கண்டி வைத்தியசாலை கட்டட நிர்மாணிப்பு; சட்ட விரோத கட்டடங்கள் அகற்றப்படும் | தினகரன் வாரமஞ்சரி

கண்டி வைத்தியசாலை கட்டட நிர்மாணிப்பு; சட்ட விரோத கட்டடங்கள் அகற்றப்படும்

கண்டி போதனா வைத்தியசாலையின் கட்டட நிர்மாணங்களை விஸ்தரிப்பதற்காக அக்காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியிருப்புக்கள் மற்றும் கட்டடங்களை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்தார்.

இதற்கமைய வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 240 குடியிருப்புக்கள், விகாரை மற்றும் பொலிஸ் கட்டடம் ஆகியன அகற்றப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் 02ஆம் வாசிப்பு மீதான 02 ஆம் நாள் விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது வாய்மூல வினாக்களுக்கான நேரத்தில் ஆனந்த அளுத்கமகே எம்.பியினால் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஆஸ்பத்திரிக்குச் சொந்தமான 33 ஏக்கர் காணியில் சட்டவிரோத குடியிருப்புக்களும் கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு 240 குடியிருப்புக்கள் உள்ளன. இந்த குடியிருப்புக்களை அக்காணியிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக கண்டியில் இன்னுமொரு இடத்தில் தற்போது வீடமைப்புத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

அதேபோன்று அரை ஏக்கர் காணியில் அமைந்துள்ள பொலிஸ் திணைக்களத்துக்கும் சொந்தமான கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அக்காணியில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள விகாரையை பிறிதொரு இடத்துக்கு மாற்றம் செய்வதற்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

(லக்ஷ்மி பரசுராமன்) 

Comments