும் நேரமும் சில நேரங்களில் சிந்தனைகளால் சிறகடிக்கும், துளிர்த்துக் கொள்ளும். இந்த வயதிலேயே இப்படியொரு சிந்தனைப் பெருக்கமா? வேகமா.....? அவனது மட்டுமல்ல, பெற்றோர்களதும் கருத்து கருக்கட்டல்கள் என்றோ ஒரு நாள் சுகப்பிரசவம் ஆகும். அது வரை கருவைக் கலைத்து விடாதவாறு பாதுகாக்க வேண்டாமா? வளர்க்க வேண்டாமா?

இல்லையேல்.... நடப்பது கருத்துக்களே இல்லாத வெறும் பிரசவங்கள் மட்டும்தானே. இப்போது மலையகமும் காண வேண்டிய சுகப்பிரவசம் இது தானே. இது மாலனின் ஆசிரியர் கோபாலனின் கருத்து மட்டுமல்ல, எதிர்பார்ப்பு, ஏக்கமும்தான்.

வெளியிலிருந்து வெளியார் பார்க்கும் நிற பசுமை சூழல் எம்முள்ளே எழுந்து வர வேண்டும். அது என்றும் விழுந்து விடாது விழிப்பாய் இருக்க வேண்டும். இவை எல்லாம் மாலன் குடும்பத்து கூட்டுச் சிந்தனையை மறுவாசிப்பு செய்த கோபாலன் ஆசிரியரின் குமுறல்கள். கோபாலன் ஆசிரியரும், குப்பி லாம்பில் எட்டடியில் இருந்து வந்த எழுச்சியாளன். அதனால் மாலன் வீட்டு மறுமலர்ச்சி எண்ணங்களை நேசித்து வாசிக்கும் நெஞ்சகலா வாசகனாய் இருந்து வருகின்றார். ஒரு வாசகனின் வாசகங்கள் எழுதுபவனைத் தூண்டுவதுபோல கோபலனின் வாசனைமிக்க வாசிப்பும் மாலன் வீட்டாரை சிந்திக்க வைக்கிறதோ?

மாலனுக்கு இன்னும் நான்கைந்து வருடங்கள் இருதலை கொல்லி போல இருக்க வேணடிய நிலை, நிர்ப்பந்தம். அது வரையும் பல்கலைக்கழகத்தில் படிப்பு, பாடசாலை, சமூகம் எனப் பல்வேறு குத்துவெட்டுகளில் வெற்றி கண்டவன். மாவட்ட வெட்டுப்புள்ளியில் மட்டும் தோற்று விட வாய்ப்பில்லையே. பல்கலைக்கழகத் தெரிவுக்கு இங்கிலிஷ் எழுத்து “ஏ” இலும் இஸட்டிலும் கூடியிருக்க வேண்டும். கிரிக்கெட் ஆட்ட ஓட்ட விகிதம், கல்வியின் தரப்படுத்தலில் இந்த “ஏ” இற்கும் இஸட்டிற்கும் தானே முண்டியடிப்புகள்.

தரமானவர்களாய், தரப்படுத்தப்பட்டவர்களே கீழ் தரமாய் நடக்கும் பாத்திர வார்ப்பில் பலியாகிப் போனோரின் நிலை. போலி இல்லாமல் எப்படி நிஜமாய் இருக்கும். தரப்படுத்தலின் தகுதியில்லாதோராய் தரம் பிரிக்கப்ப்டடவர்களில் “மனித தகுதியோடு” மணம் வீசிக் கொண்டிருக்கும் மகத்தான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்க்கையில் இந்த முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் தலை எழுத்தாகி விடுவதுதான் புதுமையாய் இருக்கிறது. அப்படியானால் தலை எழுத்து என்பது உண்மைதானோ?

மாலன் இந்தத் தரப்படுத்தலில் தகுதி பெற எத்தனை தூரம் கடந்து வந்திருப்பான். அவன் பாடசாலை சென்று வருவதே வெகுதூரம். தோட்டத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் நடந்து சென்று முப்பத்து நான்கு கிலோ மீற்றர் பஸ்சில் பயணிக்க வேண்டும். பதின் மூன்று வருடங்களாய் எத்தனை தூரம் கால்நடையாய், பஸ்சில், இது பயணத்திற்காய் கடந்து வந்த பாதையின் தூரம் மட்டுமே. இந்த நெடும் பயணத்திற்காய் அவன் கடந்து வந்த மற்ற பாதைகள்.

அதுபோலவே அவன் தோட்டத்து ஆரம்பப் பாடசாலையும், பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் இதே தூரத்தை மறுதலையாய் கடந்து வர வேண்டும். அதிலும் வருடத்தில் ஒருநாள் லீவு கூட எடுக்காத கடமை வீரர்களும் இருந்தார்கள். அவர்களுக்காய் மாலன் எண்ணங்களால் பொன்னாடை போர்த்தி புகழ்மாலை சூட்டிக்கொள்வான் யாருக்கும் தெரியாமலே.

இவ்வாறானவர்கள் நிஜத்தின் ஏஜமான்கள் தானே. இவர்களின் கடமைகளுக்கு எந்த எஜமானால் தான் முடியும்; உத்தரவு செய்ய முடியும்? ஆனாலும் உத்தரவுகள் வரும். இவர்கள் உத்தரவுகளுக்காய் மட்டும் சேவை செய்யும் உத்தமர்கள் அல்லர். உண்மை உணர்வோடு உணர்ந்து செய்யும் உறுதியாளர்கள். இது விதிவிலக்கு

மற்ற இடங்களில் ஆரம்பக் கல்வியே ஆட்டங்கண்ட ஒன்றாக உள்ளது. அடித்தளமே ஆட்டங்கண்டு விட்டால் நல்ல அறிவாளிகள் எப்படி உருவாவார்கள். இவற்றை எல்லாம் கடந்து தான் மாலன் பல்கலைக்கழகம் சென்றாலும் ஒட்டுமொத்தமாய் ஓர் அடித்தளம், அடிப்படை இருக்கத்தானே வேண்டும். சமூகப் படிமுறைகள் சமத்துவமின்மையைக் கொண்டு வருகின்றன. இங்கே ஒரு சமத்துவமில்லாது எப்படி ஒரு சமுதாய நீதியைப் எதிர்பார்க்க முடியும்.

நாடு... தேசியம் எல்லாம் நடைமுறை நாட்டு நடப்பில் கிடப்பில் போடப்படுவதால் எப்படி முழுமை பெற முடியும். இப்படியும் சமத்துவம் வேண்டி நிற்பவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் தேசத்துள் வர முடியாத தேச மக்களா? இல்லை தேசம் துறந்துவிட்டு விட்ட தேசத்தவர்களா? முழு மனிதவளமும் மதிக்கப்படல் வேண்டும். அவை பயன்பாட்டிற்காய் முரண்பாட்டிலிருந்து விடுபட வேண்டும். பயன்பாடு இல்லாத மனித வளமே இல்லை என்பது இலங்கையில் உறுதி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் உலக வளர்ச்சி வேகத்தில் நாம் எங்கோ ஒதுங்கிக்கொள்ள நேரிடும்.

மாலனின் எண்ணங்களும் இந்த மனிதவளம் பற்றியதுதான். விதைத்து சிதைக்கப்பட்டது போக, இனி விதைக்கப்பட உள்ள விதைகளாவது வீரியமுடன் இருக்க வேண்டாமா? வீரியம் என்பதை விதைத்து மட்டுமா பார்க்க முடியும். வீரியம் கூட நல் காரியமாற்ற கடமையில் உள்ளோர் கருமாற்ற வேண்டாமா? கட்டளைகள் இட வேண்டும். களைகள் பிடுங்கி செழித்தோங்க நல்ல களம் அமைக்க வேண்டும். மாலனின் தந்தை மலையாண்டி மலையில் மட்டும் வேலை செய்வதில்லை. தன் மனதுக்குள் எதிர்காலம் பற்றிய சிலைவார்ப்பில் சிந்தித்துக் கொண்டே தான் இருப்பார். மனைவி காமாட்சியும் அப்படியே. மாலனின் நான்கைந்து வருடங்கள் நிறைவு பெற்றன. இப்போது சிறப்பு பட்டதாரி. சிறப்பு பட்டதாரி மட்டுமல்ல மலையக சமூகச் சிந்தனையுள்ள பட்டதாரியும் கூட. அவன் ஆற்றல், திறமைகள் கண்டு அசந்து போன பல்கலைக்கழகம் அவனையே தத்தெடுத்துக் கொண்டது ஒரு விதைப்புக்குரிய விரிவுரையாளனாய். அவன் விரிவுரைகள் மட்டுமல்ல, விரிவான ஆராய்ச்சிகளும் செய்யத் தொடங்கினான். ஆராய்ச்சிகள் அமோக வெற்றி பெற, அவற்றுக்கு செயல் உரு கொடுக்க சிந்தனையாளர்கள் பலர் முன்வந்தார்கள். தம் சிந்தை கொடுத்தார்கள்.

“மலையகம்” பற்றிய திட்டமிடல் இப்போது மாலனின் கைகளில், மலையகம் புதுயுகம் நோக்கி புதுமை படைக்க புது வரவாய் பல புலமையாளர்களின் வருகை புது தெம்பைக் கொடுத்து. நம்ப முடியாத மாற்றங்கள் நடைமுறையில் புதிய பயணத்தின் புதிய பரிமாணங்கள் புலப்படத் தொடங்கின. தன் பணியால் தம் பெற்றோரின் பணி ஓய்வுக்கு வந்தது கூடத் தெரியாமல் போய்விட்டது. தன் பெற்றோர் இருவரும் தொழிலால் மட்டும் ஓய்வு பெற்றனர். மாதங்கள் ஆறு கடந்தன. மாலனிடம் பெற்றோரிடம் இப்போது இலட்சியத்திற்காய் பல இலட்சங்கள் கைகளில். பணி ஓய்வாய் கிடைத்த பணிக்கான வெகுமதி. இல்லை இது வரை உழைத்ததில் ஓய்வுக்கு கிடைத்த பெறுமதி.

மலையாண்டியின் நீண்ட நாள் ஆசை... கனவு நிறைவேற துடித்துக் கொண்டிருந்தது. காமாட்சியின் தூண்டல் அதற்காய் கணந்தோறும் கிடைத்து கொண்டிருந்தது. ஒரு நாள் மாலனுக்கு ஒரு கடிதம். மாலன் அதிர்ந்தே போய்விட்டான் எப்படி நம்புவது...? நம்புவதுதான் எப்படி? இவர்கள் தானா தன் பெற்றோர்கள். இதுவரையும் தனக்குக் கூட சொல்லவில்லையே. மாலனின் கண்களிலிருந்து மணிமணியாய் கண்ணீர்த் துளிகள். ஆனந்தக் கண்ணீர் துளிகள் அவனது அன்றைய வேலைக்கான கோவைகளை நனைத்தன. தன்னை விடப் பல மடங்கு சிந்தனைகளால் உயர்ந்து நின்ற பெற்றோர்களைத் தலைவணங்கினான்.

அன்று விடயத்தை யாவருக்கும் தெரிவிக்க, அவனோடு எல்லோரும் ஆனந்தக் கண்ணீரில் சங்கமமானார்கள். விடயம் உயர்மட்டம் வரை போய்விட்டது.

ஒரு வாரத்தின் பின் “மாலன் நம்பிக்கை நிதியம்” தன் பெற்றோர்களின் உழைப்பு ஊதியத்தால் உதயமானது. அவர்களின் விருப்பப்படி அவர்களின் ஓய்வூதியப் பணிக்கொடை முழுவதும் உயர்கல்வி நிதியத்திற்காய், நிதியம் எதிர்கால மலையக கல்வி அபிவிருத்திக்காய்.

“மாலன்டொட்கொம் மலையகம்” உழைத்து களைத்த கரங்களால் கணனியில் உலகம் பூராகவும் புதியதொரு செய்தி சொன்னது.

அன்றே அரச அனுசரணையாய் ஒரு தொகை. உலகம் பூராகவுமிருந்து ஒரு தொகை. உதவிகள் உருண்டை உலகத்தின் எல்லாத் திசைகளிலிருந்தும் வந்து குவிந்தன. மலையாண்டி காமாட்சி தம்பதிகள் இப்போது உலகம் பூராகவுமிருந்து பேசப்படுகின்றார்கள். மலையகம் முழுவதும் இவர்களின் உருவப்படங்கள், மாலனுக்கு தினம் தினம் வாழ்த்து மடல்கள் வந்து குவிந்தன. மக்கள் எல்லோரும் மணம் திறந்து மலையாண்டி தம்பதிகளின் சிந்தனைக்குப் பின்னால் நீண்ட வரிசைகளில்... தங்களை மறந்து நின்றனர். 

Comments