தொண்டமான் பெயர் நீக்கம் | தினகரன் வாரமஞ்சரி

தொண்டமான் பெயர் நீக்கம்

இது கௌரவப் பிரச்சினை அல்ல; கௌரவிக்கும் பிரச்சினை மட்டுமே!

இலங்கை வரலாற்றிலும், ஆசியா வரலாற்றிலும் தனிமனிதர் பெயரில் அல்லது அந்த சமூக தலைவர்களின் பெயரில், கல்லூரிகளோ, பயிற்சி நிலையங்களோ, அல்லது கல்வி கூடங்கள், பாடசாலைகள், அரச கட்டிடங்களுக்கு பெயர் சூட்டுவது. அம்மனிதர்களின் புகழ் பாடுவதற்காக மட்டுமல்ல அவர்தம் வாழ்நாளில் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு அல்லது அவர்சார்ந்த சமூகத்துக்கு ஆற்றிய பணியை கெளரவிப்பதற்காகவே இவ்வாறு பெயர் சூட்டுகிறார்கள்.

மலையகத்தில் ஆரம்ப காலத்தில் தொழிற்சங்கங்கள் மிகக்குறைவு. கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சிகளின் தொழிற்சங்கங்களே இயங்கி வந்தன. சமூக இயக்கமாக இலங்கை இந்திய காங்கிரஸ் இயங்கியது. அது 1952ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாறியது. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்காகவும் தொழிலாளர்களின் நலனுக்காகவும, சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும் போராடி வருவதை மறுப்பதற்கில்லை.

1999 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் திகதி மறைந்த தொண்டமானின் உடல் அப்போதைய சந்திரிகா பண்டாரநாயக்க குராமதுங்க அரசாங்கம் அரச மரியாதையுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தகனம் செய்யப்பட்டது. அது ஓர் அரச நிகழ்வாகவே நிறைவேறியது. எனவே தான் சந்திரிகா அம்மையார் அமரர் தொண்டமானுக்கு பழைய பாராளுமன்ற வளாகத்தில் உருவச்சிலை வைத்து கெளரவித்தார்.

வரலாற்றில் முதல் தடவையாக பெருந்தோட்ட மக்களுக்கான தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் என்ற அமைச்சை உருவாக்கி அதற்கு செளமியமூர்த்தி தொண்டமானை அமைச்சராக நியமித்தவரும் அம்மையாரே!

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அட்டன், தொண்டமான் கலாச்சார மத்திய நிலையம், ரம்பொடை தொண்டமான் விளையாட்டு மைதானம், நோர்வூட் தொண்டமான் பிரஜாசக்தி நிலையம் இவ்வாறு தொண்டமானின் பெயரை முன்வைத்து தொண்டமான் பவுண்டேசன், தொண்டமான் நிதியம் என்ற பெயரில் மேற்படி நான்கு நிறுவனங்களும் இயங்கி வந்தன.

மேற்படி நான்கு நிறுவனங்களுக்கும் பெயர் சூட்ட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருந்தது, அதுபோல் தொண்டமான் நிதியத்தையும் அப்போதைய அமைச்சரவை அங்கீகரித்தது. தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்ப காலம் முதலே இப்பெயரில்தான் இயங்கி வருகிறது. பின்னரே அது தொண்டமான் நிதியத்துடன் இணைக்கப்பட்டது.

அமைச்சர் திகாம்பரத்தின் ஊழல் புகார்

அண்மையில் அமைச்சர் திகாம்பரம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருந்து தெரிவிக்கையில், தொண்டமான் பெயரில் மிகப்பெரிய ஊழல் இடம் பெற்றுள்ளதாகவும் அது கோடிக்கணக்கான ரூபாவாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 29.10.2017 அட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கோடிக்கணக்கில் தொண்டமான் மன்றம் ஊழல் செய்துள்ளது என்றும் எனவே FCI க்கு முறைப்பாடு செய்யப்போவதாகவும் பகிரங்கமாக கூட்டத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் திகாம்பரத்துக்கு பதவியும், அதிகாரமும் செல்வாக்கும் உள்ளது. எனவே அவர் FCIக்கு முறைப்பாடு செய்து ஊழலை அம்பலப்படுத்த வேண்டும். ஊழல் நிரூபிக்கப்படவேண்டும். ஊழல் செய்தவர்களை தண்டிக்க வேண்டும். இப்போது தகவல் அறியும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே இச்சட்டத்தை பயன்படுத்தி ஊழலின் தன்மை. ஊழல் செய்தவர்கள் யார் என்பதெல்லாம் அறிந்து கொள்ள கூடிய வாய்ப்பு அமைச்சருக்கும் பொதுமக்களுக்கும் இருக்கின்றது. அதை அவர்கள் செய்ய வேண்டும். மேலும் யார் என்ன நியாயம் சொன்னாலும் இந்திய வம்சாவளி தமிழ் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் அரும்பெரும் சேவை புரிந்த அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் பெயரை மாற்றியது மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகும்.

நமது சமூகத்தின் மறக்க முடியாத அடையாளங்களில் பிரதான அடையாளம் செளமியமூர்த்தி தொண்டமான். எனவே மீண்டும் அவரின் பெயரை பயன்படுத்த வழிசமைப்பது இழந்த மலையக சமூகத்தின் ஆன்மாவையும், சுயகௌரவத்தையும் மீளப்பெறுவதற்கு ஒப்பாகும்.

அமைச்சர் திகாம்பரம் தனது தலைமைத்துவ சிறப்பையும், மக்கள் மீதான கரிசனையையும், தான் மக்கள் விருப்பத்துக்கு அடிபணிபவன் என்பதையும் நிரூபிப்பதற்கான சந்தர்ப்பமாக இதைக் கருத வேண்டும். இதில் வெட்கப்படுவதற்கோ தோல்வி மனப்பான்மைக்கோ எந்த இடமும் கிடையாது. பெருவாரியான மக்கள் விருப்பம், தொண்டமான் பெயரை நீக்கக்கூடாது என்பதுதான்.

மக்கள் விருப்பம் அவ்வாறானால் அதை ஏற்றுக்கொள்வதே தலைவனுக்கு அழகு. எனவே பெயரை அப்படியே நீடிக்க விடுங்கள். மக்கள் உங்களைப் பாராட்டுவார்கள். அதேசமயம் அரசியல் ரீதியாக இ.தொ.காவை எதிர்கொள்ளுங்கள். அதன் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானை எதிர்த்து அரசியல் செய்யுங்கள். யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. மக்கள் தொண்டமானில் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் வேறு, இ.தொ.கா பற்றிய அபிப்பிராயம் வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தன் ஆளுமையை நிரூபிக்க அமைச்சர் திகாம்பரத்துக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. தேவையற்ற ஆர்ப்பாட்டம் இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்க துணைபுரியுமே தவிர தீர்வுக்கு வழிசமைக்காது.

ஆனால் மக்கள் மன்றம் என்ற ஒன்றிருக்கிறது. முன்னரைப்போல சாப்பாட்டுப் பார்சலுக்கும் சாராயத்துக்கும் இது அடிபணியாது. திகாம்பரமோ, ஆறுமுகனோ அந்த மாற்றத்துக்கு வந்தாகவே வேண்டும், தீர்ப்புக்காக!

சு. சதிஸ் லெனின், ஹட்டன்

Comments