சிக்கல்களின் அதி உச்சத்தில் தமிழக அரசியல் | தினகரன் வாரமஞ்சரி

சிக்கல்களின் அதி உச்சத்தில் தமிழக அரசியல்

அருள் சத்தியநாதன்  
 

தமிழக அரசியல் நகர்வுகள் இரு வழிக்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இரண்டுமே இறுதியில் போய்ச்சேரப்போகும் இடம் ஒன்றுதான். அதாவது இன்னொரு சட்ட மன்றத் தேர்தலில் தான் இவ் விரண்டு நகர்வுகளும் போய் நிற்கப்போகின்றன.

இதில் முதல் நகர்வு, தி.மு.க எடுத்துவருவது.

தி.மு.கவுக்கு இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும். எதிர்க்கட்சி என்ற வகையில் அப்படித்தான் தி.மு.க இயங்கவும் முடியும். இதன் பொருட்டு, ஆளுநரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஒரு மனுவைக் கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் 19 எம்.எல்.ஏ. மார்கள், எடப்பாடி அரசின்மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து தமிழக கவர்னரிடம் மனுகொடுத்துள்ளனர். அதன் பிரகாரம் எடப்பாடி அரசு தன் பெரும்பான்மையை இழந்து இருக்கிறது. 19 சட்ட மன்ற உறுப்பினர்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றிருக்கிறார்கள். எனவே சட்ட சபையைக் கூட்டி எடப்பாடி அரசு தன் பெரும்பான்மைப் பலத்தை சபையில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஸ்டாலின் கவர்னரிடம் கொடுத்திருக்கும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநரோ மத்திய அரசின் பிரதிநிதி. பா.ஜ.க தலைமை என்ன நினைக்கிறதோ, பிரதமர் மோடி என்ன நடக்க வேண்டும் என்று கருதுகிறாரோ அதைத்தான் ஆளுநர் தமிழகத்தில் ஆற்றி முடிப்பார். புதுடில்லிக்கு தற்சமயம் தமிழகத்தில் ஒரு சட்ட மன்றத் தேர்தல் அவசியம் இல்லை. தற்சமயம் தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க ஆட்சிதான் என்று ஸ்டாலின் மேடைகளில் கூறி வருகிறார். எடப்பாடியும் பன்னீர் செல்வமும் மோடியவர்களின் உள்ளங்கையில் இருக்கிறார்கள் என்பது தமிழகம் அறிந்த உண்மை. எல்லாமே தன் விருப்பப்படி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஏன் தமிழகத்தை தேர்தலை நோக்கி நகர்த்த வேண்டும்? என்று பா.ஜ.க கருதுகிறது. எனவே, மேலிடத்து உத்தரவு வரும்வரை தமிழக ஆளுநர் எடப்பாடி அரசுக்கு இடைஞ்சல் தரக்கூடிய எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதில்லை.

சட்ட சபையைக் கூட்டி தமிழக அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை அரசு நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் விண்ணப்பம் கொடுத்து பல நாட்கள் கடந்து விட்டதால் தான் நம்பிக்கை இழந்து விட்டதாக சில தினங்களுக்கு முன் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆளுநரை அவர் சந்தித்தபோதே, நீங்கள் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்ல நேரிடும் என்று சொல்லி விட்டே வந்தேன் என்று பின்னர் ஸ்டாலின் பத்திரிகையாளர்ளிடம் கூறியிருந்தார். எனவே ஆளுநரிடம் நம்பிக்கை இழந்த நிலையில் அடுத்தகட்டமாக ஸ்டாலின் சென்னை நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.

தமிழக அரசு எவ்வாறு தன் பெரும்பான்மையை இழந்து நிற்கிறது என்பதையும் மனு விளக்கமாக எடுத்துரைத்திருப்பதாக தி.மு.க சட்டத்தரணிகள் கூறுகின்றனர். இம்மனு எப்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரியவில்லை. பெரும்பான்மையை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுமானால், அனேகமாக எடப்பாடி அரசு கவிழ்வதற்கே வாய்ப்பிருப்பதாக தமிழக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசைக் கவிழ்க்க தி.மு.க இவ்வாறு ஒரு வழியில் முயற்சி செய்து வரும் அதேசமயம் இன்னொருபுறம் தேர்தலுக்கு மக்களைத் தயார்ப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தி.மு.கவும் அதன் மெகா கூட்டணியும் கையில் எடுத்திருக்கும் ஆயுதம், நீட் தேர்வு விவகாரமாகும்.

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் தழுவிய ஒரு போராட்டத்தை தி.மு.கவினால் தற்போது கிளறிவிட முடிந்திருக்கிறது. மாணவர்கள் தொடர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் அதே சமயம், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதை நீதிமன்றம் தடை செய்திருந்தபோதிலும் அதையும் மீறி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருப்பது புதிய சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது.

இது இப்படி இருக்க, நீட் தேர்வு, கதிராமங்களம், நெடுவாசல் பிரச்சினைகள், வரட்சி, மேகதாட்டு காவிரி அணை விவகாரம், இந்தி – சமஸ்கிருத திணிப்பு முயற்சிகள் எனத் தமிழகம் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு காத்திரமான முயற்சியையும் எடுக்க நாதியற்ற நிலையில் எடப்பாடி அரசு உள்ளதாக தி.மு.கவும் ஏனைய எதிர்த்தரப்பு கட்சிகளும், ஊடகங்களும் முன்னெடுத்துச் செல்லும் பிரசாரம், சாதாரண மக்களை சென்றடைந்திருப்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில் தமிழக இலந்திரன் ஊடகங்கள் தினசரி ஒளிபரப்பும் செய்திகள் மற்றும் அரசியல் விவாதங்களில் அ.தி.மு.க உட்கட்சி விவகாரங்கள் மற்றும் ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வது தொடர்பாகவுமே காட்டப்படுகின்றதே தவிர, தமிழக வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான விவாதங்கள், பிரேரணைகள், தீர்மானங்கள் குறித்து எந்தத் தகவலும் ஊடகங்களில் வெளிவருவது இல்லை. இது ஆளும் கட்சி மீது சுமத்தப்படும் பெருங்குற்றச்சாட்டாக உள்ளது. இதற்கு பதில் சொல்ல முடியாதவர்களாக எடப்பாடியும் பன்னீரும் விளங்குகின்றனர்.

எனவே, அரசாங்கத்தின் இக் கையாளாகாதனத்தையும், அது மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக செயல்படுவதையும், நீட் தேர்வு விவகாரத்தில் கையை பிசைந்து கொண்டிருப்பதையும் தமிழகமெங்கும் கூட்டங்கள் போட்டு பிரசாரம் செய்வதோடு, தொகைக்காட்சிகள் ஊடாக தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பரப்புரை செய்வதிலும் தி.மு.க முனைப்பு காட்டி வருகிறது.

ஒரு பக்கத்தில் தமிழக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தியையும் வெறுப்பையும் ஊட்டுதல் மற்றும் பா.ஜ.க.வை தமிழர்களின் எதிரியாகக் காட்டுதல், மறுபுறத்தில் சட்ட சபையைக் கலைப்பதற்கான சட்டபூர்வமான நகர்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருதல் என இரட்டை வழிகளில் தி.மு.க காய் நகர்த்தி வருகிறது. இக்காய் நகர்த்தல் அரசியல் விவேகத்துடன் கூடியது என்றுதான் கூற வேண்டும்.

இக் காய் நகர்த்தலுக்கு எதிராக அ.தி.மு.க எவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது என்று கேட்டால், எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் உட்கட்சிப் பிரச்சினைகளைக் கவனிக்கவே தலைவர்களுக்கு நேரம் போதவில்லை. எடப்பாடி, பன்னீர் மற்றும் தினகரன் ஆகிய மூவருமே ஒருவருக்கொருவர் குடைச்சல் கொடுத்து வருகின்றனர் என்பதோடு ஊடகங்களுக்கும் இது ஒரு பெருந் தீனியாகவும், நகைச்சுவைக் காட்சிகளாகவும் போய் விட்டது.

இது இப்படி இருக்க, கடந்த வாரம் 12ஆம் திகதி எடப்பாடியும் பன்னீரும் அ.தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டினார்கள். பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சின்னம்மா சசிகலாவையும், அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனையும் நீக்குவதாக தீர்மானம் போட்டு நிறைவேற்றினார்கள். பின்னர் பொதுச் செயலாளர் என்பது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வகித்த பதவி என்றும் அவர்களே தொடர்ந்தும் நிரந்தர பொதுச் செயலாளர்களாக விளங்குவார்கள் என்றும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இனிமேல் கட்சியை பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து வழிநடத்துவார்கள் என்றும் ஒரு தீர்மானம் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டது.

எடப்பாடி – பன்னீர் ஆகிய இருவரும் இவ்வாறு பொதுக் குழுவைக் கூட்டி, அ.தி.மு.கவை மறுசீரமைத்திருக்கிறார்கள்.

இதன் மூலம் எல்லாமே முடிவடைந்து விட்டதா என்றால் இல்லை ஒன்றுதான் சொல்லவேண்டும். கூட்டத்துக்கு வந்தவர்கள் அனைவரும் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் தனா என்ற கேள்வியும் இப்போது எழுந்திருக்கிறது.

அ.தி.மு.க அமைப்பு விதிகளின் படி பொதுக் குழுவை கட்சியின் பொதுச் செயலாளரினால் மட்டுமே கூட்ட முடியும். பொதுச் செயலாளருக்கு எதிராக ஒரு பொதுக்குழுவைக் கூட்டுவது என்பது ஆகக் கூடிய விஷமல்ல. அப்படி கூட்டுவதென்றால் பொதுக்குழு உறுப்பினர்களின் எழுபத்தைந்து சதவீதத்தினரின் கையெழுத்துடன் கூடிய மகஜர் ஒன்றையும் பொதுச் செயலாளரின் மீதான குற்றச்சாட்டுக்களையும் இணைத்து அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தனக்கெதிராகத் தொடுக்கப்படும் ஒரு புகரை அவரே முன்வந்துவிசாரிப்பாரா என்பது வேறு விஷயம். எனவே, அ.தி.மு.க வின் பொதுச் செயலாளராக பதவி வகிப்பவரை பதவி நீக்கம் செய்வது மிகவும் சிரமமான காரியம். அதாவது சட்டப்படி.

எனவே, தினகரன் இப் பொதுக்குழுத் தீர்மானங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டார். பொதுக்குழுவை பொதுச் செயலாளரின்றி சாதாரண உறுப்பினரான எடப்பாடியும், பன்னீரும் கூட்டுவது சட்டப்படி செல்லாது என்பது டி.டி.வி தினகரனின் வாதம். அவரது கூற்றுப்படி, சசிகலாவே சட்டப்படியாகத் தெரிவு செய்யப்பட்ட பொதுச்செயலாளர். அவர் நீக்கப்படவில்லை. அவரால் நியமனம் செய்யப்பட தினகரன் இன்னும் துணைப் பொதுச் செயலாளராகவே நீடிக்கிறார். தினகரன் இவ்விவகாரத்தை நீதிமனறத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். பொதுக்குழு கூட்டப்படுவதை எதிர்த்து கடந்த வாரம் நீதிமன்றம் சென்ற தினகரனின் மனு மீதான தீர்ப்பில், 12ஆம் திகதி பொதுக்குழு கூட்டப்படலாம் என அனுமதி வழங்கிய சென்னை நீதிமன்றம், அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்திருந்தது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

ஏனெனில் தினகரன் ஆதரவு குழுவினர் இப் பொதுக்குழுவை மோசடி பொதுக்குழு என்றே அழைக்கின்றனர். வந்தவர்கள் அனைவரும் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல வென்றும் பலர் மாணவர்கள் என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல, நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் இறுதிக் கிரியைகளில். பல அரசியல் தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். ஆனால் அரசு சார்பாக எவருமே இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளவில்லை. எடப்பாடியோ, பன்னீர் செல்வமோ அங்கே செல்லவில்லை. ஆனால் டி.டி.வி தினகரன் அங்கு சென்று துக்கம் விசாரித்து வந்தார். இதைச் சுட்டிக்காட்டும் டி.டி.வி தரப்பு, தினகரனால் தமிழகத்தில் எப்பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். எடப்பாடி, பன்னீர் செல்வத்தினால் அது சாத்தியப்படுமா? என்று சவால் விடுகிறது. மேலும் ஒருங்கிணைப்பாளர் என்றொரு பதவியே அ.தி.மு.க யாப்பில் கிடையாது. யாப்பை மாற்றாமல் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை எப்படி உருவாக்கினார்கள் என்ற கேள்வியையும் இவர்கள் எழுப்புகிறார்கள். எனவே, இந்தப் பொதுக்குழு சட்டபூர்வமாக கூட்டப்படாதா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல, சசிகலா பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டது செல்லுமா என்பதை இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யவேண்டும். இதே சமயம், இரட்டை இலை விவகாரமும் நீடித்துக் கொண்டே செல்கிறது.

இது இப்படி இருக்க, தினகரன் ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்கள், தற்போது தினகரனின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தமிழக ஆளுநரை சந்தித்து, தாம் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கும் மனுவை அளித்துள்ளனர். இது சட்டமன்ற அ.தி.மு.க குழுவின் கொறடாவின் கட்டுப்பாட்டை மீறிய சொல் என்று கூறி, அந்த 19 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் சட்ட மன்ற அ.தி.மு.க கொறடா ஒரு விண்ணப்பத்தை செய்துள்ளார். இவ் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சட்ட மன்ற சபாநாயகர் தனபால், 19 உறுப்பினர்கள் மீது நோட்டீஸ் பிறப்பித்திருப்பதாக அறிய முடிகிறது.

சபாநாயகர் தனபால் தொடர்பான ஒரு விடயமும் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. தினகரன் தரப்பு, திரும்பத் திரும்ப, எடப்பாடிக்கு பதிலாக சாபநாயகர் தனபாலையே முதல்வராக நியமனம் செய்யலாம் என்று கூறி வருகிறது. தனபாலின் பெயரை மட்டும் தினகரன் தரப்பு முதலமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்வது உண்மையாகவா அல்லது வஞ்சகப் புகழ்ச்சியா என்பது தெரியவில்லை. இது தனபாலுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தலாம், ஏன் நான் முதலமைச்சராக வந்தால் தான் என்னவாம் என்ற ஆர்வத்தையும் கிளறலாம்.

இது இப்படி இருக்கு, முன்னாள் சபாநாயகரான சேடப்பட்டி முத்தையா, 19 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் நடைமுறை சட்டப்படி நடக்கவில்லை என்கிறார்.

இன்றைய தமிழக அரசியல் சிக்கல்கள் அனைத்தும் இரண்டு இடங்களுக்குத் தான் தீர்வுக்கு சென்றாக வேண்டும். 

Comments