யாழ். நகரில் கடும் மழை; வெள்ளம் 27 தற்காலிக முகாம்கள் பாதிப்பு | தினகரன் வாரமஞ்சரி

யாழ். நகரில் கடும் மழை; வெள்ளம் 27 தற்காலிக முகாம்கள் பாதிப்பு

யாழ். குடாநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் வலி. வடக்கிலிருந்து -1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சுமார் 27 தற்காலிக நலன்புரி முகாம்களில் வாழும் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தற்காலிக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தமையால் மல்லாகம் கோணாப்புலம் நலன்புரி முகாமில் 20 குடும்பங்களும், மல்லாகம் நீதவான் நலன்புரி முகாமில் 60 குடும்பங்களும், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் 30 குடும்பங்களும், சுன்னாகம் கண்ணகி முகாமில் 20 குடும்பங்களும், சுன்னாகம் கந்தரோடை பிள்ளையார் நலன்புரி முகாமில் 37 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட, தற்காலிக முகாம்களிலுள்ள மேலும் பல குடும்பங்களும் அடைமழையால் பகுதியளவான பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. முகாம்களிலுள்ள மக்கள் முகம் கொடுத்துள்ள மழைப் பாதிப்புத் தொடர்பில் அரச அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள போதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்தவொரு உதவிகளும் வழங்கப்படவில்லை என 27 முகாம்களினதும் பொது நிர்வாகச் செயலாளர் மு. இன்பராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் காரணமாக வலி. வடக்கிலிருந்து கடந்த-1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில் வலிகாமம் பகுதியில் 27 தற்காலிக முகாம்களில் 750 குடும்பங்கள் தங்கியுள்ளனர். இந்த முகாம்களில் மயிலிட்டி, பலாலி, வசாவிளான், தையிட்டி, காங்கேசன்துறை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கியுள்ளனர்.

இந்த 27 முகாம்களில் வசித்து வருபவர்களில் அடைமழை காரணமாக மல்லாகம் கோணாப்புலம் நலன்புரி முகாம், மல்லாகம் நீதவான் நலன்புரி முகாம், சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம், சுன்னாகம் கண்ணகி முகாம், சுன்னாகம் பிள்ளையார் கந்தரோடை நலன்புரி முகாம் ஆகிய ஐந்து முகாம் மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்து வரும் தாம் ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட முகாம் மக்கள் இம்முறை அடைமழை காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கம் தாம் எதிர்நோக்கி வரும் பாதிப்புக்களைக் கருத்திற் கொண்டு சொந்த இடத்தில் துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை யாழ். நகரில் தொடரும் கடும் மழையால் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளாதாக, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, இதுவரையில் 2,518 குடும்பங்களை சேர்ந்த 9,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 04 வீடுகள் முழுமையாகவும், 159 வீடுகள் பகுதிகளவிலும் சேதமடைந்துள்ளன.

உடுவில் பிரதேச செயலக பிரிவில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 385 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 137 பேரும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 08 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 893 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன், சங்கானை பிரதேச செயலக பிரிவில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 1,066 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 444 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவில் 393 குடும்பங்களைச் சேர்ந்த 1,253 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 189 குடும்பங்களைச் சேர்ந்த 759 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 283 குடும்பங்களைச் சேர்ந்த 1,045 பேரும், மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 643 குடும்பங்களைச் சேர்ந்த 2,382 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதேவேளை, மழை தொடர்ந்தும் நீடிக்குமாயின் யாழ். மாவட்ட தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் தற்போது பெய்துவரும கடும் மழை காரணமாக நாவற்குழி பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதனால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

கடந்த 2 ஆம் திகதி முதல் பெய்துவரும் மழையினால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, நாவற்குழி பாலம் நிரம்பி வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன. நாவற்குழி பாலம் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்றமையினால், பாலத்தின் பல பகுதிகள் உடைவடைந்து காணப்படுகின்றன. இதனால் வெள்ளம் வீதியில் பெருக்கெடுத்துள்ளது.

இன்னும் மழை தொடர்ந்தால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்படலாம் என்றும் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

செல்வநாயகம் ரவிசாந், சுமித்தி தங்கராசா, புங்குடுதீவு குறூப் நிருபர்கள்

Comments