ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

"என்ன சின்னராசு வந்தனீ நேரே உள்ள போனனீ... திரும்பி வாறனீ... ஏதேனும் வில்லங்கமோ

இல்லையண்ண உங்களைப் பாக்கத்தான் வந்தனான். ஆனா செல்லக்கா இருக்காவோ எண்டு உள்ள ஒரு தடவ எட்டிப் பார்த்தனான் போன கிழமை தெரியும் தானே ரெண்டு பேரும் வாங்கிக் கட்டிக் கொண்டனாங்கள்"

"ஓமப்பா எதுக்கும் பாதுகாப்பா நடந்து கொள்ளுறது நல்லதுதான்...ஆனா பயப்படாத செல்லம் கோயிலுக்குப் போட்டா இனி அந்தியாலதான் வருவா அது வரைக்கும் நிம்மதிதான். சரி சரி உட்காரன்..."

"அண்ணே சிலி சிலி பேக் பயன்படுத்துறத முதலாம் திகதியிலிருந்து தடை செய்து போட்டினம் என்ன? ஆனா நேத்து காகில்ஸ் போனனான் புது மாதிரி பொலித்தீன் பேக்குல சாமான் போட்டுத் தந்தவை... உதைத்தான் பாவிக்க வேண்டாம் என்டு சொல்லி இருக்கினம் என்டு கேட்டனான். அது வேற பொலித்தீன் இது வேற பொலித்தீன்... இது 100 நாளில மக்கிப் போகும். இதை பாவிக்கலாம் என்டு சொன்னவை. இந்த பொலித்தீன் பேக் கைக்கு வெல்வெட் போல கிடக்குது ஆனா உள்ளாள இருக்குறது வெளியால தெரியுது"

"அதை தந்தவை எண்டா நீ பாவிச்சுக்கொள் இல்லாம பழைய நினைப்பில சிலி சிலு பேக்கை கொண்டு போனனீயென்டா தெண்டம் 10,000 ரூபாவோட 2 வருட ஜெயில்"

"இல்லையண்ணே நான் எப்பவும் துணிபேக்தான் கொண்டு போவனான்"

"இஞ்சை பார் வெள்ளிக்கிழமை 01ஆம் திகதியிலிருந்து பொலித்தின் தடையை உறுதியாக்கிப் போட்டினம். லஞ் சீட், சொப்பின் பேக், ரெஜி போம் லஞச் பெட்டியள் எடுத்துப் போறது குற்றம்... ஆனால் 2018 ஜனவரி வரையில சலுகைக் காலம் கொடுத்திருக்கினம் உந்த திகதிக்கு பிறகுதான் உந்த சட்டத்தை முறையாக கடை பிடிப்பினம் எண்டு சொல்லிக் கிடக்குது... சரியே..."

"அண்ணே நான் உதை கையாலயும் தொட மாட்டன். எப்பவுமே துணி பேக்கைத்தான் கையில வச்சிருப்பனான்."

"எங்க நாட்டைப் போல இன்னொரு நாட்டிலயும் இந்த வாரம் பொலித்தீன் தடையை கொண்டு வந்திருக்கினம்."

"எங்கண்ணே.. இந்தியாவிலயோ?"

"இல்லை... சின்னராசு. கென்யாவில

கென்யா... உது எங்க இருக்கண்ணே."

கென்யாவோ... உது ஒரு ஆபிரிக்க நாடு... பிளாஸ்டிக்கு எதிரா நீண்டகாலம் தடை விதித்திருந்கினம். ஆனா பெரிசா கணக்கில்லாம இருந்தவை...இந்த முறை உதை நடைமுறைப்படுத்தியே தீருவம் என்று தடை செஞ்சிட்டினம்"

"பொலித்தீன் பாவிச்சா அங்க தெண்டம் அடிப்பினமோ?"

"தெண்டமோ... யாரும் பிளாஸ்டிக் பைகள வித்தவை என்டா இல்ல உற்பத்தி செஞ்சவை என்டா 38 ஆயிரம் அமெரிக்க டொலர் தெண்டம். இல்லை என்டா நாலு வருஷம் சிறை."

"38 ஆயிரம் டொலர்கள் என்டா பெரிய காசு என்ன?"

"ஓம் சின்ன ராசு எங்கட நாட்டு கணக்கில பாத்தம் என்டா உது கிட்டத்தட்ட 60 லட்ச ரூபா ஆகுது.

இவ்வளவு பெரிய தெண்டமோ?"

"பின்ன சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதியள் என்டு சொல்லிச் சொல்லி பாத்திருக்கினம் ஆட்கள் கேக்கேல்ல.. உதாலதான் பெரிய அளவில அபராதம் போட்டிருக்கினம்."

"இனியென்டா துணிப் பைதான் பாவிப்பினம் என்ன?"

"கென்யாவில ஒரு மாசத்திற்கு 24 மில்லியனுக்கம் அதிகமா பிளாஸ்டிக் பைகளை பாவிச்சிருக்கினம். ஆனா.. இனி உந்த பழக்கத்தை கை விட்டுப்போடுவினம்."

"கென்யாவும் இலங்கையும் ஒரே கிழமையில பிளாஸ்டிக் தடைய விதிச்சிருக்கினம் நாங்கள் தனியா இல்லையெண்டதில சந்தோசமாக்கிடக்கு"

"எங்கட நாட்டில சின்னராசு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லஞச் சீட் ஒன்டரை லட்சம் பொலித்தீன்பேக் பாவிக்கிறம் எண்டு கணக்குப்பாத்திருக்கினம்."

"இப்ப துணியன்னே சிலிசிலிபேக் மறந்துட்டுது"

"ஒரு வருஷத்தில 1.13.500 தொன் பொலித்தீன நாங்க இறக்குமதி செய்யுறம என்டது தெரியுமோ உதிண்ட பெறுமதி 2 பில்லியன் ரூபா"

இனி உந்தக்காசு மிஞ்சுமென்ன

"மிச்சம் பிடிப்பினமோ நீ சொன்னதுமாதிரி வேறு வகைப் பொலித்தீன் கொண்டுவந்து நிலமைய சமாளிப்பினமோ தெரியேல்ல இது வரையில எங்கட நாட்டில ஒருஆள் ஒருவருஷத்தில் 5.71 கிலோ கிராம் பொலித்தீன் பாவிக்கினமாம். வேறு விதத்தில சொன்னமெண்டா எங்கட குப்பையில 10 முதல் 15 வீதம் உந்த பொலித்தீன்தான் கிடந்திருக்கிது."

"இனி இல்லையெண்டு சந்தோசப்படுங்கோ"

"ஆக்கள் மட்டுமல்ல கடலில பறக்கிற பறவையளும் நல்லா சந்தோசப்படும்

அது ஏனன்னே"

"ஒரு வருஷத்தில எட்டு மில்லியன்தொன் பிளாஸ்டிக் குப்பையள் கடலில சேருது தெரியுமோ உதால ஒரு மில்லியன் கடல்பறவையள் செத்துப்போகுது. நிலத்தில பிளாஸ்டிக் பாவனைய குறைச்சினமெண்டா கடலில பறவையள் சாகிறதும் குறையுமென்ன கடலில கலக்கிற உந்த எட்டு மில்லியன் தொன் பிளாஸ்டிக் கழிவுகளில 12.000 இருந்து 24.000 தொன் பிளாஸ்டிக்கை மீன்கள் சாப்பிட்டுப் போடுது. இப்பிடி மீன்கள் சாப்பிடுற பிளாஸ்டிக் செமிக்காது. சில நேரம் அவையிண்ட தொண்டைக்குள்ளேயே இறுகிப்போகும். உதால அவையளுக்கு மூச்சு எடுக்க முடியாமப் போகும். அப்பிடி வயிற்றுக்குள்ள போயிட்டுது எண்டா அது செமிக்காததால வயிறு நிறைஞ்சமாதிரி ஒரு உணர்வத்தரும் உதால மீன்கள் சாப்பிடுறத நிறுத்திக் கொள்ளும் உப்பிடி சாப்பிடாமல் இருந்தா உவை செத்துப் போகும்.இப்ப உலகத்தில பிடிபடுகிற மீன்களில மூனடில ஒன்டு உந்த பிளாஸ்டிக் ஜீரணமாகாமல் உள்ளவை"

"நிலத்தில மாடுகளும் உந்த பிளாஸ்டிக் பேக்குகல திண்டுபோட்டு வயிறு வீங்கிச் சாகுதென்ன,

உது மாதிரிதான் கடலிலயும் நடக்குது. நிலத்தில இருக்கிற மாதிரி கடலிலயும் நிறைய உயிர் இனங்கள் வாழுது. மீன்கள், பறவைகள் எண்டு நிறைய கிடக்குது. உவை இரையெண்டு நினச்சிக் கொண்டு பிளாஸ்டிக் கழிவுகள திண்டுபோடுது. இல்லையெண்டா பிளாஸ்டிக் கழிவுகள் உதுகளிண்ட இறக்கைகளில சிக்கிக் கொள்ளுது. உதால இந்த உயிரினங்களுக்கு பெரும் சிக்கல் இங்கபார் சின்னராசு உலகத்தில பிளாஸ்டிக் தயாரிப்பு வரவரக் கூடிக் கொண்டே போகுது 2013ல 299 மில்லியன் தொன் பிளாஸ்டிக் தயாரச்சவை உது 2012 இல அதைவிட நான்கு சதவீதம் அதிகம் 2015 இல உது இன்னும் அதிகரிச்சிட்டுது. ஆனா உந்த பிளாஸ்டிக் கழிவுகளில 9 சதவீதம்தான் மீள்சுழற்சி செய்கினம். பிளாஸ்டிக் கழிவுகள கடலில கலக்கிற விசயத்தில முதல் 20 நாடுகள எடுத்துக் கொண்டமெண்டா சீனாதான் முதலில கிடக்குது. ஒரு வருஷத்தில சீனாவிண்ட 24 இலட்சம் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில கலக்குது. உதில் 20 ஆவது இடத்திலதான் அமெரிக்கா கிடக்குது."

"உது நிலத்தில கிடந்தாலும் சிக்கல்... நீரில கிடந்தாலும் சிக்கலென்ன?"

"ஒரு கடல் ஆமையின் வயிற்றுக்குள் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள்"

"இந்த பேப்பரில கிடக்கிற உந்த படத்தைப் பாரன். உதில கிடக்குற பிளாஸ்டிக் துண்டுகளெல்லாம் ஒரு கடலாமையின்ட வயிற்றுக்குள்ள கிடந்தவை. உவை ஜீரணமாகாமல்தான் உந்த கடலாமை இறந்துட்டுது. உந்த பிளாஸ்டிக் துண்டுகளை சிறிய மீன்கள் என்டு நினைச்சி உந்த கடலாமை விழுங்கி போட்டுது. பிறகென்ன வயித்துக்குள்ள சேர்ந்து வலியை ஏற்படுத்துமென்ன. வாயில்லாப் பிராணிகளென்ன. வலி வந்து போட்டா என்ன செய்யிறது. வலி தொடர தொடர தாங்க மாட்டாம உயிரை விட்டுப் போடும்.உதுமட்டுமில்ல பிள்ளையள் பாவிக்குற விளையாட்டுப் பொருட்கள, எங்கட ஆக்கள் பல்துலக்குற ரூத்பிரஸ் ஆகியவையும் எக்கச்சக்கமா கடலுக்குள்ளதான் கிடக்குது என்டு சொல்லுகினம்."

"கடல் ஒரு பெரிய குப்பைத்தொட்டியென்ன?"

"கடல் குப்பைத்தொட்டியில்ல சின்னராசு. எங்கட ஆக்கள் அப்பிடி ஆக்கப் போட்டினம். எங்கட ஆக்களுக்கு பிளாஸ்டிக் பழக்கம் எளிதில இல்லாமற் போகாது. ஆனா உதை குறைச்சுக் கொண்டமென்டா எங்களுக்கு மட்டுமில்ல கடலில இருக்கிற உயிரினங்களுக்கும் நல்லது."

"உதுக்கு தடை மட்டும் விதிச்சுப் போதாதண்ணே. உதை கடலில கொட்டுறவைக்கு தெண்டம் மட்டுமில்ல புடிச்சு உள்ள போடத்தான் வேணும் இல்லையென்டா எங்கட ஆக்கள திருத்த ஏலாது." அண்ணே

Comments