வைராக்கியம் | தினகரன் வாரமஞ்சரி

வைராக்கியம்

எப். ஷபியா நதீம்   
 தொட்டவத்தை, பாணந்துறை   

தன் கடந்த கால கசப்பான அனுபவங்களையும் அதனால் அவள் அடைந்த சொல்லில் அடக்க முடியாத கவலைகளையும் அன்று தன் குடும்பத்தின் ஆறுதல் சொற்களினால் அவள் மனதில் கருக்கட்டிக் கொண்ட வைராக்கியத்தையும் எண்ணி ஒரு நகைப்பான ஒரு கேலியான சிரிப்பை தன் இதழ்களிலே இருந்து உதிர்வித்துக் கொண்டாள்.

“கேட்டினும் உண்டுஓர் உறுதி திறமையை

நீட்டி அளப்பதோர் ​கோல்”

இது வள்ளுவனின் குறளல்ல. அவளே அவளுக்காக எழுதிக் கொண்ட குறள். ஆம், பவித்ராவின் பவித்திரக் குறள். அதாவது தமக்கு எந்தவித துன்பங்களும் அநீதங்களும் நடக்குமிடத்து அந்தத் தீ​ைமகளில் நமக்கு ஒரு மிகப் பெரிய நன்மை காத்திருக்கின்றது. அதாவது அந்தத் தீமையானது தமக்குள் இருக்கும் திறமைகளை அளப்பதற்கான ஒரு அளவு கோலாக பயன்படும் என்பதே அவளின் பவித்திரக் குறளின் கருத்து.

இவ்வாறு குறள் எழுதி சரித்திரம் படைக்கும் அளவிற்கு அவளுக்கு என்னதான் நடந்தது? அவளுக்கு நடந்தது இறைவனின் நாடக மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆரம்பக் கட்டங்களே இன்று நடப்பது கூட அவ்வாறுதான். இறுதிக் கட்டம் இன்னும் நடந்தேறவில்லை. இறுதிக் கட்டம் இறைவனின் சன்னிதானத்தில் தனக்கு சார்பானதாக இருக்கும் இருக்க வேண்டும். ஏனென்றால் இறைவனின் தீர்ப்பு நியானமான இறுதித் தீர்ப்பு என்ற மனவேட்கையில் வைராக்கியத்துடன் தன் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றாள். இறைவனின் தீர்ப்புக்காக காத்திருந்தாலும் வெளிச்சத்தை சுற்றி சுற்றி வந்து தாக்கும் ஈசல்களைப் போல தன்னையே சுற்றி சுற்றி தாக்கும் ஊர் சமூகத்தவர்களுக்கு “வெளிச்சத்தை தாக்கும் ஈசல் அவ்வெளிச்சத்தினாலேயே இறந்துவிடும்” என்ற செய்தியை உண்மைப்படுத்தி எண்ணினாள். அதற்காக அவள் வகுத்துக் கொண்டது தான் அந்தக் குறள். அவள் ஆயுதப் போராட்டம் செய்து அதனை உண்மைப்படுத்தவில்லை. அவள் செய்ததெல்லாம் சமூகத்தவரின் பலிச் சொற்களையும் அவதூறுகளையும் எண்ணி எண்ணி அதனை மறுப்பதற்காகவும் மறைப்பதற்காகவும் ஒரு கட்டத்தில் தன்னையே வருத்திக் கொள்ளும் செயல்களை செய்ததுதான். நினைவு வரும் போதெல்லாம் தனக்கு கடினமான பாடப் பரப்புக்ககளை எடுத்து படிக்கத் துவங்கினாள். இல்லையெனின் தன்னை ஒருமைப்படுத்திக்கொள்ள கடினமான மொழிநடை உள்ள புத்தகங்கள், பரீட்சயமில்லாத சிங்கள மொழி என்பவற்றைக் கற்றாள். அதுவும் சரிப்படாத போது தன்னை ஒரு கற்பனை உலகிற்கு கொண்டு சென்று அங்கு ஊர் சமூகத்தவர்கள் குற்றவாளிகளாகவும் தான் நிராபராதியாகவும் இருப்பதாக எண்ணி சிறகடித்துப் பறப்பாள்.

ஆம், படிப்பில் ஓரளவு திறமை, விளையாட்டில் அதீத ஆர்வம், சிறந்த நட்பு வட்டாரம், பெரும் பங்கு ஆசிரியர்களின் மனதை வென்றவள் இவ்வாறு பலவற்றை இவளின் அடையாளமாக கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட அவள் தன்னை அடையாளப்படுத்த விரும்புவது அவளின் குடும்பத்தைத்தான். தந்தை அரசாங்க உத்தியோகத்தர். வேற்றூரைச் சேர்ந்தவர். “உலகில் சிறந்த தந்தை நாமம் இவருக்குத்தான்”. இது பவித்ராவின் தந்தையைப் பற்றிய ஒரே வரிக் கருத்து. உண்மையும் அதுவே. தாய் இதே ஊரில் கௌரவமான பரம்பரையைச் சேர்ந்தவர். தாயின் சகோதர சகோதரிகளின் குடும்பங்கள் என பலரும் இவளின் அன்புக்கு பாத்திரமானவர்கள். இறை வழிக்கு அடுத்து குடும்பமே எனது சிறந்த வழிகாட்டி “May Family – My Guidance and Guardians” என்று பெருமையாக கூறிக்கொள்வாள்.

அன்று தரம் பத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். ஜனவரி 27 ஆம் திகதி பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. வலைப்பந்தாட்டத்தில் ஒரு நட்சத்திரமென மிளிர்ந்து வெள்ளியை சூடிக் கொண்டாள். இன்னும் அவளுக்கு இருப்பது இரண்டு தனி நிகழ்ச்சிகள். அவற்றில் வெற்றிபெற்றால் சாம்பியன் பட்டம். அவள் அந்த நாமத்தை சூடிக்கொள்ள இடைவிடாத பயிற்சிகளைப் பெற்றாள். ஆசிரியர்களின் வழி காட்லிலும் அவளின் திறமையாலும் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடத்தைப் பெற்றாள். அவளுக்கு இன்னும் இருப்பது ஒரே ஒரு போட்டி... பாடசாலை நேரத்திலும் மாலை நேரங்களிலும் மைதானத்தில் பயிற்சிகளைப் பெற்றாள். பயிற்சியை முடித்துக் கொண்டு இல்ல ஆசிரியரின் அனுமதியுடன் பரிதி வட்டத்தை வீட்டிற்கு கொண்டு சென்றாள். காரணம் தன் தந்தை மீது வைத்திருந்த ஒரு நம்பிக்கை. தன் தந்தையும் விளையாட்டுக்களின் மீது ஆர்வம் கொண்டிருந்ததால் தன் தந்தையின் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என எண்ணினாள். எண்ணியவற்றின் மீது திறமையாக இருந்தால் எண்ணியவை எண்ணியவாறே இடம்பெறும் என்பதற்கு அவளின் இந்த எண்ணம் ஒரு சான்றாக அமைந்தது. அதற்கிணங்க வீட்டின் தோட்டத்தில் தந்தை பரிதி வட்டம் வீசுதலின் நுட்பங்களையும் அதற்கான பயிற்சிகளையும் வழங்கினார். தந்தையும் மகளுமாக எறிந்து வாய்ப்புப் பார்த்துவிட்டு சூரியக் கதிர்கள் வீடு செல்வதை அவதானித்து அவர்களும் அவர்களின் பங்குக்கு வீட்டை நோக்கி சென்றனர்.

தாய், தந்தை சகோதர, சகோதரிகளுடன் அன்றைய முழு நாளினதும் தொகுப்புரையை சமர்ப்பிக்காமல் அவளது கண்களை இமை மூடாது. அதற்கிணங்க அதனை சமர்ப்பித்துவிட்டு உடம்புக்கு இதமான ஆடையொன்றை அணிந்து கொண்டு தன் படுக்கைக்குச் சென்றாள். அன்றைய நாளின் களைப்பானது அவளை அறியாமலே இமைகளை மூடிக்கொள்ளச் செய்து. கட்டிலில் சாய்ந்த மறு நொடியே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள். எனினும் அடி மனதில் ஆழமாகப் பதிந்த அவளின் மறுநாள் போட்டியும் வெற்றி பற்றிய நம்பிக்கையும் உறங்கிய பாடில்லை. கனவலும் கூட தம்மை வந்து மீட்டிக் கொண்டன. அவள் தூங்கிய அரை மணி நேரத்திலேயே வீட்டில் ஏனையவர்களும் உறக்கத்திற்குச் சென்றுவிட்டனர். வீட்டில் எல்லோரும் தூங்கும் வரை எல்லாம் வழமையாகத் தான் இருந்தது. இரவு 12.00 மணியைத் தாண்டி (அதாவது மறுநாள் 28 ஆம் திகதி) 5 நிமிடங்கள் கூட ஆகவில்லை. வழமையைப் போல உறக்கத்தில் மூழ்கியிருக்க வேண்டிய ஊரார் ஏதோ ஓர் எதிர்பார்ப்பில் மரக்கொப்புகளிலும். கூரைகளின் மேலேயும், மதில்களுக்குள் மறைந்தவாறும் பாதையை நோக்கி தம் பார்வையை செலுத்திக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்வுகளும் பார்வைகளும் பவித்திராவுக்கோ அவளின் குடும்பத்திற்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கணமே அவளின் வீட்டுக் கதவுகள் தாறுமாறாக தட்டப்பட்டன. தந்தை விழித்து வெளியே சென்று பார்த்தால் ஐம்பது வயதிற்கு இடைப்பட்ட ஆண்களின் ஒரு கூட்டம்.

“உங்களின் வீட்டை... அதாவது உங்களின் இரண்டாவது மகளை நாங்கள் சோதனை செய்ய வேண்டும். அவள் வீட்டில் இருக்கிறாளா? இல்லை திட்டப்படி சென்று விட்டாளா? பாடசாலையில் கூலி வேலை பார்க்க வந்த ஒரு அந்நிய இளைஞனோடு உங்கள் மகள் பவித்ராவுக்கு தொடர்பு. அதனை நாம் கண்டு பிடித்தோம். பார்த்தால் அவர்கள் இருவரும் இன்று இரவு 12.30 க்கு ஊரை விட்டு செல்ல உள்ளனர். அதனால் தான் நாங்கள் உங்கள் மகளை தடுத்து நிறுத்த வந்தோம். அவ்வாறு நடந்தால் இந்த ஊருக்கே சீரழிவு. எங்கே உங்கள் மகள்?”

என வினவிய மறுகணமே அவளின் தந்தை கண்ணீர் வடிக்கும் சிலையானார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. எவ்வளவு பெரிய அவதூறு அவர் எப்படி தாங்குவார்? அவர்களின் குரலோசையும் சலசலப்பும் கேட்டு அவளைத் தவிர வீட்டில் அனைவரும் விழித்துவிட்டனர். அவளைக் குடி கொண்ட களைப்புத் தூக்கம் இன்னும் அவளை விட்டு அகலவில்லை. தந்தை கதவருகே சிலையாய் நிற்க, வீட்டில் ஏனையோர் எதுவும் அறியாமல் திகைக்க, வந்தவர்கள் சொந்த வீட்டில் வைத்த பொருளை எடுக்க வந்தவர்கள் போல உள்ளே நுழைந்தனர். அப்போதுதான் அவளின் தந்தைக்கு சுயநினைவே வந்தது.

“ஐயோ என் மகள் தூங்குகிறாள். அவள் அப்படிப்பட்டவளல்ல. உள்ளே செல்ல வேண்டாம்”

அவரின் கெஞ்சுதல்கள் செவிடன் காதில் ஊதிய சங்கு போல எந்த பயனையும் தரவில்லை. அவளின் அறையினுள்ளே சென்று அவளை தட்டி எழுப்பினார்கள். சட்டென தட்டிய திகைப்பில் மின்னலென அவள் கண்களைத் திறந்தாள். பழக்கமே இல்லாதவர்கள் தன்னைச் சூழ்ந்திருப்பதைக் கண்ட அவள் ‘ஓ’வென அழத் தொடங்கினாள்.

“இந்த இரவில் அதுவும் படுக்கை அறையில் அதுவும் தூங்கும் இந்த ஆடையுடன் இருக்கும் போது ஏன் இவர்கள்?” என்று பலவாறு எண்ணங்களை கற்பனை செய்து கொண்டு தாயின் அருகே விரைந்தாள். அவர்கள் அவளைக் கண்ட பின்பும் அவளை விட்டபாடில்லை.

“நீ அந்த அந்நிய இளைஞனுடன் ஊர் விட்டு செல்ல இருந்தாய். நமக்கு விஷயம் கேள்விப்பட்டவுடன் திட்டத்தை மாற்றிக் கொண்டு ஏதும் அறியாத பிள்ளையென தூங்கி விட்டாய் அல்லவா?”

இவ்வாறு பல்வேறு கேள்விகள் அவளை மின்சாரமென தாக்கின. இவை அனைத்தும் நடந்து பத்து நிமிடங்களுக்குள் தாயின் மொத்த குடும்பமும் படையெடுத்து வந்துவிட்டது. அவளின் மேல் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையில் அவளை எந்தப் பதிலும் சொல்ல விடவில்லை. அவளை பதில் சொல்ல வேண்டும் என நிர்ப்பந்தித்திருந்தாலும் அவள் வாயைத் திறந்திருக்க மாட்டாள். ஏனென்றால் அவளின் உதடுகள் இறைவனிடம் பேசிக் கொண்டிருந்தன.

“ஏன் எனக்கு இந்தப் பெயர் நான் என்ன செய்தேன்? இந்த அவதூறுக்குரிய தண்டனையை நிச்சயம் என் கண் முன் உரியவர்களுக்கு கொடுக்க வேண்டும்.”

உண்மையில் அவளுக்கு அவர்கள் கூறும் அந்த இளைஞனைப் பற்றி தெரியாது. இதுவரை ஒரு வார்த்தையேனும் கதைத்தும் இல்லை. அந்த நொடியே இறைவனுக்கு சிரம் பணிந்தவள் மறுநாள் மதியம் வரை கண்ணீர் வற்றும் வரை இறைவனிடம் மன்றாடினாள். கடும் விரதத்தை மேற்கொண்டாள். இதனை அவளது குடும்பம் ஏற்கவில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தெரியும். இரவோடு இரவாக மும்முரமாக இந்த இட்டுக்கட்டலுக்கான சூத்திரதாரிகளை தேடும் வேட்டை ஆரம்பமாகியது. அவளின் வீட்டில் இருந்து ஊரில் எல்லை வரை எல்லோரும் ஒழிந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அவள் அவனுடன் ஊரை விட்டு செல்வதை கையும் மெய்யுமாக பிடிக்கவாம். என்ன கேலிக்கை? என்ன சொல்லி நான் எழுத? சமூகத்தின் கொடுமை, அவளின் இறை நம்பிக்கையும் குடும்பத்தின் முயற்சியும் வீண் போகவில்லை விடிந்து விட்டது. அவளின் வேண்டுகோள்களும் வாழ்க்கையும் அவதூரை இட்டுக்கட்டி பரப்பியவன் ஊரில் மதிக்கத்தக்க ஒருவரின் மகனும் அவனின் நண்பர்களும் தான். இதனை அறிந்த அந்த கொடிய சதிகாரனின் சாதுவான தந்தை அவனையும் அழைத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கவென அன்றே வீட்டிற்கு வந்திருந்தார். இன்னும் ஊரில் பலரும் வந்திருந்தனர். அவள் வெளியே வரவே இல்லை.

“நானும் மகளும் மன்னித்து விடுவதனால் ஊரில் என் மகளை தப்பாக பேசும் நாவுகளை உங்களால் அடக்க முடியுமா?”

அவளின் தந்தை அவர்களைப் பார்த்து கேட்ட ஒரே கேள்வி. அவரும் வந்திருந்த ஏனையோரும் நாவுகளை அடக்கிக் கொண்டு சென்று விட்டனர். அந்த கௌரவமான தந்தை இன்று தன் மகனால் தன் கௌரவம், மானம் என அனைத்தையும் இழந்து விட்டார். அதில் கூட நியாயம் உண்டு. எதுவுமே இல்லாமல் பவித்ராவின் மானம் குடும்ப கௌரவம் என அனைத்தையும் களைத்தானே பாவி.

இதுதான் நடந்தது. இதற்காகத்தான் அவள் தனக்கென குறளென்றை வகுத்து சமூகத்தின் முன் பவித்ரமானவளாக வாழ தன்னை வருத்திக் கொண்டாள். அந்த சம்பவம் தான், அந்த வருத்தல்கள் தான் அவளின் வெற்றிகளின் முதற்படிக்கற்களாக மாறின.

அவள் அன்று தன் சாம்பியன் வாய்பை தவற விட்டாள். தொடர்ந்து வந்த மூன்று வருடங்களிலும் அதனை அடைந்து கொண்டாள். க.பொ.த. சாதாரண, உயர்தரங்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் தெரிவானாள்.

அவளின் அந்த கசப்பான அனுபவங்கள் எழுத்துருவாகத் தொடங்கியது. ஆம், இன்று அவள் சிறந்த ஓர் எழுத்தாளர். அவள் அவளின் அனுபவங்களையும் கற்பனைத் திறனையும் பயன்படுத்தி பல சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டு விட்டாள். இன்று “ஒரு பெண்ணின் இதய டயறி” எனும் நாவலை வெளியிடும் தருணத்தில் மேடையில் அமர்ந்து மனதில் கருக்கட்டிக் கொண்ட வைராக்கியத்தையும் அதனை அடைந்து விட்டதையும் தற்போது அவதூறு கூறியவர்களின் நிலையையும் எண்ணி அவர்களுக்கு நன்றி கூறுவதா? இல்லை அவர்களை நோவதா என்று எண்ணினாள். எது எப்படியோ இறைவனும் என் குடும்பமும் எனக்கு போதுமானவர்கள். நிச்சயம் அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை நிறைவேறும். இறைவனின் சந்நிதானத்தில் பார்ப்போமே என்று தன் கடந்த, இன்றைய நிலையை எண்ணி நகைப்புடனும் கேலியுடனும் ஒரு சிரிப்பை உதிர்வித்துக் கொண்டாள். அப்போது,

“அடுத்ததாக நூலாசிரியையான செல்வி பவித்ராவை நூலாக்க அனுபவத்தினை நம்மிடம் பகிர்ந்து கொள்வதற்காக மேடைக்கு அழைக்கிறோம்” என்று கனீரென்ற அழைப்பு ஒலி வரவும் தன் சிரிப்புக்கும், எண்ணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஒலி வாங்கியை நோக்கி நடந்தாள். 

Comments