அரசியல் எதிரிக்கு உவப்பானதை ஏன் செய்கிறீர்கள்? | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் எதிரிக்கு உவப்பானதை ஏன் செய்கிறீர்கள்?

அது ஒரு சனிக்கிழமை தினம், காலை ஏழரைமணி இருக்கும். ஞாயிறு பத்திரிகைக்கு ஏதாவது சூடான செய்தி தேடிப்போட வேண்டும் என பத்துமணியளவில் ஆறுதலாக வரும் பத்திரிகை ஆசிரியர் பரபரப்பார். அதற்கு முன் ஏதாவது தேடி வைத்தால் நல்லது என்று சனி காலையில் வேலைக்கு வரும் தினகரன் செய்தியாளர்கள் தலையை பியத்துக்கொண்டிருப்பார்கள். யாருடன் தொடர்பு கொண்டால் ‘ஹொட்’ நியுஸ் கிடைக்கும்?

அப்போது தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக வருபவர், கை கொடுப்பவர் சௌமியமூர்த்தி தொண்டமான்தான். அவருக்கு நன்றாகவே கோபம், சோடா போத்தலைத் திறந்த மாதிரி வரும். இடம் பார்க்காமல் திட்டி விடுவார். பி.பி. தேவராஜ், சதாசிவம், முத்து சிவலிங்கம், சென்னன் – அனைவருமே அவரிடம் திட்டு வாங்கியவர்கள்தான். ஆனால் சோடா போத்தல் மாதிரித்தான், புஸ்சென வழிந்து முடிந்ததும் கூலாகி விடுவார். அவரிடம் திட்டு வாங்கியவர்களில் எவருமே அப்போதும் சரி இப்போதும்சரி கோபம் கொண்டதில்லை. அதை மோதிரக் கை குட்டாகத்தான் நினைக்கிறார்கள்.

அவருக்கு பத்திரிகையாளர்களை ரொம்பம் பிடிக்கும். அவர்களையும் திட்டுவார். அவர்களுக்கு உறைப்பதில்லை. உடனேயே அணைத்துக் கொள்வார். தமிழ் பத்திரிகையாளர்களைப் போலவே சிங்களப் பத்திரிகையாளர்களுடன் அவருக்கு நேச பாசம் இருந்தது. பிரச்சினைக்குரிய, பற்றி எரியும் என அவரால் எதிர்பார்க்கப்படும் விஷயங்களை சிங்களப் பத்திரிகையாளர்களுடன்தான் பேசுவார். அதன் மூலம் கிடைக்கக் கூடிய எதிர்மறை விளம்பரத்தை அவர் விரும்புவார்.

சனிக்கிழமை காலையில் செய்திதேடி அவருக்கு தொலைபேசி எடுத்தால் மறுமுனையில் அவர்தான் ரிசீவரைத் தூக்குவார். கொஞ்சம் கரகரப்பான குரலில் என்னப்பா என்பார், அழைப்பு எதற்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொண்டே! இந்தப் பக்கமிருந்து, நாளை ஞாயிற்றுக்கிழமை பேப்பருக்கு ஏதாவது செய்தி இருக்கிறதா, ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்போம். “அப்படியா, சரி, இன்னும் ஒருமணித்தியாளத்தில் எடு!” என்று சொல்லி வைத்துவிடுவார். ஒரு மணித்தியாலம் கழிந்து அழைப்பை எடுத்தால், அவரே தான் ரிசீவரைத் தூக்குவார். முதலாம் பக்கத்தில் பிரசுரிக்கிற மாதிரியான ‘ஹொட்’ செய்தி ஒன்று நிச்சயம் கிடைக்கும்!

இதுதான் சௌமிய மூர்த்தியார் பாணி. யாரை எப்படி அணுகினால் என்ன பெறலாம் என்பது அவருக்குத் தெரியும். வடக்கை பிரபாகரனிடம் ஐந்து வருடங்களுக்குக் கொடுத்து விடுங்கள் என்பது போன்ற கருத்துகளை சிங்களப் பத்திரிகைகளிடம் சொல்வார். விஷயம் பற்றி எரியும். ஓரமாக நின்று புன்னகையுடன் வேடிக்கை பார்ப்பார். ஏனெனில் அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி, இராஜதந்திரி. ஜே. ஆர். கடினமான மனிதர், ஒரு மாதிரியான ஆள் என்பது அவருக்கும் தெரியும் ஆனால் ஜே.ஆருடன் நெருங்கப் பழக அவரால் முடிந்தது. சிரித்தபடியே மிரட்டவும் செய்தார். உங்களைத் தாக்கினால் ஓடி விடாதீர்கள், திருப்பித் தாக்குங்கள் என்று அவர் ஜே.ஆர். ஆட்சியில்தான் தோட்டத் தொழிலாளர்களிடம் சொன்னார். ஜே.ஆரிடம் பல காரியங்களை செய்து கொண்டார்.

எண்பதுகளில் பத்திரிகைகள் அவரை ‘கிங்மேக்கர்’ என அழைத்ததற்கு அவரது புத்தி சாதுரியமே காரணமாக இருந்தது. இன்று மலையக அரசியலில் பிரபலமாக இருக்கும் அனைவருமே அவரிடம் கற்றவர்கள்தான்.

தொண்டமானைப் பற்றி, அவரது தொழிற்சங்க மற்றும் அரசியல் ஆகிருதி பற்றி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். சுதந்திரத்தின் பின்னரான இலங்கை அரசியில் வரலாற்றில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் ஒப்பிட்டுப் பேசப்படக்கூடிய ஒரு தலைவராக தொண்டமானை பலரும் கருதுகின்றனர். இன்றைக்கும் சிங்களமக்கள் நன்கறிந்த பெயராகவும் சிங்கள அரசியல் வட்டாரத்தில் செல்வர்க்கு செலுத்தும் பெயராகவும் இது விளங்குகிறது. எழுபதுகளின் ஆரம்பத்தில் தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்ட போது அதற்கான அமைச்சராக விளங்கியவர் ஹெக்டர் கொப்பேகடுவ, அவருக்கு தொண்டமானைப் பிடிக்காது. தன் விவகாரங்களில் அவர் தலையீடு செய்வதாக தொண்டமானைக் கருதினர். ஒரு முறை தன் வெறுப்புணர்வை ஒரு பொதுக் கூட்டத்தில் வெளிப்படுத்தினார், தொண்டமானைத் தூக்கிக் கடலில் எறிவேன்! என்று.

ஜே.ஆர். அரசில் இனவாதம் கக்கிக் கொண்டிருந்தவர் சிறில் மெத்திவ் அவருக்கும் தொண்டமானைப் பிடிக்காது. பின்னர் அவர் செல்வாக்கிழந்தார். நோய் வாய்ப்பட்டார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுமிருந்தார். அப்போது அவரை நலம் விசாரிக்கச் சென்றார் தொண்டமான். தொண்டமானைக் கண்டதும் கண் கலங்கி அவர் கைகளையும் பற்றிக் கொண்ட சிறில் மெத்திவ், ‘உங்களை எவ்வளவோ ஏசிப் பேசியிருப்பேன். ஆனாலும் நீங்கள் நலம் விசாரிக்க வந்திருக்கிறீர்கள். என்னால் பலன் அடைந்தவர்களைத்தான் காணவில்லை’ என்று சொன்னாராம். கடலில் தூக்கி எறிவேன் என்று கொக்கரித்த கொப்பேகடுவ, அடுத்து வந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்து காணாமற்போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

சௌமியமூர்த்தி தொண்டமானிடம் சாமர்த்தியம், மதியூகித்தனம், அரசியல் அணுகுமுறைகள், சாதிக்கும் திறன் என்பன இருந்தன என்றாலும் இவற்றுக்கு மேல் அவரிடம் ஒரு மந்திரக் கோலும் இருந்தது. அது எஸ்.ஜே.வியிடம் இருந்தது. அறிஞர் அண்ணாதுரையிடம், ஜெயலலிதாவிடம் இருந்தது. அந்த மந்திரக் கோல்தான் இன்றைக்கும் சாதாரண மலையக மக்களிடம் செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. தொண்டமானும் தன் காலத்தில் தவறுகள் இழைத்தார். அவர் காலத்தின் பின்னர் இ.தொ.கா தலைமை பல் தவறுகளை, அரசியல் ரீதியான சறுக்கல்களை விட்டது. பிளவுகள் ஏற்பட்டன. பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். இ.தொ.கா தலைமை கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது இ.தொ.கா.வின் செல்வாக்கும் மங்கத் தொடங்கியது.

இது ஏன் நிகழ்ந்தது. என்ன காரணங்கள் என்பதை இங்கே ஆராய்வதற்கில்லை. இ.தொ.காவின் செல்வாக்கு மங்கினாலும் தொண்டமான் என்ற பெயர் அப்படியேதான் மக்கள் மனதில், எம்.ஜி.ஆர், அண்ணாபோல வீற்றிருக்கிறது. இ.தொ.கா. தவறுமேல் தவறு செய்தாலும் அந்த இயக்கத்தை தொண்மான் என்ற பெயர் காப்பாற்றும்! இ.தொ.காவை மூர்க்கமாக எதிர்ப்பவர்கள் கூட சௌமியமூர்த்தியாரை விமர்சிக்க மாட்டார்கள். அவர் ஒரு தலைவர், தேசியத் தலைவர்களில் ஒருவர் தான் என்பதை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.

இலங்கைக் குடிமக்களின் மனதில் ஒரு இடத்தைப் பெற்றுவிட்ட ஒருவரின், மலையக மக்களின் மனதில் ஒன்றாகக் கலந்துவிட்டவரின் பெயரில் நுவரெலிய மாவட்டத்தில் அமைந்திருக்கும் சில நிறுவனங்களில் இருந்து அப்பெயரை அகற்றுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளை தொண்டமான் என்ற பிரமாண்டமான ஆகிருதியின் பின்னணியில் இருந்ததுதான் பார்க்க வேண்டும்.

ஸ்ரீமா பண்டாரநாயக்காவின் முற்சியில்தான் இலங்கைக்கான சீன அன்பளிப்பாக ஒரு சர்வதேச மண்டபத்தை அன்றைய சீனத் தலைவர் மாசேதுங் வழங்கினார். இத்தனை ஆண்டுகளின் பின்னரும் அது ஒரு பிரமாண்ட மண்டபமாகத்தான் நின்று கொண்டிருக்கிறது. அதற்கு தன் கணவரும், முதலாளித்துவ போக்கில் இருந்து நாட்டை சோஷலிச பாதைக்குத் திருப்பியவருமான எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கவின் பெயரை ஸ்ரீமாவோ சூட்டினார். அப்பெயரை இன்றுவரை யாரும் மாற்றவில்லை. BMICH என்ற பெயர் அப்படியே நிலைத்து நின்று விட்டது. சில பெயர்களுக்கு சில தனித் தன்மைகள் உள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவையை இன்றைக்கும் அப் பெயர் வாயில் வராமல், ‘ஏயர்லங்கா’ என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுநாயக்க விமான நிலையம் என்று மக்கள் அழைத்தாலும் அதன் அதிகாரப் பூர்வமான பெயர் BIA தான். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம். ஜே. ஆருக்கு நன்றிக் கடனாக ஜப்பானிய அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய ஆஸ்பத்திரியின் பெயர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆஸ்பத்திரிதான். சந்திரிகாவோ, மஹிந்தவோ அதை மாற்ற விரும்பவில்லை. ஏனெனில், கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் அவர் ஒரு தேசியத் தலைவர். மஹிந்த ராஜபக்ஷவின் மீதும் அவர் குடும்பத்தவர் மீதும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றபோதிலும் அவர் பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் எந்த நிறுவனத்தின் பெயரையும் இன்றைய ஜனாதிபதி மாற்றுவதற்கு எத்தனிக்கவில்லை.

புது டில்லி பாலம் விமான நிலையம் இந்திரா காந்தியின் மறைவின் பின்னர் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது. பா.ஜ.க.வின் கடும் அரசியல் வைரியாக காங்கிரஸ், குறிப்பாக நேரு குடும்பம், விளங்குகின்ற போதிலும், நரேந்திர மோடி அப் பெயரை மாற்ற முயலவில்லை. மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தை அண்ணாவின் பெயரில் மாற்றினார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் அண்ணாவின் பெயரையோ அவரது புகைப்படத்தையோ அகற்றப் போவதில்லை. ஏனெனில் அண்ணா என்ற பெயரையோ அல்லது தமிழகத்தில் பெரியார் பெயர் சூட்டப்பட்ட நிறுவனத்தில் இருந்து பெரியாரின் பெயரையோ நீக்கினால் அச் செயல் தமிழர்களின் அடி மடியில் கை வைத்த மாதிரியாகிவிடும். ஏனெனில் இவர்கள் கட்சி, சமய பேதங்களுக்கு, எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்த் தலைவர்கள். இவ்வாறான செயல், குளவிக் கூட்டில் கை வைத்த மாதிரி முடிந்து விடலாம்!

தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் என்றிருந்ததை பூல் பேங்க் தொழிற்பயிற்சி நிலம் என்றுமாற்றி இருப்பதும் தொண்டமான் விளையாட்டு அரங்கு என்றிருந்ததை நீக்கியிருப்பதையும், பிரஜாசக்தியில் காணப்பட்ட தொண்டமான் உருவத்தை நீக்கியிருப்பதும் இன்று மலையகத்தில் ஒரு பிரச்சினையாக உருவாகி இருக்கிறது. பிரஜாசக்தி ஊழியர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அங்கு தொழில் செய்பவர்கள் கூறுகின்றனர். தொண்டமான் கலாசார நிலையம் என்ற பெயரும் நீக்கப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது.

அமைச்சர் திகாம்பரம் எடுத்திருக்கும் இந்த முடிவு தவறானது. தமிழ் மக்களின் பொதுப் புத்தியில் கை வைப்பதாகவே இது இருக்கும் என்பதை பக்கச்சார்பின்றி மக்கள் குரலாகச் சொல்வதற்காகத்தான் மேலே இத்தனை உதாரணங்களை காட்ட வேண்டியதாயிற்று. ஆபிரகாம் லிங்கன் தான் சார்ந்த வெள்ளையர் இனத்துக்கு சமனானவர்களே அவர்களால் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட கறுப்பர்கள் என்று கருதினார். அவர்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்தார்.

இது வெள்ளையர்களுக்கு உவப்பானதாக இருக்க முடியாது. ஆனாலும் அன்றும் சரி, இன்றும்சரி, ஆபிரகாம் லிங்கனை உச்சாணிக் கொம்பில் வைத்துத்தான் அமெரிக்கர்கள் போற்றுகிறார்கள்.

இந்த விசாலமான மனப்பான்மை நமக்கு வேண்டும். பெரும் சிந்தனை மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நாம் கட்சி ரீதியாகவும், தனிப்பட்ட விரோதங்கள் காரணமாகவும் அரசியல் பலத்தைப் பாவித்து பெயர்களை நீக்குவது சிறுபிள்ளைத் தனமானதாகவே தெரிகிறது. ஏனெனில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பல உள்ளன.

அமைச்சர் திகாம்பரம் இணைந்திருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான அமைச்சர் மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் இராதா கிருஷ்ணன் ஆகியோரும் கட்சியின் ஏனைய பிரமுகர்களும் நிச்சயம் இந்த பெயர் நீக்கும் படலத்தை ஆதரித்திருக்க மாட்டார்கள். அதனால்தான் இது பற்றி எந்தக் கருத்தும் கூறாமல் இருக்கிறார்கள்.

கட்சி அரசியல் எனும்போது எதிரிக் கட்சிகளை எதிர்க்கத்தான் வேண்டும் குறைகளை சுட்டிக் காட்டி வாக்குகளை தம் பக்கம் வளைக்கத்தான் வேண்டும். ஆனால் தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்ளாதிருத்தலே நாகரிக அரசியலாக இருக்கும். தோட்டங்களை கிராம மயப்படுத்துவதும் மலையக மக்களின் பிரச்சினைகளை ஒரு ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வந்து ஆராய்வதும் பெரிய, சிக்கலான, பல சவால்களை சந்திக்கக்கூடிய விஷயங்கள். இவற்றை சரிவரச் செய்தாலே போதும், வாக்குகளை வசீகரிப்பதற்கு.

நீண்டகாலமாக அரசுகளில் அங்கம் வகித்துவந்துள்ள இ.தொ.கா, இப்போதுதான் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. முதல் தடவையாக தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பங்காளராக இருக்கிறது. நாம் வித்தியாசமானவர்கள், சுயநலமற்று கடுமையாக உழைக்கக் கூடியவர்கள், இ.தொ.காவுக்கு மாற்றாக மாற்று அரசியல் செய்யக் கூடியவர்கள். சவால்களை சந்திக்கக் கூடியவர்கள் என்று தம்மை நிரூபிக்க வேண்டிய பொன்னான தருணம் இது. இச் சந்தர்ப்பத்தில் குளவிக் கூட்டில் கை வைக்க வேண்டிய அவசியம் இல்லையே!

இ.தொ.கா வேறு தொண்டமான் வேறு என்பதாகத்தான் சகல தமிழ் மக்களும் பார்க்கிறார்கள். தொண்டமானை விரும்புபவர், கௌரவிப்பவர் அனைவரும் இ.தொ.கா ஆதரவாளராக இருக்கவேண்டிய அவசியம் கிடையாது.

சாதாரண மனிதன் ஜெயிலுக்குப் போனால் சமூகத்தில் அவன் பெயர் கெட்டுவிடும். அரசியல்வாதி ஜெயிலுக்குப் போனால் தியாகியாகி விடுவார்! ஜெயலலிதா குற்றவாளியாகக் காணப்பட்டு சிறை சென்ற பின்னர் அவருக்கு இருந்த செல்வாக்கு மேலும் அதிகரித்ததைப் பார்த்தோம். அங்கே முக்கியமானது, எங்கள் தலைவியை யார் ஜெயலில் தள்ளுவது? என்ற கேள்வியே தவிர, அடித்த கொள்ளை அல்ல. இவ்வாறு, அரசியல் ரீதியான ஒரு தவறை அமைச்சர் திகாம்பரம் செய்திருப்பதாகவே படுகிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் என்பார்கள். இதைத்தான் முற்போக்கு கூட்டணி செய்திருக்கிறது. ஆனால் இது நிச்சயம் முற்போக்கான விஷயம் அல்ல.

உள்ளூராட்சித் தேர்தல்கள் வரவுள்ளன. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தல்களும் வரலாம். இந்தத் தேர்தல் சமயத்தில் தமிழ் வாக்காளர்களின் பொதுப் புத்தியை சீண்டிவிடக்கூடிய வகையில் காரியமாற்றலாமா? தலையில் மண்வாரிப் போட்டுக் கொள்வது போன்ற ஒரு காரியத்தைச் செய்யலாமா? சோர்ந்து கிடந்த அரசியல் எதிரிக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கலாமா? ஒக்சிஜன் தரலாமா? மக்கள் அனைவரும் ராஜபக்ஷவுக்கு எதிராகத் திரண்டிருந்த சமயம் இந்த நாடித்துடிப்பை அறியாமல் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போய் இ.தொ.கா. தலைமை வாங்கிக் கட்டிக்கொண்ட ஒரு மிகத்தவறான அரசியல் காய்நகர்த்தல் நல் முன்னுதாரணமாக இருக்கையில், அதே போன்ற ஒரு தவறை அமைச்சர் திகாம்பரம் செய்யலாமா?

இது அரசின் முடிவாக, அமைச்சரவை முடிவாக இருந்தாலும், முற்போக்கு கூட்டணித் தலைவர்களும் அமைச்சர் திகாம்பரமும், இது எமக்கு நன்மை தராத முடிவு, மக்களால் மதிக்கப்படும் ஒருவரின் பெயரை எந்த நியாயமான காரணமுமின்றி நீக்குவது தவறான முடிவு, இதற்கு நாங்கள் இணங்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கலாம். முன்னணிக்கு சார்பாக ஒரு நல்ல பெயர் கட்டி எழுப்பப்பட்டு வரும் போது தாழியை உடைத்து மாதிரியான காரியத்தை ஏன் செய்கிறீர்கள்?

தொண்டமான் பெயரிலான நிறுவணங்கள் மூலம் ஊழல், முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது உண்மையானால் அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படத்தான் வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல், தொண்டமான் என்ற பெயரை நீக்குவதென்பது எவ்வகையிலும் சரியான நகர்வாக இருக்க முடியாது.

அமைச்சர் திகாம்பரம் மீதும் முற்போக்கு முன்னணி மீதும் மக்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை உருவாக்கியது பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட்டுவிட்டு பெயர் நீக்கம் போன்ற எதிர்மறை விளைவுகளை தரக் கூடியவற்றில் முன்னணி ஈடுபடலாமா?

இப்போது ஒன்றும் காலம் கெட்டுவிடவில்லை. தமிழ் முற்போக்கு முன்னணி ஒன்று கூடி ஒரு கொள்கை முடிவெடுத்து, ஏற்கனவே நிகழ்ந்திருக்கும் தவறை சரி செய்யலாம். மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

தவறுகளை சுட்டிக் காட்டுவது பத்திரிகையாளர்களின் பணி. சுட்டிக் காட்டி விட்டோம். நல்லது நடக்கட்டும்.

அருள் சத்தியநாதன்...

Comments