தாராள பொருளாதாரத்திற்கு வழிவகுத்துள்ள சீர்திருத்த பட்ஜட் | தினகரன் வாரமஞ்சரி

தாராள பொருளாதாரத்திற்கு வழிவகுத்துள்ள சீர்திருத்த பட்ஜட்

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சகல அபிவிருத்தித் துறைகளையும் உள்ளடக்கி தாராள பொருளாதாரத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும் இது ஒரு சீர்திருத்த வரவு செலவுத் திட்டம் என்றும் பொருளாதார நிபுணரான ரொஹான் மசகோரள தெரிவித்துள்ளார்.

சிக்கலான பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பதால் இதற்குப் பல தரப்பினரது வரவேற்பு கிடைத்துள்ளதென்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையைப் பிராந்தியத்தின் பொருளாதார கேந்திர மையமாக விளங்கச் செய்யவும் தாராள பொருளாதாரத்தின் மூலம் கூடுதலான நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு வழிவகுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக பொருளாதார சுதந்திரச் சுட்டியின்படி இலங்கை 112ஆவது இடத்தில் உள்ளது என்றும் தற்போதைய பொருளாதார சூழலிலிருந்து நாம் விடுபடாத வரை வெளிநாடுகள் இலங்கையில் முதலீடு செய்வதற்குத் தயங்கும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய வரவு செலவுத்திட்டம் ஒரு முற்போக்கான அணுகுமுறையைக் கொண்டதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரத்திர பிராந்தியத்தில் இலங்கை ஓர் உலகப் பொருளாதார மையமாக விளங்க வேண்டுமாக இருந்தால், வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் தமது வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு வசதியிருக்க வேண்டும்.

அவர்கள் உள்ளூர் வர்த்தகத்திலன்றிச் சர்வதேச வர்த்தகத்திலேயே கவனம் செலுத்துவார்கள் என்று குறிப்பிட்டுள்ள மசகோரள வெளிநாட்டினருக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்கப்படுவதால், உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவார்களே? என்ற குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்ைகயில், வெளிநாட்டினர் வருவதால், உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் இருப்பு எந்த வகையிலும் பாதிப்புறாது.

அதேநேரம், அவர்கள் அடுத்தவர்களில் தங்கியிராமல், போட்டிச் சந்தைச் சவாலுக்கு முகங்கொடுப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். போட்டியிருந்தால்தான் தரமும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். (வி)

Comments