வாழ்வாதாரமா சேதாரமா ? | தினகரன் வாரமஞ்சரி

வாழ்வாதாரமா சேதாரமா ?

போர் முடிந்து ஆண்டுகள் எட்டாகின்றன. போர் தின்ற நிலங்களிலிருந்து அதன் எச்சங்கள் விடைபெற்றுக் கொண்டு வருகிறது. சில இடங்களில் சிலவற்றை நினைவுச் சின்னங்களாக விட்டும் வைத்துள்ளனர். மக்களும் போராளிகளும் தத்தமக்கென விதிக்கப்பட்ட தடுப்பு வாழ்க்கையை முடித்துக் கொண்டு வெளியேறியும் பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

இன்னும் ஆறாதவடுக்களாக ஒவ்வொரு குடும்பங்களிலும் நேர்ந்த சாவுகள், காணாமற்போனோர், உடலிலிருந்து அறுபட்டுப் போன உறுப்புகள், உறுப்புகளாக வெளித்தெரிந்தாலும் செயற்படாத உறுப்புகள் என்பன நிலைத்து நிற்கின்றன.

வெள்ளம் வடிந்த பின்னும் பள்ளம் நிலைத்தது போல போர் கடந்த பின்னும் வாழ்க்கைச் சமநிலை வெகுவாகக் கலைந்து போய்விட்டது. அநேகமான வீடுகளில் உழைப்போர் மடிந்தோ, காணாமலோ போய்விட்டனர். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் பெருகியுள்ளன. போரில் உடல் வலுவிழந்தோர்கள் பலர் திருமணம் செய்திருந்தனர். அவர்கள் திருமணம் செய்த வாழ்க்கைத் துணையும் பெரும்பாலும் உறுப்பிழந்தோ பெரும் காயமடைந்து வலுவிழந்தவராகவோ இருந்தார். காரணம் போரில் வலுவிழந்தவர்களுக்கான கல்விச்சாலை போர்க் காலத்தில் இருந்தது.

காயமடைந்த போராளிகள் அனைவருமே தத்தமது வலுவிற்கும் ஆவலுக்கும் ஏற்ப தொழில் பழக வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. மேற்படி கலாசாலை கையிழந்தும் ஒற்றைக்கையுடன் களத்தில் நின்று சாதனை படைத்த நவம் என்றழைக்கப்படும் போராளியின் பெயரில் இயங்கியது. கணனி, கைத்தொழில், நடனம், பாட்டு, இசைக்கருவிகள் இயக்குதல் ஒளிப்பதிவு ஒலிப்பதிவு படத்தொகுப்பு போன்ற பல்வேறு துறைகளில் பயின்று சிறப்பாகப் பணியாற்றியவர்கள் தமக்குள் காதலையும் வளர்த்து கலியாணமும் செய்துகொண்டனர். போர் நடந்த காலத்தில் ஊடகத் துறையில் இவர்கள் சிறப்பாக பணியாற்றியவர்கள் தான்.

தன்னம்பிக்கை, துணிவு, சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற துடிப்பு இவர்களுக்கிருந்தது. மற்றவர் உதவியின்றியே, ஒரு கையிழந்தவர் சமைக்கவும் கிணற்றில் நீரள்ளி குளிக்கவும் தனது உடைகளை தானே துவைக்கவும் செய்தனர். இரு கண்களிலும் பார்வையிழந்தவர்கள் தென்னை மரமேறி தேங்காய் பறித்தார்கள். பரதம் கற்றுமேடையேறினார்கள். இரு கைகளையும் மணிக்கட்டுடன் இழந்தவர்கள் உந்துருளி ஓடவும், ஒலிப்பதிவை கணனியில் கீபோர்டை காலுக்குள் வைத்து மவூஸை இயக்கி செய்தததையும் நாமறிவோம். இரு கைகளையும் தோள்பட்டைவரை இழந்த ஒருபெண் எலக்ரோனிக் துறையில் விரிவுரையாற்றவும் பயிற்றவும் கால்களால் தட்டச்சு செய்யவும் கால்களால் ஓவியம் வரையவும் கடலில் எழுநூறுமீட்டர் வரை நீந்தவும் செய்தாள். ஒருகால் இழந்தோர், ஒருகை இழந்தோர், பெரும் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் பணியில் இருந்தார்கள், சிறப்பாக பணியாற்றினார்கள், இயலாமை என்பது யாரிடமும் இருந்ததில்லை. ஆனால் போர் முடிவுக்கு வந்தபின் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.

எவராலும் வாழ்வை தகுந்தபடி அமைத்துக்கொள்ள முடியவில்லை. வறுமை கோரத் தாண்டவம் ஆடுகிறது. ஊடகங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் இவர்களது துயரம் பேசப்படுகிறது. தீர்வுகளின்றியே தொடர்கிறது வறுமை. இந்த வறுமை திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது.

குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள். தமது கடந்த காலத்தின் மொத்த உழைப்பையும் இழந்து விட்டார்கள். சொத்துகளாக நிலம் மட்டுமே மீதமிருந்தது. வாகனங்கள் மரஞ்செடிகள், ஆடுமாடுகள் அனைத்தும் போய்விட்டன. வாழ்ந்த நிலங்களிலும் இராணுவ எச்சங்களை அகற்றபெரும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது, உறவுகள் சிதறி உலகெங்கும் விழுந்துவிட்டன. முப்பது நாற்பது வருட உழைப்பை தெருவில் வீசிவிட்டு, வெறும் ‘சொப்பிங்பாக்’ எனப்படும் பொலிதீன் பையில் கொள்ளக்கூடிய உடைமைகளோடு வெளியேறிய மக்களும் போராளிகளும் தனித்தனி வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். முட்கம்பி வேலிகளுக்குள் அவர்களது வாழ்க்கை முடங்கிய காலத்தே, நோயில் மடிந்தவர்கள் தொகை கணக்கிடப்படவில்லை.

எனக்குத் தெரிந்த கணேசன் மருதநகரைச் சேர்ந்தவன். தன் ஏழுமாதக் குழந்தையை செட்டிகுளம் முகாமில் வயிற்றோட்டத்துக்கு பலிகொடுத்தான். தொடர்ந்து அவனுடை அக்காளின் இரண்டு வயதுக் குழந்தைக்கு வயிற்றோட்டம் தொற்றிக்கொள்ள படாத பாடுபட்டான். ‘இராணுவத்தினரின் காலில் விழுந்து கூட கெஞ்சினேன் வெளியே கொண்டுபோக மறுத்துவிட்டனர். குழந்தை இறந்து விட்டது என்றான்.

இப்போது இராணுவத்தினர் எம்மிடம் நட்பாகத்தான் இருக்கின்றனர். இது ஒரு நகை முரண். அரசாங்கம் நசித்துப்போன இந்தக் குடும்பங்களை மேலேற்ற பல வசதிகளை வாய்ப்புகளை உருவாக்கித்தான் உள்ளது. ஆனால் இவற்றுக் கெல்லாம் மேலாக திட்டமிடலில் எங்கேனும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறதா என்றால், அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

போராளிகளுக்கு வங்கிக் கடன் திட்டம் வழங்கப்பட்டது. பலர் கடன்களைப் பெற்று ஒரு தொகையுடன் ‘லீஸிங்’ திட்டத்தில் முச்சக்கர வண்டிகளைப் பெற்று தொழில் செய்கின்றனர். சிறுசிறு வர்த்தகம் செய்கின்றனர். சிலர் கோழி வளர்க்க ஆடுவளர்க்க வீட்டுத்தோட்டம் செய்யவென முயற்சியில் இறங்கினாலும் யாராலும் வெற்றியடைய முடியவில்லை. ஈற்றில் கடன் கட்ட முடியாமல். தமது சொந்தச் சொத்துகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம் சரியான திட்டமிடல் இல்லாமல் கடன்களைப் பெற்று அவற்றை எப்படி செலவிட வேண்டும் என்ற அடிப்படை அறிவும் அற்றவர்களாக தொழிலைப் பெருக்குவதற்குப் பதில் கடனை வளர்த்துக் கொண்டு துன்பப்படுகின்றனர். போராளிகளோ மக்களோ தம்மை நிலை நிறுத்த முடியாத அளவுக்கு சுரண்டல் மலிந்துள்ளது.

மன தளவில் அவர்கள் சோர்ந்துவிட்டனர். அவர்களை உற்சாகப்படுத்தி மீள் எழுகைக்கு தயார்படுத்த வேண்டி அரசியற் தலைவர்களோ சமூக சேவகர்களோ அவர்களை அவர்களது துயரிலிருந்து மீள விடாமல் கண்ணீருடன் தொடர்ந்து வைத்திருப்பதையே குறியாகக் கொண்டுள்ளார்கள். அவர்களை ஆறவிடவே மாட்டார்கள். ஒளிப்படக் கருவிகளுடன் அடிக்கடி அவர்களை சூழ்ந்து அழவைத்து அதைக் காட்சிப்படுத்தி அந்த அனுதாப அலையில் குளிர் காய ஊடகங்களும் பத்திரிகைகளும் போட்டிபோடுகின்றன.

இந்த நிலையிலர் அவர்களுக்கு நடந்ததென்ன நடப்பதென்ன? என்பதை விரிவாக எழுத வேண்டும் என்ற என் மனதின் தூண்டுதலே இந்தத் தொடரின் வெளிப்பாடாகும்.

என்ன தான் பெண் விடுதலை பற்றி நாம் வாய் கிழியப் பேசினாலும், நடைமுறையில் அதுசாத்தியப்படாததே இந்த நிலையின் வெளிப்பாடாகும் அரசாங்க உயர் பதவிகளில் இன்று பெருமளவு பெண்கள் அமர்ந்திருப்பதை யாராவது உதாரணம் காட்ட முன்வந்தால் எனக்கு சிரிப்புவெடித்துக் கொண்டுதான் வருகிறது. என்ன தான் பெண்கள் பதவியிலிருந்தாலும் அவரை பின்புலத்தில் நடத்த பெரும்பாலும் ஆண்களோ அல்லது நெருங்கிய தோழிகளாகவோ இருப்பதை காணலாம். இதை உறுதிப்படுத்தும் உதாரணத்துக்கு எனக்கு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவே போதும் என நினைக்கிறேன்.

சாதாரணமாக ஒரு மாதர் சங்கத் தலைவிக்கே அவளுடைய கணவன் கட்டுப்பாடுகளை போடுகிறான். “நீ முடியாது என்று சொல்லு” “கையெழுத்துப் போடாதை” என்பது போன்ற அறிவுறுத்தல்கள் மட்டுமன்றி அவளுடைய தொலைபேசியை கையாளுவது வரைசெய்கிறான். அது குடும்ப ஒற்றுமையாம்.

உண்மையில் போர் எங்கு நடந்தாலும், எந்தக் காலத்தில் நடந்தாலும், எப்படி நடந்தாலும் அது பெண்களையே பெரிதும் பாதிக்கிறது என்பதை அடிப்படையாவைத்தே, இன்றைய அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், திட்டமிடுகின்றன. இவை எத்தனை வீதம் பயனளித்துள்ளது என்று பார்த்தால். நூற்றுக்கு பத்து வீதம் கூடத் தேறாது காரணம். நான் மேற்குறித்த படிபெண்கள் தமக்கான தீர்மானமெடுப்பதில் பிறரைச் சார்ந்திருப்பதேயாகும்.

அண்ணன், தம்பி, மாமன், மைத்துனன் அறிந்தவர் எனப் பலர் தனித்திருக்கும் பெண்ணை சூழ்ந்துகொள்கின்றனர். ஆலோசனை வழங்க, திட்டமிட்டுக் கொடுக்க, கூடித்திரிய இப்படியாக அவர்கள் பலர் தமக்கான உதவிகளை உறவினர்களிடம் கையளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனக்கே என் தொழிலுக்காக கடன் பெற நான் முயன்ற போது என் தோழியொருத்தி முன்வந்து பிணைக் கையொப்பம் வைக்க முன்வந்தாள். அதற்கு அவள் வைத்த நிபந்தனை கடன் தொகை ஒன்றரை லட்சத்தில் எழுபத்தையாயிரத்தை தனக்கு வட்டிக்குத்தர வேண்டும் என்பதாகும்.

எழுபத்தையாயிரம் குறைந்தால் நான் எனது முதலீட்டை செய்யமுடியாது. எனவே நான் கடனை கைவிட வேண்டிய தாயிற்று. வங்கிகளின் நடவடிக்கைப்படி அனைவரும் எடுத்த கடன்களை கணக்கிட்டுப் பார்த்தால் இன்று வன்னிப் பகுதியிலிருந்து உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதிக்கு குவிந்திருக்கும். ஆனால் நடப்பது என்ன?

தமிழ்க்கவி

 

Comments