சுயத்தைப் புறக்கணிக்கும் இரவல் இடாம்பீகம்! | தினகரன் வாரமஞ்சரி

சுயத்தைப் புறக்கணிக்கும் இரவல் இடாம்பீகம்!

இரவல், கடன் வாங்குவது எல்லாம் இழிவானது என்று பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க. ஆனால், இன்றைய நவநாகரிக வாழ்க்ைகயிலை கடனும் இரவலும் இல்லாம வாழ்வது சாத்தியமா என்று கேட்கிறாங்க சாமானிய மக்கள்.
கோடி கோடியாகப் பணம் இருந்தாலும் வங்கியிலை இரண்டு கோடிக் கடன் இருக்கிறது என்றதைச் சிலர் பெருமையாக நினைக்கிறாங்க. இதிலை விசேடமா முதலாளிமார். சொந்தப் பணத்தை வைத்துக்ெகாண்டே கடனில் கடை நடத்துவதில் பலே கில்லாடிகள் இருக்கிறாங்க.

மனிதன் பிறரில் தங்கி வாழ்வதை ஓர் இழிவாக நினைத்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், இன்று பிறரின் மரியாதைக்காகப் பொய் இடாம்பீகத்தில் இலயித்துப் போயிருக்கிறான் மனிதன். இதனால், வாழ்க்கையிலை பல நெருக்குவாரங்களைச் சந்தித்து வாழ்க்ைகயை முடித்துக்ெகாள்ளும் நிலைக்கும் தள்ளப்படுகிறான்.

இரவல் அல்லது கடன் என்றால், தற்போதைக்கு/சிறிது காலத்திற்கு பயன்படுத்திவிட்டுத் திரும்ப ஒப்படைக்கவேண்டிய (மற்றவரின்)பொருள் என்று அர்த்தம்.
‘புத்தகத்தையும் மனைவியையும் இரவல் கொடுக்காதே’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கு. போனால் திரும்பாது. புத்தகம் சரி, போனால் வராது. ஆனால் மனைவி எப்படி? அவள் எப்படி இரவல் போகக்கூடிய சாதனம் ஆவாள்? புத்தகம் தானாக கால் முளைத்து நடந்து போகாது; தானாக வரவும் செய்யாது.

ஆனால் மனைவி என்பவள் அப்படியா?
இரவல் போனாலோ, அனுப்பப்பட்டாலோ, தானாகத் திரும்பி வர இயலும் அல்லவா? ஆனால் திரும்ப வராது என்றால், இரவல் போனவளுக்கு திரும்ப மனசற்றுப் போகும் என்றும் பொருள் கொள்ளலாம். அவள் இதுவரை இருந்த இடத்தை விட, சென்ற இடம் நிறைவாக, மகிழ்ச்சியானதாக இருக்கிறது என்பதல்லவா அதன் பொருள்? அது ஆராயப்பட வேண்டிய விஷயம்.
மனையாட்டி, மக்கள் எனக் குடும்பங் குடும்பமாக அடிமைகளாக இருந்திருக்கின்றனர். அடிமைகளாக இருக்கும் தம்பதியினருக்குக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையும் அடிமையே! அடிமைகளை விற்கலாம், வாங்கலாம், அடமானம் வைக்கலாம், தேவைப்பட்டால் கொல்லவும் செய்யலாம் என்று வாழ்ந்த சமூகங்கள்தான் நாம். உன்னதங்களைப் பேசும் நாம் உன்மத்தங்களையும் பேசித்தானே ஆக வேண்டும், என்கிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்!
இரவல் பொருள் போனால் திரும்ப வேண்டும். ஆனால், இரவல் போன பொருள் மறதியால், கள்ளத்தால், போன இடத்திலேயே தங்கிவிடும் அபாயம் உண்டு. மனைவியைப் போல புத்தகமும் விலை மதிப்பற்றது என்ற காரணத்துக்காக அந்தப் பழமொழி சொல்லப்பட்டிருக்கலாம். புத்தகம் இரவல் போனால் திரும்ப வராது என்பதை வலியுறுத்தவும் சொல்லப்பட்டிருக்கலாம்!
பொன்னாபரணங்களை இரவல் வாங்கிப் போட்டுத் திருமணங்களுக்குப் போய் வந்து கழற்றித் திரும்பக் கொடுப்பதுண்டு. தன்னிடம் நல்ல புடவை இல்லை என்று புடவை இரவல் வாங்குவதுண்டு. ஆத்திர அவசரத்துக்கு வெட்டுக்கத்தி, கோடரி, மாங்காய், முருங்கைக்காய் பறிக்கும் கொக்கி இரவல் கேட்பதுண்டு.

அப்பக்கல், பெரிய பாத்திரங்களான வெண்கல உருளி, செம்பு நிலவாய், பித்தளைக் குட்டுவம் இரவல் போவதுண்டு. ஓர் உழவு மாட்டுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், உழவு மாடு கேட்டு வாங்கிப் போவதுண்டு. நெல் அளவு மரக்கால் இரவல் போகும் நிலை இன்னமும் தமிழகத்தில் உண்டு!
இரவல் எனும் சொல்லுக்கு, ‘மீண்டு தருவதாகக் கொண்ட பொருள்’ என்றும் பொருள் தருகிறது பேரகராதி. அதாவது ‘திருப்பித் தருவேன்’ என்று வாக்களித்து வாங்கிக்கொண்டு போகும் பொருள். என்றாலும், இரவல் எனும் சொல்லுக்குள் இரத்தலின் கேவலம் இருக்கிறது என்று சொல்றாங்க பெரியவங்க.
‘ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளி வந்தது இல்’ எண்டு சொல்றார் திருவள்ளுவர்.

போற்றிப் பேணிப் பிள்ளை போல் வளர்க்கும் பசு மாட்டுக்குத் தண்ணீர் வேண்டும் என்று இரந்தாலும் கூட, ஒருவன் நாவிற்கு அதை விட இழிவான பிறிதோர் சொல் இல்லை’ என்பது இந்தக் குறளின் பொருள்.இங்கு நாம் பயன்படுத்தும் இரவல் என்ற சொல்லுக்கு யாசகம் என்று பொருள் கொள்ளாவிட்டாலும், அது இரப்புதான் என்று அடித்துச் சொல்கிறார் நாஞ்சில் நாடன்!
எல்லா மொழிகளுமே ஏராளமான இரவல் சொற்களைத் தம்முள் அடுக்கி வைத்துள்ளன. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் அருளி தொகுத்து ெவளியிட்ட, ‘அயற்சொல் அகராதி’, இருபதினாயிரத்துக்கும் அதிகமான வேற்றுமொழிச் சொற்கள் தமிழில் புழங்குகின்றன எனும் தகவலைத் தருகின்றது. அரபி, ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தி, இந்துஸ்தானி, லத்தீன், உருது, எபிரேயம், கன்னடம், கிரேக்கம், சமஸ்கிருதம், ஜப்பானியம், சிங்களம், சிரியாக், சீனம், டச்சு, துருக்கி, துளு, தெலுங்கு, பாரசீகம், பாலி, பிரெஞ்சு, பிராகிருதம், போர்த்துக்கீசியம், மராத்தி, மலாய், மலையாளம் என 27 மொழிகளின் இரவல் சொற்கள் தமிழில் இருப்பதாகச் சொல்கிறார் எழுத்தாளர்.

மொழியில் மட்டும் என்று இல்லை. கல்வியில், மருத்துவத்தில், உடையில், ஆபரணங்களில், உணவில், இசையில், நடனத்தில், ஓவியத்தில், முடி திருத்துதலில், ஒப்பனையில், கட்டடக்கலையில் என எங்குப் பார்த்தாலும் இரவல் மயமாகிவிட்டது. இரவல் நன்மையும் செய்யும்; தின்மையும் செய்யும். ஆனால் நம் மனப்பாங்கு, சுயத்தைப் புறக்கணித்துவிட்டு இரவலைக் கொண்டாடப் போகலாமா என்பதே இப்போதைய கேள்வி!
இந்தக் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்ெகாள்ள வேண்டும். இரவல் வாங்கிச் சென்ற பொருளைத் தொலைத்துவிட்டு அதனை மீள ஒப்படைப்பதற்குத் திண்டாடும் பலரைச் சந்திக்கின்றோம். வாகனம், கோட் ஷூட் என்றெல்லாம் ஒரு தற்காலிக இடாம்பீகத்திற்காக இரவல் வாங்கி அதனால், துன்பத்தை அனுபவத்து வருவோர் நம் மத்தியில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆக, கடனாளி ஆகி கடமையைச் செய்வதால், நமக்கு ஏற்படும் ஆத்ம திருப்தி, சஞ்சலமில்லா வாழ்க்ைக அளிக்கும் நிம்மதிக்கு ஈடாகுமா? சிந்திப்போம்! 

Comments