வடமாகாண சபை சரிபாதியாக உடைக்கப்பட்டுள்ளது | தினகரன் வாரமஞ்சரி

வடமாகாண சபை சரிபாதியாக உடைக்கப்பட்டுள்ளது

நேர்காணல்:-  செல்வநாயகம் ரவிசாந்- குப்பிளான், யாழ்ப்பாணம்   

 

 

  குழப்ப நிலைக்கு மஹிந்த சார்பு அணி மீதே சந்தேகம்

   முதல்வரின் அவசர முடிவே நம்பிக்ைகயில்லா    தீர்மானம் கொண்டுவர காரணம்

   நம்பிக்ைகயில்லா தீர்மானத்தை நான் முன்னின்று  வழங்கியமை விபத்து

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான சதிவேலைகளின் எதிரொலியே வடமாகாண சபையில் குழப்பநிலை எனக்கூறும்
வடமாகாண அவைத் தலைவரும்,
தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல் வாதியுமான சீ. வீ. கே. சிவஞானம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்குச் சார்பான எதிரணி மீதே தான் சந்தேகப்படுவதாகவும்
தெரிவித்துள்ளார்.  
தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  
வடமாகாண சபையில் அண்மைக் காலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்ப நிலைமைகள், வடமாகாண சபையின் செயற்பாடுகள், மாகாண சபை மீதான பொதுவான குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தினகரன் வாரமஞ்சரிக்கு விரிவாக அவர் வழங்கிய விசேட செவ்வி வருமாறு,   

 

கேள்வி:- வடமாகாண முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது சரியா? என்ன கூறுகிறீர்கள்?

பதில்:- ஆம்.... இதுவொரு சரியான முடிவு. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்கள் மீதும் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதை நாங்கள் எந்தவகையிலும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், குற்றச் சாட்டு நிரூபிக்கப்படாத ஏனைய இரு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களில் ஒருவரான குருகுலராஜா ஏற்கனவே தன்னிலை விளக்கமளித்த நிலையில் அமைச்சராகவிருந்த ஐங்கரநேசனுக்கு மாகாண சபை அமர்விற்கு முன்னரே நீங்கள் அமர்வில் தன்னிலை விளக்கமளிக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் அளிக்கும் தன்னிலை விளக்கம் காரணமாக வீணாக விவாதங்களுக்குட்பட்டு எங்களை நாங்களே அநாவசியமான சிக்கல் நிலைக்குள் தள்ள வேண்டாம் எனக் கூறியிருந்தேன்.

ஆனால், எனது கருத்தை அவர் நிராகரித்தார். இவ்வாறான நிலைமையில் அவர் சபை அமர்வின் போது தன்னிலை விளக்கமளிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்க வேண்டிய தேவையிருந்தது. ஐங்கரநேசன் தன்னிலை விளக்கமளித்ததன் பின்னர் அவரது தன்னிலை விளக்கம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா கருத்துக் கூற முனைந்த போது அதற்கு நான் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக அவர் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தமையும் பலரும் அறிந்த விடயம்.

ஐங்கரநேசன் சபையில் தன்னிலை விளக்கமளித்ததன் பின்னர் வடமாகாண முதலமைச்சரை நோக்கி நீங்கள் இது தொடர்பான முடிவெடுப்பதற்கு உங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசமுள்ளது எனத் தெரிவித்தேன். ஆனால், அதனையும் மீறி உடனடியாகவே தான் ஏற்கனவே தயார்படுத்தி வந்த அறிக்கையை வாசித்தார். அவ்வாறாயின் தன்னிலை விளக்கத்திற்கான அர்த்தமென்ன?, தன்னிலை விளக்கத்தை எந்த வகையிலும் பரிசீலிக்கவில்லை என்பதும், இந்த விடயத்தில் முன் கூட்டியே அவர் ஒரு முடிவெடுத்து விட்டார் என்பதே இதிலிருந்து புலப்பட்டது.

அதன் பின்னர் குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்ட இரு அமைச்சர்களையும் நீக்குவது தொடர்பான முடிவுக்கு நான் உடன்படுவதுடன் பாராட்டி வரவேற்கின்றேன். ஆனால், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத ஏனைய இரு அமைச்சர்கள் மீதும் நீங்கள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நான் உடன்படவில்லை எனத் தெரிவித்தேன். இதற்கிடையில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் முன்கூட்டியே எடுத்த முடிவுக்கமைய சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள். அவர்கள் சபை அமர்வில் கலந்து கொண்டு விவாதித்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

முதலமைச்சரின் அவசரமான முடிவே அவர் மீது நாம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்குக் காரணமாகியது.

 

கேள்வி:- அண்மைக் காலமாக வடக்கு மாகாண சபையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் மத்திய அரசாங்கத்தால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனப் பலராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மாகாண சபையின் அவைத்தலைவரென்ற வகையில் இந்தக் குற்றச்சாட்டிற்கு உங்கள் பதிலென்ன?

பதில்:- வடக்கு மாகாண சபையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் ஒரு ஆழமான, புரிந்து கொள்ள முடியாத செயற்பாடாகவே என் பார்வையிலுள்ளது.

வடக்கு மாகாண சபையில் ஊழல் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கியவர்களே தற்போது முதலமைச்சருடன் கைகோர்த்து நிற்கிறார்கள். முதன்முதலாக 16.02.2016 இல் ஊழல் பிரச்சினையை மாகாண சபையில் எழுப்பிய லிங்கநாதனும், அவருக்கு எதிராகப் பேசிய ஐங்கரநேசனும் அவர் கூடவே நிற்கிறார்கள்.

அவ்வாறெனில், ஏன் சபையில் இவ்வாறான குழப்ப நிலைகளை ஏற்படுத்த வேண்டும்?, அவர்கள் ஒரே நிலைப்பாடுகளை உடையவர்களாகச் செயற்படாமைக்கு காரணம் என்ன?

வடக்கு மாகாண சபை தற்போது சரி பாதியாக உடைக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் யாருமே மறைக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகித்தாலும் தற்போதைய சூழலில் தமிழரசுக் கட்சி தனித்த நிலையில் இயங்க வேண்டியுள்ளது. மாகாண சபையின் அமைச்சரவை விடயத்தில் தலையிடாமல் நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம்.

ஆனால், மாகாண சபையின் புதிய அமைச்சரவை நியமன விவகாரத்தில் அவர்களுக்குள்ளேயே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு உடன்பாடு அற்றதொரு நிலையே நீடிக்கிறது.

சிவநேசனுக்குப் புதிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதை புளொட் தலைவர் ஏற்றுக் கொண்டாலும் கூட அவர்களுக்குள்ளேயே இது தொடர்பான உள்ளக முரண்பாடுகள் காணப்படுகின்றன என்பது மறைக்க முடியாத உண்மை. அதேபோன்று தான் ரெலோ அமைப்பைச் சேர்ந்த குணசீலனுக்கு அமைச்சர் பதவி வழங்ப்பட்டுள்ளதை அமைப்பின் தலைவர் ஏற்றுக் கொண்டாலும் செயலாளர் ஸ்ரீகாந்தா ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவே, மாகாண சபையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்பநிலைகளை ஒட்டு மொத்தமாக நாம் எடுத்து நோக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கான சதிவேலைகள் தான் நடந்தேறியுள்ளது.

ஆனால், நீங்கள் கூறியது போன்று இந்தக் குழப்ப நிலைகளுக்கு மத்திய அரசு தான் காரணமெனக் கூறிவிட முடியாது. ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவிற்குச் சார்பான எதிரணி மீதும் எனக்குச் சந்தேகமுள்ளது.

எனவே, இவ்வாறான குழப்ப நிலைமைகளுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று கூறுவதை விட தெற்கத்தைய அரசியலில் செல்வாக்குச் செலுத்துவோரதும், வெளிநாட்டிலுள்ள சிலரதும் திட்டமிட்ட செயற்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

 

கேள்வி:- வடமாகாண முதலமைச்சருரு க்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வடமாகாண ஆளுநரிடம் நீங்கள் முன்னின்று கையளித்துள்ளீர்கள். ஆனால், இன்னொரு சந்தர்ப்பத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு நீங்கள் உரையாற்றும் போது முதலமைச்சருக்கெதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட

நம்பிக்கையில்லாத் தீர்மானம் என் மீது திணிக்கப்பட்டதொன்று எனவும் சாடியிருக்கிறீர்கள். இது தொடர்பில் நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?

பதில்:- 14.06. 2017 அன்று தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்த போதும் அதற்கு முன்னதாக நடைபெற்ற மூன்று கூட்டங்களிலும் நான் பிரசன்னமாகியிருக்கவில்லை.

முதலமைச்சர் எடுத்த தீர்மானத்திற்குப் பின்னர் ஜூன் மாதம்- 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள எங்கள் கட்சி அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அன்றைய கூட்டத்திற்கு எனக்கு முன் கூட்டியே அழைப்பு வந்த போதிலும் நான் இரண்டரை மணித்தியாலங்கள் தாமதமாகியே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

அன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது என்பது முடிவாயிற்று. எங்களுடைய கட்சித் தலைமை தெரிவித்ததன் அடிப்படையில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இரு உறுப்பினர்கள் மீதும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளமையை நாம் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், ஏனைய இரு அமைச்சர்களையும் பதவியிருந்து நீக்குவது தொடர்பில் நாம் உடன்படவில்லை.

முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கட்சி முடிவாக அமைந்ததன் அடிப்படையில் அந்த முடிவுக்கு நான் கட்டுப்பட்டவன். நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக நான் கையெழுத்திடுகிறேன் எனக் கூறினேன். கட்சி முடிவுக்கமைய முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வடமாகாண ஆளுநரிடம் கையளிப்பதற்காகச் செல்ல ஆயத்தமான போது தீர்மானத்தின் நகலை பிரதி அவைத்தலைவர் என்னிடம் கையளித்தார்.

கட்சி முடிவுக்குக் கட்டுப்பட்டவன் என்ற அடிப்படையில் தீர்மானத்தின் நகலை ஆளுநரிடம் கையளிப்பதற்கு வருகை தர நான் மறுக்கவில்லை. ஆனால், நான் கையளிப்பது முறையல்ல எனத் தெரிவித்தேன்.

எனினும், ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின் நகல் மீண்டும் என்னிடம் தரப்பட்டது. இருந்த போதிலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக நகல் யாரால் எனக்கு வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை.

இதனாலேயே, முதலமைச்சருக்கெதிரான தீர்மானத்தை நான் முன்னின்று ஆளுநரிடம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிரதி அவைத்தலைவரிடம் சிலர் ஆளுநர் அலுவலகத்தில் வினவிய போது தான் என்னிடம் வழங்கவில்லை என்பதை அவர் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, தீர்மானம் யாரால் எனக்கு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. இந்த விடயம் இன்றுவரை மர்மமாகவேயுள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு உடன்பட்டுத் தான் தீர்மானத்திற்கு ஆதரவாகக் கையெழுத்து வைத்தேன். ஆளுநர் அலுவலகத்திற்கும் சென்றேன். இது எனது முடிவல்ல எமது கட்சியின் முடிவு. ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நான் முன்னின்று வழங்கியமை ஒரு விபத்து.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநரிடம் வழங்கும் போது நான் சிரித்துக் கொண்டு கையளித்ததாகப் பலரும் விமர்சிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் நான் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த வேண்டும். முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநரிடம் நான் ஏற்கனவே கையளித்து விட்டேன். அதன் பின்னர் தான் அங்கு வந்த ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுக்க வேண்டும்...எனவே, தீர்மானத்தை மீளவும் கையளிக்குமாறு கூறினார்கள். அப்போது தான் எழுந்து நின்றேன். அவ்வாறு எழுந்து நின்ற போது ஆளுநர் என்னிடம் தீர்மானத்தை வழங்கினார். மீண்டும் என்னிடம் வழங்குங்கள் என அவர் கூறிய போது நான் மீளவும் தீர்மானத்தை அவரிடம் கையளித்தேன். அப்போது அவர் தீர்மானத்தை நான் உங்களுக்கு வழங்குவது போன்றிருக்கிறது. என்னிடம் வழங்குவது போன்ற தோற்றப்பாடு தெரியும்படியாக கையளியுங்கள் எனத் தெரிவித்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் நான் சிரித்தவாறு தீர்மானத்தைக் கையளிக்க வேண்டியேற்பட்டது.

ஆனால், அதற்காக நான் அச்சந்தர்ப்பத்தில் அழுதவாறு தீர்மானத்தைக் கையளிக்க வேண்டிய அவசியமில்லை.

அவைத்தலைவரிடமே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட வேண்டும் என்று கூறுவது முற்றிலும் தவறான, மாகாண சபை முறைமை தெரியாத வெட்டிப் பேச்சு. முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு போதும் அவைத்தலைவரிடம் கையளிக்கப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கை யில்லாத் தீர்மானம் வித்தியாசாகராவிடம் தான் கையளிக்கப்படுகிறதே தவிர தனராஜிடமா வழங்கப்படுகிறது? இல்லேயே! எனவே, சட்டப்படி எனது செயற்பாட்டில் எந்தத் தவறுமில்லை.

 

கேள்வி:- வடமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நீங்கள் ஆளுநரிடம் கையளித்த பின்னர் வடமாகாண அவைத்தலைவரென்ற வகையில் நீங்கள் நடுநிலைமை தவறி விட்டதாகப் பல்வேறு தரப்புக்களாலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாகக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிலொன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் நீங்கள் நடுநிலைமை தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன?

பதில்:- சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு நடுநிலைமை என்றால் என்னவென்றே தெரியாது. நான் நடு நிலைமை தவறினேன் என்பதை அவர் நிரூபிக்கட்டும் பார்க்கலாம்!, மாகாண சபை முறைமை என்றால் என்னவென்று தெரியாமல் அவர் பேச முடியாது.

சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுள்ளது. அதனால் தான் அவர் என் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்.

முதலமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்ததன் பின்னர் நான் எத்தனை அமர்வுகளைத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளேன். நான் நடுநிலைமை தவறியிருந்தால் மாகாண சபை அங்கத்தவர்கள் என் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமலிருப்பது ஏன்?

முதலமைச்சர் கூட நான் நடுநிலைமை தவறி விட்டதாக முன்னர் ஏதோ தூண்டுதலில் கூறியிருந்தாலும் பின்னர் அது தொடர்பாக எதுவும் பேசாமல் மெளனம் காத்தது ஏன்? என்பதை எமது மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். எந்த ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு நான் நடுநிலைமை தவறிவிட்டதாக அவர் கூறியமையும் எனக்கு நன்கு தெரியும்.

தனக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் நான் கையெழுத்திட்டமை தவறு என என்னிடம் தெரிவித்தார். நான் ஒரு உறுப்பினர் என்ற வகையில் தீர்மானத்தில் கையெழுத்திட்டமை சரியானது.

ஆனால், முதமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வடமாகாண ஆளுநரிடம் நாங்கள் கையளித்ததன் பின்னர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட முதலமைச்சர் மீது நம்பிக்கையிருப்பதாகத் தெரிவித்து வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு வடமாகாண ஆளுநரிடம் கடிதமொன்றைக் கையளித்திருந்தது.

அந்தக் கடிதத்தில் முதலமைச்சரும் கையெழுத்திட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட முதலமைச்சரே இவ்வாறு கையெழுத்திடும் போது ஒரு உறுப்பினரென்ற வகையில் அவருக்கெதிரான தீர்மானத்தில் நான் கையெழுத்திட்டதில் என்ன தவறிருக்கிறது?

 

எனவே, முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நான் முன்னின்று வடமாகாண ஆளுநரிடம் வழங்கியதில் சட்டப்படியும், சம்பிராதயப்படியும் எந்தத் தவறுமில்லை. ஆனால், இதனைத் தவிர்த்திருக்க முடியும் என்பது எனது சொந்தக் கருத்து . 

Comments