அஸ்வரை நினைத்துப் பார்க்கிறேன் | தினகரன் வாரமஞ்சரி

அஸ்வரை நினைத்துப் பார்க்கிறேன்

ஏ.ஜே.எம். முஸம்மில்,
மலேசியாவிலுள்ள
இலங்கை உயர் ஸ்தானிகர்

எனது இனிய நண்பரான அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் காலமாகி விட்டார் என்ற செய்தி என்னை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. காலஞ்சென்ற அஸ்வர் தனது இறுதி மூச்சுள்ள வரை தரங்குறையாத குறியீடான எளிமை மற்றும் விசுவாசத்தின் இருப்பிடமாகவும், அரசியல் பாதையில் அனுபவமும் ஆளுமையும் கொண்ட துணிச்சல் மிக்க ஓர் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். அன்னாருடன் பழகிய அந்த நாட்களை நான் மிக்க விருப்பத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.

கடந்த 1988 ஆம் ஆண்டில் வெ ள்ளிக்கிழமை காலைப் பொழுதொன்றில் ‘சுபஹ்’ தொழுகையின் பின்னர் நடந்து முடிந்திருந்த ஜனாதிபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாச வெற்றிவகை சூடியதைத் தொடர்ந்து, அஸ்வர் தனக்கு வந்திருந்த கடிதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்த வண்ணமிருந்தார். அப்போது அவருக்கு திகைப்பூட்டும் வகையில் அமைந்த கடிதமொன்று அவர் கண்ணில் பட்டது. கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் அவரைப் பதவி நீக்கஞ்செய்வதாகக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதமே அதுவாகும்.

அஸ்வர் தென் மாகாண முன்னாள் ஆளுநர் அல்ஹாஜ் பாக்கீர் மக்காரின் பிரத்தியேக செயலாளராக அப்போது கடமையாற்றி வந்தார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் தீவிர தேர்தல் பிரசாரத்தின் போது 150க்கும் மேற்பட்ட கூட்டங்களில் அவரை ஆதரித்து உரையாற்றச் சென்ற காரணத்தினாலேயே அவரால் கடமைக்குச் சமூகமளிக்க முடியாமல் போயிருந்தது. மேற்படி தேர்தல் காலத்தில் வடக்கிலிருந்து தெற்கு வரை வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறிய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணசிங்க பிரேமதாச பலத்த கஷ்டத்தின் மத்தியில் தீவிர பிரசாரத்தின் பயனாக வெற்றியீட்டினார்.

வேலை நீக்கக் கடித்ததினால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அஸ்வர் காலி வீதிக்கு நடந்து சென்று, இ.போ.ச பேருந்தில் பயணித்து பம்பலப்பிட்டியை அடைந்து, எனது வீட்டிற்கு கால் நடையாக வந்தார்.

களைப்படைந்த நிலையில் கண்ணீர் மல்கியப்படி தனக்குக் கிடைத்திருந்த அந்தக் கடிதத்தை அஸ்வர் என்னிடம் கொடுத்தப்படியே, ‘எனக்கு விருதொன்று வழங்கப்பட்டுள்ளது’ என்றார். அதற்கு நான் ‘ஹாஜி கவலைப்படாதீர்கள். இது உங்களுக்குக் கிடைத்துள்ள மறைமுகமானதோர் ஆசீர்வாதமே. இப்போது உங்களுக்குரிய இடம் பாராளுமன்றத்தில்தான் உள்ளது’ எனக் கூறினேன்.

அதனைக் கேட்ட அஸ்வர், ‘என்ன பகிடியா பண்ணுகிறீர்கள்?’ என என்னிடம் வினவியப்படி ‘இல்லை, இல்லை, நான் ஜனாதிபதியின் காரியாலயத்தில் எதனையாவது செய்வேன்’ என்றார். நான் அன்றிரவு சிங்கப்பூருக்குப் பயணம் செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்தேன். அஸ்வருக்கு அந்த நிலையில் பூரண ஓய்வு தேவையெனக் கருதிய நான் என்னுடன் இணையுமாறு அவரை அழைத்தேன்.

எமது நண்பரான ஓமர் காமிலை நான் உடனடியாகவே வரவழைத்து அஸ்வருக்கு நடந்ததை எடுத்துக் கூறி, அஸ்வருக்காக சுயவிபரக் கோவையொன்றைத் தயாரிக்குமாறு நான் அவரிடம் வேண்டினேன். எமது வழமையான வெள்ளிக்கிழமை மதிய போசனத்தில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு நான் அவரிடம் கேட்ட பின்னர், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ரணசிங்க பிரேமதாசவை நேரில் சென்று வாழ்த்தும் முகமாக நாம் சுச்சரித்த மாவத்தைக்குச் சென்றோம். அதேவேளையில், அஸ்வரை பணிநீக்கம் செய்வதாகக் கூறும் அந்தக் கடித்ததின் பிரதியொன்றை ரணசிங்க பிரேமதாசவுக்கு காண்பிக்கும் பொருட்டு, காலஞ்சென்ற ஏ.ஜே. ரணசிங்க மூலம் என்னால் பெற்றுக் கொள்ள முடிந்தது.

ஜும்ஆ தொழுகையும் மதிய போசனமும் முடிவுற்ற பின்னர், நாம் சுச்சரித்தவுக்குச் சென்ற போது, நலன் விரும்பிகள் உள்ளிட்ட அதிமுக்கிய நபர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்க நீண்ட வரிசையில் போய்க் கொண்டிருந்தனர். தென் மாகாண முதல் அமைச்சர் எம். எஸ். அமரசிறி உள்ளே நடந்து செல்லும் போது ஆளுநரால் அனுப்பப்பட்ட கடிதப் பிரதியொன்றை நான் அவரிடம் கொடுத்தேன். குறித்த கடிதப் பிரதிகளை விநியோகித்தமைக்காக அஸ்வர் என்னுடன் கோபித்துக் கொண்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை வாழ்த்த வருமாறு இரவு 7.30 மணியளவில் எம் மூவருக்கும் அழைப்புக் கிடைத்தது. நாம் உள்ளே நுழைந்ததும் அஸ்வரைக் கண்ட ஜனாதிபதி பிரேமதாச ஹாஸ்யமாக ‘நீங்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு விட்டீர்கள் தானே’ என்றார். அஸ்வரைப் பதவி நீக்கும் கடிதப் பிரதி அவரது மேசையில் இருந்தது.

அஸ்வரைப் பார்த்த ஜனாதிபதி அவரிடம், ‘உங்கள் திட்டங்கள் என்ன மாதிரி?’ எனக்கேட்டார். “சேர், நீங்கள் அவரைப் பாராளுமன்றத்தில் வைத்திருக்க வேண்டும்” என நான் பதிலளித்தபோது, “மிகவும் நல்ல யோசனை, நீங்கள் எந்த மாவட்டத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட முன்வர விரும்புகின்றீர்கள்” என்ற ஜனாதிபதியின் கேள்விக்குப் பதிலளித்த நான் “சேர், அவர் பிரசாரப் பணிகளில் உங்களுடன் பயணிக்கவுள்ளதனால், நாம் அவரை எந்த மாவட்டத்திலிருந்தும் களமிறக்க முடியாது. எனவே, அவர் தேசியப் பட்டியல் மூலம் வரட்டும்” எனக் கூறி அஸ்வரின் சுயவிபரக் கோவையின் பிரதியொன்றை ஜனாதிபதி பிரேமதாசவிடம் கையளித்தேன்.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் விஜேரத்னவுடன் உடனடியாகவே தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி பிரேமதாச, “நான் அஸ்வரை அனுப்புகின்றேன், அவரது பெயரை தேசியப் பட்டியலில் உள்ளடக்கவும்” என பணித்த்துடன் எம்மையும் உடனடியாக சிறிகொத்தவுக்குச் சென்று சுயவிபரக் கோவையைக் கையளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தென் மாகாண ஆளுநரின் பிரதியேக செயலாளர் பதவி பறிபோனதால் அஸ்வர் இன்று காலை மனமுடைந்து போயிருந்ததாகவும், “நீங்கள் கவலைப்படாதீர்கள், ஜனாதிபதி பிரேமதாச உங்களைக் கவனித்துக் கொள்வார்” என "நான் அவரைத் தேற்றியுள்ளேன்” என நான் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தேன். அப்போது, தேசியப் பட்டியல் மூலம் அஸ்வர் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்படுவாரென ஜனாதிபதி உறுதியளித்தார். எமது மனவருத்தத்திற்குப் பெரும் ஆறுதல் கிடைத்த நிலையில் நாமிருவரும் அன்றிரவு சிங்கப்பூர் சென்றோம்.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அஸ்வர் பாராளுமன்றத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நியமனம் பெற்றார்.

அஸ்வரால் பாராளுமன்றத்திற்கு எப்படி நுழைய முடிந்தது என்பதைக் கூறும் உண்மைக் கதை இதுவேயாகும்.

அவர் ஆட்சியில் இருந்த அல்லது வெளியில் இருந்த வருடங்களில் அஸ்வர் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவராகவும், தனது பதவியை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யாதவராகவும், இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளை கட்டாயமாகக் கடைப்பிடித்த மனிதப் புனிதராகவும் இந்த உலகில் வாழ்ந்து மறைந்துள்ளார்.

அஸ்வரைப் போன்ற அனுபவமிக்க அரசியல்வாதிகளின் அரசியல் ஞானம் மற்றும் தூரதிருஷ்டி என்பன இலங்கையின் அரசியல் அரங்கில் தேவைப்படும் முக்கியமானதோர் தருணத்தில் அஸ்வர் எம்மை விட்டுப் பிரிந்துள்ளமை ஈடுசெய்ய முடியாததொன்றாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் அஸ்வருக்கு ஜன்னாவில் உயர்ந்த ஸ்தானத்தை வழங்குவானாக.

Comments