அமெரிக்கா − இலங்கை - இந்து சமுத்திரத்தின் இதயத்தில் கூட்டுறவுக்கான வாய்ப்புக்கள் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்கா − இலங்கை - இந்து சமுத்திரத்தின் இதயத்தில் கூட்டுறவுக்கான வாய்ப்புக்கள்

மெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் என்ற வகையில், கடந்த வாரம் இரண்டாவது தடவையாக நான் இலங்கைக்கு விஜயம் செய்தேன். இலங்கை ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதையிட்டும், வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐக்கிய அமெரிக்க மற்றும் இலங்கைக்கான கூட்டுறவு தொடர்பான இரண்டாம் சுற்றுப் பேச்சு வார்த்தையில் அமெரிக்கக் குழுவிற்கு தலைமை தாங்கியதையிட்டும் கௌரவமடைகின்றேன்.

எமது இரு நாடுகளும் வளர்ந்து வரும் கூட்டுறவைக் கொண்டுள்ளதுடன், நாம் கூட்டாக சமாதானம், பாதுகாப்பு, இந்து சமுத்திரப் பிராந்தியம் மற்றும் அதைவிட விஸ்தீரணமான இந்து-ஆசிய பிராந்திய செழுமையை விருத்தி செய்ய இணைந்து செயற்படலாம்.

இலங்கை மக்கள் இன, மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் மகிழ்ச்சி, செழுமை, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் சீர்திருத்தம் தொடர்பாக இலங்கை துணிச்சலாக மேற்கொண்ட தீர்மானத்தின் அர்ப்பணிப்பினை நான் ஆதரிக்கின்றேன். ஒரு ஒன்றுபட்ட நாடாக இலங்கை வருவதற்கு கிடைத்த இச்சந்தர்ப்பம் மிக முக்கியமானதாகும். நல்லிணக்கமான இலங்கையைக் கட்டியெழுப்பவும், புதிய சட்ட சீர்திருத்தம் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் போருக்கு பின்னரான நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் ஐக்கிய அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

அரசாங்கம் குறித்த விடயங்களில் முன்னேற்றத்தை அடையும் போது, எமது இரு தரப்பு உறவுகள் தொடர்ந்து விருத்தி அடையும். இலங்கைக்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் வழங்கும் மூன்று பிரதான பங்களிப்பு பற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எடுத்துக் கூறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏறத்தாள 20 வருடங்களின் பின் ஐக்கிய அமெரிக்க சமாதான அணியினர் மீண்டும் இலங்கைக்கு வரவிருக்கும் நற்செய்தியையும் தெரிவித்தேன். இலங்கையில் உள்ள ஆங்கில வகுப்பறைகளுக்கு மீண்டும் அமெரிக்கத் தொண்டர்கள் வரவுள்ளனர்.

மேலதிகமாக, இலங்கையின் பாற்பண்ணை உற்பத்தியில் பாலின் தரத்தை அதிகரித்தல், நிதியளித்தல், உணவுச் சுகாதாரம் போன்ற நடவடிக்கைகளை விருத்திசெய்ய 3.15 பில்லியன் ரூபா (21 மில்லியன் அமெரிக்க டொலர்) நிகழ்ச்சித்திட்டம் ஒன்று ஐக்கிய அமெரிக்க விவசாயத் திணைக்களம் ஊடாக முன்னெடுக்கப்படுவதனை அறிவிப்பதில் பூரிப்படைகின்றேன். இறுதியாக, இலங்கை கடற்படைக்கு ஐக்கிய அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு கப்பல் ஒன்றை வழங்க முன்வந்துள்ள தீர்மானத்தைப் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்கான நாடாளுமன்ற ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்தப் பிராந்தியம் சார்பான அமெரிக்கக் கொள்கைகள் புத்துயிர் அடைந்துள்ளதை இந்த முன்னேற்றங்கள் காட்டுகின்றன. ஜனாதிபதி ட்ரம்ப் ஆகஸ்ட் மாதத்தில் “தெற்கு ஆசியா மற்றும் இந்து-பசுபிக் பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்புப் பற்றிய இணைந்த குறிக்கோள்கள் தொடர்பாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்” எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரில்லர்சன் கடந்த மாதம் ஆற்றிய உரை ஒன்றில் “21ம் நூற்றாண்டில் மிகவும் பலன் தரும் பிராந்தியம்” என இந்து சமுத்திரப் பகுதியின் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டினர். உலக பொருளாதாரத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், உலகளாவிய ரீதியில் 90,000 வர்த்தகக் கொள்கலன்களில் அரைவாசியும், உலக எரிபொருள் வர்த்தகப் போக்குவரத்தின் மூன்றில் இரண்டு பங்கும் நடைபெறும் கடற்பகுதியாகவும் காணப்படுகின்றது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தை தாயகமாக கொண்டுள்ள நாடுகளும் மற்றும் ஏனைய பங்குதாரர்களும், பிராந்திய ஸ்திரத் தன்மைக்கு முக்கிய பங்கு வகிக்கவும், ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்தவும் மற்றும் வர்த்தக முன்னேற்றத்திற்கு உதவவும் கடமைப்பட்டுள்ளனர்.

உலகில் ஒவ்வொரு பகுதியும் தனித்துவமானதுடன், கடந்த நூற்றாண்டில் வர்த்தகம், பாதுகாப்பு, சர்வதேச சட்டம், அல்லது கல்வித்துறை சார்பாக உலகளாவிய சட்ட முறைப்படி நிறுவன ரீதியில் பிணைப்புக்களை ஏற்படுத்தியுள்ள பிராந்தியங்கள், தவிர்க்க முடியாத வகையில் எழும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கின்றன. இந்து சமுத்திர பிராந்தியம் இவ்வாறான சில நிறுவனங்களைக் கொண்டுள்ளதுடன், இலங்கை குறிப்பிடத்தக்கவற்றில் அங்கத்துவம் வகிக்கின்றது. அமெரிக்கா மற்றும் இலங்கை, ஏனைய பிராந்திய பங்குதாரருடன் இணைந்து பிராந்தியக் கட்டமைப்பை விருத்தி செய்யலாம்.

முதலாவதாக, இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தமது கடல் அதிகார எல்லைகளை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தகவற் பரிமாற்றம் செய்யக் கூடிய, இந்து சமுத்திர கடற் தகவல் மையம் ஒன்று பற்றி கவனம் செலுத்த வேண்டும். கடந்த மாதம் நடைபெற்ற இந்து சமுத்திர விளிம்பு சபையின் அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைத்ததுடன், குறித்த முயற்சிக்கு இலங்கை தலைமைத்துவம் வழங்கவும் நாம் ஊக்குவிக்கின்றோம்.

பிராந்தியக் கடலோரப் பாதுகாப்பு மன்றம் அடுத்த எண்ணக்கரு ஆகும்.

ஐந்து பங்குதார நாடுகளின் கரையோரப் பாதுகாப்பு சட்ட நிறுவனங்களுடன் ஐக்கிய அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப் படையும் இணைந்து, வட பசுபிக் கரையோரப் பாதுகாப்பு மன்றத்தில் பிராந்திய ஸ்திரத் தன்மைக்கு அச்சுறுத்தல்கள், கடத்தல், கரையோரப் பாதுகாப்பு, மீன்பிடிச் சட்டங்கள், மற்றும் மக்களின் இடம்பெயர்வு தொடர்பான உரிய நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன. இதே கட்டமைப்பை இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் நாம் உருவாக்கலாம்.

மூன்றாவது எண்ணக்கரு பிராந்திய நடத்தை விதி தொகுப்பாகும். தற்போதைய சூழ்நிலையில் இந்து சமுத்திர நடத்தை விதித் தொகுப்பு, அல்லது பிராந்திய நாடுகள் இணைந்து ஏற்படுத்தும் நடைமுறைகள் - வெற்றிகரமான தீர்வுகளை எட்டும்படி வெளிச் சக்திகள் அதிக அழுத்தத்தைப் பிரயோகிக்க முன் செயற்படவும்- உங்கள் பிராந்தியத்திற்கு சற்று கிழக்காக தென் சீனக் கடலில் நடைபெறும் தொடர் சிக்கல்களிற்கு முடிவு காணவும் உதவியாக அமையும்.

இந்து சமுத்திர நாடுகள் தமது கொல்லைப் புறத்திற்கு தாமே பொறுப்பு உள்ளவர்கள் என்பதனை இத்தகைய தீர்மானங்கள் மூலம் உறுதிப்படுத்தலாம். ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்டங்களான சுதந்திரமான போக்குவரத்து, பிராந்தியத்திற்கு மேலான விமானப்பறப்பு மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு கடல் வளங்களை பயன்படுத்தல் மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காணல் போன்றவற்றை குறித்த தீர்மானங்கள் உறுதிப்படுத்தும்.

பகிரப்பட்ட பிராந்திய நிகழ்ச்சி நிரல் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அண்மையில் இந்து சமுத்திர மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்து-பசுபிக் பிராந்தியத்தின்

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இலங்கை ஒருங்கிணைப்பாளராக செயற்படுவதனை நாம் வரவேற்கின்றோம். உங்கள் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்.

 

எழுதியவர் -
தோமஸ் ஷணன் 

 

Comments