விதவைகளுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானது அல்ல | தினகரன் வாரமஞ்சரி

விதவைகளுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானது அல்ல

வடக்கு, கிழக்கில் 90,000 பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று முன்னாள் போராளிகள் 12,600 பேரும் உள்ளனர். இவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தலா 25 மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை. இதனை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 90 ஆயிரம் விதவைகள் இருக்கின்றார்கள். மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். காணமல்போனவர்கள் உள்ளார்கள். முன்னாள் போராளிகள் தமது வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டுள்ளார்கள். இளைஞர்கள், யுவதிகள் வேலைவாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ளனர்.

இந்த விடயங்களை நான் தொடர்ச்சியாக எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கவனத்திற்கு கொண்டுவந்தவாறே இருந்தேன். அதன் பிரகாரம் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அந்த யோசனைகள் உள்வாங்கப்பட்டிக்கின்றமையை இட்டு வரவேற்பையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் 165 ஆயிரம் வீடுகள் அமைக்க வேண்டியுள்ளன. இந்நிலையில் 50 ஆயிரம் கல்வீடுகளை அமைப்பதற்கான 750 மில்லியன் ரூபா முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்து வரும் இரு வருடங்களில் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 3 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் மாற்றுத்திற னாளிகள் 9 ஆயிரம் பேர் உள்ள நிலையில் அவர்களுக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா கொடுக்கப்படுகின்றபோதும் அது ஒரு பகுதியினருக்கே கிடைக்கின்றது. ஆகவே இம்முறை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைப்பயன்படுத்தி அனைவருக்கும் அக்கொடுப்பனவு கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

இதேநேரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வசதியளிப்பதற்காக 25 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதான சமூக நீரோட்டத்திற்குள் உள்வாங்கப்படவேண்டும். வடக்கு, கிழக்கில் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 25 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை. இதனை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

இதுபோன்று முன்னாள் போராளிகள் 12,600 பேர் இருக்கையில் 25 மில்லியன்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையானது போதுமானதாக இல்லை. ஆகவே அவர்களின் தொழில் தகைமைகளை மேம்படுத்தி அதற்கான வாய்ப்புக்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தினை ஸ்தாபிப்பது முன்னெடுத்துச் செல்வதற்கான நிதி ஒதுக்கீடும், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளமை சிறப்பானதாக இருக்கின்ற அதேநேரம் அதனை நடைமுறைச் சாத்தியமாக்க வேண்டியுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினை கருத்திற்கொண்டு செயற்றிட்டங்களை முன்னெடுத்து எமது மக்களின் துயரங்களை துடைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

லக்ஷ்மி பரசுராமன் 

Comments