ஜனாதிபதி, பிரதமருடன் இணைந்து பணியாற்ற பிரதமர் மோடி விருப்பம் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி, பிரதமருடன் இணைந்து பணியாற்ற பிரதமர் மோடி விருப்பம்

நமது நிருபர்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று (09) புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நேற்றுப் பிற்பகல் நடந்த இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தான் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாக, அமைச்சர் மாரப்பனவிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது கடந்த மே மாதம் சர்வதேச வெசாக் தினக் ெகாண்டாட்டத்திற்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, அமைச்சர் மாரப்பனவிற்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்ெகாண்டார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வரலாற்று ரீதியான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது பற்றி இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்ற வெளிவிவகார அமைச்சர் மாரப்பன, நேற்று முற்பகல் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நேற்றுப் பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அமைச்சர் மாரப்பன பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகள், புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கான முனைப்புகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் மாரப்பன, இந்தியப் பிரதமருக்கு விளக்கியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம், அமைச்சின் சார்க் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம் எம்.ஏ.கே.கிரிககம ஆகியோரும் கலந்துகொண்டனர்.

வெளிவிவகார அமைச்சர் பதவியை ஏற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது இராஜதந்திர வெளிநாட்டு விஜயம் இதுவாகும். முன்னதாக கொழும்பில் நடைபெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இங்கு வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ், அமைச்சர் மாரப்பனவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன் அவரை இந்தியாவிற்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Comments