சம்பந்தனின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியே -இடைக்கால வரைபு | தினகரன் வாரமஞ்சரி

சம்பந்தனின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியே -இடைக்கால வரைபு

“நாடாளுமன்றத்தைக் குண்டு வைத்துத் தாக்கப்போவதாகக் கூறும் சிலரது கருத்துகளை நாம் செவிமடுக்கத் தேவையில்லை. அதனை நாம் பொருட்டாகவே கொள்ளத் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது, புதிய அரசமைப்பின் அவசியம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய அரசமைப்புக் குறித்து, அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்துள்ளார். அப்படிப் பார்க்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, புதிய அரசமைப்புத் தொடர்பில் தொடர்ச்சியாக உறுதியளித்துள்ளது. ஆகையால், புதிய அரசமைப்பை, இப்போது நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டை சுதந்திரக் கட்சி கொண்டிருக்கிறது” என அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போ​து, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டிலான் பெரேரா உள்ளிட்ட பலரும் புதிய அரசியலமைப்பின் தேவையைக் குறித்தும் இடைக்கால அறிக்கையைக் குறித்தும் முன்னேற்றகரமாகக் கருத்து வெளியிட்டுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கமும் கூடுதல் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். லங்கா சுதந்திரக்கட்சி, மனோ கணேசன் உள்ளிட்ட தமிழ்பேசும் தரப்புகள் எனப் பலரும் இடைக்கால அறிக்கையின் செழுமைப்படுத்தல்களை வலியுறுத்திப் பேசியுள்ளனர்.

முழுமையாகத் தொகுத்துப் பார்த்தால், இடைக்கால அறிக்கை மீதான விவாதங்களில் எதிர்மறை நிலைகள் காணப்பட்டாலும் ஒப்பீட்டளவில் வழமையை விடப் பரவாயில்லை என்ற நிலையே – சாதகமான நிலையே - காணப்படுகிறது. அதாவது, எதிர்பார்க்கப்பட்டதற்கும் மாறாக முன்னேற்றமான ஒரு நிலை தெரிகிறது.

சாராம்சமாகக் கூறுவதாக இருந்தால், இது சம்பந்தனுடைய அணுகுமுறைக்குக் கிடைத்திருக்கிற வரவேற்பு அல்லது வெற்றி எனலாம். உள்நாட்டிலும் சர்வதேசப் பரப்பிலும் இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்வுக்கும் ஆட்சியமைப்புக்கும் ஒரு புதிய அரசியலமைப்புத் தேவை என்ற உணர்விருந்தாலும் அதை எப்படிச் சாத்தியப்படுத்துவது என்ற குழப்ப நிலை இன்னுமுண்டு. இன, மத, பிரதேச ரீதியாகத் தீவிர முரண்நிலைகளைக் கொண்ட சமூகங்களிடையே பொது இணக்கப்பாட்டுடைய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது எளிய விசயமல்ல. இதற்குப் பொருத்தமான தரப்புகளின் பொறுப்பு மிக்க இணக்கநிலைகள் அவசியம். போட்டி உணர்வு நிலை, பகை உணர்வு நிலை என இறுக்கமடைந்துள்ள சமூகங்களிடையே இணக்கப் புள்ளிகளை உருவாக்குவது சவாலானது. அப்படி இணக்கப் புள்ளிகளை உருவாக்குவதற்கு உறுதியான நிலைப்பாட்டுடன் நின்று செயற்பட்டே குறிப்பிட்ட சமூகத்துக்கிடையிலும் எதிரே உள்ள சமூகங்களுக்கிடையிலும் அதை உண்டாக்க முடியும்.

இந்த வகையில் சிங்களத் தரப்பின் நல்லபிப்பிராயத்தையும் நம்பிக்கையையும் பெறுவதற்கு கடந்த எட்டு ஆண்டுகளாக சம்பந்தன் மேற்கொண்டு வந்த தொடர்நடவடிக்கைகளுக்குக் கிடைத்த பயனாகவே தற்போதைய புரிந்து கொள்ளல் நிலை ஏற்பட்டுள்ளது. சிங்களத் தலைவர்களுடன் இணைந்து தேசியக் கொடியை ஏந்தியது, சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்து கொண்டது, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைத்தது, எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்து கொண்டே அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தது எனச் சம்பந்தன் மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது ஒரு நீள் பட்டிலைக் கொண்டது.

தமிழர்களுடைய போராட்டமும் போரும் எதிர்மனோ நிலையைச் சிங்கள மக்களிடத்திலே உருவாக்கியிருந்ததால், அதை முறியடிப்பதன் மூலமே தமிழர்களுடைய அரசியல் உரிமையைப் பற்றியோ இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றயோ பேச முடியும் என்று சம்பந்தன் கருதியிருந்தார். உண்மையும் இதுதான்.

இதேவேளை தமது போராட்டத்தையும் தாம் முன்னெடுத்த அல்லது எதிர்கொண்ட போரையும் சிங்களத்தரப்பு முறியடித்து விட்டது என்ற கோபம் தமிழ்த்தரப்பிடமிருந்தது. இது சிங்கத்தரப்பின் மீது மேலும் பகைமை உணர்வையும் சந்தேகத்தையும் வலுப்படுத்தியிருந்தது. இதை விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டிய நிலையும் சம்பந்தனுக்கு ஏற்பட்டது. ஆனால், இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று எதிரானவை. ஆகவே இரண்டையும் சமாந்தரமாகக் கையாள முடியாது. இதனால், முதலில் ஒரு தரப்பைக் கையாள்வோம் என்ற நிலையிலேயே சம்பந்தன் சிங்களத்தரப்பை நோக்கி நகரத் தொடங்கினார். தன்னுடைய நல்லிணக்கத்தை சிங்களத் தரப்பை நோக்கி நிரூபிக்க முற்பட்டார்.

இதைச் செய்யும்போதெல்லாம் சம்பந்தனுக்கு தமிழ்த்தரப்பில் கடுமையான விமர்சனங்களும் கேலிப்படுத்தல்களும் கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும் எதிர்ப்புகளும் முன்வைக்கப்பட்டன.

ஆனால், அவர் இவற்றுக்காக தன்னுடைய நிலைப்பாட்டையும் நடவடிக்கைகளையும் சுருக்கிக் கொள்ளவும் இல்லை. மாற்றி விடவும் இல்லை. சம்பந்தனுக்கு ஆதரவாக இருந்த காரணத்தினால் சுமந்திரனுக்கும் எதிர்ப்புக்கணைகள் வீசப்பட்டன. தன்னுடைய இந்தப் பணிக்கு ஒத்துழைக்கக்கூடியவர், அதை வலுப்படுத்தக் கூடியவர் என்று சம்மந்தன் கருதிய விக்கினேஸ்வரன் எதிர்நிலைக்குச் சென்று சம்பந்தனை நெருக்கடிக்குள்ளாக்கியபோதும் சம்பந்தன் பின்வாங்கிவிடவில்லை. இதனால், இப்பொழுது அவர் பலரும் மதிக்கின்ற, கவனிக்கின்ற ஆளுமையாகியுள்ளார்.

“சம்பந்தனை விட்டால், இந்தளவுக்கு விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கு வேறு யாரும் வரப்போவதில்லை. ஆகவே அவரை வெறுங்கையுடன் அனுப்பக்கூடாது” என்ற குரல்கள் தெற்கிலும் வெளிப்பரப்பிலும் எழுந்திருக்கின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆனால், இடைக்கால அறிக்கை என்பது அரசியலமைப்புச் சாசனம் அல்ல. அல்லது நடந்து முடிந்த விவாதங்களும் அரசியலமைப்பை அப்படியே சாதகமாக உருவாக்கி விடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில் இவை சாதகமான முறையில் செல்வாக்கைச் செலுத்தக்கூடியனவாகவே உள்ளன.

தற்போது நடந்த நடவடிக்கைள், விவாதங்கள் அனைத்தும் அரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடுகள் மட்டுமே. அடுத்த கட்டமாக இந்த இடைக்கால அறிக்கையும் ஏனைய குழுக்களின் அறிக்கைகளும் நடந்த விவாதங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டு அரசியமைப்பின் வரைபில் உள்ளடக்கப்படவுள்ளன. அது என்னமாதிரியான வடிவத்தில் வரும் என்று முடிவாகக் கூறமுடியாது விட்டாலும் தற்போதைய நிலையில் முன்னேற்றமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

இதனால்தான் “கடந்த 70 ஆண்டுகாலத் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறக்கூடிய தருணத்தினை எட்டியுள்ளோம். பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொண்டு வந்த அரசியலமைப்பு வரைபினை ஏற்றுக்கொள்வேன் என அமைச்சர் டிலான் சொன்னதுடன், வரைபிற்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென்றும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இதெல்லாம் எமக்குச் சாதகமான நிலையையே காட்டுகின்றன. இனப்பிரச்சினைத் தீர்வைக் குறித்த எமது நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன” என்று தெரிவித்திருக்கிறார் சுமந்திரன். இடைக்கால அறிக்கை மீதான நான்கு நாள் விவாதத்தை முடித்துவிட்டு, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இப்படிக் கூறினார்.

ஆனால், தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் தொடர்ச்சியாக எதிர்பார்க்கும் தனியாட்சிக்கு நிகரான அடிப்படைகளை அந்த அரசியலமைப்புக் கொண்டிருக்காது என்பது மட்டும் உறுதி. அதேவேளை அப்படி இவர்கள் கோருகின்ற அடிப்படையில் ஒரு அரசியலமைப்பு இன்றைய நிலையில் இலங்கையில் சாத்தியமாகவும் முடியாது. அதற்கான யதார்த்தம் இல்லை. அப்படியான ஒரு நிலையை உருவாக்க வேண்டுமென்றால், அதற்காகக் கடினமாக உழைக்க வேண்டும். பல படிகளில் இறங்கி வேலை செய்ய வேண்டும். “மயிலே மயிலே இறகு போடு என்ற அரசியல்” வேலை செய்யாது.

எனவேதான் தற்போதைய நிலையில் “பற்றிப் பிடி” என்கின்ற அரசியலை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாது” என்கிறது சம்பந்தன் தரப்பு. இதற்காகத் தமிழ்த்தரப்பிலுள்ள ஒரு தொகுதியினரின் தொடர்ச்சியான கண்டனங்களையும் கிண்டல்களையும் எதிர்ப்புகளையும் தொடர்ச்சியாகச் சந்தித்துக் கொண்டிருப்பவர் சம்பந்தன். அதிகளவில் விட்டுக்கொடுப்புகளைச் செய்து, அரசாங்கத்திடம் சரணடைந்து விட்டார் என்று பகிரங்கமாகவே குற்றச் சாட்டப்பட்டதும் இதனால்தான்.

சரி, இந்தமாதிரியான நிலைமைகளையெல்லாம் கடந்து அரசியலமைப்பை உருவாக்கப்படவேண்டியுள்ளது. இதற்கிடையில் நாட்டிலுள்ள பௌத்த பீடங்களையும் பிற அமைப்புகளையும் சந்தித்துப் பேசவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் மகிந்த தரப்பின் கருத்துப் பலமடையக்கூடாது என்பதற்கான ஏற்பாடு இது. ஆகவே இதைச் செய்யத்தான் வேண்டும். ஆனால், இதைத் தனியே அரசாங்கமே லங்கா சுதந்திரக் கட்சியோ ஐக்கிய தேசியக் கட்சியோ மட்டும் செய்ய முடியாது. தமிழ்த்தரப்பும் இதில் பங்கேற்ற வேண்டும். கூட்டமைப்பு மட்டும் இதைச் செய்வது பொருத்தமானதல்ல. ஆனால், இன்றைய நிலையில் கூட்டமைப்பிற்குள்ளேயே ஏகப்பட்ட குழப்பங்கள் உண்டு. அப்படியிருக்கும்போது எப்படி, ஏனைய தரப்பையும் இதில் இணைத்துக் கொள்ள முடியும் என்று யாரும் கேட்கலாம்.

ஆனால், வேறு வழியில்லை. சிங்களத்தரப்பிடம் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக பல சிரமமான கருமங்களைச் செய்ய வேண்டியிருந்ததோ அதைப்போன்று தமிழ்த்தரப்பிலும் சில சிரமங்களை எதிர்கொள்ளத்தான் வேணும் என்ற புரிதலைத் திரு. சம்பந்தன் கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்த்தரப்பை ஒரு பொதுக் குடையின் கீழ்க்கொண்டு வந்து சிங்கள மக்களிடமும் சிங்கள பௌத்த பீடங்களிடத்திலும் உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். அதாவது புதிய அரசியலமைப்புக்கான சாதமாக நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு சிங்கள மக்களிடத்திலே தவறான எண்ணங்கள் உருவாகாமல் தடுப்பது அவசியம். எதிர்நிலைச் சக்திகள் சிங்கள மக்களைத் திசை திருப்பாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

கூடவே உருவாகவுள்ள அரசியலமைப்பிலும் நேசபூர்வமாகச் சில முன்வைப்புகளைச் செய்ய வேண்டும். மிக நிதானமாக, பொறுப்புணர்வுடன் செயற்படுவதே இங்கே அவசியமானது. இதில் பல்வேறு தரப்பினருக்கும் பங்குண்டு. பொறுப்புண்டு. ஏனெனில் இன்னும் பல படிகளைக் கடந்து செல்லவேண்டிய விசயம் இது. அப்படித்தான் வெற்றிகரமாக அரசியலமைப்பை உருவாக்கி, அதை வெற்றியடைய வைத்தாலும் பின்னர் அதை நடைமுறைப்படுத்துவது என்பது இன்னொரு கட்டச் சவாலாகும்.

கருணாகரன்

Comments