எந்நிதியும் தருவான் செல்வச் சந்நிதியான் | தினகரன் வாரமஞ்சரி

எந்நிதியும் தருவான் செல்வச் சந்நிதியான்

உரைத்தமிழ் ஒளி, சைவசித்தாந்த கலாநிதி சைவப்புலவர் செ.கந்த சத்தியதாசன்.

யாழ்ப்பாண கலாசாரம் கந்தபுராண கலாசாரம் என்பதற்கமைய யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல முருக வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. இவற்றுன் கதிர்காமக் கந்தனின் ஆலயத்தோடு பலவகையில் தொடர்புபட்டது தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயம் ஆகும்.

முற்காலத்திலே முருகப்பெருமான் சூரனைச் சங்காரம் செய்வதற்காக இந்தியாவில் இருந்து கடல் தாண்டிவந்து தற்போது சந்நிதி ஆலயம் அமைந்துள்ள பூவரசமர நிழலில் இருந்தார் முருகனின் தம்பியாகி நவவீரர்களில் மூத்தவராகிய வீரவாகு தேவர் முருகப்பெருமானுக்கு நிவேதனம் படைத்து உபசாரங்களைச் செய்து போற்றினார்.

அன்னம் உண்ட இவ்விடத்தை முருகப் பெருமானே பிற்காலத்தில் சிகண்டிமுனிவருக்கு எடுத்துக் கூறிய காலத்தில் இப்புனிதத்தலம் வெளிப்பட்டது இன்றும் செல்வச்சந்நிதி தலவிருட்சமாக பூவரசமரம் அமைந்துள்ளது. மனக்கவலையை மாற்றும் இடமாக பூவரசமர நிழல் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே வள்ளிக் கொடி முளைத்து கொடியேற்றம் நடைபெறுகின்றது. மேலும் கதிர்காமத்தைப் போன்று இப்பூவரசைப் பார்த்த வண்ணமாக வள்ளியம்மன் ஆலயமும் காணப்படுகின்றது.

மருதர் கதிர்காமரை முருகப் பொருமான் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து வெள்ளிவேல் எடுத்து வரச்செய்து வழிபாடுகள் நடைபெற்று வருவதால் சின்னக்கதிர்காமம் என்றும் செல்வச்சந்நிதி அழைக்கப்படுகின்றது மேலும் கதிர்காமக் கந்தனுக்கு ஆடிமாதத் திருவோணநட்சத்திரத்தில் தீர்த்தத்திருவிழா சின்னக் கதிர்காமமாகிய தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் ஆவணத்திருவோணத்தை அடுத்து வரும் பௌர்ணமியில் தீர்த்தத்திருவிழா நடைபெற்று வருகின்றது.

கதிர்காமம் போன்றே பிராமணர் அல்லாதோர் வாயைத் துணியால் கட்டி மந்திரமின்றிப் பக்திப் பூசை நடைபெற்றுவருகின்றது. முருகப் பெருமான் அமர்ந்திருந்து அன்னமுண்ட இத்தலத்தில் இன்றும் அன்னதானத்திற்கு குறைவில்லை முருகனின் அன்புக் கட்டளையை ஏற்ற மருதர் கதிர்காமர் தினமும் 65 ஆலம் இலைகளில் அன்னம், கறிபடைத்து பக்திப்பூஜை செய்து வந்தார். இன்றும் அவர் சந்ததியினர் தினமும் 65 ஆலமிலைகளில் அன்னம் படைத்து பூசை செய்த வருகின்றனர். இப்பிரசாதம் பலரது தீராத நோய்களைத் தீரித்து வருவது அற்புதமேயாகும்.

வருடம் முழுவதுமே அன்னதானம் நடைபெறும் அன்னதானக்கந்தனாக செல்வச்சந்நிதிக் கந்தன் விளங்குகின்றான். இதற்கேற்றாற்போல் செல்வச்சந்நிதிச் சுற்றாடலில் ஒருகாலத்தில் (52) ஐம்பத்தியிரண்டிற்கும் மேற்பட்ட அன்னதானமடங்கள் காணப்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பலமடங்கள் உடைந்தாலும் மீண்டும் அவை புதுப்பொலிவு பெற்றுவருகின்றன.

இத்தகு அன்னதான மடங்களிலே தலைமைமடம்போன்று நித்தமும் அன்னதானப்பணி குறைவின்றி நடைபெறும் மடமாக “சந்நிதியான் ஆச்சிரமம்” விளங்குகின்றது. மூவினமக்களும் தினம் தினம் செல்வச்சந்நிதி முருகனை வழிபட்டு சந்நிதியான் ஆச்சிரமத்தில் அன்னம் புசித்துச் செல்கின்றார்கள்.

சுருங்கக் கூறின் செல்வச் சந்நிதிக்கு வருபவர்கள் எல்லோருமே அன்னம் புசித்தே செல்கின்றார்கள் சந்நிதியான் ஆச்சிரமத்தையும் சைவகலை பண்பாட்டுப் பேரவையையும் சமூகஜோதி மோகனதாஸ் சுவாமிகள் நிர்வகித்து வருகின்றார். அன்னமிட்டகையாக அன்னம் பாலிக்கும் கையாக இன்றுவரை அடியார் பணி ஆற்றிவருகின்றார். பலகொடையாளிகள், சைவப் புரவலரகள் வர்த்தகப் பெருமக்கள் இந்த நித்திய அன்னதானப் பணிக்கு நிதி உதவி வழங்குகின்றார்கள். பல விவசாயிகள் அரிசி, மரக்கறிகள் கொடுத்து உதவுகிறார்கள்.

மேலும் சந்நிதியின் பெயரினால் அருளோடு மருந்து எனும் வகையில் மருத்துவப்பணியும் வாராந்தம் நடைபெற்று வருகின்றது. பல ஏழைகளுக்கு, விதவைப் பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள், மாணவர்களுக்கு கல்விக்களான உதவிகள் என்பவற்றையும் சந்நிதியான் ஆச்சிரமம் மேற்கொண்டுவருகின்றது.

கதிர்காம பாத யாத்தீரிகர்களை முருகனாக மதித்து அவர்களுக்கு உணவு உடை எனப்பல உதவிகள் செய்து வருவதோடு மலையகத்தை சார்ந்த சைவப்பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும் அரிய பணியாற்றி வருகின்றது.

இவரது பணிகளைக் கௌரவித்து கடந்த வாரம் இந்தியாவில் உள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தமையும் எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

கலியுகத்தில் கண் கண்டதெய்வமாக மிளிரும் கலியுக வரதன் வேல்வடிவிலே செல்வச் சந்நிதியில் விளங்கி மூர்த்தி, தல, தீர்த்த, விருட்ச மகிமைக்கேற்ப அருள் பாலிக்கின்றான். தொண்டமனாறு எனும் உப்பாறு ஆலயத்தின் மேற்கு வீதியின் வெளிப்புறமாகவும் உட்புறமாக நன்னீர்க் கேணியும் தினம் தினம் முழுகுபவர்களது பாவத்தைப் போக்குகின்றது. 

Comments