புதிதாய் ஒரு தீபம் | தினகரன் வாரமஞ்சரி

புதிதாய் ஒரு தீபம்

பா.விஜயபல்லவன்
தியத்தலாவை

இன்னும் மூன்று நாட்களில் தீபாவளி. சௌபாக்கியம் கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கணவனும் இல்லை. காத்து வளர்த்த பிள்ளையும் அருகில் இல்லை. நாட்கள் நரக வேதனை. நிமிடங்கள் தீச்சுடும் ஸ்பரிசம். வினாடிகள் கூட விரோத முட்கள்! பிள்ளை நினைவு பிசாசுத்தனமாக உருக்கொண்டு ஆட்டுகிறது.

முதியோர் இல்லம் அது.

ஏக்கங்கள், கவலைகள், கண்ணீர் துளிகள், எதிர்பார்ப்பின் எச்சங்கள் என சோகத்தின் உச்சங்கள்.

ஒவ்வோர் ஆத்மாக்களுக்குள்ளும் ஓராயிரம் கனவுகள்.. பெற்றெடுத்த வயிறுகளின் பேரவல ரணங்கள்.பெருமூச்சுகள். சௌபாக்கியம் சொந்தங்களைத் துறந்து விட்டுத் துடிக்கும் அபாக்கியவாதி. அவள் சாளரம் வழியாக வெளியே வெறிக்கிறாள். சிலர் வருவதும் போவதும் தெரிகிறது. அந்தச் சிலரில் தன் மகனும் ஒருவனாக இருக்கமாட்டானா? மனசு தவிக்கிறது.

மனசு நெடுந்தூரம் பின்னோக்கி நகர்கிறது.

“என்னாங்க என்னாங்க.

கொஞ்சம் ஓடி வாங்களே” சௌபாக்கியம் தன் கணவரை அழைத்தாள். “வாரேன், வாரேன்” செல்லையா சாரத்தை இறுக்கியபடி வேகமாய் வந்து சேர்ந்தார். “ம்..சொல்லு பாக்கியம்”

“பாருங்க புள்ள ஒதைக்குதுங்க இங்க..இங்க.. தொட்டு பாருங்க” செல்லையாவின் கைகளை எடுத்து வயிற்றில் வைத்தாள் சௌபாக்கியம்.

“அட நீ வேற!’ உள்ள இருக்கிறது ஏம் பிள்ளையாச்சே!.. என்ன மாதிரி தான் சுறுசுறுப்பா இருக்கும்."

இருவர் முகத்திலும் புரிந்துணர்வின் ஆனந்தம்.

இருவரும் திருமணம் முடித்து சுமார் பத்து வருடம் இருக்கும். இது தான் முதல் கருத்தரிப்பு.

செல்லையா நகரத்தில் கடையொன்றில் பல வருடங்களாக வேலை செய்து வருகின்றார். சௌபாக்கியம் வீட்டோடு கதியானாள். சிறு சிறு சண்டைகள் வந்து போனாலும் குடும்ப வாழ்கை சந்தோஷமாய் இருந்தது. இரவு எட்டு மணிக்கெல்லாம் செல்லையா வீடு திரும்பி விடுவார்.

அவர் வருமுன்னே தண்ணீர் சுடவைத்து குளியலுக்கு ஆயத்தம் படுத்தி வைத்திருப்பாள் சௌபாக்கியம். செல்லையாவுக்கு வீண் செலவுகள் இல்லை சம்பளம் மொத்தமாய் சௌபாக்கியத்தின் கைகளில். திருமணம் முடிந்து பல வருடங்களாகியும் ஒரே ஒரு தவிப்பு.

தமக்கு ஒரு வாரிசு இல்லை என்பதே. உறவினர் ஊராரின் பேச்சுகள், உபதேசங்கள் கண்ணீருக்கு இடம் கொடுக்கும்.

ஒருவர் ஒருவருக்கு ஆறுதள் சொல்லிக்கொள்வார்கள்.

தினமும் இறைவனுக்குப் பிரார்த்தனை. பல தெய்வங்களுக்கு முன் கண்ணீர், கனவுகள், எதிர்பார்பு, ஏமாற்றங்கள் என நாளுக்கு நாள் நீண்டு கொண்டே வரும். சில சமயங்களில் சௌபாக்கியம் இறைவனைத் திட்டியும் கொள்வாள்.

ஏனைய பிள்ளைகளை பார்க்கும் போது ஓடிப் போய் கொஞ்சுவாள். அவ்வப்போது தன் வயிறையும் தடவிக் கொள்ள மறக்க மாட்டாள்.

நீண்ட நாள் எதிர்பார்ப்பு, பல வைத்தியர்கள், பல அம்மாமார்களின் ஆலோசனைகள், கண்ணீர்கள், வேண்டுதல்கள் என அத்தனைக்கும் ஒரு தீர்வு அவள் கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தி அறிந்த நாளிலிருந்து கை கூடி வந்தது.

சந்தோஷம், கனவுகள், நன்றிகள். எனப் புதிதாய் அவள்.“பாக்கியம், நாளைக்கு கிளினிக் போகணும் உன்னை விட்டுட்டு நான் கடைக்கு போறேன். நீ கிளினிக் முடிஞ்சு ரவி தம்பியோட த்திரிவீல்ல பத்திரமா வீடு வந்திரு சரியா..”

செல்லையா சொன்னார்.

நாட்கள் நகர்ந்தன. சௌபாக்கியம் பிரசவ வலியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிரசவமும் ஆனது. அது ஆண் குழந்தை. உறவுகள் வைத்தியசாலைக்கு வந்து போயின.

செல்லையாவுக்கு ஒரு வாரம் விடுமுறை.

இருவர் முகத்திலும் பெரிய சாதனைக்கான மன நிறைவு.

பாரட்டுகள், பரிசுகள், ஆறுதல்கள் என வீடு வரும் வரை ஏராளம். பூரிப்பின் தேக்கம்.

“ஏங்க நம்ம புள்ளைக்கு எங்க தாத்தா பெயர வைப்போம்” சௌபாக்கியம் கேட்டாள்.

செல்லையா விடுவாரா “ஏ எனக்கு தாத்தா இல்லையா.? இல்லாட்டி அவருக்கு பெயர் இல்லையா.?”

இது சண்டையல்ல பிள்ளை பாசம்.

“ஏம்மா இங்க பாரு. நமக்கும் வச்சிருக்காங்க எங்க அம்மா அப்பா..செல்லையா சௌபாக்கியமுன்னு. நம்ம காலத்துல இதெல்லாம் நல்ல பெயர் தான். இவன் வளர்ந்து பெரியாளாகக்குள்ள இவனுக்கு ஏத்தப் பெயரா இருக்கணும் தானே! சொல்லு பார்ப்போம்.

தவமா தவமிருந்து இவன பெத்து எடுத்து என்னாத்துக்கு நம்ம தாத்தா பாட்டன் பேரு.”

“கடையில முதலாளி எழுத்து பார்த்து நல்ல பெயரா சொல்றேனாரு. அதுல நம்ம ரெண்டு பெருக்கும் பிடிச்ச பெயரா வைப்போம் சரியா?..... “

செல்லையா புரியவைத்தார்.

சௌபாக்கியமும் ஏற்றுக் கொண்டாள்.

பெயர் முடிவானது அபிலாஷன்.!

முதல் அழுகை, முதல் சிரிப்பு, முதல் வார்த்தை, முதல் நடையென்று அத்தனையும் சௌபாக்கியம் மனத்துக்குள் படம் பிடித்து வைத்துக் கொண்டாள்.

தினம் தினம் சந்தோஷம், எதிர்பார்ப்பு கனவுகள் பிள்ளையின் அழுகை, சிரிப்பு என வீடே கோயிலாய் மாறியிருந்தது.

“ஏங்க நம்ம புள்ளைய டவுன் ஸ்கூல்ல தான் போடணும். நல்லா படிக்க வைக்கணும். உங்கள மாதிரியே பொறுப்புள்ளவனா சுறு சுறுப்பானவனா வளர்க்கணுங்க” இது சௌபாக்கியத்தின் எதிர்பார்ப்பு. பல பதில்களும் ஆலோசனைகளும் செல்லையாவிடமிருந்து வந்து சேரும்.

அபிலாஷனும் வளர்ந்து கொஞ்சம் பெரியவனான். படிப்பிலும் ஆர்வம் காட்டினான். படிப்பையும் முடித்தான். வீட்டுக்கு பொறுப்பானாவனாய் வளரத்து வங்கினான். வீட்டு வேலைகளையும் பகிர்ந்து கொண்டான். அம்மா, அப்பா, பிள்ளை என வீடு சந்தோஷங்காவாக இருந்தது.

செல்லையாவின் சம்பளத்தில் மகனுக்கும் கொஞ்சம் பணத்தை மாதா மாதம் வைப்பிலிட்டார்.

ஒரே பிள்ளை. அதுவும் தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை. நல்ல மனைவியாகவும் நல்ல தாயாகவும் நடந்து கொண்டாள் சௌபாக்கியம்.

நாளடைவில் அபிலாஷனும் தனக்கென ஒரு வேலையும் தேடிக் கொண்டான். அது நகரத்தில் உள்ள ஒரு தகவல் தொடர்பாடல் நிலையம். ஆரம்பத்தில் அப்பாவை போலவே சம்பளப் பணத்தை அம்மாவிடம் கொண்டு வந்து தருவான். தன் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்வான். நாட்கள் செல்லச்செல்ல சில நண்பர்களும் பழக்கமானார்கள். நண்பர்களைத் தேடிக் கொள்வது நல்லது தான். அதுவே ஒருவனின் குணவியல்புகளை மாற்றி குடும்பத்துள்ளான நேசத்தில் விஷத்தை கலக்கும் என்றால்,

அது தான் அபிலாஷனின் வாழ்வில் நடந்தது. தொழில் வருமானத்தை மட்டும் தர வில்லை. நண்பர்களையும் தந்தது. நல்ல நண்பர்களாய் இருந்தால் பரவாயில்லை. இவர்கள் குடி பழக்கம் கொண்டவர்கள். பெற்றோர்களைக் கனம் பண்ணாதவர்கள். கூடுவாரோடு கூடி அபிலா‌ஷனும் அவர்கள் பழக்கத்துக்கு உள்ளானான்.

அவைகள் அப்பாவுக்கு இல்லாத பழக்கங்கள்.

“மச்சான் வா மச்சான் ப்ரன்ட் ஒருத்தனோட பார்ட்டி ஒண்ணு இருக்கு வேல முடிந்து போயிட்டு வருவோம்” தன் நண்பன் ஒருவன்.

“இல்ல. வீட்டுக்கு வெள்ளனா போகணும். அம்மா பார்த்துக்கிட்டு இருப்பாங்க”

அபிலாஷன் பதில் சொன்னான்.

“மச்சான் என்ன எந்த நாளுமா லேட்டாகி போற. ஒரு நாளைக்கு லேட்டாகி போனா ஒண்ணும் குறஞ்சி போகாது” மீண்டும் அவன் நண்பன் சொன்னான்.

அபிலாஷன் மறுத்தான். மறுப்புக்கு இடம் இல்லை. மனமும் இடம் கொடுத்தது.

இரவு பத்து மணி தாண்டி வீடு வந்தான் அம்மா விழித்திருந்தாள். அப்பா அசதியில் தூங்கியிருந்தார்.

“வா.. அப்பா என்ன இவ்வளவு நேரம் நான் நல்லா பயந்திட்டேன்” அம்மா சொல்லிக் கொண்டே உள்ளே போனாள்.

“சரி சரி முகத்த கழுவு உனக்கு புடிச்சமாதிரி தோசை ஊத்தி வச்சிருக்கேன் சாப்பிடலாம்”

“அது வந்து அம்மா பசியில்ல வெளியில் ப்ரன்ட்சுகளோட சாப்பிட்டு வந்திட்டேன். நீ போயிட்டு தூங்கு” அபிலாஷன் சொன்னான் அம்மா பட்டினியாய் படுத்தாள். இந்தப் போக்கினை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் பழக்கப் படுத்திக் கொண்டான். ஆரம்பத்தில் முழுமையாக அம்மா கைக்கு போன சம்பளம் இப்பொழுதெல்லாம் சொசங்களாயின. சில வேலைகளில் வீட்டுக்கு வராமல் நண்பர்களுடனேயே இருந்தும் விடுவான்.

அம்மாவின் கண்ணீர் அப்பாவின் கண்டனம். வீடு அமைதியிழந்து போனது. அப்பா பொறுமை இழந்தார். வாக்குவாதங்கள், கோப தாபங்கள் எனக் குடும்ப உறவில் விரிசல். அப்பா மனம் நொந்து அதே வேதனையில் மண்வாசம் கொண்டார். அம்மா தனிமரம் ஆனாள். தன் கணவரையும் மகனையும் நினைத்து தினம் தினம் புலம்பத் துவங்கினாள் சௌபாக்கியம். அபிலாஷன் வீடு வருவதையும் குறைத்துக் கொண்டான்.

நாளடைவில் அபிலாஷனை உரிமைக் கொண்டாட ஒருத்தி வந்தாள். அவளையும் அழைத்துக் கொண்டு ஒரு நாள் அபிலாஷன் வீடு வந்தான்.

“அம்மா, அம்மா! குரல் கேட்டு அம்மா ஆசை ஆசையாய் ஓடி வந்தாள்.

“வாராசா.. எப்படி இருக்க, சாப்பிட்டியா.. ஏன் கொஞ்ச நாளா வீடு வரல? பல கேள்விகள் ஒரு பக்கம் மௌன பதில்கள் மறு பக்கம்.

“ அம்மா இவ நா கட்டிக்கிட்டவ கமலா. டவுன்ல தான் வீடு என் ப்ரன்ட் ஒருத்தனோட அக்கா”அறிமுகப்படுத்தினான்.

“அதுவும் நல்லதா போயிருச்சி ராசா. எனக்கும் இப்ப முன்ன மாதிரி வேல கீலன்னு செய்ய முடியல. இப்ப என்னா அது தான் ஏ மருமக வந்திருக்காளே இனி கஷ்டப்படாம இருக்கலாம்”

அம்மா சந்தோஷப்பட்டாள்.

“ அட நா வேற வாசல்ல வச்சு.”

“முதல்ல உள்ள வாங்க. சாப்பாடு சரி பண்றேன் புள்ள சாப்பிட்டிச்சா இல்லையானு தெரியல” தன்னையும் மறந்து ஓடினாள்.

“என்னங்க இது வீடு இப்படி இருக்கு! கொஞ்சங்கூட துப்பரவு இல்ல.. போட்டது போட்டபடி இருக்கு” கமலா கேட்டாள்.

“அம்மா தனியா தானே இருக்கு. எங்க இதெல்லாம் செஞ்சி தொலைக்கப் போவுது. நீ வா உள்ள”

அவனின் பலவீனத்தைப் பயன் படுத்தி தாய்ப் பாசத்துக்கு அக்கினிப் பரீட்சை வைத்தாள் கமலா.

அம்மா தெய்வத்திடம் முறையிடுவதோடு முடங்கிப் போனாள். அப்பா சாவுக்குப் பின் சிறிது அமைதி காத்திருந்த வீட்டில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை.

வந்தவள் தானுமொரு தாயாக தயாராகவிருந்தாள். இருந்தும் அபிலாஷனின் அம்மாவை அவள் அலட்சியமாக நடத்தினாள்.

ஒரு நாள் விடிந்தது. மாமியாருக்கும் மருமகளுக்கும் வாக்கு வாதம். இரண்டு மூன்று பாத்திரங்கள் சுவரோடு முட்டி மோதின. அபிலாஷன் கண்டு கொள்ள வில்லை.

கமலா ஓடி வந்தாள்.

“ உங்க அம்மா இந்த வீட்டுல இருந்தா நா எங்க வீட்டுக்கு போயிருவேன்.

எப்ப பாரு வருத்தமா இருக்கு அத தா, இத தா, மருந்து வாங்கிட்டு வா, கறிக்கு உப்பு கூட போடாத உறப்பு கூட போடாத. வாயி வெந்திருக்கு அது வெந்திருக்குன்னுச்..சீ அம்மா இது இல்லாட்டி மூச்சு வாங்க கத்தினாள். அபிலாஷன் கமலாவுக்கு கட்டுப்பட்டான்.

இது காதல் போட்ட தடுப்பு. பாசம் தந்த அம்மாவுக்கு மகனும் மருமகளும் கொடுத்த பரிசு முதியோர் இல்லம் அனுப்புவதற்கான ஏற்பாடு. அம்மாவுக்கு பரிசும் கிடைத்தது.

பாவம் அம்மா ஓரமானாள். மகனின் வருகையை தினமும் எதிர்ப்பார்த்தாள் சௌபாக்கியம். தினமும் ஏமாற்றம். கூடவிருந்தவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள் சௌபாக்கியம் உண்மைகளை மறைத்தாள்.

யார் எது கேட்டாலும்.. “ஒரே புள்ளைங்க..கலியாணம் வேற கட்டிட்டான். எனக்கும் வருத்தம். செலவு கூட தானேங்க, எடுக்கிற சம்பளம் காணாது. அதுல நா வேற நின்னு ஏன் கரச்ச கொடுக்கணும். அது தான் நானும் கொஞ்ச நாளைக்கு இங்க வந்திட்டேன். எல்லாம் சரியாகிரும். அப்புறம் சிங்க குட்டி மாதிரி என் மகன் வந்து கூட்டிக்கிட்டு போயிருவான்”.

இது அம்மா சொல்லும் பதில்.

ஆனாள் நிஜம் அவளுக்கு மட்டும் தான் தெரியும். அபிலா~னின் மனைவிக்கு பிரசவ காலம். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள். முதல் பிரசவம் என்பதால் பகீரதப் பிரயத்தனம். பெண்குழந்தை. மனைவி களைத்துப் போய் கிடந்தாள். அசதி.

“என்னா. ரொம்பக் க‌ஷ்டமா..?”

வாஞ்சையுடன் கேட்டான்.

“ம்..! உயிர் போயிட்டு உயிர் வந்துச்சி” “அப்படியா?”

அர்த்த புஷ்டியுடன் கேட்டான் அபிலாஷன்.

இரண்டு நாட்களுக்குப் பின் தாயையும் பிள்ளையையும் அழைத்துச் செல்ல ஏற்பாடானது.

அபிலாஷனின் மனைவியை பொறுத்தவரை அவள் அம்மா வீடு போவது அவள் திட்டம்.

ஆனால். அவர்களைச் சுமந்த முச்சக்கரவண்டி வேறு வழியே போக முற்படவே கமலா கேட்டாள்.

“எங்க போறோம்.?”

“ம்.. வா தெரியும்”

முச்சக்கரவண்டி அம்மா தங்கியிருந்த முதியோர் இல்லத்துக்கு முன் நின்றது.

அபிலாஷ் குழந்தையை கேட்கிறான். மனைவி குறுக்கிடுகிறாள்.

“என்னாங்க. இது. எங்க அம்மா வீட்டுக்கு போகாம இங்க வந்து நிற்கிறிங்க?” கோபத்துடன் கேட்டாள்.

“முதல்ல நீ பிள்ளைய தா”

“முடியாதுங்க”

மறுத்தாள் மனைவி.

அபிலாஷன் கோபத்துடன் பிள்ளையை வாங்கி எடுத்துக் கொண்டு அம்மாவைத் தேடி ஓடினான். அம்மா வாசலில் நின்றிருந்தாள். அபிலாஷன் மௌனமாய் அம்மாவைப் பார்த்தான்.அவள் கண்களில் இன்னும் அதே பாசம் தான். பார்வை மாற வில்லை. பிஞ்சுக் குழந்தை அம்மாவின் கைகளுக்கு மாற்றப்பட்டது.

அம்மா வாஞ்சையோடு தூக்கி எடுக்கிறாள். கொஞ்சுகிறாள். நெஞ்சோடு அணைக்கிறாள்.

முச்சக்கரவண்டியில் இன்னொருவருக்கும் இடம் பகிரப்பட்டது.

“என்னாங்க இது நம்ம அம்மா கையில முதல்ல பிள்ளைய கொடுக்கணும்னு இருந்தேன்.. உங்க அம்மா கையில பிள்ளைய கொடுத்தது மட்டுமில்லாம வண்டியில வேற. இன்னும் மூன்று நாள்ள தீபாவளி வேற.தொடர்ந்து கொண்டு போனாள். அபிலாஷன் குறுக்கிட்டான்.

“என்னவாம் இப்ப! நான் பொறக்கறப்பவும் எங்கம்மாவுக்கு உயிர் போயிட்டு தானே வந்திருக்கும் ” அழுத்தமாக சொல்கிறான் அபிலாஷன்.

அவன் கண்களில் நீர்ப்பொடிசல்.

மனைவி வெறித்துப் பார்க்கிறாள். முச்சக்கரவண்டி சாரதி சாடையாய் பார்க்க, அம்மா குழந்தையில் மூழ்கிப் போயிருந்தாள். அப்போது தான் கமலாவுக்கு வைத்தியசாலையில் தான் சொன்ன வார்த்தை ஞாபகம் வந்தது. ‘உயிர் போயிட்டு உயிர் வந்துச்சு’ குழந்தை கிடைத்தவுடன் அபிலாஷனிடம் பேசிய முதல் வார்த்தை.

அவள் மனதுக்குள் நினைத்துப் பார்த்தாள். எங்கோ இடிப்பது போலிருந்தது.

முச்சக்கரவண்டி அபிலாஷனின் வீடு வந்து நின்றது.

“தம்பி! பேத்திய புடிப்பா. புள்ளய பக்குவமா கூட்டிக்கிட்டு வாறேன்” சொல்லி விட்டு குழந்தையை அபிலாஷனிடம் நீட்டுகிறாள்.

மருமகள் மாமியாரின் கரங்களைப் பற்றுகிறாள். இறுக்கிப் பிடிக்கிறாள். அழுத்தமான பிடிப்பு. புரிதலின் துடிப்பு. இறங்குகிறாள் வண்டியை விட்டு.

ஆனால்..

ஏறிக் கொள்கிறாள் மாமியாரின் நெஞ்சைத் தொட்டு. அபிலாஷன் இரட்டைச் சந்தோஷத்தில் மிதக்கிறான். வீட்டுக்கு குழந்தை மட்டும் வரவில்லை.

கூடவே மனமாற்றமும் வந்திருக்கிறது.

புதிதாய் ஒரு தீபம் புரிந்துணர்வினால் சுடர்விட ஆரம்பிக்கிறது வீட்டுக்குள். 

Comments