சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நெஹ்ரா ஓய்வு | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நெஹ்ரா ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா நவம்பர் 1-ம் திகதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனது முடிவை அணி நிர்வாகத்துக்கும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, தலைவர் விராட் கோலி ஆகியோருக்கும் தெரிவித்து விட்டார். அது மட்டுமின்றி அடுத்த ஆண்டில் அவர் ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

38 வயதான நெஹ்ரா, 1999-ம் ஆண்டு முகமது அசாருதீனின் தலைமைத்துவத்தில் அறிமுகம் ஆனார். 17 டெஸ்டில் விளையாடி 44 விக்கெட்டுகளும், 120 ஒரு நாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளும், 26 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 34 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

அவுஸ்திரேலிய 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் நெஹ்ரா இடம் பெற்று இருந்த போதிலும் முதல் இரு ஆட்டங்களில் அவருக்கு களம் காண வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நவம்பர் 1-ம் திகதி நடக்கிறது. சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி விட்டு ஓய்வு பெற வேண்டும் என்பதே நெஹ்ராவின் விருப்பமாகும். 

Comments