கல்முனை மாநகரை நான்காகப் பிரிப்பது சாத்தியமில்லாதது | தினகரன் வாரமஞ்சரி

கல்முனை மாநகரை நான்காகப் பிரிப்பது சாத்தியமில்லாதது

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்கப்படும் என தேர்தல் காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி அளித்தார்.ஆனால் அதனை மறுதலிக்கும் விதமாக கல்முனை மாநகரத்தை நன்கு சபைகளாக பிரிக்கக்கோருவது அது எந்த வகையிலும் சாத்தியமில்லாத ஒரு நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். எங்களது கோரிக்கையை தடுக்கும் முயற்சியாகவே இது உள்ளது என சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம் ஹனீபா தெரிவித்துள்ளார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம்,

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இன்னமும் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கான பின்னணி என்ன?

ஆம். நீண்டகாலமாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது என்பது உண்மை தான். 1988ம் ஆண்டில் இருந்து உருவாகிய இந்த எண்ணக்கரு 2010ம் ஆண்டிலிருந்து தீர்வு பெறப்படவேண்டும் என்றவகையில் புதுவடிவம் பெற்றது.

 எனினும் கடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்முனையில் நடைபெற்றபொதுக் கூட்டமொன்றில் தனியான சபை ஒன்று வழங்குவதற்கான வாக்குறுதி வழங்கப்பட்டது. ஒருநாட்டின் தலைவர் நடைமுறைக்கு கொண்டுவருவதாகக் கூறிய வாக்குறுதியை நம்பி நாம் இருந்தோம்.

அதுவும் கூட நிறைவேற முடியாத அளவுக்கு அரசியல் வாதிகள் மீண்டும் மீண்டும் வாக்குறுதிகள் வழங்குகின்றார்களே தவிர சபை வழங்குவதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்வதாக அறிய முடியவில்லை. எனவே அரசியல் வாதிகளின் வாக்குறுதிகளால் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகின்றது என்பதை நாம் அண்மைக் காலத்திலேயே அறிந்து கொண்டோம். நாம் நம்பிக் கெட்டோம் என்பதனாலேயே நீண்டகாலம் எடுத்தது.

சாய்ந்தமருதுக்கு தனியான சபை என்ற கோரிக்கையை அடைந்து கொள்வதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

பலவழிகளில் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாக சபையினரும், சிவில் அமைப்புகளும் இணைந்து இக்கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் அண்மைக்காலமாக பல தடவைகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். எல்லாவற்றையும் விட அரசியல் வாதிகளின் ஏமாற்றங்களிலிருந்து வெளியேறி கோரிக்கையை மக்கள் மயப்படுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி வரையும் எமது குரல் கேட்குமளவுக்கு உரத்துப் பேசியுள்ளோம். தேசிய நாளிதழ்கள் எல்லாமே எங்களுடைய கோரிக்கையை பரபரப்பான செய்திகளாக வெளியிடும் அளவுக்கு நாம் முன்னேறியுள்ளோம். எவரும் எமது கோரிக்கையை நியாயமானது என்று சொல்லுமளவுக்கு நாங்கள் இதை பரவலாக்கியுள்ளோம்.

சாய்ந்தமருதுக்கு தனியான சபை வழங்குவது தொடர்பாக அரசாங்கம் நியமித்த குழுவினரிடம் எமது நியாயமான கோரிக்கைகளை எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளோம். இவை எவையுமே எமக்கு சாதகமான பதிலை தரமாட்டாது என உணரும் போது நீதிமன்றத்தை நாடவும் உத்தேசித்துள்ளோம். விரைவில் எமக்கான தீர்வு எட்டப்படுமென்று எதிர்பார்க்கின்றோம்.

சாய்ந்தமருதில் எவரும் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்று அறிவித்துள்ளீர்கள் இது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கு தடைகளை ஏற்படுத்த மாட்டாதா?

நிச்சமாக இல்லை. கடந்த நவம்பர்மாதம் முதலாம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சாய்ந்தமருது பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் தாங்கள் குறிப்பிடும் விடயம் உள்ளது உண்மைதான். நாம் இந்த விடயத்தில் உறுதியாகவே இருக்கின்றோம். எமக்கான தனிச்சபை கிடைக்கும் வரை எமது பிரதேசத்தில் கட்சி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கேட்டுள்ளோம்.

இது தொடர்பில் நாம் எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயாராக இருக்கின்றோம். கிள்ளிக் கிள்ளித் தரும் அபிவிருத்திகளை நாம் எதிர்பார்க்கவில்லை தனியானசபை யொன்றின் மூலம் அள்ளி அள்ளித் தரும் வகையில் சபையொன்றினால் பலவகைகளிலும் கூடுதலான அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே எதிர்கால அபிவிருத்தியை மனதில் கொண்டேசமகாலத்தில் கிடைக்கப்பெறும் அபிவிருத்திகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றோம். எமது பள்ளிவாசலுக்கான கலாச்சார மண்டபத்திற்கு ஒதுக்கப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா பணத்தைக் கூட திருப்பியனுப்பியுள்ளோம்.

அரசியல் நோக்கத்திற்காக கிடைக்கப்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் தயாரில்லை. மாறாக அரசியல் நோக்கமற்ற அபிவிருத்தியெதுவும் கிடைக்கப் பெறுமாயின் அதற்கு நாங்கள் எதிரானவர் களல்ல. தொடர்ந்தும் தூய நோக்கத்துடன் எவராவது அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதனை ஆதரிக்கவும் தயங்கமாட்டோம்.

கல்முனை மாநகரசபையை நான்கு சபைகளாக பிரிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறதே?

உண்மைதான் சாத்தியமில்லாத ஒரு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. அவர்களின் கோரிக்கை என்னவெனில் கல்முனை பட்டின சபைக் காலத்தில் இருந்த எல்லைகளுடன் நான்கு சபைகளாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. எமது கோரிக்கையை தடுப்பதற்காக முன்வைக்கப்படும் மாற்றுக் கோரிக்கை யாகவே இதனைக் நாம் கருதுகின்றோம்.

ஏனெனில் இன்று வரை நான்கு பிரிவு தொடர்பாக எந்தவொரு எழுத்து மூலகோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. அதுமட்டுமல்ல, மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின்போது உள்ளூராட்சி விடயத்திற்குப் பொறுப்பான முன்னாள் அமைச்சர் அதாவுல்லா கடமையிலிருந்தார். அவ்வேளை, அவரால் கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக அமைக்க நடவடிக்கை எடுத்தபோது இன்று இதே கோரிக்கையை முன்வைத்தவர்கள் அன்று அதனை எதிர்த்தார்கள்.

2015 பொதுத் தேர்தலின் போது பிரதமரால் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியபோது எவரும் அதனை எதிர்க்கவில்லை. தற்போது சாய்ந்தமருதுக்கான தனி அதிகார சபை கோரிக்கை கனிந்துவரும் போது அதனைத் தடுப்பதற்காகவே இக்கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

நாம் நான்காக பிரிப்பதற்கு எதிரானவர்களல்ல சாய்ந்தமருதுக்கு தனிச் சபையைத் தந்த மறுநாளே ஏனைய பகுதிகளை மூன்றாக பிரிக்கலாம் என்பதே எமது நிலைப்பாடாகும்.

எதிர்வரும் தேர்தலில் சுயேச்சைக் குழு வொன்றை களம் இறக்கப்போவதாக சாய்ந்தமருது பிரகடனம் கூறுகின்றது. இது பற்றி விளக்க முடியுமா?

கடந்த முதலாம் திகதி வெளியிட்ட சாய்ந்தமருது பிரகடனத்தில் இதனைத் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். நாம் அரசியல் கட்சிகளாலேயே ஏமாற்றப்பட்டோம். யாருக்கெல்லாம் எமது வாக்குகளை அள்ளி அள்ளிக் கொட்டினோமோ அவர்களே எம்மை ஏமாற்றினார்கள்.

மாற்றுவழியொன்றைத் தேடவேண்டிய பொறுப்பு எமக்கிருந்தது. நிச்சயமாக இறைவனின் உதவியால் நாம் வெற்றியைச் சுவைப்போம். எமக்கான கோரிக்கை கனிந்துவரும் நிலையில் அதனைத் தட்டிப்பறிக்க நினைப்பவர்களுக்கு எமது சுயேச்சைக்குழுத் தீர்மானம் நல்ல பாடத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நேர்காணல்: யூ.கே. காலித்தீன்

Comments