தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்காலம் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்காலம் என்ன?

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஓய்ந்து எட்டு வருடங்கள் கடந்து விட்ட போதிலும், ஆயுதப் போராட்டம் உருவெடுப்பதற்கு அடிப்படையாக அமைந்த காரணிகளை இன்னுமே சீர்செய்து கொள்ள முடியாமலேயே இருக்கின்றது. அதேசமயம், முப்பது வருட காலப் போர் நடந்த பூமியென்பதை எக்காலமுமே நினைவுபடுத்திக் கொண்டிருப்பதைப் ​போன்று அதன் வடுக்களும் இன்னமும் அழிக்கப்படாமலேயே உள்ளன.

யுத்தம் ஏற்படுத்திய வடுக்களில் ஒன்றுதான் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்!

யுத்தம் கடந்த காலத்தில் ஏற்படுத்திய அவலங்களை இன்னமும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகளின் அவல நிலைமை!

நாட்டில் இனமுரண்பாடு எப்போதுமே தொடர்ந்து கொண்டபடியே இருக்கப் போகின்றது என்பதன் அடையாளமாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தைப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

சிறைச்சாலையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அறுதியிட்டுக் கூற முடியாதிருக்கின்றது. இவர்களில் அநேகர் கால்நூற்றாண்டு காலத்துக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருபவர்களாவர்.

இக்கைதிகள் மீதான குற்றச்சாட்டுகளில் அநேகமானவை சிறுசிறு விடயங்களாகவே உள்ளன. ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு சிறுசிறு உதவிகளை வழங்கியமை, புலிகளைப் பற்றிய தகவல் தெரிந்திருந்தும் பொலிஸாருக்கோ அல்லது இராணுவத்தினருக்கோ அத்தகவலை வழங்கத் தவறியமை போன்ற சாதாரண குற்றச்சாட்டுகளைச் சுமந்தபடி இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பலர் சிறையில் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாலிபப் பருவத்தில் சிறைக்குள் அடைக்கப்பட்ட பலரின் இளமைக்காலம் சிறைக்குள்ளேயே கழிந்து விட்டது. கல்வி, திருமணம், குடும்ப வாழ்வு என்றெல்லாம் அவர்களுக்குக் கிடைக்காமல் போன வாய்ப்புகளும் சந்தோஷங்களும் ஏராளம். ஆயுள் முழுவதும் அவர்கள் சிறைக்குள்ளேயே இருக்கப் போகின்றார்கள் என்றே கவலைப்பட வேண்டியிருக்கின்றது.

இக்கைதிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நகர்வதைக் காண முடியவில்லை. குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்களைத் தேட முடியாதிருக்கின்றது. உள்நாட்டுப் போர் ஆரம்பமாகி ஒரு தலைமுறை கடந்து விட்டது. ஆயுதம் ஏந்திப் போராடியவர்களில் அநேகம் பேர் யுத்தத்தில் அழிந்தொழிந்த பின்னர் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரயங்களை இனிமேல் எங்கே போய்த் தேடுவது?

யுத்த காலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலருக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்பதென்று புரியாத குழப்ப நிலைமையும் உள்ளதாகத் தெரிகின்றது. ஆகவே வழக்குகளும் முடிவுறாமல், விசாரணைகளும் தொடராமல் இக்கைதிகள் முடிவில்லாச் சிறைவாசத்தை இன்னமும் அனுபவித்தபடியே உள்ளனர்.

ஆயுதமேந்தி களத்தில் நின்று யுத்தம் புரிந்த போராளிகளில் பலர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விடுதலையாகி இப்போது சாதாரணமாக உலவித் திரிகின்றனர்.

இப்போராளிகளை வழிநடத்திய தளபதிகளில் சிலர், சொகுசான வாழ்க்கை வாழ்ந்தபடி இன்று அரசியல் களத்தில் உள்ளனர். அவர்கள் இப்போது ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றியெல்லாம் சுதந்திரமாகப் பேசுகின்றனர். ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களோ கால் நூற்றாண்டு கடந்த பின்னரும் இன்னுமே சிறைக்குள் அடைக்கப்பட்டிருப்பது எத்தனை அநீதி!

அரசு மனம் வைத்தால் இக்கைதிகளை ஒரே நாளில் விடுதலை செய்து விடலாம். அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்கின்ற நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

ஆனாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை வருடங்கள் சென்று விட்ட போதிலும், அரசியல் கைதிகளை விடுவிப்பதில் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அரசாங்கம் தயங்குகின்றது.

இக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்பதில் ஜனாதிபதியும், பிரதமரும் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனரென்பது புரிகின்றது. ஆனால் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததும், நாட்டின் அரசியல் சூழல் நல்லாட்சி அரசுக்குச் சாதகமாக அமையப் போவதில்லை. இதுவே அரசாங்கம் கொண்டுள்ள அச்சம்!

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களானால் அவ்விவகாரத்தை துரும்பாக வைத்தபடியே, தென்னிலங்கையில் அரசுக்கு எதிரான பெரும் அலையை உருவாக்குவதற்கு மஹிந்த அணியினர் தயாராக இருக்கின்றார்கள்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களானால் அவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் ஆயுதம் தூக்கி யுத்தம் புரிவார்களென்று மஹிந்தராஜபக்ஷ, விமல் வீரவன்ச போன்றோர் சிங்கள மக்களை ஏற்கனவே எச்சரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னாள் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்துவார்களென்பது உண்மையானால், யுத்தத்தில் ஈடுபட்ட புலிகள் பலருக்கு புனர்வாழ்வளித்து அவர்களை மஹிந்த ராஜபக்ஷ விடுதலை செய்திருக்க வேண்டியதில்லையே!

ஆகவே, அரசியல்கைதிகள் விவகாரத்தை அவர் சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி கையாள்கிறார் என்பது மட்டும் புரிகின்றது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கூடாதென கூக்குரலிடுபவர்களில் மற்றொருவர் விமல் வீரவன்ச எம்.பி.

இவரும் ஆயுதமேந்திப் போராடிய தீவிரவாத இயக்கமொன்றில் இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர்தான்.

1971ஆம் 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பியின் போராளிகளுக்கு அன்றைய அரசு பொதுமன்னிப்பு வழங்கியதாலேயே விமல் வீரவன்ச எம்.பி இன்று இவ்வாறெல்லாம் பேச முடிகின்றது. ஏனெனில் அவரும் முன்னர் ஜே.வி.பியில் ஒரு தீவிர உறுப்பினர்.

ஜே.வி.பியும் புலிகள் இயக்கமும் ஒரேவிதமான போராட்டப் பாதையைப் பின்பற்றிய போதிலும், அவ்விரண்டுக்கும் வெவ்வேறு நியாயங்களைக் கற்பிக்க விமல் வீரவன்ச முற்படுவதாகத் தெரிகின்றது.

அரசியல் கைதிகள் இப்போது முற்றாகவே நம்பிக்கையை இழந்து விட்டனர். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளென்று தங்களைக் கூறிக் கொள்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் பற்றியெல்லாம் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இக்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபையில் அண்மையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் இக்கைதிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது? அவர்கள் தங்களது வாழ்வை சிறைக்குள்ளேயே நிறைவு செய்து விடப் போகிறார்களா? 

Comments