ஹற்றனில் இரு வாகனங்கள் மோதி விபத்து; இருவருக்கு பலத்த காயம் | தினகரன் வாரமஞ்சரி

ஹற்றனில் இரு வாகனங்கள் மோதி விபத்து; இருவருக்கு பலத்த காயம்

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் ஹற்றன் குடாகம பகுதியில் வாகனங்கள் இரண்டு மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று(4) அன்று மதியம் ஒரு மணியளவில் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹற்றனிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற சிறிய ரக லொறி ஒன்றும், நுவரெலியாவிலிருந்து ஹற்றன் பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிய ரக லொறியில் சென்ற இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் அவ்விடத்தில் கூடிய மக்களின் ஊடாக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இவ்விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஹற்றன் பொலிஸார் இப்பகுதியில் சீரற்ற காலநிலையினால் பிரதான வீதியில் வழுக்கல் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த இரு வாகனங்களும் அதிக வேகத்துடன் பயணித்ததனால் இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஹற்றன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர் 

Comments