ஆட்டோக்கள் நம்பகத்தன்மையை வலுவாக்கும் 'புதிய சட்டங்கள்' | தினகரன் வாரமஞ்சரி

ஆட்டோக்கள் நம்பகத்தன்மையை வலுவாக்கும் 'புதிய சட்டங்கள்'

போல் வில்சன்   

ஓர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய வழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் முச்சக்கர (ஆட்டோ) வண்டிக்காரரிடம் விசாரிக்க வேண்டும். அந்த அளவுக்கு வீதிகளையும் சில அலுவலகங்களையும் நன்கு அறிந்தவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.

குறைந்த செலவில் பயணிக்க வேண்டுமானால் முச்சக்கர வண்டியிலேயே பயணிக்க வேண்டும். அது எப்படிப்பட்ட வீதிகளிலும் குறுகலான பாதைகளிலும் செல்லக்கூடியது. கொழும்பு மாநகரில் அதிகளவான இளைஞர்கள் தமது பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திவிட்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாக மாறியுள்ளனர்.

குறைந்த முதலீட்டில் கூடிய வருமானத்தினையும், தனது வீட்டுக் கடமைகளைச் செய்து கொண்டு தொழில் புரியக்கூடிய ஒரே துறையாக முச்சக்கர வாகனம் செலுத்துவதை தெரிவு செய்துள்ளனர்.

பொலிஸ் - இராணுவம் சுற்றிவளைப்பு தேடுதல், வீதி சோதனை நடவடிக்கையில் முச்சக்கர வண்டி சோதனையிடுவதை தவறுவதில்லை. இதற்குக் காரணமாக ஒருசில ஓட்டுநகர்கள் பாதாள உலக கையாட்களாகவும், உளவாளிகளாகவும் செயற்படுவதால், சில வண்டிகள் சட்டவிரோத செயற்பாடுகளான போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தலுக்கும் சில பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள கசப்பான அனுபவங்கள். இதற்குப் பறைசாட்டுகின்றன. இதனால் சிலர் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பது ஆபத்தானதாகவும், விளைவுகளை எதிர்நோக்க வேண்டியதாக இருப்பதாவும் குறைப்படுகின்றனர். அதேநேரத்தில் சிலர் பாவச்செயலுக்கும் துணை போவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அதிகமான குற்றச்செயல்களின் பின்னணியில் சில சாரதிகளும், முச்சக்கர வண்டிகளும் இருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதேநேரத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க தூதரகம் கொழும்பு நகரில் முச்சக்கர வண்டிகளில் தனியாக பயணிக்க வேண்டாம் என இலங்கைக்கு வரும் தமது பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்த்து. ஒரு சில முச்சக்கர வண்டி சாரதிகள் செய்யும் செயற்பாட்டினால், தமது கௌரவத்தன்மையும் பாதிக்கப்படுகின்றது என்கிறார் ஒரு முச்சக்கர வண்டி சாரதி.

அதே நேரத்தில் இரவு விடுதி களியாட்டத்திற்கும் சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்களே முகவர்களாக விளங்குகின்றனர். இப்படியானவர்களிடம் இது குறித்து வினவிய போது, ‘அவர்கள் எமது வாடிக்கையாளர்கள் மட்டுமே எமது வாகனத்தில் செல்வதற்கு பணம் தருகிறார்கள்’ என்றார். ஆனாலும் இப்படியான வாகனத்தில் பெண்கள் தனியாக பயணிக்கும் போது அவரும் இப்படியாகக் கணிக்கப்படுவாளா...?

தற்போது ஒரு முச்சக்கர வண்டியின் முழுமையான விலை சுமார் ஒரு இலட்சமாகும். ஆனால், தவணை முறையில் இவ்வாகனத்தை அநேகர் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஒரு லீற்றர் பெற்றோலில் சுமார் 29 மைல்கள் ஓடமுடியும். முதல் கிலோ மீற்றர் 50 ரூபாவாகவும், அதன் பின்னர் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கு 40 ரூபா என்ற ரீதியிலும் கட்டணம் அளவிடப்படும். இரவு 10 மணிக்கு மேல் முதல் மீற்றர் 57 ரூபா 50 சதமாகவும் காணப்படும். ஒரு லீற்றர் பெற்றோலினால் சுமார் 1250 ரூபா சம்பாதிக்கலாம். முச்சக்கர வண்டி மீற்றர் கணனி மயப்படுத்தப்பட்டதாகும். ஆனால், ஒருசிலர் தில்லுமுல்லு செய்வதையும் டேவிட்ராஜ் என்ற முச்சக்கர சாரதி ஏற்றுக்கொண்டார். அதேநேரத்தில், முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச அரசால் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ஆதரித்து வீதியில் வலம் வந்த முச்சக்கர வண்டிகளும் சாரதிகளின் செயற்பாட்டால் அவர்களின் நம்பகத் தன்மையும் இல்லாது போய்விட்டது என்றார் ஒரு முச்சக்கர பயணி. அதேநேரத்தில் காரியாலயங்களில் தொழில் செய்யும் ஒரு சில உத்தியோகத்தர்கள் தமது மேலதிக உழைப்புக்காக பகுதிநேரமாக முச்சக்கரவண்டி செலுத்துகின்றனர்.

இலங்கையில் 11,60,000 முச்சக்கர வண்டிகள் பதிவாகியுள்ளன. ஆனாலும் வீதிகளில் 8,50,000 முச்சக்கர வண்டிகளே ஓடுகின்றன. அதிலும் மேல் மாகாணத்தில் மாத்திரம் நான்கு இலட்சம் முச்சக்கர வண்டிகள் தொழில் ரீதியாக வீதிகளில் வலம்வருகின்றன.

சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் அனுமதி பத்திரமின்றி வாகனத்தைச் செலுத்துகின்றனர். அத்துடன் சில வண்டிகளில் வாகனத்துக்குரிய வீதி அனுமதிப் பத்திரம், காப்புறுதி அனுமதிப் பத்திரம் இன்மையினால் வீதி விபத்துக்கள் சந்திக்க நேரிடும் போது பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். அதிகமான வீதி விபத்துகளுக்கு முச்சக்கர வண்டியே காரணமாக காணப்படுகின்றது. முச்சக்கர வண்டிகள் மற்றைய வாகனத்திற்கு மிக அருகில் செல்வதாகவும் நடுவீதிகளில் ஆங்காங்கே திருப்பித் திருப்பி ஓட்டுவதாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடுவீதிகளில் ஏற்படும் சில தடங்கலுக்கு சில முச்சக்கர சாரதிகள் அநாகரிகமான வார்த்தைகளைப் பிரயோகிப்பது பயணிக்கும் பயணியை வேதனைக்குள்ளாக்குவதாகும். தொழில் ரீதியாக செயற்படும் அதிகமான பண்பான ஓட்டுநர்களும் இப்படியான நிழலுக்குள் வைத்தே கணிக்கப்படுகின்றனர். முச்சக்கர வண்டிகள் விபத்துக்குள்ளாகும் போது அதில் பயணிப்பவரின் நிலை என்ன? அவர்களுக்கு விபத்து காப்புறுதி உண்டா என்பது குறித்தும் அரச அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில முச்சக்கர வண்டிகள் மீற்றர் இன்றியே வீதிகளில் வலம் வருகின்றன. அதிலும் மீற்றர் உள்ள வண்டிகளில் சிலது பழுதுபட்டதாகவே காணப்படுகின்றன. அத்துடன் மீற்றர் வண்டிகளில் ஏறும் போது மீட்டர் பூஜ்ஜியத்தில் இருந்து 50 ரூபாவைக் காட்டுகின்றதா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் பேரம் பேசிவிட்டு பிறிதொரு முச்சக்கர வண்டியில் ஏற முடியாது. அப்படி ஏறினால் அந்த முச்சக்கர வண்டி சாரதியிடமிருந்து அநாகரீகமான வார்த்தைகள் வரும். அதேநேரத்தில், நாம் வலையமைப்பூடாக முச்சக்கர வண்டியை அவ்விடத்திற்கு வரவழைத்தோமானால், அதுவும் அவர்களை எரிச்சலடையச் செய்யும் விடயமாகவே கருதுகின்றனர்.

முச்சக்கர வண்டியில் மூன்றுக்கு மேற்பட்டவர்களைச் சிலர் அனுமதித்தாலும் அநேகமானோர் அனுமதிப்பதில்லை. ஆனாலும் கூடுதலாகப் பணம் அறவீடு செய்ய கூடியவர்களிடம் ஐந்து பேரையும் ஏற்றிக் கொண்டு போவார்கள். அதேநேரத்தில் இந்த வாகனங்களில் பாடசாலை அழைத்துச் செல்லுதல் என்ற ரீதியில் கணக்கிலடங்காதவர்களை ஏற்றிக் கொண்டும் செல்வர். பாடசாலை மாணவர்கள் ஏற்றிச் செல்லப்படும் போது அவர்களுக்கு காப்புறுதி உண்டா? பாடசாலை வான் போன்று முச்சக்கர வண்டிகளுக்கும் இப்படியான பதிவுகள் உண்டா?

சிலர் மீற்றரின்றிக் கட்டணத்தை அதிகளவில் வசூலிக்கின்றனர். இதில் பயணிப்பவர்கள் தங்களது ஆத்ம கௌரவத்திற்காகக் கேட்கும் பணத்தைக் கொடுத்து விட்டு மெளனிகளாவதுண்டு. சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தை பேரம் பேசாமல் ஏற்றிச் சென்று, முச்சக்கர ஓட்டுநர் கேட்கும் அளவு பணத்தைக் கொடுத்துவிட்ட துர்ப்பாக்கிய கசப்பான அனுபவம் சிலருக்குண்டு.

இதுபோலவே அண்மையில் யாழிலிருந்து புகையிரதம் மூலம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த வயது முதிர்ந்த ஒருவர் கிருலப்பனை 6வது மைல் (அயே கணுவ) என்ற இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று, முச்சக்கர வண்டியில் ஏற, அவர்களைக் கண்டி வீதியிலுள்ள 6வது மைல் கல்லிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அதன்பின்னர் அவர்கள் அப்படியான இடமில்லை என்று வீட்டாருடன் தொடர்பு கொண்டு கிருலப்பனை என்று கூறி அவ்விடத்திற்குக் கொண்டு போய் சேர்த்துள்ளார். அதே வண்ணமாக கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாஸா பஸ் தரிப்பிடத்தில் நின்ற வயது முதிர்ந்த தாயார் ஒருவர் கொள்ளுப்பிட்டி அஞ்சல் நிலையத்திற்குச் செல்வதற்காக ஒரு முச்சக்கர வண்டியை விசாரித்த போது 250 ரூபாய் தரும்படி கேட்டார். ஏன் அவ்வளவு, அடுத்த வீதி தானே? என்று பேரம் பேசிய போது, அவர் கூறிய பதில் இதுவெல்லாம் ஒருவழி பாதை, இதில் நாம் சென்றால், மீண்டும் சுற்றி வர வேண்டும் இதற்குரிய பணம் யார் தருவார்கள்? என்பதே. அதன் பின் பிரிதொரு வண்டியில் 150 ரூபாய் பணத்திற்குச் சென்றார். அந்த அஞ்சல் நிலையம் சுமார் மூன்று நிமிட நடை தூரமே. பயணிகளின் பலவீனத்தை நாடிபிடித்து இலாபம் ஈட்டினார் அந்தச் சாரதி.

முச்சக்கர வண்டி (ஆட்டோ)களுக்கு டெக்ஸி மீற்றர் பொருத்தப்படுவதை கட்டாயமாக்கி போக்குவரத்து அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளது. முச்சக்கர வண்டியில் பயணம் செய்பவர்களுக்கு பயண முடிவின் போது பற்றுச் சீட்டு வழங்கப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணம் செய்த தூரம், வாகனத்தின் இலக்கம், கட்டணம், பெற்றுக் கொண்ட திகதி என்பன அப்பற்றுச் சீட்டில் அமையப் பெறல் வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அத்துடன் பயணிகளுக்குத் தெரியும் வண்ணமாக சாரதியின் புகைப்படம், பெயர், தொலைபேசி இலக்கம், வாகன அனுமதி பத்திர பிரதி காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் இதில் அடங்கும். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி அமுலுக்கு வருகிறது.

அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணிகள் இருக்கையுள்ள இடத்தில் வலது பக்கம் நிரந்தரமாக மறைத்திருத்தல் வேண்டும் என்ற அறிவிப்பும் குறித்த வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. முச்சக்கர வண்டிக்கான மீற்றர் பொருத்தி பற்றுச் சீட்டு வழங்கும்படி அரசாங்கம் வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ள சட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவி​த்​த அதேநேரத்தில், தங்களுக்குக் கால அவகாசம் வழங்கும்படியும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொடவிடம் எழுத்துமூல கோரிக்கையொன்றையும் விடுத்துள்ளது. டாக்டர் கோதாகொடவும் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சலுகை காலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அறிவிப்பின்படி முச்சக்கர வண்டியில் பெரியவர்கள் மூவர் பயணிக்கலாம். பெரியவர்கள் இருவரும் சிறுவர் இருவருமாக பயணிக்கலாம். மேலதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டுசெல்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என்றும் கொதாகொட தெரிவித்தார்.

இந்த வர்த்தமானி அறிவிப்புக்கு சில முச்சக்கர வண்டி சங்கங்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து, தமது பிழைப்புக்கு எதிரான செயற்பாடு என்று குற்றம் சாட்டியுள்ளன. இவர்கள் நீதியாக நடந்து கொண்டால் ஏன் பயப்பட வேண்டும்? இவ்வாகனத்தில் பயணிக்கும் எமக்கு மிக முக்கியமானது பாதுகாப்பு என்று பயணிகளும் வலியுறுத்துகின்றனர்.

பொதுமக்களின் நன்மை கருதியே அரசாங்கம் இச்சட்டத்தை அமுல்படுத்த முடிவெடுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பும், அவர்கள் ஏதும் பிரச்சினைகள் சந்தித்தால் அதற்கான சட்ட ரீதியான அத்தாட்சியாக பற்றுசீட்டு விளங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, முச்சக்கர வண்டி (ஆட்டோ) சாரதிகளின் நம்பகத்தன்மையை மாத்திரமின்றிக் கௌரவத்தையும் கட்டியெழுப்பக் கூடிய இந்த ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டியது சகல சாரதிகளினதும் பொறுப்பாகுமென்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

Comments