உலக மக்களை ஒன்றிணைக்கும் சீனப் பெருஞ்சுவர்! | தினகரன் வாரமஞ்சரி

உலக மக்களை ஒன்றிணைக்கும் சீனப் பெருஞ்சுவர்!

சீனப் பேரரசர்கள் காலத்தில் சுமார் மூன்று இலட்சம் இராணுவ வீரர்கள் சுமார் ஒன்பது வருடங்களுக்கும் மேலாக சீனப் பெருஞ்சுவரை நிர்மாணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த இராணுவ வீரர்களை கட்டுமானப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தும் முகமாக விதவைப் பெண்கள் அங்கே வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சுவெய் வம்சத்தினர் சீனாவை ஆட்சி செய்தபோது விதவைகளையும் கட்டுமாணப் பணிகளில் ஈடுபடுத்தியதாக எங்கோ வாசித்த ஞாபகம் உள்ளது. குற்றவாளிகள் தமது தண்டனைக்காலம் முழுவதையும் பெருஞ்சுவர் நிர்மாணத்திலேயே செலவிட்டுள்ளனர். தொழில்நுட்பம், இயந்திரம் என்பன இல்லாத காலம் என்பதால் பொருட்களை சுமந்து செல்வது, கற்பாறைகளை தகர்ப்பது போன்ற சிரமமான வேலைகளை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

அதுமட்டுமன்றி அவர்களை குற்றவாளிகளென அடையாளப்படுத்துவதற்காக தலையை மொட்டையடித்து இரும்பு வலையங்களை அணிவித்திருந்தனர். ஒரு குற்றவாளி ஆகக் குறைந்தது நான்கு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்றும் இவர்கள் இரவு வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

சுவரை நிர்மாணிக்கும்போது தனது கணவர் இறந்ததால் அங்கே வரும் அவரது மனைவி தனது கண்ணீரால் பெருஞ்சுவரை நனைப்பாள் என சீன இலக்கியத்தில் கூறப்பட்டிருப்பதை எடுத்துக்கொண்டால் வேலைப்பளு காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற ஐயத்தை தோற்றுவிக்கிறது.

பெருஞ்சுவரின் படிகளை ஏறும்போது தான் எனக்குப் புரிந்தது இதில் ஏறுவது அத்தனை இலகுவான விடயம் அல்லவென்று. ஒரு படியிலிருந்து அடுத்த படிக்காக சுமார் ஒரு அடி தூரம் வரை காலைத்தூக்கி வைக்க வேண்டியிருந்தது.தொடக்கத்தில் இரண்டு சுவர்களுக்குமிடையே நான்கு குதிரைகள் செல்லுமளவுக்கு இடம் காணப்பட்டது. ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக இரண்டு பக்கமும் இரும்பு கைப்பிடிகள் பொருத்தப்பட்டிருந்தன. வலது பக்கம் ஒருவர் பின் ஒருவராக மக்கள் ஏறிச்செல்ல இடது பக்கம் ஒருவர் பின் ஒருவராக இறங்கிக் கொண்டிருந்தனர். அன்றைய தினம் பாரிய சன நெருக்கடியை நான் காணவில்லை.

மேற்கைப் பொறுத்தவரை சீனா பெரும் சவாலுக்குரிய நாடு என்கின்றபோதும் அரசியல் விமர்சனங்களை ஓரம்கட்டி விட்டு அனைத்து கண்டங்களைச் சேர்ந்த மக்களும் சீனப் பெருஞ்சுவரை நேரில் பார்ப்பதற்காக அங்கே ஆவலுடன் வருகின்றனர். இதில் எந்த வியப்பும் இருக்க முடியாது என்பதை நான் நேரடியாக​வே புரிந்து கொண்டேன்.

இதில் ஏறும்போது நான் மிகவும் அனுபவித்து மகிழ்ந்த விடயம் என்ன தெரியுமா? அங்கிருந்த அனைத்து நாட்டவர்களும் ஒருவருக்கொருவர் புன்முறுவல் செய்து ஏறுவதற்கும் இறங்குவதற்கும் உதவி செய்தது தான். பரந்த உலகத்தோடு ஒரு நெருக்கமான உறவு உருவான அனுபவம் எனக்கு அங்கு கிடைத்தது.

எனது கையில் தண்ணீர் போத்தல் இருக்கவில்லை. நான் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை படி ஏறிச் சென்றுக் கொண்டிருந்தேன். இடையில் மூச்சு வாங்க நின்றிருந்தபோது ஒரு மஞ்சள் நிற குருத்தா அணிந்திருந்த பெண் அவரது தண்ணீர் போத்தலை என் முன் நீட்டினார். அவர் ஹிந்திப் பெண். ஆனால் அமெரிக்கப் பிரஜை. ஒரு பெரிய வட இந்திய கூட்டத்தாருடன் அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு சுற்றுலா வந்திருந்தார்.

எல்லாப் படிகளும் ஒரே இடவெளி தூரத்தில் இல்லை. சில படிகளுக்கிடையே இடைவெளி அதிகம். களைப்பில் விடுக் விடுக்கென காலைத் தூக்கிவைத்து ஏற முடியாத சந்தர்ப்பங்களில் வெள்ளையர்கள் கொஞ்சமும் தாமதிக்காது புன்முறுவலுடன் நான் ஏறுவதற்கு கை தந்து உதவினார்கள்.

ஒரு தடவை நான் படியின் இடைநடுவே அமர்ந்திருக்கும்போது என்னை என் நண்பர் புகைப்படம் எடுத்தார். அப்போது எனக்கே தெரியாமல் ஒரு அமெரிக்கப் பெண் என் தலை மீது அவரது இரண்டு விரல்களையும் கொம்புகளைப்போல் வைத்து படத்துக்கு காட்சியளித்துள்ளார். படத்தை எடுத்த பின்னர் தான் அவர் என் பின்னால் நின்றதே எனக்குத் தெரியும்!

இதுபோன்ற எத்தனையோ வெள்ளையர்கள் முன்பின் அறிமுகம் இல்லாதபோதும் “செல்ஃபி ப்ளீஸ்” எனக் கேட்டு என்னுடன் நட்புடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை மறக்கவே முடியாது. பல வெளிநாட்டுப் பெண்கள் தங்களது கெமராவில் அவர்களை ஒவ்வொரு கோணத்தில் வைத்துப் படம் பிடித்துத் தர முடியுமா என்றும் என்னிடம் கேட்டனர். நானும் எடுத்துக் கொடுத்தேன். பின்னர் அவர்கள் என்னுடனும் சேர்ந்து படம் பிடித்துக் கொண்டனர்.

சீனப் பெருஞ்சுவரின் மொத்த தூரம் 13,170.69 மைல்கள் அதாவது 21,196.18 கிலோமீற்றரென நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அண்மையில் திட்டவட்டமாக கணிக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் 15 மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களை ஊடுருவிச் செல்கிறது. நாம் இப்போது ஏறி பார்ப்பது மிங் பேரரசரால் கட்டப்பட்ட பகுதி. அவர் தனது ஆட்சிக்காலத்தில் 8,851.8 கிலோமீற்றர் பெருஞ்சுவரைக் கட்டியெழுப்பியுள்ளார். நீங்களும் இப்பிமாண்டத்தைத் தாராளமாக எகிப்திய பிரமிட் பிரமாண்டத்துடன் ஒப்பிடலாம்.

இதன் சுவரின் உயரமும் வளைவுகளுக்கு ஏற்ற வகையில் கூடிக் குறைகின்றது. சராசரியாக இதன் உயரம் 06 தொடக்கம் 07 மீற்றரென கணிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஆகக்கூடிய உயரம் 14 மீற்றர்களாகும். மலைத்தொடர்கள் மீது செல்லும்போது இதன் உயரம் குறுகி, நீண்டதாகவும் வெட்வெளியில் செல்லும்போது இதன் அகலம் அகன்று விரிந்ததாகவும் காணப்படுகிறது.

மிங் வம்சத்தினர் தொடர்ந்து இரண்டு நூற்றாண்டுகளாக இந்நிர்மாணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். பழமையான சுவரின் பெரும்பகுதி இயற்கை மற்றும் மனிதனுடைய செயற்பாடுகளால் அழிவடைய, மிங்கினது நிர்மாணம் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கிறதாம்!

சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு 85 வயதான தாத்தாவும் 78 வயதான அவரது மனைவியும் தடியை ஊன்றியபடி மூச்சு வாங்க எம்முடன் பெருஞ்சுவரில் ஏறிய காட்சி இன்னும் என் மனக்கண் முன் வந்து நிற்கிறது. Great wall இல் ஏற வேண்டுமென்பது அவர்கள் கனவாம். மெய்சிலிர்த்தது!

இங்கு இளைஞர்களை விட வயதானவர்களே அதிகமாகக் காணப்பட்டனர். உலக அதிசயங்களுள் ஒன்றான சீனப்பெருஞ்சுவரை நேரில் பார்த்து அதில் ஏறி ரசிக்க வேண்டுமென்ற வெறி அவர்களுக்குள் இருந்தது. பலர் குழந்தைகளையெல்லாம் அதில் ஏறச் செய்தனர். சீன அரசாங்கத்துக்கு பெரும் அந்நிய செலாவணியைத் திரட்டித் தரும் இச்சுவர் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட ​ வேண்டும். (தொடரும்...)

லக்ஷ்மி பரசுராமன்...

Comments