தொழிற்சங்க வழக்கை தன் சொந்த செலவில் பேசியவரே தொண்டமான்! | தினகரன் வாரமஞ்சரி

தொழிற்சங்க வழக்கை தன் சொந்த செலவில் பேசியவரே தொண்டமான்!

இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஸ்ரீ ஜவஹர்லால் நேரு நமது நாட்டிற்கு விஜயம் செய்தபோது இங்கு வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக இலங்கை இந்திய காங்கிரஸ் எனும் ஒரு அமைப்பை உருவாக்கி செயற்பட வைத்தார். நாளடைவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றமடைந்த போது அமரர்களான செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஏ. அஸீஸ் ஆகியோர் முக்கிய பதவிகள் வகித்து செயல்பட்டார்கள். பின்னர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த அமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலும், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அப்துல் அஸீஸ் தலைமையிலும் இரண்டாக பிளவுபட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை விட அங்கத்தவர்களின் எண்ணிக்கையிலும், செயல்பாடுகளிலும் அடுக்கடுக்கான வெற்றிகளை பெற்று தெற்காசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்சங்கமாக உயர்வடைந்தது. சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து காலத்திற்கு காலம் பலர் வெளியேறிய போதிலும் அஸீஸ் தரப்பினரால் சோபிக்க முடியாமையே வரலாறு.

அந்தளவிற்கு சௌமியமூர்த்தி தொண்டமானின் புத்திசாதூரியமும் உரிய விதத்தில் பிரச்சினைகளை அணுகிய பாங்கும் தோட்டத் தொழிற்சங்க ரீதியில் மாத்திரமின்றி அரசியலிலும் அவரை ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச்சென்றது. எந்தவொரு இந்திய வம்சாவளி தலைவரும் அவரைப்போன்று நாட்டின் சகல சமூகங்களினாலும் மதித்து போற்றப்பட்டதோடு அவர் மறைந்த பின்பு அவரது உடல் சுதந்திர சதுக்கத்தில் தகனம் செய்யப்படும் அளவிற்கு அவருக்கு கௌரவம் வழங்கப்பட்டதோடு பழைய பாராளுமன்றத்தின் முன்னால் அவரின் சிலை அமைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஒரு காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் தலைவர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டது மாத்திரமன்றி அவர்களோடு இணைந்து உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோருடன் சௌமியமூர்த்தி தொண்டமானும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாசவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்து முறுகல் நிலை ஏற்பட்டபோதும் சௌமியமூர்த்தி தொண்டமானின் தலையீட்டின் மூலமே அந்த முறுகல் நிலை சுமுகநிலைக்கு கொண்டுவரப்பட்டது.

1970களில் சௌமியமூர்த்தி தொண்டமான் (அதாவது 22.07.1977 திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின்பு) நாட்டின் ஆட்சியை தீர்மானித்த சக்தியாக அதாவது கிங் மேக்கராக திகழ்ந்தார். அத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் இருந்த 168 ஆசனங்களில் 140 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்று வரலாறு காணாத வெற்றியீட்டியமைக்கு சௌமியமூர்த்தி தொண்டமானின் பங்களிப்பே காரணமாக அமைந்தது.

1977ஆம் ஆண்டு ஜூலை இருபத்திரண்டாம் திகதி நடைபெற்ற தேர்தலில் நுவரெலியா மஸ்கெலியா என்று தனித்தனியே இருந்த தேர்தல் தொகுதிகள் நுவரெலியா மஸ்கெலியா எனும் மூன்று அங்கத்தவர்கள் கொண்ட தொகுதியாக்கப்பட்டதால் அத் தேர்தலில் போட்டியிட சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு வாய்ப்பு கிடைத்ததுடன் நுவரெலியா மஸ்கெலியா தொகுதியின் மூன்றாவது உறுப்பினராக தெரிவானார்.

(அடுத்தவாரம் தொடரும்...)

இவதன்

Comments