மத்தளை விமான நிலைய அபிவிருத்தியில் இந்தியா அதிக அக்கறை காட்டுகிறது | தினகரன் வாரமஞ்சரி

மத்தளை விமான நிலைய அபிவிருத்தியில் இந்தியா அதிக அக்கறை காட்டுகிறது

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விஸ்தரித்து இலாபம் பெறும் நோக்கத்துடன் அதனை 99 வருட கால குத்தகைக்கு சீனாவுக்கு இலங்கை வழங்கியுள்ளது. இதே போன்று விமானங்கள் ஒரு முறை மட்டும் தரித்துச் செல்லும் மத்தளை விமான நிலையத்தையும் இலாபம் பெறும் நோக்கில் யாருக்காவது குத்தகைக்கு கொடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் உள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்ததையடுத்து மத்தளை விமான நிலையத்தை தனக்கு கொடுக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கேட்டிருக்கிறது. ஆனால் அது 70 வருட காலத்துக்கு தனக்கு தரப்பட வேண்டும் என்றும் இந்தியா கேட்டிருக்கிறது. எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. மத்தளை விமான நிலைய விவகாரத்தில் முறையான குத்தகை வழங்கல் இடம்பெற வேண்டும் என்பதால் மத்தளை விமான குத்தகைக்கு கேள்வி மனுக்களை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

மத்தளை விமான நிலைய ஊழியர்களுக்கு 2016 இல் சம்பளம் வழங்க மட்டும் 500 மில்லியன் ரூபா செலவாகியது. இதேவேளை மத்தளை விமான நிலையத்துக்கு வரும் விமானங்களுக்கு பறவைகள் குறிப்பாக மயில்களால் தொந்தரவு ஏற்படுகிறது, இத்தகைய பாதிப்புக் குறித்து ஆரம்பத்திலேயே பேசப்பட்ட போதும் அதையிட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளப்படவில்லை. ஆனால் அது பின்னர் பாரதூரமான விடயமாக மாறியிருந்தது. இவ்வாறான பறவைகள் பாதிப்பு காரணமாக அரபு நாட்டு விமான சேவையொன்றுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் குத்தகைக்கான கேள்வி மனுக்களை அனுப்பும் நோக்கில் இருப்பவர்களுக்கு கூறப்பட்டுள்ள நிலையில் 8 கேள்விகள் இலங்கைக்கு கிடைத்திருந்தன. சீனாவிடமிருந்தும் கேள்வி மனுவொன்று கிடைத்தது.

எவ்வாறெனினும் இந்தியாவிடமிருந்து கிடைத்த கேள்வி மனு முன்னுரிமையுடன் பரிசீலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்ததையடுத்து மத்தளை விமான நிலையத்தை இந்தியாவுக்கு கொடுக்காவிட்டால் இந்தியாவினால் அரசியல் சிக்கல் ஏற்படுவதற்கு இடம் கொடுத்ததைப் போலாகிவிடும் என்ற நோக்கத்திலேயே இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

40 வருட கால குத்தகை மற்றும் 70 சதவீத பங்கில் இந்தியா மத்தளை விமான நிலையத்தை பெறவிரும்புவதாக தனது கேள்வி மனுவில் குறிப்பிட்டிருந்த இந்தியா மத்தளை விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு 205 மில்லியன் டாலர்கள் செலவிட தயாராக இருப்பதாக கூறியிருந்தது.

மத்தளை விமான நிலையம் மிகுந்த செலவில் நிர்மாணிக்கப்பட்ட போதும் அங்கு விமானங்களை தரித்துச் செல்லுமாறு விமான சேவைகளை ஈர்க்க முடியாமல் இருந்தது. விமான நிலைய நிர்மாணத்திற்கு சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து பெறப்பட்ட 190 மில்லியன் டாலர் கடனை செலுத்துவதில் இலங்கை அரசாங்கம் மிகவும் சிரமப்பட்டது, இதனால் கடந்த ஜுன் மாதம் முதல் மத்தளை விமான நிலையத்தை குத்தகையில் வழங்குவதற்கான கேள்வி மனுக்களை இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. 12 என்ற சீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து கேள்வி மனுக்கள் கிடைத்தன.

உலகளாவிய ரீதியில் விமானங்களை அபிவிருத்தி செய்துவரும் இந்திய நிறுவனமொன்று மத்தளை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் அக்கறை காட்டியுள்ளது. விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் அதே நேரம் விமானிகளை பழக்கும் பாடசாலையொன்றையும் மத்தளையில் ஆரம்பிப்பதற்கு இந்த நிறுவனம் உத்தேசித்துள்ளது, ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்துள்ள மேற்படி நிறுவனம் அதே பாணியில் மத்தளை விமான நிலையத்தையும் அபிவிருத்தி செய்ய முடியும். சாத்திய வள அறிக்கை சாதகமான சமிக்ஞைகளை காட்டுமானால் மத்தளை விமான நிலையம் அபிவிருத்தியடைவதில் எந்த தடையும் இருக்காது என்கிறார் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கும் மலேஷியாவுக்குமே அதிகளவில் சென்று வருகின்றனர். எனினும் ஒரு கவர்ச்சி மிகுந்த நாடாக இலங்கை மாறியுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தை எடுத்துக் கொள்வோம் கொழும்பிலிருந்து ஒவ்வொரு வாரமும் 4 விமானப் பயணங்கள் ஹைதராபாத்துக்கு இடம்பெறுகின்றன. இத்துடன் விரைவிலேயே ஐந்தாவது விமானப் பயணமும் இடம்பெறப் போவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான விமானப் பயணங்கள் இரு நாடுகளுக்கிடையிலும் சுற்றுலா பயணிகளை கொண்டு செல்ல பெரிதும் உதவும். இந்தப் பயணங்களில் மத்தளை விமான நிலையமும் பங்குபெறும் சாத்தியம் உள்ளது என்று அந்த உயரதிகாரி மேலும் கூறுகிறார்.

2008 மார்ச் மாதம் சேவையை ஆரம்பித்த ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வருடாந்தம் 120 இலட்சம் பயணிகளையும் ஒரு இலட்சம் தொன் சரக்குகளையும் கையாளுகின்றது. உலகத்தரம் மிகுந்த சேவைகளுடன் கூடிய இந்த விமான நிலையம் சேவை தரத்தில் உலக விமானங்களில் முன்னணி இடத்திலுள்ளது. 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் 31 மாதங்களில் முதல் தர வசதிகளுடன் ராஜீவ் காந்தி விமான நிலையம் மற்றும் பிலிப்பைன்ஸிலுள்ள எம்டான் செபு சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

இந் நிலையில் மத்தள விமான நிலையமும் மேற்படி நிறுவனத்தால் அபிவிருத்தி செய்யப்படும் வாய்ப்புக்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் எண்ணக் கருவுக்கமைய சீனாவின் நிதியுதவியில் 2013 இல் மத்தளை விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் 10 லட்சம் பயணிகளை பயணிகளை கையாளக்கூடிய வசதிகளை கொண்டிருந்த போதிலும் அதில் 5 வீதத்தை மட்டுமே எட்ட முடிந்துள்ளது. அதே போன்று 45 ஆயிரம் தொன் சரக்கை கையாளும் வசதி இருந்த போதிலும் 2016 இல் வெறுமனே 69 தொன் சரக்கை மட்டுமே கையாண்டுள்ளது.

200 மில்லியன் டாலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மத்தளை விமான நிலையம் அத் திட்டத்தின் மூலம் 113 மில்லியன் டாலர் நட்டமடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் கூறியிருந்தது. இந்த நிலையில்தான் இந்தியா மத்தள விமான நிலையத்தை குத்தகையில் பெற்றுக் கொண்டு. 205 மில்லியன் டாலர் செலவில் அதனை அபிவிருத்தி செய்ய விழைகிறது.

Comments