தேயிலை விற்பனை நிலையத்தை திறந்துவைத்த முத்தம்மா! | தினகரன் வாரமஞ்சரி

தேயிலை விற்பனை நிலையத்தை திறந்துவைத்த முத்தம்மா!

தேயிலைத் தோட்டங்கள் இன்றும் பசுமையாக இருப்ப தற்கு காரணமாக இருந்த முதிய தொழிலாளர்களை கெளரவித்திருக்கிறது புசல்லாவ பெருந்தோட்ட கம்பனி. வயது முதிர்ந்த நம் மூத்தோரை அவர்களது பிள்ளைகளே கண்டுகொள்வதில்லை. சில முதியோர் தம் பிள்ளைகளால் கைவிடப்பட்டு நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்படும் செய்திகளை பார்த்திருக்கிறோம். பிள்ளைகளே அப்படி இருக்கும்போது தோட்ட நிர்வாகங்கள் கரிசனை காட்டுமா? எனினும் புசல்லாவ பெருந்தோட்டக்கம்பனி தேயிலை விற்பனை நிலையமொன்றை 95 வயதான சோமசுந்தரம் முத்தம்மா நாடா வெட்டி திறந்து வைத்துள்ளார்.

நம் முன்னோர் காலங்காலமாக வாழ்ந்துவந்த பல தோட்டங்களின் நிர்வாகங்கள் மாறினாலும் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை காணமுடியவில்லை. பெருந்தோட்டங்களின் 50 வருடங்களுக்கு மேல் வேலைசெய்து ஓய்வுபெற்றுள்ள முதியவர்களால் அப்போது நாட்்டப்பட்ட தேயிலைக் கன்றுகளே தற்போது செடிகளாக வளர்ந்திருக்கிறது. அதனாலயே இன்று தேயிலைத்தோட்டங்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றது. இதற்கு காரணமாக இருந்த இவர்களை மறந்துவிடக்கூடாது என எண்ணிய புஸ்ஸல்லாவ பிளாண்டேசன் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக கண்டி நுவரெலியா பிரதான வீதியில் ரொத்சைல்ட் தோட்டத்தில் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் இலங்கை தேயிலையை இலகுவாக கொள்வனவு செய்யும் வகையில் புதிதாக தேயிலை விற்பனை நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு எந்தவொரு நிறுவனத்தின் உயர் அதிகாரியோ அல்லது அரசியல்வாதியோ பிரதம அதிதியாக அழைக்காமல் இத்தோட்டத்தில் தொழில் புரிந்து ஓய்வுபெற்ற 95 வயதுடைய சோமசுந்தரம் முத்தம்மா என்ற அம்மணியை அழைத்து திறந்து வைத்தமை அனைவரையும் ஒருகனம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந் நிகழ்வில் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சமிந்த சேனாரத்தனவுடன் இணைந்து தோட்ட முகாமையாளர்கள், உத்தியோகஸ்தர்கள் உட்பட வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டார்கள். மலையகத்தில் தேயிலை உற்பத்தித்துறையில் பாரிய வீழ்ச்சியையே தோட்ட நிர்வாகங்கள் அண்மைக் காலமாக காட்டி வருகின்றனர்.

இதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிநோக்கிவரும் இன்னல்கள் யாவரும் அறிந்த விடயம். இவ்வாறான நிலையில் பல தோட்டங்கள் மூடப்பட்டு வருகின்றது. இதனால் எதிர்காலத்தில் தேயிலை உற்பத்தித்துறை கேள்விகுறியாகியுள்ள நிலையில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும் புஸ்ஸல்லாவ பிளாண்டேசனுக்கு சொந்தமான தோட்டங்கள் மீள் எழுச்சி பெற்று வருகின்றது.

கைவிடப்பட்ட தேயிலை மலைகள் மீள் துப்பரவு. தேயிலை கன்றுகள் நாட்டல், வேலைக்கு புதியவர்கள் இணைத்துக் கொள்ளல், முறையான வேலை வழங்கள், தொழிலாளர்கள் சார் நலன்புரி சேவைகள், வீடமைப்பு, தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்ய பாரிய முதலீடுகள், குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்டத்தில் படித்த இளைஞர்களுக்கும் முன்னுரிமை போன்ற இன்னோரன்ன வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு தோட்ட நிர்வாகங்கள் முறையாக நடந்துக் கொள்ளுமானால் மலையகத்தின் பெருந்தோட்டங்கள் அபிவிருத்தியடையும். மக்களும் நிம்மதியாக வாழ்வார்கள். ஆகவே, இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தோட்ட நிர்வாகத்தை நாமும் பாராட்டுவோம். மேற்படி புஸ்ஸல்லாவ பிளாண்டேசன் நிறுவனம் தற்போது “டம்ரோ” நிறுவனத்தினால் நிறுவகிக்கபட்டு வருவது குறிப்பிடதக்கது. இந்நிறுவன தலைவரின் சிறந்த வழிகாட்டலே இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க காரணமாக இருப்பதாக அப்பகுதி தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Comments