பிரச்சினைகளை ஒரே மேசையில் பேசித்தீர்க்க ஜனாதிபதி அழைப்பு | தினகரன் வாரமஞ்சரி

பிரச்சினைகளை ஒரே மேசையில் பேசித்தீர்க்க ஜனாதிபதி அழைப்பு

யாழ் மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

 

யாழ்ப்பாணத்திலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், சுமித்தி தங்கராசா

 

வடக்கென்றாலும் தெற்கென்றாலும் எவருக்கேனும் பிரச்சினைகள் இருக்குமானால் ஒரே மேசையின் கீழ் இருந்து கலந்துரையாடுவதற்கு தான் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார். எவருக்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான ஜனநாயக உரிமை உள்ளது. ஆனாலும், நாட்டை பேரழிவுக்கு கொண்டு செல்லும் யுத்தத்திற்கு மீண்டும் இடமளிக்காது அனைத்து இனங்களும் ஒன்றாக வாழக்கூடிய அமைதியான சமூகத்தை கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கருப்புக் கொடிகளுக்கு பதிலாக சமாதானக் கொடிகளை ஏந்தி எதிர்கால தலைமுறையின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான பயணத்திற்கு ஒத்துழைக்குமாறு தான் அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கறுப்புக் கொடிகளை ஏந்தி ஜனாதிபதி இந்து கல்லூரிக்கு செல்லும் வழியில் இரு புறங்களிலும் நின்றிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் சென்ற ஜனாதிபதி அவர்களுடன் உரையாடிய பின்னர் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டார்

யாழ். இந்து கல்லூரியில் இடம்பெற்ற தேசிய தமிழ்மொழி தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மொழி மனிதர்களை வேறுபடுத்தாமல் மனிதர்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்.

மொழியின் காரணமாக மக்கள் வேறுபட்டிருக்க வேண்டுமென ஒருசிலர் கூறுகின்றனர். ஆனால் மனிதத்தை மதிப்பவர்கள் என்ற வகையில் நாட்டின் அனைத்து மொழிகளையும் மதிப்பதுடன், அம்மொழிகளை கற்கவும் வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எமது நாட்டில் பல்வேறு மொழிகளை பேசுகின்ற இனங்கள் மற்றும் சமயங்களுக்கு மத்தியில் கடந்த காலங்களில் இருந்து வந்த நெருங்கிய உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இன்று நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேசிய நல்லிணக்க கொள்கையை நோக்கி பயணிக்கின்ற வேளையில், அதற்கு தடை ஏற்படுத்துபவர்கள் மனிதம் பற்றி அறியாதவர்களாகும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டில் அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி உரிமைகள் வழங்கப்படுவது அவர்கள் அனைவரையும் கற்ற பிரஜைகளாக மாற்றுவதறகேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இனம், சமயம் என்ற பேதங்களின்றி நாட்டின் அனைத்து பிள்ளைகளும் எதிர்காலத்தை வெற்றிகொள்வதற்கு தயார்படுத்தும் பொறுப்பை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் உருளைக்கிழங்கு விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, எதிர்காலத்தில் உருளைக்கிழங்கை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தி, உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளை பலப்படுத்துவதற்கு மேற்கொள்ள முடியுமான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

யாழ். விவசாயிகளின் வங்கி கடன் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் சலுகை அடிப்படையிலான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றைப்பற்றி அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப பீடத்தை மாணவர்களிடம் ஜனாதிபதி கையளித்தார். தமிழ்மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்களை வழங்கி வைத்தார்.

வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள மூன்று தமிழ் சிறைக் கைதிகளை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றும்படி கூறி ஒரு சிலர் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அவர்களது கோரிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

யாழ். மாவட்ட கல்வித்துறைக்கு ஆற்றிய சேவைகளை கௌரவித்து விருதுகளும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் அவர்களினால் ஜனாதிபதிக்கு ஒரு விசேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

 

 

Comments