மகள் கணிகையானதற்கு என் தங்கையே காரணம் | தினகரன் வாரமஞ்சரி

மகள் கணிகையானதற்கு என் தங்கையே காரணம்

வசந்தா அருள்ரட்ணம்

அன்றுநான் சிறைக்கைதிகளை சந்திப்பதற்காக வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன். அப்போது வாசலில் 50 வயது மதிக்கத்தக்க தாயொருவர் கால்களில் தேய்ந்த பழைய செருப்புடனும், சாயம் போன பழைய சாரியை ஏதோ பெயருக்கு சுற்றிக்கொண்ட மாதிரி அணிந்து கொண்டும், ஏக்கத்துடன் சிறைச்சாலை வாசலில் காத்திருந்தார். அவருடன் விசேட தேவையுடைய 15 வயதுடைய சிறுவனொருவனும் இருந்தான்.

நான் அவரிடம் சென்று யாரை சந்திப்பதற்காக அம்மா வந்திருக்கின்றீர்கள் என்று கேட்டேன். அவ்வளவு அவருடைய கண்களில் கண்ணீர் மூட்டிக்கொண்டு வந்தது. ஓரிரு நிமிடங்கள் அவர் எதுவுமே பேசவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் தனது மனவேதனையை சட்டென்று விழுங்கியவராய் சிறு புன்சிரிப்புடன் என்னுடன் பேசதொடங்கினார்.

என்னுடைய கணவர் என்னை விட்டுச்செல்ல விதி என் வாழ்வை தட்டிச்சென்றுவிட்டது. அதனால் தான் இன்று நான் இந்த இடத்தில் நிற்கின்றேன். என் மகள் சிறையில் இருக்கின்றாள்.

என்னுடைய கணவர் என்னை விட்டு சென்ற பிறகு பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் பிள்ளைகள் இருவரையும் வளர்த்தேன். எனினும், நான் இருந்த சூழ்நிலை எனக்கு ஏற்றதாய் அமையவில்லை. தனிமையில் பிள்ளைகளுடன் இருந்த என்னைப் பார்த்து பக்கத்தில் இருந்தவர்கள் பலவாறு கதைத்தார்கள். எனவே பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நான் அங்கிருந்து வந்தேன்.

அதன்பின்னர் வருமானத்திற்காக பிள்ளைகள் இருவரையும் சிறுவர் விடுதியொன்றில் பாதுகாப்பாக தங்க வைத்துவிட்டு இறுகிய மனதோடு மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தொழிலுக்காக சென்றேன். போன புதிதில் பரிச்சயம் இல்லாத நாடு, மொழி, பழக்கமில்லாத மக்கள், வீட்டுவேலைகள் என்று சரியாக கஷ்டப்பட்டேன். காலப்போக்கில் எல்லாமே பழகிவிட்டது.

அங்கு சம்பாதிக்கும் பணத்தில் பிள்ளைகளின் செலவுக்கு பணம் அனுப்பினேன். அதுவும் மகன் விசேட தேவையுடைய பிள்ளை என்பதால் அவனுடைய மருத்துவ செலவுகளுக்கு என்று தனியாக பணம் அனுப்பினேன். விடுதியில் உள்ளவர்களும் பிள்ளைகளை அன்பாக பார்த்துக்கொண்டார்கள்.

இவ்வாறு இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. இரண்டு வருடங்கள் முடிவில் நான் இலங்கைக்கு வந்தேன். மகன் என்றால் அப்படியே தான் இருந்தான். மகள் வளர்ந்து பார்க்க அழகாக இருந்தாள். நான் அவர்களையும் அழைத்துக்கொண்டு அம்மாவையும், தங்கையையும் பார்க்க ஊருக்குச் சென்றேன். தங்கை திருமணம் முடித்திருந்தார். என் அம்மா பிள்ளைகளை பார்த்துக்கொள்வதாய் கூறியதால் அம்மாவை கண்டிக்கு அழைத்துவந்து வாடகைக்கு வீடொன்றை எடுத்து தங்க வைத்தேன்.

அதன் பின்னர் சிறிதுநாட்களின் பின்னர் நான் மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டேன். எங்களுக்கு என்று சொந்தமாக வீடொன்றை கட்டுவது என்னுடைய திட்டமாக இருந்தது.

இதனிடையே மகளும் பருவமடைந்தாள். எனக்கு இன்னும் யோசனை கூடியது. அம்மாவுக்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் பணம் அனுப்பினேன். அது என்னுடைய பிள்ளைகளுக்காக மட்டுமே. ஆனால் தங்கையும், அவளது கணவரும் எங்களுடைய வீட்டில் வந்து தங்கியிருப்பது எனக்குத் தெரியாது. அம்மாவும் இதுபற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் இருவரும் எங்களுடைய வீட்டுக்கு வந்த பின்னரே விஷயங்கள் தலைக்கீழாக மாறின.

இதுஇவ்வாறிருக்க அம்மா திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். எனினும் அம்மாவின் இறுதிகிரியைகளுக்கு என்னால் வரமுடியவில்லை. எல்லாமே முடிந்த பிறகு தான் நான் இலங்கைக்கு வந்தேன். அப்போது தான் தங்கையும், அவளுடைய கணவரும் அங்கு தங்கியிருந்தது எனக்கு தெரியவந்தது. நானும் சரி பரவாயில்லை பிள்ளைகளுக்கு துணையாகவிருப்பார்கள் என்று விட்டுவிட்டேன்.

அப்போது மகளும் O/L பரீட்சை எழுதிவிட்டு வீட்டில் இருந்தாள். அவளை நன்றாக படிக்கவைத்து நல்ல வாழ்க்கையொன்றை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எதிர்ப்பார்ப்பாகவிருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் தான் மீண்டும் வெளிநாடு பயணமானேன். எனினும் என்னுடைய எதிர்ப்பார்ப்புக்கள் அனைத்துமே கானல்நீராக மாறியன.

ஒருநாள் என்னுடைய நண்பியொருத்தி இலங்கைக்கு வரும்போது பிள்ளைகளுக்கு என்று சாப்பாடு வகைகளை வாங்கி கொடுத்து அனுப்பியிருந்தேன். அவளும் அதை கொடுக்க எங்களுடைய வீட்டிற்கு போய் இருக்கின்றாள், அப்போது வீட்டில் ஆண்களின் நடமாட்டம் அதிகமாக இருந்திருக்கின்றது. அதனால் வெகுநேரம் அங்கு இருக்க பிடிக்காத அவள் சமான்களை கொடுத்துவிட்டு வந்துவிட்டாள். அதன்பிறகு என்னுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, வீட்டில் நிலைமை அவ்வளவு சரியில்லை, நீ உடனடியாக இலங்கைக்கு வருவது நல்லது என்று கூறினாள்.

ஆனால் எனக்கு உடனடியாக வருவதற்குரிய சூழ்நிலை அங்கு இருக்கவில்லை. தங்கைச்சிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தால் அவள் அதற்கு பதிலளிக்கவில்லை. எனக்கு பைத்தியமே பிடித்து விட்ட மாதிரித்தான். இதுபற்றி கேள்விப்பட்டு ஒரு மாதத்திற்கு பிறகு தான் நான் இலங்கைக்கு வந்தேன். வீட்டிற்கு வந்தால் தங்கைச்சியும், மகனும் மட்டுமே இருந்தார்கள். மகள் இருக்கவில்லை. வீட்டில் நான் வாங்கிய அனுப்பிய எந்த பொருளும் இருக்கவில்லை.

அதுமட்டுமின்றி, மகள் எங்கோ ஓடிப்போய் விட்டாள் என்று தங்கையும், அவளது கணவரும் சொன்னார்கள்.

நான் மகளைத் தேடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்தேன். அவர்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. நானும் என்னால் முடிந்தளவு எல்லா இடங்களிலும் அவளை தேடிச்சென்றேன், எங்குமே மகள் கிடைக்கவில்லை. இறுதியில் அவளை சிறையில் தான் பார்ப்பேன் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை.

மகள் விபசார வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தாள். நான் பல தடவைகள் அவளை சந்திப்பதற்கு சிறைக்கு வந்தேன். எனினும் அவள் என்னை பார்க்கவிரும்பவில்லை. சென்ற முறை தான் என்னை பார்க்க அவள் சம்மதித்தாள்.

அம்மா சித்தப்பா என்னை கஷ்டத்தில் தள்ளிவிட்டார். என்னை பல ஆண்களிடம் விற்று பணம் சம்பாதித்தார். அதனால் தான் வீட்டிலிருந்து தப்பிவந்தேன். ஆனால் எப்படியோ பொலிஸாரிடம் சிக்கிவிட்டேன் என்று கூறினாள். மகளின் எதிர்காலத்துக்காக தான் ஊரை விட்டே வந்தேன். அப்படியிருக்கையில் என்னால் அதைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

அதனால் தங்கைச்சியின் கணவருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று ஆத்திரத்துடன் வீட்டிற்கு வந்தேன். எனினும் நான் வீட்டிற்கு வரும் முன்னரே அவர்கள் இருவரும் எங்கோ தப்பிச்சென்றுவிட்டார்கள். அதனால் அவர்களை பழிவாங்குவதை விடுத்து மகளை சிறையிலிருந்து வெளியே எடுத்து அவளுக்கு புது வாழ்க்கையொன்றை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்.

இந்த சின்ன வயதில் அவள் நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டாள். அது எல்லாவற்றையும் அவள் மறந்து புது வாழ்க்கையொன்றை ஆரம்பிக்க வேண்டும். அதனால் மகளை வெளிநாட்டிற்கு கூட்டிச்சென்று படிக்கவைக்க நினைக்கின்றேன்.

மகனுக்கு எந்தவிதமான சிந்தனையும் இல்லை.

மகனை விசேட தேவையுடையவர்களுக்கான இல்லத்தில் சேர்த்துவிட்டு மகளை அழைத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு செல்லப் போகின்றேன். எனக்கு மகனை நினைத்தால் கவலையாக இருக்கின்றது.

ஆனால் என்ன செய்ய முடியும்? மகளின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்கு இதை விட வேறு வழியில்லை என்றுகூறிவிட்டு அவர் மகனின் தலை வருடியவாறு அழுதார் அந்தத் தாய்.

அவருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற பிராத்தனையுடன் அவரிடமிருந்து விடைபெற்றேன். 

Comments