இருபத்தோராம் நூற்றாண்டு உலக அரசியல்: சிறுபான்மை இனங்களை அழிக்கும் காலமா? | தினகரன் வாரமஞ்சரி

இருபத்தோராம் நூற்றாண்டு உலக அரசியல்: சிறுபான்மை இனங்களை அழிக்கும் காலமா?

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்...   
யாழ் பல்கலைக்கழகம்   

இராணுவ ஆட்சியிலிருந்து விடுபட்டு ஜனநாயக ஆட்சிக்குள் நுழைந்த மியான்மார் (முன்னர் பர்மா) மீண்டும் ஒரு துயரத்தை எதிர்கொள்கிறது. மியான்மாரில் கி.பி 8ஆம் நூற்றாண்டிலிருந்து வாழ்ந்து வரும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் (Rohingya) மீது மியான்மார் இராணுவம் ஏற்படுத்திவரும் இன அழிப்பு நடவடிக்கை ஆசியாவின் மீண்டுமொரு துயரமாக பதிவாகியுள்ளது.

ஈழத்தமிழர் கொல்லப்பட்ட அதே அனுபவம் ஆசியாவில் மீண்டும் ஒரு தடவை மியான்மாரில் அரங்கேறியுள்ளது. இதன் துயரத்தையும் உலகத்தின் மௌனத்தையும் வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது மியான்மார் இராணுவத்தின் அடக்குமுறை மிக நீண்டகாலமாக நிகழ்ந்து வருகிறது. மியான்மாரின் ரோகின் (Rakine) மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் ரோஹிங்கியர்கள் மியான்மார் அரசின் இனசுத்திகரிப்புக்கு எதிராகவும் தமது மியான்மார் பிரஜைகளின் அந்தஸ்தை வழங்காமையாலும் அரசின் நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். 1978, 1991, 1992, 2012, 2015, 2016 ஆகிய வருடங்களிலும் பாரிய இன அழிப்பு நடவடிக்கை மியான்மார் அரசு மேற்கொண்டு வந்து ஏறக்குறைய 1.3 மில்லியன் ரோஹிங்கியர் படிப்படியாக வங்களாதேஷ் நோக்கிய இடம் பெயர்ந்து வருகின்றனர். இதுவரை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் புனர்வாழ்வு தகவலின்படி ஒரு இலட்சத்து 23 ஆயிரம் பேர் வங்களாதேஷுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கின்றது. ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியான்மாரை விட இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, போன்ற நாடுகளில் வகித்து வருகின்றனர். இவர்கள் மொழியே ரோஹிங்கிய முஸ்லிம்கள் என அழைக்கப்படுவதற்குக் காரணமாகும்.

ரோஹிங்கியர் மீதான படுகொலை மிகக் கொடுமையானதாக உள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டில் நிகழும் இரண்டாவது படுகொலையை உலகம் பார்த்துக்கொண்டிருகின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருகிறது. இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசத்தில் மட்டுமே நிகழ்கிறது. ஏனைய இனங்களுக்கு ரோஹங்கியரை முஸ்லிம்கள் என்று மட்டும் நினைக்கின்றார்களா? அல்லது அவர்களுக்கு எதுவென்றாலும் பரவாயில்லை என நினைகிறார்களா? தெரியவில்லை அல்லது தமிழர் தாம் கொல்லப்படும் போது முஸ்லிம்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களே என நினைக்கிறார்களா? அவர்களை ஏன் மனிதர்களாக ஒரு தேசியஇனமாக கருதவில்லை என்பது கவலையான விடயமே. அதன் வலி ஈழத்தமிழருக்கு மட்டுமே அதிகம் புரியும். ஐ.நா சபையின் மனச்சாட்சிக்கு எதிராக பேசுங்கள் குரல் கொடுங்கள்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் சிறிய தேசிய இனங்கள் அழிப்பதுதான் உலகத்தின் நியதியாகிவிட்டதா? என்பது எழுப்பப்பட வேண்டிய கேள்வி.

ஆண்கள், குழந்தைகள் குறிப்பாக ஆண் குழந்தைகள் கொல்லப்படும் கொடுமையான காட்சி மிக மோசமான காட்டுமிராண்டித் தனத்தைக் காட்டுகிறது. இளைஞர்கள் வகை தொகையின்றி அழிக்கப்படும் நிகழ்வு கொடுமையானதாக உள்ளது. கிராமங்கள் முழுமையாக எரியூட்டப் படுகின்றன. தமது வீடுகள், சொத்துக்களை இராணுவத்தினர், பௌத்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக எரியூட்டி வருகின்றனர். ஆண்குழந்தைகள் தாய்மாரிடம் பறிக்கெடுக்கப்பட்டு எறிந்தும் வீசியும் கொல்லப்படுகின்றனர்.

இச் செயல்கள் ஒவ்வொன்றும் இனச்சுத்திகரிப்பாகவோ இனப்படுகொலையாகவோ பார்க்கப்படவேண்டியதாகும். இத்தகைய இனப்படுகொலையைத் தடுப்பதில் கரிசனை கொள்ள வேண்டிய தலைவர்களில் முதன்மையானவர் ஆங் - சாங் - சுகி என்பதை யாரும் மறுக்க முடியாது. போராளிகள் காவல் நிலையத்தைத் தாக்கியதற்காக ஒட்டுமொத்த இனமும் சுத்திகரிக்கப்படுவது கொடுமையானது. அதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை சுகிக்கு உண்டு. ஜனநாயகமும், மனித உரிமையும் பேசிய சுகி ஏன் மௌனம் காக்கிறார் என்பது அதிர்ச்சியாகவே உள்ளது.

இராண்டாவது இப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய தலைவர் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குற்றெரெஸ் ஆவார். அவர் பேராளிகள் இராணுவத்தினர் காவலரணைத் தாக்கியதை கண்டித்தது போன்றது இதனையும் கண்டித்துள்ளார். மியான்மார் அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்துள்ளதுடன் பாதுகாப்பு சபைக்குத் தகவல் அனுப்பியுள்ளார். அவரது வார்த்தையில், அங்கு நிலவரம் மேலும் மோசமடைவதை தடுப்பதற்கான தீர்வைக் காண சர்வதேச சமூகம் முன் வர வேண்டும். அதேவேளை இந்தப் பிரச்சினைக்கு மூலகாரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரகினே மாநில முஸ்லிம்களுக்கு குடியுரிமை அளிப்பது கடினமாக இருந்தால், தற்போதைக்கு அவர்களுக்கு சட்ட அங்கீகாரமாவது வழங்கப்பட வேண்டும் என பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

சர்வதேச சமூகமே சர்வதேச சமூகத்தினை முன்வர வேண்டுமென கோருகிறது. குடியுரிமைக்கு பதில் சட்ட அங்கீகாரம் வழங்குதல் வேண்டும் என பொதுச் செயலாளர் கேட்பது உலகத்தின் போக்கினை உணர உதவுகிறது. இவ்வாறே மேற்குலகம் மௌனம் காக்கிறது. இதனை வைத்து மியான்மாரை கையாளலாம் எனக் கணக்குப் போடுகிறதா? இது போன்ற படுகொலைகள் மேற்குலத்தின் அரசியலுக்கு முதலீடாகவுள்ளது என்பது மேற்கின் உணர்வுகளைப் பார்க்க தெரிகிறது.

அடுத்து இந்தியப் பிரதமர் நநேந்திர மோடி பிறிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு மியான்மார் பயணமாகியுள்ளார். அவர் இந்திய மியான்மார் இடையே பயங்காரவாத எதிர்ப்பு, வர்த்தகம், முதலீடு, உட்கட்டமைப்பு, கலாசாரம், உழைப்பு ஆற்றல் குறித்தும் ஆன் - சாங் - சுகியுடன் உரையாடியுள்ளார்.

மேலும் இந்தியாவில் சட்ட விரோதமாக உள்ள 40000 க்கு மேலான ரோஹிங்கியா முஸ்லிம்களை நாடுகடத்துவது பற்றி இந்திய மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சுகியுடனான உறவை பேணுவதற்காகவே மேற்குலகம் படுகொலையை முதன்மைப்படுத்தாது செயல்படுவதை காணமுடிகிறது. சுகியின் அரசியல் பயணத்தில் ரோஹிங்கிய விவகாரத்தைக் கையாளத் தவறிவிட்டார் என ஐ.நா.சபை ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அவரது அரசியல் வாழ்வு உள்நாட்டில் செழித்தாலும் சர்வதேச மட்டத்தில் நெருக்கடியான அனுபவத்தினையே தந்துள்ளது.

துருக்கிய அதிபர் ரயில் எர்டோகன் மட்டும் முஸ்லீம்கள் மீதான படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு கோரியுள்ளார். அவரது அக்ரோசமான பேச்சு மியான்மாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதென ஊடகங்கள் கருத்து வெளியிடுகின்றன. இதுவரை ஆயிரக்கணக்கானவர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இனச் சுத்திகரிப்பில் பௌத்த நாடு ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே இருபத்தியோராம் நூற்றாண்டின் உலக அரசியல் போக்கின் சிறுபான்மை இனங்களின் நிலை அழிவுகளுக்கும் ஆக்கிரமிப்பிக்குமானதான தோற்றத்தை தந்துள்ளது. இதில் ஈழத்தமிழர் முதல் பலியிடலாக அமைந்தது போன்று ரோஹிங்கிய முஸ்லிம்கள் இரண்டாவது படுகொலையை உலக பராமுகமாக இருப்பதும் பின்னர் யுத்தக்குற்ற விசாரணை என்ற பேர்வையில் அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதும் வழமையாகிவிட்டது.

இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு எந்த அரசும் குரல் கொடுக்க முன்வராத நிலையே மியான்மார் ஆட்சியாளரின் இனச்சுத்திகரிப்புக்கான நடவடிக்கை தொடர்வதற்கு காரணமாகும். ஐ.நா.சபையே கண்டனத்துடன் படுகொலையை பார்த்துக் கொண்டு இருகிறது. வேண்டுமாயின் ஆவணப்படுத்தலை செய்ய முயலும். அதனால் அந்த இனத்திற்கு எந்த உடனடி விமோசனமும் கிடைக்கப்போவதில்லை. இதனை சிவில் சமூகமாகவும் தடுத்து நிறுத்த பேராடவேண்டும். 

Comments