ராஜபக்சவுடன் இணைந்த மலிக்! | தினகரன் வாரமஞ்சரி

ராஜபக்சவுடன் இணைந்த மலிக்!

இப்னுஷம்ஸ்

அமைச்சர் மலிக் சமரவிக்ரம பற்றி அவ்வப்போது ஏதாவது விமர்சனம் எழும். பல கோடி பெறுமதியான அரச காணியை தனது கம்பனிக்கு பெற்றுள்ளதாக கடந்த நாட்களில் விமர்சனம் எழுந்தது. அதற்கு அவர் பாராளுமன்றத்தில் பதில் வழங்கியிருந்தார்.

ஆனால் இது -- அவரின் பெயர் தொடர்பான சர்ச்சை. கடந்த வியாழக்கிழமை இறைவரிச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது. ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தியின் உரையையடுத்து மலிக் சமரவிக்ரம உரையாற்றி இருந்தார். குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சபைக்கு தலைமை தாங்கினார். அவருக்கு சிங்களம் உச்சரிப்பதில் சிலவேளை குழறுபடி ஏற்படும். இவ்வாறு தான் மலிக் சமரவிக்ரமவின் பெயரை மஹிந்த சமரவிக்ரம என்று கூறிவிட்டார்.

தனது தவறை உணர்ந்து கொண்டு அடுத்த நிமிடமே அவர் பெயரை சரியாக கூறி பேச அழைத்தார். நீங்கள் சரியாகத்தான் அழைத்தீர்கள். மஹிந்தவுடன் அவருக்கு ‘டீல்’ இருப்பதால் நீங்கள் கூப்பிட்ட பெயர் சரி என்று ஜே.வி.பி பக்கமிருந்து ஒருவர் சத்தமாக கூற சபையில் – சிரிப்பு பரவியது.

....

வாயைக் கொடுத்து

புன்னாக்கிக்கொண்ட

பொன்சேகா

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு குறித்து இலங்கை அரசியலில் பரவலாக பேசப்படுகிறது. அவருக்கு எதிராக சாட்சியம் வழங்க தயார் என முன்னாள் இராணுவ தளபதி அமைச்சர் சரத் பொன்சேகா பகிரங்கமாக கூறியதால் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது. அவர் அநேகமாக வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வார். இந்த விடயத்திலும் அவ்வாறுதான் நடந்தது. யுத்த காலத்தில் சில படைப் பிரிவுகளுக்கு பொறுப்பாக இருந்த சில தளபதிகளை பிடிக்காது அவர்களை வெளிப்படையாக விமர்சிப்பார். அந்தப் பட்டியலில் உள்ள ஒருவர்தான் ஜகத் ​ஜயசூரிய. சரத்பொன்சேகாவின் கூற்றை வடக்கில் இயங்கும் தமிழ் கட்சிகள் வரவேற்றுள்ளன. தெற்கில் உள்ள பெரும்பான்மை கட்சிகள் மட்டுமன்றி ஆளும் தரப்பிலுள்ள கட்சிகளும் இதனை விமர்சித்துள்ளன. அது அவரின் தனிப்பட்ட கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல என அமைச்சர் கூறியுள்ளார்.

இது தவிர ஒன்றிணைந்த எதிரணி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர முடிவு செய்துள்ளது. தான் ஜகத் ஜெயசூரியவையோ வேறு இராணுவ தளபதியையோ காட்டிக் கொடுக்கமாட்டேன் என ஜனாதிபதி கூட பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் வழக்கு தொடரப்படவில்லை என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தக் குற்றச்சாட்டு உள்ள ஒருவரை தூதுவராக நியமிக்க இடமளித்தது தொடர்பில் பிரேசில் அரசாங்கத்திற்கு எதிராகவே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாம். விசயம் தெரியாமல் தான் ஒவ்வொருவரும் அறிக்கை விடுவதாக விசயமறிந்த ஒருவர் கூறிச் சிரித்துக் கொண்டார்.

....

கறுப்புப்பட்டி

அமைச்சர்

அமைச்சரவையில் அடிக்கடி சண்டைகள் வெடிக்கும். அடிதடி தவிர சூடான தர்க்கங்கள் வாதங்கள் என சண்டையில்லாமல் அமைச்சரவை முடிவதில்லை. இந்த நிலையில் அமைச்சர் ஒருவர் கறுப்புப்பட்டி 7ம் தரத்தை பெறுள்ளார்.

கொரியாவிலுள்ள குகியோன் டய்கொண்டோ தலைமையகம் இந்த பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரதான் பொதுவாக விளையாட்டுத்துறை அமைச்சர்களுக்கு கறுப்புப்பட்டி - 6 தான் வழங்கப்படும். நமது அமைச்சர் வுசூ அடங்களான பல தற்காப்புக் கலைகளை கற்றவர். அதனால் அவருக்கு கருப்புப் பட்டி 7 வழங்கப்பட்டுள்ளதாம். இனி அமைச்சரவையில் சண்டை வந்தால் கருப்புப் பட்டி ஆசாமி இருக்கிறார்.

....

மஹிந்த பின்வாங்கினார்

தொடர்ந்தும் தானே சுதந்திரக் கட்சி தலைவர் என கூறி வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பின்வாங்க ஆரம்பித்துள்ளாராம். தான் சுதந்திரக் கட்சி உறுப்பினர் என்று கூறி வந்த அவர் இனி தான் பொதுஜன முன்னணியிலே போட்டியிடுவதாக கடந்தவாரம் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

சுதந்திரக் கட்சியினர் 66 ஆவது நிறைவு விழா கொண்டாட்டப்பட்ட தினத்திலே அவர் இதனை கூறியிருந்தார். தனக்கு மாநாட்டுக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி வந்தார். மஹிந்த ராஜபக்ச அவரின் வீட்டுக்கே சென்று அழைப்பு வழங்கப்பட்ட நிலையிலே அவர் தெனியாயவில் பொதுஜன முன்னணி கூட்டத்தில் பங்குபற்றினார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச வெளிப்படையாக வேறு கட்சியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் அவரை சு.க விலிருந்து நீக்க முடியும் என சு.க முக்கியஸ்தர்கள் சிலர் கூறியுள்ளனர். இதனூடாக அவரின் எம்.பி பதவியை இரத்தாக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தானாக கட்சியை விட்டும விலகுவதைவிட கட்சியினால் தன்னை விலக்குவதையே அவர் விரும்புவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறினார். இதனூடாக அரசியல் லாபம் பெறமுடியும் என்பது அவரின் எதிர்பார்ப்பாகும்.

முஸ்லிம்களின் ஜனாதிபதி

ராஜித

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் கிழக்கு பிராந்தியத்திற்கு விஜயம் செய்தார். நிந்தவூரில் அமைச்சருக்கு பெருவரவேற்பு அளிக்கப்பட்டது. நீண்ட வாகன பேரணிக்கு மத்தியில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். பிரதி அமைச்சர் பைசல் காசிம் தான் இதனை ஒழுங்கு செய்திருந்தார். பிரமாண்ட வரவேற்பை கண்டு அமைச்சர் திக்குமுக்காடிப் போனார்.

நிகழ்வில் உரையாற்றிய பைசல் காசிம், அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டின் தலைமை பதவிக்கு தகுதியானவர் என புகழ்ந்தார். முஸ்லிம் மக்கள் அதனை முடிவு செய்துவிட்டதாகவும் கூறினார். இனவாதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு முஸ்லிம்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பது தெரிந்ததே.

கடலில் சிக்கிய

அமைச்சர்

உலக சுகாதார ஸ்தாபன தெற்கு மற்றும் கிழக்கு நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் மாநாடு மாலைதீவில் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்றது. விழாவில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டார். விழா பிற்பகல் முடிவடைந்தது. சுகாதார அமைச்சர்களுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி இராப்போசன விருந்து வழங்கினார். கடலின் நடுவிலுள்ள தீவில் சொகுசு ஹோட்டலில் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இரவு 10.00 மணிக்கு விருந்து நிறைவடைந்தது. ஆனால் அமைச்சருக்கு கரைக்கு செல்ல முடியவில்லை. கடும் மழையினால் அமைச்சர்கள் தீவின் நடுவில் சிக்கியிருந்தனர். மழை குறைந்த பின்னர் சொகுசு படகில் அமைச்சர் கரை திரும்பினாராம்.

Comments