அபுதாபியில் பாக். தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை | தினகரன் வாரமஞ்சரி

அபுதாபியில் பாக். தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இரண்டாவது தாயகமாகக் கருதப்படும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த எட்டு வருடங்களாக பல்வேறு நாடுகளுடன் 11 டெஸ்ட் தொடரிகளில் விளையாடி ஒரு தொடரிலும் தோல்வியுறாமலிருந்த அவ்வணி கடந்த வாரம் முடிவுற்ற இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற ரீதியில் முதன் முதலாக இழந்தது. மேலும் அபுதாபி மைதானத்தில் இதுவரை 11 போட்டிகள் விளையாடி தோல்வியுறாதிருந்த பாகிஸ்தான் அணியின் சாதனையை கடந்த வாரம் இலங்கை அணி முறியடித்தது.

இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கு பின் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பயணமாக இலங்கை அணி கட்டாயமாக வெற்றிபெற வேண்டும் என்ற இக்கட்டான நிலையிலேயே இருந்தது. பயிற்சியாளர் முகாமையாளர். தேர்வுக் குழு என அனைவரும் நமது வீரர்களுடன் இருந்து அவ்வப்போது ஆலோசனைகளையும், நுணுக்கங்களையும் வழங்கி இத்தொடரில் சாதிக்க வேண்டும் என்று முழுமூச்சாக ஈடுபட்டனர். இந்த வெற்றி புதிய தெரிவுக் குழு மற்றும் நிர்வாகம், பயிற்சியாளர் என அனைவரின் முயற்சி என முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளனர்.

இத் தொடரில் அதிர்ஷ்டவசமாக இலங்கை அணி இரு போட்டிகளிலும் நாணயச் சுழற்சியிலும் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது அவ்வணிக்கு சாதகமாய் அமைந்தது. இவ்விருபோட்டிகளில் முதல் நாளில் மட்டுமே பெரிதாக விக்கெட்டுக்கள் விழாமல் சுமாரான ஓட்டங்களை பெறக் கூடியதாக இருந்ததைக் காணலாம். முதல் போட்டியில் சந்திமாலினதும், திமுத் கருணாரத்னவினதும் நிதானமான ஆட்டமும் இலங்கை அணியின் ஓட்டக்குவிப்புக்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது போட்டிலும் இவர்கள் சிறப்பாத் துடுப்பெடுத்தாடியிருந்தனர். இத்தொடரின் போது திமுத் கருணாரத்ன 3000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். மேலும் இவர் இந்த வருடம் 10 போட்டிகளில் 3 சதம், 3 அரைச்சதம் அடங்கலாக 933 ஓட்டங்களைப் பெற்றமை இவ்வருடம் ஒரு வீரர் பெற்ற 3வது கூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். இவ்வரிசையில் முதலிரு இடங்களிலுள்ள தென்னாபிரிக்க வீரர்களான எல்கர் 1097 ஓட்டங்களையும், அம்லா 942 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இலங்கை பாகிஸ்தான் தொடரில் இரு அணிகளும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிற்கினாலும் ஆடுகளம் சுழற் பந்து வீச்சாளர்களுக்கே சாதகமாக அமைந்திருந்தது. தொடரில் அவ்வப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் சுழற் பந்துவீச்சாளர்களே கூடுதலான ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுளைக் கைப்பற்றியுள்ளனர். இரு அணிகளினதும் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களான ரங்கன ஹேரத், யஸீர் ஷா இருவரும் தலா 16 விக்கெட்கள் வீதம் கைப்பற்றியுள்ளனர். இத்தொடரின் முதலாவது போட்டியின் போது ரங்கன ஹேரத் 400 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இது இடதுகை சுழற் பந்து வீச்சாளர் ஒருவர் பெறும் முதல் 400 விக்கெட்டுகளாகும். இந்தியத் தொடரின் போது விமர்சனத்துக்குள்ளான டில்ருவன் பெரேராவும் இத் தொடரில் மொத்தமாகப் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவர் இரண்டாவது போட்டியின் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்கெட்டுகளைக் கைப்பற்றி அப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறக் காரணமாயிருந்தார்.

பாகிஸ்தான் சுழற் பந்து வீச்சாளர் யஸீர் ஷா இத்தொடரின் போது இரு சாதனைகளைப் புரிந்துள்ளார். முதல் டெஸ்டில் வீழ்த்திய லஹிரு திரிமான்னேயின் விக்கெட் இவரின் 150 விக்கெட்டாகும். இது குறைந்த டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் கிளேரி க்ரிமோட் 28 போட்டிகளில் 150 விக்கெட் சாதனையை யஸீர் ஷா 27 போட்டிகளில் முறியடித்துள்ளார். மேலும் இவர் தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதுவரை இச்சாதனையை எந்தப்பந்து வீச்சாளரும் புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் இப்பின்னடைவுக்கான காரணமாக அவர்களின் துடுப்பாட்டமே அமைந்தது. இத்தொடரில் மொத்தம் 3 சதங்களே பெறப்பட்டுள்ளன. (இலங்கை- 2 பாகிஸ்தான் -1) இரண்டாவது போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனானவும் தெரிவான ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன ஒரு சதம், ஒரு அரைச் சதம் அடங்கலாக 306 ஓட்டங்கள் பெற்றுள்ளார். இலங்கை அணியின் இவ்வெற்றிக்கு அவ்வணியின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும். தேவையான போது நிரோஷன் திக்வெல்ல, டில்ருவன் பெரேரா ஆகியோர் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினர்.

ஆனால் இலங்கை அணி விளையாடிய இருபோட்டிகளிலும் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாட்டம் மோசமானதாகவே இருந்தது. முதல் போட்டியில் 138 ஓட்டங்களுக்கும், இரண்டாவது போட்டியில் 100 ஓட்டங்ளுக்கும் குறைவாகவே ஆட்டமிழந்திருந்தது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் இத்தொடர் முழுவதும் தயங்கித் தயங்கியே துடுப்பெடுத்தாடியிருந்தனர். ஆரம்ப ஜோடியான அஸ்லம்-மசூட் முதல் போட்டியில் முதல் இன்னிஸ்ஸில் மட்டுமே சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.

அடுத்த இன்னிங்களில் சொத்பியிருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் பாபர் அஸாம் இத்தொடர் முழுக்க பிரகாசிக்கவில்லை. அவர் 4 இன்னிங்சுகளிலும் 36 ஓட்டங்களையே பெற்றுள்ளார். அவர் கடந்த மேற்கி்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் பிரகாசிக்கத்தவறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் மதிய இடைவேளை, தேநீர் இடைவேளை, குளிர்பான இடைவேளைகளுககான நேரம் நெருக்கும் போது மன அழுத்தங்களுக்குள்ளாகிறார். கடைசியாக அவர் விளையாடிய போட்டிகளில் அநேகமான ஆட்டமிழப்புகள் இவ்வேளைகளிலேயே நிகழ்ந்துள்ளது.

அறிமுக வீரர் ஹரிஸ் சொகைல் இத்தொடரில் நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடினார். இவர் இன்னுமொரு மிஸ்பாவாக மிளிர்வார் என எண்ணத்தோன்றுகின்றது. புதிய தலைவர் சப்ராஸ் அஹமட் டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக அனுபவமற்றவர் போல் விளையாடுகிறார்.

மேலும் முடிவுகள் எடுக்கும் போது பதற்றமடைகிறார். டி. ஆர். எஸ். முறை கேட்கும் போதே அவரின் பதற்றத்தைத் தெளிவாக உணர முடிந்தது. இத்தொடரில் பாகிஸ்தான் சார்பாக ஒரே சதம்பெற்ற அஷாத் ஷபீக்கின் துடுப்பாட்ட வரிசை மாற்றம் அவரின் துடுப்பாட்டத்தில் தளர்வை ஏற்டுத்தியுள்ளது. மேலும் அவர் இரண்டாவது போட்டியின் போது இரண்டாவது இன்னிஸ்ஸில் பெற்ற சதம் டெஸ்ட் போட்டயில் ஒரு வீரர் நான்காவது இன்னிங்ஸில் பெறும் 9வது சதமாகும். இது டெஸ்ட் போட்டி வரலாற்றில் 4வது இன்னிங்ஸில் வீரர் ஒருவர் பெற்ற கூடிய சத சாதனையாகும்.

மொத்தத்தில் சப்ராஸ் அஹமடின் தலைமையில் முதலாவது டெஸ்ட் தொடரை இழந்தது பாகிஸ்தான் அணி. டெஸ்ட் துடுப்பாட்டத்தூண்களான மிஸ்பா, யூனிஸ் ஜோடி இல்லாத குறை இத்தொடரில் காணக்கூடியதாக இருந்தது. அதை நிவர்த்தி செய்ய பாகிஸ்தான் அணிக்கு இன்னும் சில காலம் எடுக்கலாம்.

எம்.எஸ்.எம்.ஹில்மி 

Comments