பெற்றோல் தட்டுப்பாடு | தினகரன் வாரமஞ்சரி

பெற்றோல் தட்டுப்பாடு

வாகனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தவர்களுக்குச் சில நாட்கள் வயிற்றில் அடித்த பெற்றோல் நெருக்கடி முடிவுக்கு வந்திருக்கிறது. என்னதான் ஆளுமை நிறைந்தவர்களாக இருந்தாலும் தலைக்கு மேல் வெள்ளம் வந்தால், தடுமாறிப்போவது இயல்பானது என்பதையும் இந்தப் பெற்றோல் நெருக்கடி போதித்திருக்கிறது!

ஒரு நாட்டின் அன்றாட இயல்புச் செயற்பாட்டிற்கு அத்தியாவசியமானது எதுவாகவிருந்தாலும் அச்சாணியாக விளங்குவது எரிபொருள். உடல் இயக்கத்திற்கு இரத்தம் எப்படி முக்கியமானதோ, நாட்டின் இயக்கத்திற்கு எரிபொருள் இன்றியமையாதது. அதனைக் கடந்த சில தினங்களாக நேரடியாகக் கண்டிருக்கின்றோம்.

வீதிகளில் வரிசையில் நிற்கும் வாகனங்கள் எல்லாம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நின்றன. ஓடாத மாட்டு வண்டிகளும் துவிச்சக்கர வண்டிகளும் வீதிக்கு வந்தன. மாகாண சபைக்கும் பாராளுமன்றத்திற்கும் எதிரணி உறுப்பினர்கள் டிபெண்டர் ஜீப்புகள், பாதுகாப்பு ஊழியர்கள் பின்தொடர துவிச்சக்கர வண்டிகளை மிதித்தனர். இவை எல்லாம் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கான முன்னேற்பாடுகள் என்கிறார்கள். எரிபொருள் இல்லாவிட்டால், எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதையும் அவர்கள் சூசகமாகச் சொல்லிவிட்டார்கள். மறுபுறம் வசதி இல்லாதவர்கள்தான் துவிச்சக்கர வண்டிகளிலும் மாட்டு வண்டிகளிலும் பயணிப்பார்கள் என்பதையும் அவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள்போலும்! அப்படியென்றால், தமது மன்னரைச் சந்திப்பதற்குச் சைக்கிளில் சென்ற நெதர்லாந்து பிரதமரை என்னவென்று சொல்வது? சீனா, ஜேர்மன், நெதர்லாந்து, நோர்வே முதலான நாடுகளில் சொந்தமாக வாகனங்களை வைத்திருப்பவர்களும் சைக்கிள் பயணத்தையே அதிகம் மேற்கொள்கின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் நெதர்லாந்து சென்றிருந்தபோது, அந்நாட்டுப் பிரதமர் இந்தியப்பிரதமருக்குச் சைக்கிள் ஒன்றைப் பரிசாக வழங்கியதெல்லாம் வேறு கதை. இங்கு சைக்கிளில் சென்றால் மதிப்பு இல்லை. முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுக்கும் அவ்வளவாக மரியாதை இல்லை. ஆங்கிலம் பேசினால் அறிவாளி என்று நினைப்பதைப்போல காரில் சென்றால்தான் கனவான் என்று நினைக்கும் மனநிலை நமக்கு!

ஆனால், கார், பைக் இல்லாதவர்களுக்கும் கைகொடுப்பது முச்சக்கர வண்டி. அதைச் செலுத்துபவர்களைக் குறை கூறினாலும், காருக்குப் பயன்படும் பெற்றோலே இதற்கும் தேவைப்படுகிறது. பெற்றோல் பணத்தைக் கொட்டினாலும், அது பாமரனுக்கும் பொதுவானது என்பதை தென்பகுதியில் ஏற்பட்ட ஓர் உயிரிழப்பு உணர்த்தியிருக்கிறது. ஊருகஸ்வல பொது மயானத்தில் காவல் பணி புரியும் 53 வயது நபர் ஒருவர் பெற்றோலுக்காக நீண்ட நேரம் நிரப்பு நிலையத்தில் காத்திருந்து, இறுதியில் பெற்றோல் தீர்ந்துவிட்டது என்ற செய்தியைக் கேள்வியுற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். பெற்றோல் நெருக்கடியால் ஏற்பட்ட ஒரு துயரம் இது!

இலங்கையில் ஒரு நாளைக்கு மூவாயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் நுகரப்படுகிறது. இப்போது 40ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோலுடன் துபாயிலிருந்து லேடி நொவெஸ்கா என்ற கப்பல் வந்து சேர்ந்திருக்கிறது. இது ஏறக்குறைய பதின்மூன்று நாட்களுக்குப் போதுமான பெற்றோல்.

இந்தக் கப்பல் உரிய வேளைக்கு வந்து சேர்ந்திருந்தால், பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்றும் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஐஓசி) அசமந்தப்போக்கும் நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை ஆரம்பத்தில் ஏற்றுக் ெகாள்ள மறுத்த இந்திய நிறுவனம், பிறகு ஒப்புக்ெகாண்டது. எனினும், தமது நிறுவனம் 16% மாத்திரமே விநியோகத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் எஞ்சிய 84 சதவீதத்திற்கு இலங்கை அரசின் கீழுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனமே பொறுப்பு என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. உண்மையும் அதுதான்!

கடந்த ஒக்ேடாபர் மாதம் 15ஆம் திகதி லங்கா ஐஓசி நிறுவனம் தருவித்த பெற்றோல் கப்பல் இரண்டு பரிசோதனை நடத்தப்பட்டதில், தரக்குறைவானது எனக் கண்டறியப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது.

எனினும், எவ்வாறேனும் விநியோகித்து விடும் முயற்சியில் இரண்டு வாரங்களையும் கடந்து அந்தக் கப்பல் திருகோணமலையில் நின்றுகொண்டிருப்பதாகத் தகவல். பெற்றோல் நிராகரிக்கப்பட்டால், இரண்டு வாரங்களுக்குள் மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது ஒழுங்கு விதி. அதன்படி பார்த்தால், கடந்த 31ஆம் திகதி வேறு கப்பல் இலங்கைக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால், லங்கா ஐஓசி நிறுவனம் அதைச் செய்யவில்லை. மறுபுறம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் தருவிக்கப்படும் பெற்றோல் கப்பல் இம்மாதம் இரண்டாந்திகதி இலங்கைக்கு வந்திருக்க வேண்டும். அதுவும் வரவில்லை. தாமதித்து எட்டாந்திகதி இரவே வந்திருக்கிறது.

முதற்தடவையாக இவ்வாறான தாமதம் ஏற்பட்டதாகச் சொல்கிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க. இந்த நிலை மேலும் மோசமடைவதற்குக் காரணம் சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் முடங்கியதையும் குறிப்பிட முடியும். மின்சாரத் தடை ஏற்பட்டதால், கடந்த ஒக்ேடாபர் 31ஆம் திகதி சுத்திகரிப்புப் பணியில் ஏற்பட்ட ஸ்தம்பித நிலை மூன்று தினங்களாக நீடித்திருக்கிறது. இதனால், நாளாந்தம் 330 மெற்றிக் தொன் பெற்றோல் உற்பத்தியும் நின்றுபோய் விட்டது.

தரக்குறைவான பெற்றோலை அனுமதித்திருந்தால், அது வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்குமென்கிறார் துறைசார்ந்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்க. ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கோரியுள்ள அவர், சிலர் வேண்டுமென்றே இந்தப் பிரச்சினையைப் பூதாகரமாக்கியதாகவும் குறிப்பிடுகிறார். குறுந்தகவல் ஊடாகப் பரப்பப்பட்ட வதந்திகளையடுத்து

சிலர் போத்தல்களிலும் கேன்களிலும் பெற்றோலைப் பெற்றுச் சென்று சொந்த வியாபாரம் நடத்தினார்கள். டீசல் பிரச்சினை எழவில்லை. பெற்றோல் நெருக்கடிக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு விசாரணை நடத்தப்படவுள்ளது. எம்மிடம் 90 ஆயிரம் மெற்றிக் தொண் பெற்றோலை களஞ்சியப்படுத்தும் வசதியே உள்ளது. பொதுவாக ஒரு கப்பல் 40 ஆயிரம் மெற்றிக் தொன் கொள்ளளவைக் கொண்டது.

அதனால், இந்தத் தொகை தேவைப்படும்பொழுது நாம் கப்பலைத் தருவிப்போம். இல்லாவிட்டால், வீணான செலவுகள் ஏற்படும். அதேநேரத்தில், இந்தப் பிரச்சினையுடன் நாடு முழுவதிலுமுள்ள நிரப்பு நிலையங்களின் தேவை 1.5% ஆல் அதிகரித்துவிட்டது என்று விளக்குகிறார் அமைச்சர்.

இதேவேளை, கப்பலைத் தருவிப்பதில் ஏற்பட்ட தாமதமும் மேலதிகக் களஞ்சிய வசதி இல்லாமையுமே நெருக்கடிக்குக் காரணம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்கம் இதற்குத் தகுந்த நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றும் அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ஜே.இராஜகருணா தெரிவித்திருக்கிறார்.

எரிபொருள் நுகர்வு அதிகமாக இருக்கிறது. ஆனால், களஞ்சிய வசதி குறைவாக உள்ளது. திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களில் எட்டினை ஐஓசி நிறுவனம் பயன்படுத்துகிறது. இதில், பத்துக் குதங்களைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்தும் அது செயற்படுத்தப்படவில்லை. மாறாக நீண்டகால குத்தகைக்கு இந்தியாவிற்கு வழங்க முற்படுகிறார்கள். இதனைப் பெற்றுத்தந்தால், சர்வதேசத் தரத்திற்கு நிகரான களஞ்சிய வசதியை ஏற்படுத்த முடியும் என்கிறார் இராஜகருணா.

இந்நிலையில். தரக்குறைவான பெற்றோலை அனுப்பியமைக்கு எதிராகத் தமது விநியோகஸ்தர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷியாம் போரா. பிரான்ஸ் பல்தேசிய நிறுவனத்தின் கப்பலிலேயே தரக்குறைவான பெற்றோல் கொண்டுவரப்பட்டிருந்தது. நிராகரிக்கப்பட்டதும் உடனடியாகத் திருப்பியனுப்பி வைக்கப்பட்டதுடன் மாற்றுக் கப்பலை வெள்ளிக்கிழமை அளவில் (10) எதிர்பார்ப்பதாகவும் ஷியாம் போரா தெரிவித்துள்ளார். பெற்றோல் தட்டுப்பாட்டுக்கான காரணம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தருவிக்கும் கப்பலின் தாமதமே என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எது எவ்வாறாயினும், ஒரு தேசிய விநியோக செயற்பாட்டினை இரண்டாந்தரப்பில் நம்பியிருக்க முடியுமா? என்பதே தற்போதைய கேள்வி.

இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துறைசார்ந்த அமைச்சரைக் கேட்டிருக்கிறார் என்றும் அறிய முடிகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின்போது திருகோணமலை, சீனக்குடா எண்ணெய்க்குதம் தொகுதி இந்திர அரச நிறுவனமான இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்குப் பொறுப்பளிக்கப்பட்டது. 2003இல் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கொண்டுள்ள களஞ்சியத்தின் மூன்றில் ஒரு பகுதியை ஐஓசி நிறுவனம் பெற்றுக்ெகாண்டது. சீனன்குடாவில் உள்ள எண்ணெய்க் குதம் தொகுதியில் உள்ள 99 குதங்கள் ஒவ்வொன்றும் தலா 12,100 மெற்றிக் தொன் கொள்ளளவைக் ெகாண்டதாகும்.

கடற்படைக் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக 1930களில் பிரிட்டன் நிர்மாணித்த இந்தக் களஞ்சியத் தொகுதியானது மத்திய கிழக்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடைப்பட்ட மையத்தில் அமைந்துள்ளமையே அதன் மீதான கவனத்தை அதிகமாக ஈர்ப்பதற்குக் காரணமாகியிருக்கின்றது.

இதனைச் சரியாகப் பயன்படுத்திக்ெகாள்ள முடியுமாயின் இலங்கையில் எவ்வித நெருக்கடியும் இன்றிப் பெற்றோல் மட்டுமல்ல ஒட்டுமொத்த எரிபொருள் விநியோகத்தையும் சீராக மேற்கொள்ள முடியும். இருந்தபோதிலும், இந்தளவு கொள்ளளவுள்ள பாரிய களஞ்சியமொன்றைப் பேணுவதற்கு இந்தியா போன்ற நாடொன்றின் ஒத்துழைப்பு இல்லாமல் சாத்தியமாக்க முடியுமா? என்பதே அரசின் முன்னுள்ள கேள்வி. இந்தக் கேள்விக்கு விடைகண்டு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி மீண்டும் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கு ஏற்பட்ட இந்தக் குழப்பம் ஒரு பாடமாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படும் வாகன பெருக்கத்திற்கும் சனப்பெருக்கத்திற்கும் ஏற்ற வகையில் எரிபொருளைக் களஞ்சியப்படுத்திக்ெகாள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையேயன்றி வேறு எவருடையதும் அல்ல!

விசு கருணாநிதி 

Comments