புளூவேல் மரணப்பொறி | தினகரன் வாரமஞ்சரி

புளூவேல் மரணப்பொறி

வாசுகி சிவகுமார்

என் போனில் உள்ள எல்லாமே என் குழந்தைகளுக்கு அத்துப்படி. கேம்ஸ் டவுண்லோட் பண்ணுகிறார்கள். புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில், வைபரில் அப்லோட் பண்ணுகிறாரகள்” என்று தங்கள் குழந்தைகளின் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பார்த்துப் புல்லரித்துப்போய் அவர்களை வருங்கால தகவல் தொழில் நுட்பப் பொறியாளர்களாகக் கனவுகாணும் பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் எம்மிடையே இன்று அதிகம்.

இன்றைய எமது அவசர வாழ்க்கை கணவன், மனைவி, குழந்தை என்றளவில் குடும்பத்தைக் குறுக்கி விட்டிருக்கின்றது. குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போக வேண்டும் என்கிற சூழலில் குழந்தைக்கு ஆயாவும், கணனி. தொலைக்காட்சி மற்றும் ஸ்மர்ட் போன்கள் என்பனவுமே துணையாக அமைந்து விடுகின்றன. பல சமயங்களில் வீட்டில் குழந்தைகளின் நச்சரிப்பில் இருந்து தப்பி எங்கள் அன்றாட வீட்டு வேலைகளை செய்வதற்காக, அவற்றின் கைகளில் ஒரு ஸ்மார் போனை நாமே திணிக்கும் சந்தர்ப்பங்களும், அனேகம் நிகழ்ந்திருக்கின்றன. குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்டிய காலம்போய் இப்போது அவர்கள் விரும்பிய கார்ட்டூன்களை தொலைக்காட்சியில் போட்டுவிட்டு இலகுவாக உணவூட்டுகின்றோம்.

அடம்பிடிக்காமல் குழந்தை உணவுண்ண வேண்டும் எங்களை நச்சரிக்காமல் இருக்க வேண்டும் என நாங்களே குழுந்தைகளை தொலைக்காட்சிக்கும், கணனிக்கும், ஸ்மார்ட்போன்களுக்கும் அடிமையாக்கி விட்டோமோ என்கிற அச்சம் அனேகருக்கு எழுவது தவிர்க்க முடியாதது. காரணம் இச்சாதனங்கள் எங்கள் இளைய சமூகத்தை மௌனமாக விழுங்கிக் கொண்டிருகின்றன என்ற உணர்வை சமீப காலங்களில் உலகெங்கிலும் நடைபெறும் இச்சாதனங்கள் மூலமான அகால மரணங்கள் எங்களுக்கு ஏற்படுத்துகின்றன.

ஆமாம் புளூவேல் மரணங்களும், புளூவேல் அச்சுறுத்தல்களும், கணனிகளும் ஸ்மார்ட் போன்களும் எந்தளவுக்கு எமது சிறார்களை அடிமைப்படுத்துகின்றன என்ற உண்மையினை எங்கள் முகத்தில் அறைந்து விட்டுப்போயுள்ளன.

சமீப காலமாக எங்களில் அனேகருக்குப் பரிச்சயமான பெயர் புளூவேல். அதிலும் எங்கள் குழந்தைகளும் அவ்வாறு கணனி, ஸ்மார்ட் போன்களின் அடிமைகளாக இருந்தால் அவ்வாறான செய்திகளை கனத்த மனத்துனடனேயே அறிந்துகொள்ள விளைகின்றோம்.

‘உண்மையில் புளூவேல் என்றால் என்ன?

தானாகவே கரையொதுங்கி இறப்பவை தானாம் புளூவேல் எனப்படும் திமிங்கிலங்கள். அதனாலேயே சமூக நோக்கமேதும் இன்றி வாழுவோரை இலக்குவைத்து அவர்களை தற்கொலையை நோக்கித் தள்ளும் வகையில் இந்த விளையாட்டானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டினை விளையாடும் மனிதர்களும் ஈற்றில் தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.

இந்த விளையாட்டினை ரஷ்யாவை சேர்ந்த உளவியல் படித்த 22 வயது மாணவர் உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

2013 ஆம் ஆண்டில் உருவான இந்த ஆன்லைன் விளையாட்டு முதன்முறையாக VKontakte என்ற சமூக வலைதளத்தின் வாயிலாக பல்வேறு நாடுகளில் பரவதொடங்கியது.

இது தரவிறக்கும் வகையிலான மென்பொருள் அல்லது app போன்று அல்லாமல் இணையத்தின் உதவியுடன் ஆன்லைனில் விளையாடும் வகையிலான முறையாகும்.

50 விதமான படி நிலைகள் கொண்ட புளூவேல் கேம் 50 நாட்களுக்கு வழங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவால் வழங்கப்படுகின்றது. தங்களுக்கு வழங்கப்பட்ட சவாலை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்வோர் அச்சவாலைச் செய்த புகைப்படத்தினை இணையத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும்.

புளூ வேல் விளையாடியதால் இடம்பெற்ற முதலாவது தற்கொலை 2015 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.

அதிகாலையில் உறக்கத்தில் இருந்து எழுவது, நடுநிசியில் பேய் படம் பார்ப்பது, ஆளில்லாத இடத்தில் தன்னந்தனியே நடந்து செல்வது, திமிங்கலத்தின் உருவத்தை கையில் கீறி வரைவது என நீளும் இந்த படிநிலைகள் இறுதியில் தற்கொலையில் முடிகின்றது

50 படி நிலைகளில் கொண்ட இந்த விளையாட்டில் இறுதி நிலை தான் தற்கொலை செய்த புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும் என்பதுதானாம். அதனாலேயே எல்லோரும் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.

2013 ஆம் ஆண்டில் இவ்விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 130 பேர் உயிரிழந்திருப்பதாக இணையத்தில் வெளியான செய்திகள் சொல்கின்றன. இதுவரைகாலமும் மேற்கத்தேயத்தவர்களையே இலக்கு வைத்திருந்த இந்த மரண விளையாட்டு; தற்போது எங்கள் அண்டை நாட்டையும் பதம் பார்க்க ஆரம்பித்திருக்கின்றது.

சில வாரங்களுக்கு முன்னர்தான் மதுரையில் ஒரு பதின்ம வயது இளைஞர் மாடியில் இருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டான் . தான் இவ்விளையாட்டினாலேயே தற்கொலை செய்ததாகவும் குறிப்பொன்றை எழுதி வைத்து விட்டுத்தான் அவன் இறந்தான்.

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் சில இடங்களில் புளூவேல் விளையாடிய ஒரு சிலர் அவர்களது தற்கொலை எண்ணத்தில் இருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் இந்த விளையாட்டினை தரவிறக்கம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

புளூவேல் விளையாட்டு என்று கூகிளில் சேர்ச் செய்தால் நீங்கள் தற்கொலை நோக்கம் கொண்டவரா உங்களுக்கு உதவி தேவையா என்ற வகையில் பதில்கள் கிடைக்கின்றன.

ஆனாலும் இவ்விளையாட்டு வேறு பெயர்களில் இணைய வெளியில் உலாவருவதான அதிர்ச்சியான தகவல்களும் தொடர்ந்தும் வெளிவந்த வண்ணமே உள்ளன.

இளம் கன்று பயமறியாது என்பார்கள். இவ்விளையாட்டு உயிராபத்தைத் தரும். இதனை தொடாதே என்றால் அதனைத்தான் இரகசியமாக எவ்வழியிலேனும் அவர்கள் விளையாடத் துடிப்பார்கள். இலங்கையில் இதுவரையில் இவ்விளையாட்டின் தீவிரம் உணரப் படாவிட்டாலும் வீச்சுக்கல்முனை எனும் பகுதியில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் இவ்விளையாட்டில் சிக்கி தன் உயிரை மாய்த்துக்கொள்ள எத்தனித்ததாக செய்திகள் வெளிவந்தன.

50 படி நிலைகளைக் கொண்ட இந்த விளையாட்டில் சிக்கிகொண்ட எவரும் பாதி வழியில் திரும்ப முடியாது காரணம் நீங்கள் இவ்விளையாட்டினை தரவிறக்கம் செய்து பின்னர் பாதிவழியில் அவ்விளையாட்டில் இருந்து விலக முயடியாத படி உங்கள் கைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள் எல்லோருக்கும் பரப்பப்பட்டுவிடும் என்ற அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

உலகின் அனேக நாடுகளில் புளூவேல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவ்வவ் நாடுகளின் தகவல் தொழில் நுட்ப சீராக்கல் அமைப்புகள் அதனைப் பாவிக்கத் தடை விதித்த போதும் வேறுவடிவில் அது உங்கள் குழந்தைகளை வந்து சேரலாமென்பதால் எல்லாருமே தங்கள் வீடுகளில் உள்ள சிறார்கள் மற்றும் பதின்ம வயதினரின் இணையச் செயற்பாடுகள் குறித்து அவதானமாய் இருப்பதே அவசியமானது.

தகவல் தொழில் நுட்ப உலகின் ஜாம்பவான், உலகின் முதன்மையான பணக்காரரான பில் கேட்ஸ் தனது குழந்தைகளுக்கு பதின்ம வயது வரை மொபைல் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தவதற்கு தடை விதித்துள்ளாராம். பில் கேட்ஸ் மட்டுமல்ல, ஒபாமா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் என பலரும் மேற்கத்திய நாடுகளில் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுவரை சமூக வலைதளங்கள், மொபைல் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. ஆனால் நமது நாட்டில் 5 வயது உள்ள குழந்தை மொபைலில் கேம் விளையாடுகின்றது என்றால் வியந்து பார்த்து கொண்டிருக்கின்றோம்.

எங்கள் நாட்டில் பாரதூரமான பிரச்சினையாக புளூவேல் உருவெடுக்காவிட்டாலும் புளூவேல் விளையாட்டினை அரசு தடை செய்யும் என்று காத்திராமல் எல்லோரும் விரைந்து எங்கள் இளைய சமூகத்தை அழிவில் இருந்து பாதுகாப்பது அவசியமானதாகும்.

என்றுமே அதிகாலை எழாத உங்கள் பிள்ளை விடிகாலையில் எழுகின்றதா? பாடங்களில் கவனக்குறைவாக இருக்கின்றதா? அடிக்கடி தனிமையை நாடுகின்றதா? உங்கள் பிள்ளையின் நடத்தையில் மாற்றங்கள் தென்படுகின்றதா? உன்னிப்பாக அவதானியுங்கள் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். அதிலும் இவ்வாறான இலத்திரனியல் சாதனங்களில் அதிக ஆர்வம் காட்டும் பிள்ளையை இரட்டிப்பு அவதானத்துடன் கவனிக்க வேண்டும்.

வேலை, உழைப்பு எல்லாமே அவசியம்தான் ஆனால் எங்கள் பிள்ளைகள் அவையெல்லாவற்றிலும் முக்கியமானவர்கள் பெறுமதி மிக்கவர்கள். அவர்களோடு தினமும் மனம் விட்டுப் பேசவேண்டும் என்பதை நாம் எப்போது உணரப்போகின்றோம்?

அவர்கள் தங்கள் பிரச்சினைகளை தங்கள் பெற்றோரோடு பகிரலாம் என்ற நம்பிக்கையை நாம் அவர்கள் உள்ளங்களில் எவ்வாறு வளர்க்கப்போகின்றோம்?

பிள்ளைகளுக்கான நல்ல நண்பர்களாய் பெற்றோர் இருக்கும் பட்சத்தில் எந்தவொரு தீய பழக்கத்தில் இருந்தும் அவர்களை விடுவித்து விடலாம் என்பது மனநல ஆய்வாளர்களின் பரிந்துரை.

எங்களது பிரச்சினைகளை ஒருபக்கம் வைத்துவிட்டு எங்கள் வருங்கால சந்ததியின் நலனுக்காக எங்கள் ஈகோவை சற்றுத் தள்ளி வைத்திவிட்டு அவர்களோடு நண்பர்களாப் பழகுவோம். புளூவேல் எனும் அரக்கனை சமூகத்தில் இருந்து ஒழிக்க முயல்வோம்.

Comments